விஷ்ணுபுரம் அமைப்பு- உதவிகள்

அன்புள்ள ஆசிரியருக்கு,

தங்களின் வாசகன் சக்திவேல் எழுதுவது. நான் தங்களின் சிங்கப்பூர் வகுப்பில் பயனடைந்து இருக்கிறேன். தாங்கள் கருத்தில் கொள்ளுமளவுக்கு அறிவோ ஆற்றலோ அற்றவன். என் எதிர் கால கனவுகளில் ஒன்று தங்களோடு ஒரு நிழலாக, சாரதியாக, பயணங்களில் பல துணைகளில் ஒன்றாக, மென் நடைகளில் தூரத்து துணையாக, உறுத்தல் இல்லா அணுக்கனாக பயனுற்று பலனடைய விரும்புதல்.

சேலம் எனது சொந்த ஊராக இருப்பினும் பார்வதிபுரத்தில் ஒரு வீடு எடுத்து தங்களோட தொடர்ந்து வரும் கனவு இருப்பதனால் சிறிது அடையாளப் படுத்திக்கொள்ள விரும்புகிறேன்.

தங்களுடைய பல சகர்கள் போல சிறு வயதில் காமிக்ஸ், வார பத்திரிகை, துப்பறியும் நாவல்கள், கல்லூரி காலங்களில் பாலகுமாரனில் மயங்கி தெளிந்து எஸ்.ரா வை தொட்டு சாருவின் தூ(ற்)றல்கள் வழியாகத் தங்களை அடைந்தேன்.

தங்கள் வலை தளத்தில் நான் படித்த முதல் கட்டுரை காந்தி பற்றி. அன்றிலிருந்து தங்களைத் தவிர எவரையும் படிக்க இயலவில்லை. 2012-ல் இருந்து தினமும் முன்னும் பின்னுமாக தங்கள் வலை தளத்தை பல முறை குடைந்தும் அள்ளித் தந்து கொண்டே இருக்கிறது.

எனக்கு சிறிது நியாபக மறதி உண்டு. பார்த்த சினிமா, படித்த விஷயங்கள் கொஞ்சமே நியாபகம் இருக்கும். அதுவே பலனாக தங்களின் கட்டுரை, சிறுகதைகளை அதே சுவையோடு பல முறை படித்து இருக்கிறேன்.

சில மாதங்களுக்கு ஒரு முறை ‘அறம்’ படித்தாலும் யானை டாக்டரும், நூறு நாற்காலியும் கண்ணீர் வராமல் முடிந்ததில்லை. சோற்றுக் கணக்கும், ஓலைச் சிலுவையும் என்னை எப்போதும் நெகிழ வைப்பவை.

வெண்முரசு முதல் நாளில் இருந்து வாசகன். சில புத்தகங்களை வாங்கி இருக்கிறேன். எதிர் காலத்தில் அழகான ஓவியங்களோடு வெண்முரசு  மறுசிறப்பு பதிப்புகளுக்காக காத்திருக்கிறேன்.

சிறு வயதில் பார்த்த கர்ணன் பட பாதிப்பு காரணமாக கிருஷ்ணன் ஐ அறவே பிடிக்காது, வீட்டில் இருந்த பெருமாள் படத்தை கிணற்றில் போட்டு வாங்கிய அடி கர்ணனுக்கான அன்பாய் இனித்தது. தங்களின் வெண்முரசால் கிருஷ்ண அர்ஜுனர்களை நெருக்கமாய் விரும்ப முடிகிறது. எனினும் கர்ணன் வரும் இடங்கள் கொஞ்சம் என வருத்தமே. களம் சிறுகதையை எண்ணிக்கை இன்றி திரும்ப படித்திருக்கிறேன்.

விஷ்ணுபுரம் இரு முறை முயன்றும் என்னை காக்க வைத்து கொண்டிருக்கிறது. தவிர பிற கதைகள், குறு, சிறு கதைகள் மேலாக தங்களின் கட்டுரைகள், கருத்துக்கள் படித்து இன்புற்றுள்ளேன்.

காந்தி யை எடுத்து வைக்கும் விதம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. பெரியார் பற்றிய தங்கள் கருத்தில் முழுதாக என்னால் ஒத்து போக முடியவில்லை. காந்தி பெரிய அளவிலும், பெரியார், காமராஜர் சமூக அளவிலும் இன்றைய  எனது நிலைக்கு காரணம் என்றே உணர்கிறேன்.

தங்களுடைய ஆற்றலுக்கும் தமிழ் சமூகத்திற்கான பங்களிப்பிற்கும் என்னளவில் எனது சிந்தனை மேம்பாட்டுக்கும் எந்த அளவினான தொகையும் ஈடு செய்யவே முடியாது. அதிலும் தொகை விஷ்ணுபுர குழுமத்திற்க்காக. மிகக் குறைவான பணம் எனினும் பொறுத்தருள்க.

நீண்ட நாட்களாக பல நூறு முறை மனதளவில் தங்களுக்கு எழுதி அழித்தது, இன்று கொட்டி விட்டது. தங்களின்  பல லட்சம் வாசகர்கள் எழுதிய, எழுத போகிற விசயங்கள் தான், எதுவும் புதிதில்லை. எனது போதாமைதான். பொறுத்தருள்க

நன்றியுடன்,

சக்திவேல்

சிங்கப்பூர்

***

அன்புள்ள சக்தி

விஷ்ணுபுரம் அமைப்பு இப்போதுதான் ஓர் அறக்கட்டளையாக ஆகியிருக்கிறது. தேவைக்கு மட்டுமே நிதி பெற்றுக்கொள்வது என உறுதியாக இருக்கிறோம். ஆகவே தேவையானபோது அறிவிக்கிறோம். உங்கள் உதவிகள் எப்போதுமே தேவையாகும்.

அனைவரும் எப்போதும் சந்திக்கக்கூடிய ஓர் இடத்தில் தங்கவேண்டுமென விழைகிறேன். பார்ப்போம்

ஜெ

***

முந்தைய கட்டுரைகனவுகள், கடிதம்
அடுத்த கட்டுரைஉலோகம் பற்றி…