துவந்தம், கடிதங்கள்

ஒரு புதிய வீச்சு

வணக்கத்திற்கும் பேரன்பிற்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

படைப்பாளர் திரு திருச்செந்தாழை அவர்களின் த்வந்தம் கதையை குறித்த உங்களின் பரிந்துரையை கண்டு அந்தக் கதையை படிக்க வாய்ப்பு கிடைத்தது. உங்கள் பரிந்துரைகள் என்றுமே இம்மி பிசகாத துலாக்காரனின் கராரான நேர்மையோடு தமிழ் இலக்கிய உலகில் பெரும் பங்காற்றுகின்றன.

எந்தப் பெண்ணையும் எந்த ஆணாலும் ஒருபொழுதும் வெல்லவே முடியாது. இயற்கையின் படைப்பில் ஆண் ஜெயிப்பதற்கான சாத்தியக்கூறுகளே இல்லை. இயற்கையே ஆணை இழப்பவனாகவும் பெண்ணை பெறுபவளாகவும் படைத்திருக்கிறது. அப்படியானால் இங்கே என்னதான் ஆணுக்கு வழி என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. ஆணுக்கு முன்பாக இருக்கின்ற தீர்வு அவளை சரணடைந்து அவளோடு வாழ்வது அல்லது அவளை துறந்து முற்றாக அவளிடமிருந்து விலகி விடுவது. பெரிய பெரிய மகான்களும் துறவிகளும் கூட பெண்ணிடம் இருந்து முற்றாக விலக முடியாமல் தவித்து அவளை முழுதாக சரண் அடைவதை செய்திருக்கிறார்கள். நிலைமை இப்படி இருக்கின்ற பொழுது குடும்ப வாழ்வில் இருக்கின்ற ஆண்களுக்கு பெண்ணிடம் முற்றாக சரணடைவதை தவிர வேறு வழியே இல்லை. இந்தக்கதையில் கதை சொல்லி தன்னால் ஜெயிக்கவே முடியாது என்று ஆகிவிட்ட பெண்ணிடமிருந்து முழுமையாய் விலகி அவளை முற்றாகத் துறந்து செல்கின்ற வழியை தேர்ந்தெடுக்கிறான்.

மிக அருமையான கதை. புத்தம் புதிய களத்தில் எழுதப்பட்ட ஆண் பெண் ஆடலின் வசந்தோற்சவம், திருவூடல். அவள் மீது கொண்ட ஏக்கம் அவனின் அவளையே துறத்தல் என்பதான ஞானத் துறவில் நிறைகிறது. அவளோ அவனிடமிருந்து பெற்ற ஞானத்தின் துணைகொண்டு துணைவி என, அன்னை என, இல்லத்து அரசி என, தேர்ந்த வியாபாரி என பொலிந்து செல்வாள். வென்றது இருவருமே!!.

ஆணின் வெற்றி துறத்தலில். பெண்ணின் வெற்றி அன்னை என அனைத்தையும் அரவணைத்து பொங்கிப் பொலிதலில்.

கவி மொழியில், உணர்வுகளை கட்டிப்போட்ட நடையில், ஒரே மூச்சில் வாசிக்க வைத்த உன்னதமான படைப்பு. ஆசிரியர் திருச்செந்தாழை அவர்களுக்கு மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள். மேலும் மேலும் என அவர் படைப்புக்களை எதிர்நோக்குகிறோம்!

சரியான கதையை பரிந்துரை செய்த தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

மிக்க அன்புடன்

ஆனந்த் சுவாமி

திருவண்ணாமலை

***

அன்புள்ள ஜெ

திருச்செந்தாழையின் துவந்தம் நல்ல கதை. கதை நடக்கும் களம் கதைக்கு ஆழத்தைக் கூட்டுகிறது. நான் சந்தைகளைப் பார்க்கும்போதெல்லாம் நினைப்பேன். இங்கேதானே வாழ்க்கை கொந்தளித்துக்கொண்டிருக்கிறது. எத்தனை நூறுகதைகள் இங்கிருந்து வரமுடியும் என்று. திருப்பூரை வைத்தே நூறு கதைகள் எழுதலாம். எழுச்சியும் வீழ்ச்சியும் நடந்துகொண்டே இருக்கும் பரமபதம் இது. இந்தக்கதையும் பரமபதம்தான். விழுங்குவதற்காக ஏணியில் ஏற்றிவிட்டு வாய்திறந்து வருகிறது பாம்பு. அதிலிருந்து இன்னொரு பாம்பாக மாறி தப்பித்துக்கொள்கிறாள்

ஆர்.ராஜேஷ்

***

முந்தைய கட்டுரைதீயின் எடை- முன்பதிவு
அடுத்த கட்டுரைதேசமற்றவர்கள்