துவந்தம், கடிதங்கள்

ஒரு புதிய வீச்சு

அன்புள்ள ஜெ

துவந்தம் ஒரு சிறந்த கதை. உண்மையில் அக்கதையை நீங்கள் அளித்த ஒரு மானசீகச் சட்டகப்படி வாசித்தபோதுதான் கதை எவ்வளவு ஆழமானது என்ற எண்ணம் ஏற்பட்டது, அகம் புறம். இரண்டிலும் துவந்தம் நடந்துகொண்டிருக்கிறது. பெண் புறத்தை வென்று காட்டுகிறாள். அகத்தில் அவளை வெல்லமுடியாது என்று நிறுவிவிடுகிறாள். வேட்டை விலங்குகளின் உலகம். அதில் இரையாக அல்ல வேட்டைவிலங்காகவே இருக்கப்போவதாக அவள் நிறுவிவிடுகிறாள்.

இந்தக்கதையில் புறவுலகத்தில்தான் அத்தனை விரிவு. அகவுலகத்தில் சுருக்கமான சித்திரம்தான். ஆனால் அந்தப் புறவுலகச் சித்தரிப்பைக்கொண்டு அகவுலகை விளக்கி விரிவாக்கிக்கொள்ள முடியும். அந்தக் கற்பனைக்கான வாய்ப்புதான் இதை அபாரமான கதையாக ஆக்குகிறது. திருச்செந்தாழைக்கு என் அன்பு

ஆர்.ராகவ்

அன்புள்ள ஆசிரியருக்கு,

தங்களின் அறிமுகத்தால் ஒரு நல்ல கதை படித்தேன். கதை ஆசிரியரின் நடையும், இடையிடையே எடுத்தாளப்பட்டிருக்கிற உவமைகளும், இடியெனவும், சில்லெனவும் இதயத்தில் இறங்கியபடியே இருந்தன. இந்த மனம்தான் எத்தனை விசித்திரமானது. ஒரு கணம் “நாடோடிக்குக் கிடைக்கிற இறைச்சித் துண்டு”என எச்சில் கூட்டுகிறது. அதுவேதான் வியாபாரியின் கடைவாய்ப் பற்களுக்குக் கூழாகிவிடுகிற பயமும் கொள்கிறது.

தனது மதிப்பிட முடியாத உணர்வுகள் கரிசனத்துக்கான முதலீடாக விலைபோகும் ஆதங்கம் கொள்வதும், “கெட்டியான கொய்யாக்காய் நெற்றி” என மறுகணமே குறுகுறுப்பதுமாய், கதைக்குள்தான் எத்தனை ஆடல்கள், ஆட்டுவித்தல்கள். கொன்றைமரம் அப்படியே நின்றிருக்க, வானம்தான் வெளுத்துவிட்டது. ஆனால், சீக்கிரமே இருள் கவிவதும் அதே வானத்தில்தானே.

இப்படித்தான் கதை முடிந்தபின்னும், ரயில் கடந்தபின்னும் எனக்குள் என்னென்னவோ கடக் கடக் தடக் தடக்குகள். பொதுவாக ஒரு நல்ல கலைஞனுக்கு இன்னொரு கலைஞனைப் பிடிக்காது என்று தமிழ்த்திரை இசையுலகின் ஒரு முக்கிய ஆளுமை ஒரு பேட்டியில் சொன்னதைக் கேட்டிருக்கிறேன். முரணாக, மிகத் திறந்த மனதோடு பிற எழுத்தாளர்களை எங்களுக்கு அறிமுகம் செய்கிற உங்களின் பரந்த மனம் கண்டு வியக்கிறேன். மீண்டும் ஒருமுறை நன்றி

ப. சரவணமணிகண்டன்

வாழும் வள்ளுவம்

***

அன்புள்ள ஜெ,

தமிழில் எழுதப்பட்ட நல்ல கதைகளில் ஒன்று துவந்தம். வழக்கமாக இந்தவகையான புறவுலகங்கள் எழுதப்படும்போது இடதுசாரிப்பார்வையில் சுரண்டல், துக்கம் என்ற அளவிலேயே எழுதப்படும். அதில் ஒரு டிராக் இருக்கும். ஏழைவிவசாயியின் துயரம். இங்கே எல்லாமே ஒருவரை ஒருவர் வெல்வது வெல்லப்படுவது என்ற அளவிலேயே நிகழ்கிறது. நா ஹன்யதே என்று கீதை சொல்வதுபோல. கொலைக்களம், ஆனால் எவரும் கொல்லப்படுவதில்லை. திரும்பத்திரும்ப வந்துகொண்டே இருக்கிறார்கள்.

இத்தகைய உலகத்தை எழுதவேண்டுமா என்ற கேள்வி உள்ளது. நம்மைச்சுற்றி பல்வேறு தொழிலுலகங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் எழுதியாகவேண்டுமா? அதற்கான பதில் இதுதான். இந்த தொழில் உலகங்களில் உண்மையில் வெளிப்படுவது மனிதனின் உச்சம் என்றால் அதை எழுதியாகவேண்டும். அது மேன்மையோ கீழ்மையோ. சங்ககாலத்தின் போர்க்களம்தானே இப்படி உருமாறியிருக்கிறது?

இரண்டு போர்க்களங்களும் அருமையாக ஒன்றையொன்று அர்த்தப்படுத்தும்படி எழுதியிருக்கிறார் திருச்செந்தாழை. புதிய கலைஞருக்கு என் வாழ்த்துக்கள்.

அர்விந்த்குமார்

***

முந்தைய கட்டுரைவெண்முரசில் நிறைநிலவு- சுபஸ்ரீ
அடுத்த கட்டுரைபொன்னியின் செல்வன், ஒரு கடிதம்