கனவுகள், கடிதம்

அன்புள்ள ஜே

தேங்காய் எண்ணை -கனவு- கடிதம் இந்த கடிதத்திற்கு அளித்த பதிலில் “கனவுகளின் ஆழம் மானுடரை மீறியது. நாம் ஒவ்வொருவருக்குள்ளும் உறையும் தனி மூளையின் எல்லைகளுக்கு அப்பால் நின்றிருப்பது” என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளது உண்மை என்பதை நான் அனுபவத்தால் உணர்ந்தவன். ஆனால் நான் அந்த அனுபவத்தை எனக்கு நெருக்கமானவர்களிடம் சொன்ன போது எவருமே ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே இப்போது எதையும் சொல்வதில்லை.

எனது குல தெய்வங்கள் நீலியும், மாடசாமியும். நான் அவர்களின் குருட்டு பக்தன், முரட்டு பக்தன். கண்மூடித்தனமாக பக்தி. என்னளவில் அது சரி என்றே கொள்கிறேன். ஏனெனில் என் பக்தியினால் நான் அடைந்தவை பல.

நான் எனது 25 வயதில் அரபு நாட்டிற்கு வேலைக்கு சென்றேன். சென்ற ஆறு மாதத்தில் பாஸ்போட் தொலைந்து, அரபி மீண்டும் பாஸ்போர்ட் எடுப்பதற்காக இரண்டு ஆவணங்களை மட்டுமே தந்து இனி நீயே பார்த்துக் கொள் என்று கைவிட்டுவிட்டார். சவுதி அரசு கொண்டு வந்த புதிய சட்டத்தின்படி அனைவரும் மூன்று மாதங்களுக்குள் தனது விசா பிரச்சினைகளை சரி செய்து கொண்டு எதாவது ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர வேண்டும். இல்லாவிட்டால் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். நான் ரியாத் சென்று எனது நண்பரின் நண்பர் அறையில் தங்கி இரண்டு மாதமாக அலைந்து மற்ற ஆவணங்களை தயார் செய்தேன். அந்த நேரத்தில் எல்லா வெளிநாட்டினரும் தூதரகத்தில் முட்டி மோதியதால் இந்த தாமதம். அரபி முயன்றிருந்தால் எளிதாக முடிந்திருக்கும். புதிதாக சென்ற நாடு, அறியாத மொழி போன்றவற்றால் மிகவும் சிரமப்பட்டு எல்லாவற்றையும் தயார் செய்தேன்.

எல்லாம் தயார் இனி விண்ணப்பிக்க வேண்டியது தான். ஆனால் விண்ணப்பிக்கவும், நான் திரும்பி செல்லவும் சேர்த்து இரண்டாயிரம் ரியால்கள் தேவை. கையில் இருப்பதோ ஆயிரம் மட்டுமே. ஏற்கனவே, இரண்டு மாதமாக வேலைக்குச் செல்லாமல் நண்பர்களிடம் கடன் வாங்கியிருந்தேன். ரியாத்தில் எவரும் தர வாய்ப்பில்லை. முயற்சி செய்தும் பலனில்லை. மீீண்டும் எனது வேலை இடத்திற்கு சென்று ஒரு மாதம் வேலை செய்து ஊதியத்தை வாங்கி விண்ணப்பிக்கலாம். ஆனால் அரசின் கெடு முடிந்துவிடும். இரண்டு நாள் கழித்து விண்ணப்பிக்க வேண்டும், என்ன செய்வது என்றே தெரியவில்லை. தெய்வமே எதாவது வழி காட்டு என்று எண்ணிக் கொண்டு தூங்கினேன். கனவு. கனவில் குல தெய்வம் கோவிலில் நிற்கிறேன். பெரியப்பா மீது தான் சாமி வரும். அவர் எனக்கு திருநீறு அள்ளி தந்தார். அதை வாங்கிக் கொண்ட நான் திரும்பி செல்கிறேன். சாலையில் ஒரு கார் வந்து என்னருகில் நின்றது. கார் கதவை திறந்து உள்ளிருந்து ஒருவர் என்னிடம் சாப்பிட்டாயா என்றார், நான் இல்லை என்றதும் ஆயிரம் ரூபாயைை என்னிடம் நீட்டி சாப்பிடு என்று கூறி சென்று விட்டார். விழித்துக் கொண்டேன் ஏதோ கனவ கண்டோமே என்று கனவை நினைவில் மீட்டெடுக்க முயற்சித்தேன்.

முழு கனவும் நினைவில் இருந்தது, ஆனால் இதற்கு என்ன அர்த்தம் என்று மட்டும் புரியாமல் யோசித்து அப்படியே மீண்டும் தூங்கி விட்டேன். இதைக் கண்டு இரண்டாம் நாள் காலை, அதாவது விண்ணப்பிக்க உத்தேசித்திருந்த நாள் காலை கேட்ட இடங்களில் எங்கும் காசு கிடைக்கவில்லையே என்ற வருத்தத்துடன் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டால் கையில் இருக்கும் பணம் மேலும் செலவாகும் என்று எண்ணி ஒரு சிறிய பழச்சாறு குடிக்க கடைக்கு சென்றேன். ஐநூறாக இரண்டு நோட்டுகளே என்னிடம் இருந்தது. கடையில் சென்றதும் முதலில் சில்லரை இருக்கிறதா என்று கேட்டேன். இல்லை என்றதும் என்ன செய்வது என்று எண்ணிக் கொண்டிருந்த போது ஒரு கார் வந்து நின்றது. பெரும் செல்வந்தர் என்பதை அந்த காரும் அவருடைய தோற்றமும் வெளிப்படையாக காட்டியது. கடைக்காரர் அவரிடம் சில்லறை உள்ளதா என்று கேட்க, அவர் ஆம் என்றதும் என்னிடம் கைகாட்டினார். நான் ஐநூறை கொடுத்தேன். அவரோ ஐநூறுக்கு போதுமா இன்னும் வேண்டுமா என்று ஒரு கட்டு நோட்டை வெளியே எடுத்தார். நான் எதற்க்கும் வாங்கி வைப்போம் என்று ஆயிரத்தையும் கொடுத்து விட்டு சென்று பழச்சாறு எடுத்து வந்தேன். அவர் என்னிடம் நூறாக நோட்டுகளை நீட்டினார்.

நான் இவ்வளவு பெரிய பணக்காரரா ஏமாற்றப் போகிறார் என்று நினைத்து பணத்தை எண்ணாமல் வாங்கி பர்ஸில் வைத்து, பழச்சாறுக்கு பணம் அளித்து திரும்பினேன். அறைக்கு வந்து பர்ஸை எடு‌த்து வெளியே வைத்தேன். இரண்டாக மடங்காமல் விரிந்தது. மீண்டும் மடக்கினேன், விரிந்தது. என்ன இது பத்து நோட்டுகள் தானே பின் ஏன் என்று நோட்டுகளை நேராக்க முயற்சித்தபோதே கவனிதேன், பத்தை விட அதிகமாக இருப்பதை. எடுத்து எண்ணிப் பார்த்தேன் நான் செலவாக்கியது எல்லாமாக சேர்த்து இரண்டாயிரம் வந்தது. பேச்சடங்கி, மூச்சடங்கி கிட்டத்தட்ட அழும் நிலையில் உணர்ச்சி பெருக்கில் அமர்ந்திருந்தேன். அவர் ஆயிரத்திற்கு, இரண்டாயிரம் சில்லறை தந்து சென்றிருக்கிறார். அங்கு வைத்து எண்ணிப்பார்க்க தோன்றாதது நல்லது என்று எண்ணிக் கொண்டேன். எண்ணியிருந்தாலும், அவர் கவனிக்காத பட்சத்தில் திருப்பி கொடுத்திருப்பேனா என்பது சந்தேகமே. அந்த அளவுக்கு கையறு நிலை. இரண்டு நாள் முன்பு கண்ட கனவின் பொருளென்ன என்று அப்போது உணர்ந்தேன்.

அடுத்து, நான் சவுதி வந்து மூன்று வருடங்கள் கழித்து முதல் முறையாக இந்தியா திரும்ப விடுமுறை கேட்டு இரண்டு முறை முயன்றும் விடுப்பு தரவில்லை. ஆளில்லை, நிறைய வேலைகள் என்று ஏதேதோ காரணங்கள் பதிலாக வந்தது. மற்றவர்கள் அனைவரும் ஒரு முறை வந்து திரும்பி விட்டனர். நான் இரண்டாவது முறை முயற்சித்து இயலாமல் அன்று வழக்கிட்டு வந்தேன். இரவு தூக்கத்தில் கனவு. எங்கோ பாறைகள் வெடி வைத்து தகர்க்கும் இடத்தில் சரியாக வெடிக்கும் நேரத்தில் சிக்கி, பாறைகள் வெடித்து சிதற நான் தப்பி ஓடிக் கொண்டிருந்தேன். என்னுடன் வந்தவர்களுக்கு பெரும்பாலும் காயம். ஆனால் நான் ஒரு சிறு கீறல் கூட இல்லாமல் தப்பி விட்டேன். இரவாகி விட்டது தொடர்ந்து ஓடுகிறேன், வழியில் ஒரு சுடலைமாடன் கோவில் “தலைவரே காப்பாத்தும்” என்று மனதில் வேண்டிக் கொண்டு தொடர்ந்து ஓடுகிறேன். வழியில் ஒரு காடு குறிக்கிடுகிறது.

காட்டின் எல்லைக்கு இப்பால் இடப்பக்கம் ஒரு வீடு. அதன் அருகில் சென்று நின்று, எப்படி இந்த இரவில் தனியாக காட்டைக் கடப்பது என்று எண்ணிக் கொண்டிருக்கையில் அந்த வீட்டின் கதவை திறந்து ஒரு ஆள் வருகிறார். மானுடக் கற்பனையில் மாடசாமிக்கி என்ன உருவமோ அதே மின்னும் கருமையான உடல் கொண்ட உயரமான ஆள். ஆனால் முகம் தெரியவில்லை, பட்டு ஜரிகையுடன், சிறு மணிகள் கோர்க்கப்பட்ட அரைக்கால் சட்டை மட்டும் அணிந்திருந்தார். எனக்கு கனவுக்குள்ளேயே புரிகிறது வருவது தெய்வம் என்று “தலைவர் நமக்கு தொணைக்கி வாறாரு” என்று மனதில் நினைத்துக் கொண்டேன். ஆனால் அவர் அருகில் வந்ததும் கடவுள் என்று தெரிந்தும் நான் பரிகாசம் செய்கிறேன். “எங்க போறீீரு, நீரு ஒண்ணும் வராண்டாம், எனக்கு போவ தெரியும்” என்றேன். உடனே அவர் “செரி அப்ப நான் போறேன்” என்று திரும்பினார். உடனே நான் சுதாரித்துக் கொண்டு “ஓய் நான் சும்மா இல்லா சொன்னேன், வாரும்” என்றேன். உடனே அவர் எனக்கு முன்னால் சற்று தூரத்தில் செல்ல நான் பின்னால் சென்றேன். ஒரு இடத்தில் வந்ததும் அவர் வலப்புறம் இருந்த பனைமரத்தடியில் போய் மறைத்து நின்றார்.

நான் மரத்திற்கு அப்பால் எட்டிப் பார்த்தேன். அது காட்டின் எல்லை, அப்பால் வீடுகள் தெரிந்தன. நான் அந்த பனைமரத்தை கடக்கும் போது திரும்பிப் பார்க்காமலேயேே “செரி, செரி சீீீீக்கிரம் வந்து சேரும்” என்று கூறி கடந்து சென்றேன். வழியில் ஒரு வெண்ணிற நாய் குறைத்துக் கொண்டு நின்றது. அதைப் பார்த்ததும் புரிந்து கொண்டேன் யார் என்று. அருகில் சென்றதும் அது என்னுடன் வந்தது, சென்று கொண்டிருக்கயில் மனதில் “கடவுளே எப்பிடியாவது லீவு வாங்கி தந்துரும்” என்று வேண்டுதல். அப்படி நினைக்கயிலேயே ஒரு கிரிக்கெட் மைதானம், அங்கிருந்து பந்து ஒன்று என்னை நோக்கி வருகிறது, பிடிக்காமல் நழுவ விட்டேன், இரண்டாவது முறையும் வருகிறது நழுவ விட்டேன், மூன்றாவது முறை கீழே விழுந்து நெஞ்சோடு சேர்த்து பிடித்துக் கொண்டேன். பின் நான் செல்ல வேண்டிய இடம் வந்ததும், அந்த வீட்டின் திண்ணையில் அமர்ந்தேன் கையில் சாம்சங் நிறுவ tab ஒன்று இருந்தது. அந்த நாய் அருகே வந்து என் கழுத்தில் நக்கியது. நான் அதை துடைப்பதற்காக கையை கழுத்தில் வைத்தேன்.

விழித்துக் கொண்டேன், எனது இடக்கை கழுத்தில் இருந்தது. அந்த அளவுக்கு உண்மையாகவே ஒரு நாய் நக்கிய உணர்வு. கனவின் அர்த்தம் கிட்டத்தட்ட முழுமையாக புரிந்தது, அடுத்தமுறை கொஞ்சம் கடினமானாலும் ஊருக்கு செல்வது உறுதி என்று. ஆனால் அந்த Tab எதைக் குறிக்கிறது என்று மட்டுமே புரியவில்லை. ஏனெனில் எனக்கு அதுவரை tab வாங்கும் எண்ணமில்லை, அதற்கு பின்பும் இல்லை. பின்னர் மூன்று மாதம் கழித்து மீண்டும் விடுமுறை கேட்டு, அப்போதும் மறுக்க நான் வேலைக்குச் செல்வதை நிறுத்தி அறையிலேயே இருந்து பிரச்சினை ஆகி, உடன் வேலை செய்தவர்கள் எல்லாம் சிபாரிசு செய்து ஒருவழியாக விடுப்பு கிடைத்தது. நான் திரும்பி வர மாட்டேன் என்பது தெரிந்ததால், எனது விமான பயணத்தின் முந்தைய நாள் இரவு, உடன் வேலை செய்யும் நண்பர்கள் எல்லாம் இணைந்து எனக்கு சாம்சங் நிறுவன Tab – ஐ நினைவு பரிசாக அளித்தனர். மீண்டும் கனவில் கண்டது யதார்த்த வாழ்வில் நடந்த போது வார்த்தைகள் முட்டி, உணர்ச்சிப் பெருக்கு.

இதுபோன்று கிட்டத்தட்ட இருபது கனவுகளையாவது கூற முடியும். சமீபத்தில் நடக்கவிருக்கும் என் திருமணத்துடன் தொடர்புடைய ஒன்றை கனவில் கண்டேன் அது யதார்த்தத்தில் தற்போது நடந்தாயிற்று. எல்லாவற்றையும் சொல்ல முடியாது, சொல்லி தீராது. மேலும் நான் தற்புகழ்ச்சி பேசுவது போல இருக்குமோ, என்ற எண்ணத்தால் நிறுத்திக் கொள்கிறேன். பொதுவாக நான் தினமும் காணும் மற்ற கனவுகள் எவையும் என் நினைவில் நிற்பதில்லை. ஆனால் எனது குல தெய்வம் கோவிலை கனவில் கண்டு அதன் தொடர்ச்சியாக நான் காணும் கனவுகள் முழுமையாக தொடக்கம் முதல் இறுதிவரை நினைவில் இருக்கும். மேலும் இந்த கனவுகளில் நடக்கப்போவவை அப்படியே நேரடியாக வராது. குறிப்புகளாக, படிமங்களாகவே இருக்கும். நாம் அதை நம்முடைய வாழ்க்கை சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி அர்த்தப்படுத்திக் ஊகித்துக் கொள்ள வேண்டியது தான். என்னுடைய வெற்றிகளை மட்டுமல்ல, தோல்விகளையும் கண்டிருக்கிறேன். நடக்கப்போவது இதுவே, ஆகவே ஏற்றுக்கொள் எனும் அர்த்தத்தில்.

பின்னர் ஒரு கட்டத்தில் நாம் எதற்காக கடவுளிடம் வருந்தி, வேண்டிக் கொள்ள வேண்டும். தெய்வம் எல்லாவற்றுக்கும் துணையாக உடனிருக்கும் போது, எதற்காக இந்த வேண்டுதல், தெய்வம் அறியாததா எனும் நிலையை அடைந்திருந்த போது ஜெயமோகனை வாசிக்கத் தொடங்கி, அவர் சொற்களால் பகவத் கீதையை வாசிக்க நேர்ந்தது. அதில் குறிப்பிட்டுள்ள வேண்டுதல் இல்லா இறைபக்தியே மெய் எனும் வரிகள் அதை முயற்சித்து பார்க்க தூண்டியது. நேராக பத்மநாபசுவாமி கோவிலுக்கு சென்றேன். வேண்டுதல் இல்லாமல் தொழ முயற்சித்தேன், பெரும் வெறுமையே எஞ்சியது. ஒரு புனித தலத்தில் நிற்கிறோம், இறைவன் முன் நிற்கிறோம் என்ற எண்ணமே இல்லை. ஏதோ வெறுமனே கிழக்கு கோட்டை பேரு‌ந்து நிலையத்தில் நிற்பது போன்ற வெறுமை.

மீண்டும் வேண்டுதலுடன் தொழுதேன், உடனே மனம் பயபக்தியுடன் ஒரே புள்ளியில் குவிந்தது. அப்போது ஒன்று புரிந்தது நாம் மனதை இவ்வளவு காலமும் அவ்வாறு பழக்கி வைத்திருக்கிறோம், எனவே ஏதாவது வேண்டுதலுடன் தொழுதாலே, அதை கடவுள் நடத்தித் தர வேண்டும் என்பதால் அவர் மீது பயமும், பக்தியும் வருகிறது, இல்லாவிடில் வெறுமையே என்று. அந்த வெறுமை, வெறுமை எனும் சொல் எனக்குள் ஓடியபடி இருக்க, சட்டென்று மின்னல் கீற்று போல ‘ ஜெயமோகன், நாராயண குரு பற்றிய கட்டுரைல “ஓரோ சொல்லெண்ணி அகற்றி, எஞ்சி நிற்கும் வெறுமையே பரம்” என்று நாராயணாய குரு சொன்னதா எழுதியிருந்தாரே’ என்பது நினைவிற்கு வந்தது. “அந்த வெறுமை தான், இந்த வெறுமை ” என்று அக்கணம் நான் கண்டு கொண்டேன்.

பின்னர் எனக்குள் இதுவரை வேண்டுதல் இல்லை. எந்தக் கோவிலுக்கு சென்றாலும் வேண்டுதலின்றி பக்தியுடன் உருகி தொழ முடிகிறது. ஆனால் எடுத்த எடுப்பிலேயயே இது சாத்தியப்படவில்லை. மனதை அதுவரை அவ்வாறு பழக்கியதால் ஆரம்பத்தில் சில நாட்கள் ஆழத்தில் வேண்டுதல்கள் எழுந்தது, நான் அவற்றை பிடிவாதத்துடன் வலுக்கட்டாயமாக அகற்றினேன். அங்ஙனம் வேண்டுதல்கள் எழும் போது நாராாயண குருவின் சொற்களை எண்ணிக் கொள்வேன், அக்கணமே வேண்டுதல்கள் விலகுவதைக் கண்டேன். இன்று துளி அளவும் இல்லை வேண்டுதல்கள்.

மேலும் இந்த கனவுகள் மற்றும் ஆன்மீகம் பற்றி எனக்கிருந்த பல கேள்விகளுக்கும், சந்தேகங்களும் வேறு பலர் மூலமாக ஜெயமோகன் எனக்கு பதிலளித்தார். “எல்லாமுமான அது, நாம் நம்பிக்கைக்கு ஏற்ப, நாம் நம்பும் உருவில் நம் முன் வந்து நிற்கும் என்று”. நான் ஆரம்பத்தில் சிலரிடம் இந்த கனவுகளைப் பற்றி சொன்ன போது கேலியே எஞ்சியது. அதற்கும் ஜெயமோகனே பதிலளித்தார், நான் நிற்கும் தளம் வேறு, அவர்கள் நிற்கும் தளம் வேறு, அவர்கள் என்னுடைய தளத்திற்கு வந்து அனுபவத்தால் உணர்தாலொழிய அதை நம்புவதும், புரிந்து கொள்ளவும் அவர்களால் இயலாது என. எனவே நான் இப்போது எவரிடமும் பகிர்வதில்லைை. ஆனால் நான் இப்போதும் என் வாழ்வில் நடக்கப்போகும் முக்கிய சம்பவங்களை கண்டு கொண்டிருக்கிறேன் கனவுகளில்.

நான் வாழ்வில் இப்போது தான் முதல் முறையாக இவ்வளவு பெரிய கடிதம் எழுதுகிறேன். எனக்குள் இருந்தவற்றை சரியாக சொற்களாக எடுத்துச் சொல்லி விட்டேனா எனத் தெரியவில்லை. ஓரளவுக்கு சரியாக சொல்லி விட்டதாக நம்புகிறேன்.

நன்றியுடன்

எஸ்

***

அன்புள்ள எஸ்

கனவுகள் நம்முடைய ஆழுள்ளம் வெளிப்படும் வாசல்கள். அவற்றைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கவேண்டும். ஆனால் அறுதியான அர்த்தம் அளித்துவிடக்கூடாது. நம் ஆசைகளையும் ஐயங்களையும் அவற்றின்மேல் ஏற்றிவிடக்கூடாது. நாம் அவற்றை முன்நிபந்தனை இல்லாமல் ஆராயவேண்டும். அதற்கு ஒரே வழி அதிகம் ஆராயாமல் வெறுமே கவனிப்பதுதான்.

ஜெ

முந்தைய கட்டுரைஆரம்பக்கல்விக்காக ஓர் இயக்கம், நன்றியும் வணக்கமும்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் அமைப்பு- உதவிகள்