கவிதை வாசிப்பின் இன்பங்களில் ஒன்று ஒரு கவிதையில் இருந்து இன்னொன்றுக்கு, ஒரு கவிஞனில் இருந்து இன்னொரு கவிஞனுக்குச் சென்றுகொண்டிருப்பது. தன்னிச்சையாக நினைவுகள் சென்று தொடும் இன்னொரு கவிதை வாசிக்கும் கவிதையை புதியபொருள்கொள்ளச் செய்கிறது. அவை ஒன்றையொன்று வளர்க்கின்றன. மிகமிக மென்மையான முனையால் அவை ஒன்றையொன்று தொட்டுக்கொள்கின்றன, நமக்குள் எங்கோ.
இணை
உறக்கத்தில் அதிர்ந்தவளின்
ஒரு கை மட்டும்
விழித்துக்கொண்டது
அது காற்றில்
எதையோ துழாவுகிறது
இவன்
நெருங்கிப் படுக்கிறான்
என்ன ஆயிற்று என்கிறான்
விழித்த கைக்கு
இவனைத் தெரியவில்லை
இவன் ஒரு கையை
அருகே நீட்ட
சட்டென்று அதைப்பற்றி
உறங்கிப் போனது
ஒற்றைக் கை
ஆனந்த் குமாரின் இக்கவிதையில் இருந்து நான் கல்பற்றா நாராயணனின் பழைய கவிதையை நோக்கிச் சென்றேன். அங்கே கை இணையவில்லை. சித்தார்த்தனைப்போல மிகமிக மென்மையாக இன்னொன்றை விலக்கி வைத்துவிட்டு எழுந்துகொள்கிறது. மழை முடிந்துவிட்டது.
குடை
எதிர்பாராமல் பெய்த ஒரு பெருமழையில்
அப்போது மட்டுமே மனிதர் கண்ணில் படக்கூடிய
அப்போது மட்டுமே உசிதமென்று தோன்றக்கூடிய
கடற்கரைப் பாதையோரத்து ஓலைக்கூரைக்குக் கீழே
சேர்ந்து நிற்கையில் அறிமுகம் கொண்டோம்
கனத்து பெய்யும் மழையில்
அதிபுராதனமான ஓர் அபயத்தின் நம்பிக்கையில்
எங்களுக்கு எங்களைப் பிடித்துப் போயிற்று.
சேர்ந்து வாழ முடிவெடுத்தோம்.
ஒரே போலத் தோன்றும் இருகுழந்தைகளுக்கு
பெற்றோரானோம்.
சமீபத்தில் ஓர் இரவில்
தூங்கிவிட்டாள் என்று தோன்றியபோது
அவளது கரத்தை எடுத்து மெல்ல கீழே வைத்தேன்
அவள் கேட்டாள்
அந்த மழை அரைமணிநேரம் மட்டுமே பெய்ததா என்ன?
ஆனந்த் குமாரின் இன்னொரு கவிதை. கையில் எஞ்சும் மென்மை. ஒளி. ஆனால் அவ்வளவுதான், மினுக்கும் ஒரு வரி. அது ஒரு ஏக்கம். ஓர் நினைவெச்சம். கவிஞர்கள் திரும்பத்திரும்ப காலத்திடம் கேட்கும் கேள்வி அது. அவ்வளவுதானா? தும்பைப்பூத்தேன் என அதை வைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனன் சொல்கிறார். தும்பையின் மென்மையான சின்னஞ்சிறிய பூவில் எஞ்சும் மிகச்சிறிய இனிமை. வசந்தமே காலங்களில் குறுகியது.
மினுக்கும் வரி
பழைய குப்பைகளை
கிளறிக்கொண்டிருந்தவன்
கையில் கிடைக்கிறது
ஒரு காதலர் தின வாழ்த்து
அட்டை
அதில் அவன் எழுதிய
அபத்த வரி
பறக்கும் இதயங்களில்
ஒன்றை மட்டும்
துளைக்கும் அம்பு
மினுக்கும் மையினால்
சூழப்பட்ட
காதல் என்னும் வார்த்தை
சிரித்தபடி வைத்துவிட்டு
மீண்டும் அவளருகே வந்து
படுக்கிறான்
கையிலொட்டிய ஜிகினாவால்
அவள் கன்னத்தைத் தொடுகிறான்.
ஆனால் இன்னொரு கல்பற்றா கவிதையை நோக்கிக் கொண்டுசென்றது அவ்வரி. அது இன்னும் சற்று எஞ்சுகிறதே என வியக்கிறது. இன்னும் இன்னுமென அது எஞ்சுமென கண்டடைகிறது. அந்த கண்ணீர் இழப்பின் வெளிப்பாடு அல்ல. எய்துதலின் இன்பத்தாலானது.
தற்செயல்
வீடு முழுக்க ஆட்கள் உள்ள
அந்தப் பண்டிகைநாளில்
ஒர் அறையிலிருந்து
மற்றொரு அறைக்கும் ஓடும்வழியில்
நொடிநேரம் அவள்முன் வந்தீர்கள்.
எங்கிருந்தோ வந்த ஒரு முத்தத்தை
அவளுக்கு அளித்தீர்கள்.
பிறகு
எல்லா பரபரப்பும் முடிந்தபின்னர்
படுக்கையில் குப்புறவிழுந்து கண்ணீர் வடிக்கிறாள்.
திடுமென வந்துசேரும் இனிமையை எண்ணி.
எதன்மீதும் தனக்கு ஒரு அதிகாரமும் இல்லையே என்று எண்ணி.
இரு கவிஞர்கள், இரு கவிதைப் பார்வைகள். ஒன்றையே மீளமீள எழுதுகிறது கவிதை. உறவு பிரிவு, இழப்பு எய்துதல் என அதன் தறிச்சட்டம் ஓடிக்கொண்டே இருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத, இப்புவியையே போர்த்தும் ஒன்றை நெய்துகொண்டே இருக்கிறது.