அ.முத்துலிங்கமும் ஈழப்போரும்
அ.முத்துலிங்கத்தின் கலை
ஜெ மோ விளக்கம் அருமை. நன்றி. அ.முத்துலிங்கமும் ஈழப்போரும். ஈழத்தில் நான்கு நிலைகள் உண்டு.
1. போருக்கான காரணங்கள்
2. நீண்ட போர்
3. போரின் விளைவுகள் – தாயகத்தில்
4.போரின் விளைவுகள் – புலம் பெயரும் போராட்டங்களும், புலம் பெயர்ந்த வாழ்வின் போராட்டங்களும், அதில் வென்ற நிகழ்வுகளும்.
நான்கு நிலைகளும் எழுதப்பட வேண்டியவை. அவரவர் அனுபவம் களத்தை தீர்மானிக்கும்
அ.முத்துலிங்கம் நான்காவது களத்தில் அதிகமாக எழுதி இருந்தாலும், மற்ற மூன்று தளங்களிலும் சில எழுதி இருக்கிறார். நான்காவது களத்தில் ஒரு எடுத்துக்காட்டாக, ‘பயணத்தின்’ கொடிய துயரத்தை ‘கடவுள் தொடங்கிய இடத்தில்’ பார்க்கலாம். அது உறுதியாக எழுதப்பட வேண்டியதே!
அவர் சிறப்பு, பல நாடுகளின், கலாசாரங்களின் பின்னணியில் அவர் படைத்த இலக்கியம். எடுத்துக்காட்டாக, நம்மில் சிலர் இறந்த உடலை எரிப்பதை, ஆப்பிரிக்காவில் காட்டுமிராண்டித் தனமாகப் பார்க்கிறார்கள் என்பதை அவரை படித்தே நான் அறிந்து கொண்டேன். அவருடைய இந்த பரந்த உலக தளம் தமிழில் மற்ற எவரிடமும் நான் கண்டதில்லை. வேறு மொழிகளில் சாத்தியம் என்றும் தோன்றவில்லை.
ஜெயமோகனின் விளக்கம் மிகவும் நேர்மையானதே. அ.முத்துலிங்கத்தை அபரிதமாக படித்தவன் என்ற முறையில், ஜெயமோகன் சொல்வதில், எனக்கு முழு உடன்பாடு உண்டு. அது மட்டுமல்ல அ.முத்துலிங்கம் கதை சொல்லுதலும் அபாரம். அ.முத்துலிங்கம் தமிழுக்கு கிடைத்த கொடை.
அன்புடன்,
கே கேசவசாமி.
***
அன்புள்ள ஜெ
அ.முத்துலிங்கம் பற்றிய கட்டுரை நிறைவை அளித்தது. அவர் என்னுடைய ஃபேவரைட் ஆசிரியர். அவருடைய எல்லா நூல்களையும் விரும்பிப் படித்திருக்கிறேன். மென்மையானவை, நுணுக்கமானவை. அவரை தமிழின் அதிநவீன எழுத்தாளர் என்றுதான் சொல்லவேண்டும். அவரை வாசிக்க அந்த மென்மையான நுட்பமான கதைசொல்லும் முறையை ரசிக்கும் பார்வை தேவை. அது இல்லாவிட்டால் அவரை வெறும் கதைசொல்லியாக நாம் புரிந்துகொள்ள முடியும்
பொதுவாக சாதாரண வாசகர்களுக்கு இலக்கியத்தை வாசிக்க வெளி ரெஃபரன்ஸ் தேவைப்படுகிறது. அவர்கள் ஏற்கனவே பேசிக்கொண்டிருக்கும் விஷயங்களிலிருந்து தான் அவர்களால் இலக்கியத்திற்குள் வரமுடியும். சூழலில் பொதுவாகப் பேசப்படும் அரசியலும் வம்புகளும் சமூகப் பிரச்சினைகளும்தான் அவர்களை இலக்கியத்துடன் தொடர்புகொள்ள வைக்கின்றன. அப்படி தொடர்பேதும் இல்லாத எழுத்தானாலும் அவர்கள் அப்படித்தான் தொடர்புபடுத்திக் கொண்டு புரிந்துகொள்வார்கள்.
ஆனால் நல்ல இலக்கியம் காலாதீதமானது. ஆகவே அது அந்தக் காலகட்டத்தின் அரசியலுக்கோ வம்புகளுக்கோ சமூகப் பிரச்சினைகளுக்கோ முழுமையாக கட்டுப்பட்டது அல்ல. அது செல்ப் ரெபரன்ஸ் உள்ளது. அத்தகையது முத்துலிங்கம் எழுதும் கதையுலகம். அது சாதாரண வாசகர்களுக்கு உரியது அல்ல. மொழி எளிமையாக இருந்தாலும் அதன் நுட்பத்தை உணர கூர்ந்த ரசனையும் வாசிப்புப் பயிற்சியும் தேவை
எஸ்.பாஸ்கர்