வெண்முரசு நடையும் அறிவியல்புனைவும்

அன்புள்ள ஜெ

உங்கள் மொழியின் சாயலுடன் எழுதப்பட்ட சில கதைகளைப் பற்றி ஒரு விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது. இளம் படைப்பாளிகளில் உங்கள் மொழியின் சாயல் இருப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எஸ்.ராஜ்குமார்

***

அன்புள்ள ராஜ்

சுந்தர ராமசாமியின் ’அக்கரைச் சீமையில்’ என்ற முதல்சிறுகதை தொகுதி வெளிவந்தபோது அன்றிருந்த ஒரு விமர்சகர் புதுமைப்பித்தன் எழுதியதில் சிந்தியதுபோல உள்ளது என்று எழுதினார் – அவரே புதுமைப்பித்தன் சாயலில் எழுதியவர்தான்.

இன்று அக்கதைகளை நீங்கள் பார்க்கலாம், புதுமைப்பித்தன் அப்படியே தெரிவார். ஒரு புளியமரத்தின் கதையிலேயே புதுமைப்பித்தனின் நடை தெரியும். கவனித்துப்பாருங்கள் அந்த முதல் பத்தி அப்படியே புதுமைப்பித்தனுடையது. அதில் ஊடாடும் ஆசிரியர்குரல், அந்த பகடி எல்லாமே.

ஜெயகாந்தனின் முதல்காலகட்டக் கதைகளில் எல்லாம் புதுமைப்பித்தன் தெரிவார். அவருடைய முதல்கதையாக கருதப்படும் டிரெடில் அப்படியே ஒரு புதுமைப்பித்தன் பாணிக் கதை- மனித யந்திரம் கதையின் சாயல்கொண்டது. கு.அழகிரிசாமியின் தொடக்கமும் அப்படியே.

அன்று இதைப்பற்றி சுந்தர ராமசாமி க.நா.சுவிடம் கேட்டபோது க.நா.சு சொன்னார். “நீ புதுமைப்பித்தன் அல்லது மௌனியிலே ஆரம்பிச்சுத்தான் மேலே போகமுடியும். இல்லேன்னா கல்கியிலேயோ கி.வா.ஜவிலேயோ அண்ணாத்துரையிலேயோ ஆரம்பிக்கணும். அதுக்கு பேசாம துணி வியாபாரம் பண்ணலாம்.”

மொழிநடை என்பதை சற்றேனும் ஆராய்பவர் ஒன்றை உணரமுடியும், எந்த எழுத்தாளரும் வெட்டவெளியில் இருந்து நடையை கண்டெடுக்க முடியாது. முன்னோடியின் மொழியிலிருந்தே ஒருவரின் நடை திரண்டுவர முடியும். மொழிநடை என்பது வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு மனிதர்கள் வழியாக உருமாற்றங்களுடன் சென்றுகொண்டே இருக்கும் ஒன்று.

ஏனென்றால் மொழிநடை என்பது மொழிசார்ந்தது அல்ல, அதற்கப்பால் உள்ள அகம் சார்ந்தது. ஒருவருக்கு அவருக்கான அகம் என ஒன்று உண்டு. ஆனால் அது அக்காலகட்டத்தின் பொதுவான அகம் ஒன்றின் பகுதிதான் அது. தனித்தன்மை என்பது அந்த பொது அகத்தின் ஒரு கூர்முனை மட்டுமே.

எந்த எழுத்தாளரும் முற்றிலும் தனித்தன்மை கொண்டவர் அல்ல. ஆகவே எந்த எழுத்துநடையும் முற்றிலும் தனித்தன்மை கொண்டது அல்ல. இலக்கியத்தின் அடிப்படை விதிகளில் ஒன்று இது. தனித்தன்மை என்பது உண்டா? உண்டு, ஆனால் அது மிகச்சிறியது.

நூறாண்டுகளுக்குப் பின் ஒரு காலகட்டத்தின் நல்ல இலக்கியங்களை தொகுத்துப் பார்த்தால் ஒருவரே எழுதியதுபோலத் தோன்றும். கூர்ந்து பார்த்தால்தான் வேறுபாடு தெரியும். புறநாநூறு ஒருவரே எழுதியதாக இருக்கலாம் என சுஜாதா முன்பொருமுறை சொல்லி ஒரு விவாதத்தைக் கிளப்பினார். தமிழினிக்காக ராஜமார்த்தாண்டன் தொகுத்த நவீனத் தமிழ்க்கவிதைகளின் பெருந்தொகுதியைப் பாருங்கள் [கொங்குத்தேர் வாழ்க்கை]. அத்தனை கவிதைகளும் ஒருவரே எழுதியதுபோல சட்டென்று ஒரு பிரமை உருவாகும். வேறுபாடுகள் பிறகே தெரியவரும்.

ஒரு மொழிச்சூழலுக்கு ஒட்டுமொத்தமாக ஒரு பொதுத்தன்மை உண்டு. அதற்குள் வெவ்வேறு மொழியொழுக்குகள் உண்டு. தமிழில் புதுமைப்பித்தனின் மொழிநடையின் தொடர்ச்சியை கு.அழகிரிசாமி, சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், நாஞ்சில்நாடன் என்று தலைமுறைகள் வழியாக பார்க்க முடியும். கு.ப.ராவுக்கு, ந.பிச்சமூர்த்திக்கு இப்படித் தொடர்ச்சி உண்டு. கு.ப.ரா முதல் தி.ஜானகிராமன் வழியாக பாலகுமாரன் வரை ஒரு கோடு இழுக்க முடியும். புதுமைப்பித்தனின் முன்தொடர்ச்சி பாரதிக்குச் செல்லும். சின்னச்சங்கரன் கதை படித்துப்பாருங்கள் தெரியும், புதுமைப்பித்தன் பாரதியை இமிட்டேட் செய்தாரா என்றே ஐயம் கொள்வோம்.

இதற்குள்தான் தனித்தன்மைகள் உருவாகின்றன. புதுமைப்பித்தனில் இருந்து சுந்தர ராமசாமி அவருடைய நடை நோக்கிச் செல்லும் பயணத்தை அவருடைய காலவரிசைப்படுத்தப்பட்ட கதைகளில் காணலாம். ஆனால் கடைசிக்காலகட்டக் கதையான பிள்ளைகெடுத்தாள் விளையில்கூட உள்ளே புதுமைப்பித்தன் இருக்கிறார். இருந்துகொண்டேதான் இருப்பார். அது புதுமைப்பித்தன் அல்ல. ஒரு மொழிக்கூறு.

நான் எழுதவந்தபோது சுந்தர ராமசாமியின் மொழிநடையே தமிழில் வலுவானதாக இருந்தது. அன்று வண்ணதாசன், நாஞ்சில்நாடன், ஜெயகாந்தன், சுஜாதா என பலர் எழுதிக்கொண்டிருந்தனர். சுந்தர ராமசாமியில் இருந்து நான் தொடங்கினேன். என் கதைகளில் சுந்தர ராமசாமி என்னுடைய வட்டார வழக்கால் கொஞ்சம் மறைந்திருப்பார். கட்டுரைகளில் தெளிவாகவே வெளிப்படுவார். அன்று விமர்சகர்கள் என் நடையிலிருந்த சுந்தர ராமசாமிச் சாயலை சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

இன்று என் நடை தனித்துவமானது என கருதப்படுகிறது. பிறரில் செல்வாக்கு செலுத்துகிறது என்கிறார்கள். உண்மை, நான் என் நடையை முப்பதாண்டுகளில் உருவாக்கிக் கொண்டேன். ஆனால் உள்ளூர இன்றும் சுந்தர ராமசாமி இருக்கிறார். என் நடையால் பாதிப்புற்று எழுதும் ஒருவரிலும் சுந்தர ராமசாமி சென்று சேர்கிறார். இந்தத் தொடர்ச்சி வெட்கப்படவேண்டிய ஒன்றல்ல, வெறுத்து ஒதுக்கவேண்டியதும் அல்ல, இது ஒரு மரபு, ஒரு பண்பாட்டு நிகழ்வு, ஓர் அகத்தொடர்ச்சி.

முந்தைய தலைமுறையின் முக்கியமான எழுத்தாளருடைய மொழிநடை, பாணிக்கு அணுக்கமாக ஆரம்பிக்காத ஒருவர் நல்ல எழுத்தாளரே அல்ல. எந்த இடத்தில் அவர் கடந்துசெல்கிறார் என்பதுதான் கேள்வி.

சென்றதலைமுறையின் ஆற்றல்மிக்க நடைக்கு அணுக்கமாக ஆரம்பிக்காத ஒருவர், அதை உள்வாங்கிக் கடந்துசெல்லாத ஒருவர் இரண்டுவகை நடைகளையே அடைவார். ஒன்று பொதுநடை. அது சூழலில் இருந்து வந்து சேர்வதுதான். செய்திகள், கேளிக்கைகள் வழியாக ஒரு மொழிநடை அது எவரும் முயலாமலேயே உள்ளே நுழைந்து உள்ளமாக ஆகிறது. சாதாரணமாக எழுத்தில் வெளிவருகிறது.

இன்னொரு வகை பாதிப்பு வணிக எழுத்து நடை. நாம் புனைவுகளை இளவயதிலேயே வாசிக்க ஆரம்பிக்கிறோம். அவை பெரும்பாலும் வணிக எழுத்துக்கள். அந்த வணிகஎழுத்தின் நடை மெல்ல உள்ளத்தில் படிகிறது. இப்போது முகநூலில் உள்ள அக்கப்போர்நடை நம் உள்ளமாக ஆகிவிடுகிறது. அதுவும் ஒருவகை வணிகநடையே.

இந்த இரண்டுநடையிலும் எவரும் எதையும் பெரிதாக அடைய முடியாது. சிந்தனைகளை, நுண்ணுணர்வுகளை இந்த நடைகளில் எழுத முடியாது. ஏனென்றால் இவை அவற்றுக்கான நடைகள் அல்ல. சிந்தனைகளை இவை அக்கப்போர்களாக ஆக்கும். நுண்ணுணர்வுகளை தேய்வழக்குகளாக ஆக்கும். இவை ஒருவகை தொற்றுக்கள் போல. இவற்றை எப்படிக் கடப்பது என்பதே இன்றைய எழுத்தாளனின் மிகப்பெரிய அறைகூவல்.

இந்த நடைகளில் எழுத ஆரம்பிப்பவர் மிகமிக விரைவில் வெளிவந்தாகவேண்டும். கொஞ்சம் உள்ளம் அதில் அமைந்துவிட்டால் அதன்பின் அவருக்கான தனிநடையே உருவாக முடியாது. வாழ்நாள் முழுக்க அதற்கு வாய்ப்பே இல்லை. தனிநடை இல்லாத எழுத்தாளன் ஒருவகையில் எழுத்தாளனே அல்ல என்றுகூடச் சொல்லலாம். அது மாபெரும் இழப்பு.

எழுத்தாளர்களில் மிகச்சிலரையே நாம் நினைவில் வைத்திருக்கிறோம். பலருக்கு மொழியடையாளமே இல்லை. காரணம் இதுதான். இன்றைய இளம் எழுத்தாளர்கள் மிகமிக ஜாக்ரதையாக இருக்கவேண்டிய இடம் அது. எந்த அளவுக்கு பொதுப்பெருக்கில் இருந்து விலகி நிற்கிறார்களோ அந்த அளவுக்கே தனித்தன்மை அமையும். அரசியல், மொழி எதிலும்.

ஆனால் இன்றைய முகநூல் சூழலில் அது மிகக்கடினம். சென்ற முப்பதாண்டுகளுக்கு முன்புவரை எழுத்தாளனுக்கு இலக்கிய விமர்சகனின் எதிர்வினை வரும். இலக்கிய நண்பர்களின் எதிர்வினையும் வாசகனின் எதிர்வினையும் வரும். இன்று எந்த இலக்கிய அடிப்படையையும் அறியாத பாமரர்களின் எதிர்வினை அதிகமாக வருகிறது. அது மிகப்பெரிய சுமை.

இன்றைய முகநூல் சூழல், பொதுவாசிப்புச் சூழல், எழுத்தாளனிடம் கோருவதென்ன? பொதுநடையில் எழுது, அக்கப்போர் நடையில் எழுது, அதைமட்டுமே ரசிப்போம் என்றுதான். கொஞ்சம் முயற்சி எடுத்து எழுதினாலும் எதிர்ப்பார்கள், ஏளனம் செய்வார்கள், ஆலோசனை கூறுவார்கள், அல்லது புறக்கணிப்பார்கள். அவர்களை நோக்கி எழுத ஆரம்பிக்கும் எழுத்தாளன் தனக்கான நடையை அடையவே முடியாமலாவான்.

என்னுடைய எழுத்துநடையை அடைய நான் முப்பதாண்டுக்காலம் மொழியில் பயணம் செய்திருக்கிறேன். இன்று எழுதவரும் ஓர் எழுத்தாளன் முதல்கதையிலேயே முதிர்ந்த தனிநடையுடன் வருவான் என எண்ணுவதுபோல அறிவின்மை வேறில்லை. அவன் என் நடைவழியாக தன் நடை நோக்கிச் செல்கிறான். நான் சுந்தர ராமசாமியிலிருந்து என் நடைக்கு வந்ததுபோல.

இங்கே இன்னொன்று உண்டு. செயற்கையாக மொழிநடைக்கு முயல்வது. அது அபத்தமான மொழிநடையையே உருவாக்கும். நடை என்பது அந்த ஆசிரியனின் ஆளுமையேதான். அவனுடைய தரிசனம், அவனுடைய ரசனை, அவனுடைய வாசிப்பு எல்லாமே அதிலிருக்கும். ஓர் எழுத்தாளனின் வாழ்க்கைப்பார்வை முதிர்ந்து, ரசனை கூரடைந்து, வாசிப்பு முழுமையடையும்போதே அவன் நடையும் தனியடையாளம் கொண்டு உருவாகி வருகிறது.

என்னுடைய நடையில் வெண்முரசுநடை தனித்தன்மை கொண்டது. அது கொற்றவையில் உருவாகி வெண்முரசில் முழுமைகொண்ட ஒன்று. நான் அதை பிற புனைவுகளுக்குப் பயன்படுத்தவில்லை. அந்நடையின் செல்வாக்கு இன்றுள்ள பல படைப்பாளிகளிடமிருக்கிறது. அது இயல்பே. அது ஒரு மாபெரும் படைப்பு. அந்தச் செல்வாக்கை அது உருவாக்கியே தீரும்.

தமிழில் இதற்கு முன்னரும் படைப்புக்களின் மொழிநடை ஆழ்ந்த செல்வாக்கைச் செலுத்தியிருக்கிறது. மோகமுள்ளின் நடை, ஜே.ஜே.சிலகுறிப்புகளின் நடை. அவற்றுடன் ஒப்பிட நூறுமடங்கு பெரியதும் தீவிரமானதுமாகும் வெண்முரசு.

அத்துடன் இன்னொன்று உண்டு. தமிழில் இதுவரையிலான நவீன இலக்கியத்தில் வரலாறு, தொன்மம், புராணம் ஆகியவற்றை கையாண்ட புனைவுகள் சொல்லும்படி வேறேதுமில்லை. தத்துவசிந்தனைக்குரிய உருவக மொழியை, ஊழ்கநிலையைச் சொல்வதற்கான தாவும்மொழியை கையாண்ட எத்தனை படைப்புக்கள் தமிழில் உள்ளன?

அன்றாட யதார்த்தத்தையே தமிழின் பெரும்பாலான புனைகதைகள் பேசின. அவற்றின் அகம் என்பதுகூட அன்றாடம் சார்ந்த உளநிலைகள்தான். ஆன்மிகம் சார்ந்த, மெய்யியல் சார்ந்த ஆழம் தமிழ்ப்புனைவுலகில் கையாளப்பட்டதே இல்லை.

மீபொருண்மை [மெட்டஃபிஸிக்ஸ்] சார்ந்து எத்தனை புனைவுகள் தமிழில் எழுதப்பட்டுள்ளன என்று பாருங்கள். அவை நவீன இலக்கியமே அல்ல என்ற நிலைபாடுதான் சென்ற இருபதாண்டுகள் வரை இருந்தது இல்லையா? இன்றும் அவை தேவையற்றவை என்று நம்புபவர்கள் இருக்கிறார்கள் அல்லவா?

வெண்முரசு இந்தத் தளங்களிலெல்லாம் விரிந்து செல்லும் ஒரு புனைவுப்பெருந்தொகை. தமிழில் இவற்றை கையாள்வதற்கு வெண்முரசுதான் முன்னுதாரணம். எல்லாவகையான அதீதநிலைகளுக்குமான மொழிநடை அதிலுள்ளது.

அறிவியல் புனைவு எழுத வருபவர் அன்றாடத்தை எழுதவில்லை. அவர் எழுத வருவது ஒரு வகை மீமெய்மையின் உலகம். மிகைபுனைவின் உலகம். அதற்கு அவர் தமிழ் நவீன இலக்கியத்தில் பெரும்பாலும் அனைவருமே எழுதிய அன்றாட யதார்த்தத்தின் மொழியை கையாள முடியாது. ஆகவே அவர் இயல்பாக வெண்முரசின் மொழிநடையை நோக்கிச் செல்கிறார்.

இன்றைய அறிவியல்புனைவுகளைப் பற்றி இங்கே வாசகர்களுக்கு தெரியவில்லை எனப் புரிகிறது. கம்ப்யூட்டர்கள், ரோபோக்கள், விண்வெளிப் பயணங்கள், தொழில்நுட்பங்கள்தான் அறிவியல்புனைவு என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்குரிய ‘ஹைடெக்’ மொழிதான் அறிவியல் புனைவுக்குரியது என நம்புகிறார்கள்.

அறிவியல்புனைவு இன்று தொழில்நுட்பம் சார்ந்தது அல்ல. காலம், வெளி பற்றிய கருத்துக்களை மாற்றி அடுக்கி ஆராயும் ஒரு தளம். காட்சி, இருத்தல், மெய்மை, வெறுமை என்னும் கருத்துருக்களை ஆராயும் புனைவுலகு. அதற்கு பழைய ‘ஹைடெக்’ செயற்கைமொழி உதவாது. மெய்யியல், தத்துவம், தொன்மம் ஆகியவற்றைக் கையாளும் மொழி அதற்குத் தேவையாகிறது. ஒருவகையான மீஉருவக மொழி அது. ஒரே மொழி கம்பரையும் வள்ளுவரையும் ஆயிரமாண்டுகளுக்கு பின்னர் வரும் உலகையும் இணைக்கவேண்டும். அத்தகைய நடை.

அதை எழுதும் புதிய படைப்பாளிகள் அதற்கான முன்னுதாரணமாக வெண்முரசின் நடையைக் கொள்கிறார்கள். ஏனென்றால் வெண்முரசுதான் அந்த மீமெய்நிலைகளை கையாண்டிருக்கிறது. ஆனால் அந்நடையை அவ்வாறே அவர்கள் பயன்படுத்தவில்லை. அக்கதைகளை கொஞ்சம் கவனித்து வாசிப்பவர்கள் அதைப் புரிந்துகொள்ளலாம். அவர்கள் அந்நடையில் இருந்து மேலே செல்கிறார்கள்.

வெண்முரசின் நடையை வைத்து அவர்கள் அறிவியல்புனைவில் விளையாடுகிறார்கள் என்று படுகிறது. அதைச் சிக்கலாக்கிக் கொள்கிறார்கள். இன்னும் கூர்மையாகச் சொல்லப்போனால் அருவமாக ஆக்கிக்கொள்கிறார்கள். அதனூடாகக் கடந்து செல்கிறார்கள். புதியதொரு மொழியை உருவாக்கிக் கொள்கிறார்கள்.

புதியவை உருவாகி வரும்போது பெரும்தடையாக அமைபவர்கள் இருவர். பழையபாணி விமர்சகர்கள். தேங்கிப்போன வாசகர்கள்.

ஜெ

சுஜாதா அறிமுகம்

முந்தைய கட்டுரைகுகை
அடுத்த கட்டுரை‘திசைதேர்வெள்ளம்’ வாசிப்பு- முனைவர் ப.சரவணன்