துவந்தம், கடிதங்கள்

ஒரு புதிய வீச்சு

அன்புள்ள ஜெ

துவந்தம் அழகான ஒரு கதை. நாம் வழக்கமாக கொண்டாடும் கதைகளெல்லாமே தனிவாழ்க்கையைப் பற்றியவை. அவற்றைத்தான் எழுதவேண்டும் என்னும் ஒரு எண்ணம் நம் மனதிலே ஊறியிருக்கிறது. ஆண் பெண் உறவைப்பற்றி அவ்வளவு எழுதியிருக்கிறோம். ஆனால் மனிதவாழ்க்கையில் ஒருவனின் வெற்றி தோல்வி, சிறுமை பெருமை வெளிப்படும் இடங்களில் புறவுலகமே மிகுதி. தொழில்சூழலில் ஆபீஸ் மட்டுமே கொஞ்சம் எழுதப்பட்டுள்ளது. அரசாங்க உலகம். அதிலும்கூட அங்குள்ள உண்மையான சிக்கல்கள் எழுதப்படவே இல்லை.

தமிழில் வணிகம், தொழிற்சூழலைப் பின்னணியாக்கி எழுதப்பட்ட நல்ல நாவல் ஒன்று இதுவரை இல்லை.கொஞ்சமாவது சொல்லப்படவேண்டியது ஒரு புளியமரத்தின் கதைதான். சுந்தர ராமசமி துணிக்கடை பின்னணியில் எழுதிய சில கதைகள். பி.வி.ஆர் சில நல்ல கதைகளை எழுதியிருக்கிறார். கோர்ட், ஆஸ்பத்திரி பின்னணியில் [ மிலாட், ஜி.எச்.] அவையெல்லாம் சுவாரசியமான கதைகள்

ஆச்சரியமான விஷயம் இது. ஆனால் பலகோடிப்பேர் அதில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஒருவன் ஒரு தொழிற்சூழல் வழியாக அவனுடைய பெர்சனாலிட்டியை உருவாக்கிக்கொள்ளும் சித்திரம் எங்கும் எழுதப்படவில்லை. ஆனால் அது நம் அன்றாடவாழ்க்கை.

திருச்செந்தாழை கதையில் அந்தக் கதைசொல்லியான வேட்டைநாய் அல்லது நரி அற்புதமான கூர்மையுடன் காட்டப்பட்டிருக்கிறான். அவன் அந்த முதலாளிக்குச் சிலவற்றை கற்றுக்கொடுப்பது இறைச்சுத்துண்டுகளை வீசி வலைவிரிப்பதுதான். வலையில் முதலைச் சிக்கிக்கொள்கிறது. விலாங்கு லாகவமாக நழுவிவிடுகிறது. கதையின் பூடகத்தன்மையை காட்டுவது அந்த கதைசொல்லும் முறையிலுள்ள சிக்கல்தான். அழகான கதை

எம்.ராஜேந்திரன்

***

அன்புள்ள ஜெ,

பா திருச்செந்தாழையின் பல சிறிய கதைகளை முன்பும் வாசித்திருக்கிறேன். அக்கதைகளில் அவர் சிக்கலான அலங்காரமான உரைநடைக்கு முயல்வதாகத் தோன்றும். அலங்காரமான நடை என்பது வாசகனுக்கு உடனடியாக ஒரு விலக்கத்தை அளித்துவிடுகிறது. இந்த ஆசிரியன் உண்மையைச் சொல்லவில்லை, நமக்காக வித்தை காட்டுகிறான் என்று தோன்றிவிடும். ஆகவே அக்கதைகள் எனக்கு ஆர்வமூட்டவில்லை. ஆனால் இப்போது நீங்கள் சுட்டிகொடுத்துள்ள மூன்று கதைகளுமே முக்கியமானவை. நேரடியான மொழி கொண்டவை. ஆனால் எண்ணி விரியும் கதையாழம் கொண்டவை. வெளியே உள்ள உலகம் என்பது எத்தனை சொன்னாலும் தீராதது. வால்ஸ்டிரீட் ஓநாய்களைப்பற்றி வெள்ளைக்காரன் நிறையவே எழுதியிருக்கிறான். நம்மூர் ஓநாய்களைப் பற்றி நாம் இப்போதுதான் எழுத ஆரம்பித்திருக்கிறோம். அற்புதமான கதை. திருச்செந்தாழைக்கு என் வாழ்த்துக்கள்.

ஜெயராமன்

***

அன்புள்ள ஜெ

துவந்தம் வித்தியாசமான கதை. நாம் திரும்பத்திரும்ப வாசிக்கும் குடும்பக் கதை, கிராமியக் கதைகளிலிருந்து மாறுபட்டு ஓர் அசலான உலகம். “சட்டைப் பாக்கெட்டில் சரியாக வைக்காத ரூபாய்த்தாள் எதிர்காற்றில் படபடத்தபடி இருந்தது. இப்படி அசிரத்தையாகக் கையாளப்படும் எந்த விஷயத்தைப் பார்க்கும்போதும் எனக்குள் பரவி விடுகிற பதட்டமும் கோபமும் இப்போதும் வந்தது.” என்று மிகச்சுருக்கமாக கதைசொல்லியின் குணச்சித்திரம் சொல்லப்பட்டுள்ளது. பல உள்நுட்பங்களுடன் விரிகிறது. அதிபுத்திசாலி வியாபாரிகளின் உலகம். அதில் அப்பாவியான அடுத்த தலைமுறை இளைஞன். அவன் மகன் அதைவிட மோசம். ஆட்டிசம் கொண்டவன். ஆனால் அந்தப்பெண் அதனாலேயே அத்தனை ஜாக்ரதையானவளாக ஆகிவிடுகிறாள். அவளை எவரும் ஜெயிக்கமுடியாது

எஸ்.பாஸ்கர்

***

முந்தைய கட்டுரைவெய்யோன்,பன்னிரு படைக்களம்-பலராம கிருஷ்ணன்
அடுத்த கட்டுரைபேசாதவர்கள், கடிதங்கள்-2