நாவலும் மறைபிரதியும் – பி.கே.பாலகிருஷ்ணன்

ஜீவன் மஷாயின் பிறப்பிலிருந்து இறப்புவரை உள்ள முழுமையான வாழ்க்கை தான் ’ஆரோக்கிய நிகேதனம்’. ஜீவன் மஷாய் இல்லாத ஒரு தருணம் கூட, அவரைப்பற்றி விவாதிக்காத ஒரு பக்கம்கூட 530 பக்கங்கள் கொண்ட அந்த நாவலில் இல்லை. பொதுவாகவே ஒரே ஒரு கதாநாயகனையோ, கதாநாயகியையோ  கொண்ட நாவல்கள் பெரும்பாலும் அவர்கள் இருவரையும் மையமாகக்கொண்டுதான் இயங்கும். ஆனால், இந்த மையப்படுத்தும் போக்கு என்பது ”நாவல்” என்ற வடிவத்தைப் பொருத்தவரை ஒரு போதாமையும் கூட. கதாநாயகனின் சலனங்களை, சிந்தனைகளை ஆரம்பத்திலிருந்து கடைசிவரை பிசகாமல் பின்தொடரும் புகழ்பெற்ற நாவல்கள் என நாம் ‘டான் க்விக்ஸாட்டையும் (Don- Quixote)’, ‘ழீன் கிறிஸ்தோஃப்பையும் (Jean Christophe)’ சொல்லலாம். இதில் ‘டான் க்விக்ஸாட்(Don- Quixote)’ ஒரு தனி வகைமை நாவல். அதை வேறு எந்த நாவலுடனும் ஒப்பிட முடியாது.

மொழிபெயர்ப்பில் 2000 பக்கங்கள் கொண்ட “ழீன் கிறிஸ்தோஃப்(Jean Christophe)” கிறிஸ்தோஃப் என்ற ஆளுமையை மையமாகக்கொண்ட நாவல். இசை ஞானம் கொண்ட, மாறிமாறி வரும் காதல் வாழ்க்கைகள் நிறைந்த கிறிஸ்தோஃப்புடைய ஆளுமையின் பரிணாமம் நாவலில் விவரிக்கப்படுகிறது. ஒரு கதாநாயகனும், காதலின் வெவ்வேறு உணர்வுநிலைகளுக்கு உதாரணங்களான கதாநாயகிகளும் கொண்ட “ழீன் கிறிஸ்தோஃப் (Jean Christophe)”  நாவலில் கிறிஸ்தோஃப்பின் ஆளுமை உச்சத்தை அடைந்தவுடன் நாவல் முடிந்துவிடுகிறது. ஆனால், ’ஆரோக்கிய நிகேதனம்’ ஜீவன் மஷாயின் பிறப்பு முதல் முதுமைவரை  (கிட்டத்தட்ட அவரது மரணம் வரை) விவரிக்கும் நாவல். இந்த ஒப்பீடு வழியாக, ழீன் கிறிஸ்தோஃப் நாவலை விட ஆரோக்கிய நிகேதனம் சிறந்த நாவல் போன்ற அபத்தமான கருதுகோளுக்கு நான் சென்று சேரவில்லை. ஆனால், உலக இலக்கியத்தில் கதாநாயகியே இல்லாத பெரும்பாலும் கதாநாயகனை மட்டுமே மையமாகக்கொண்ட (அதுவும் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள முழுமையான வாழ்க்கையை விவரிக்கும்) பெரிய நாவல்கள் மிகமிகக் குறைவு என்பது ஒரு முக்கியமான தரவு. அதுவும் நாவலின் கதாநாயகன் மஷாய் தன் கிராமத்தின் எல்லைக்குள் மட்டுமே (கிட்டத்தட்ட நடந்து சென்றே) காலத்தை கழித்தவர். தன் இளமையில் ஒரே ஒருமுறை மட்டும் பூசலுக்குச் சென்றது, “நிறுத்து, ஆத்தர் பௌ” என்று மனைவிடம் இரண்டுமுறை கத்தியது, “டேய், நீ நோய் முற்றிப்போய் செத்துத் தொலைவாய்” என்று பொறுக்கியும் நாடோடியுமான ஒரு நோயாளியிடம் கோபப்படுவது என்று நாவலில் இந்த மூன்று தருணங்களை மட்டும் தவிர்த்துவிட்டு பார்த்தால் நம் கதாநாயகன் மஷாய் சாகச உணர்வே இல்லாத ஒரு ஆள் என்றுதான் சொல்லத் தோன்றும். இந்த சாகசமற்ற தன்மை அளிக்கும் சலிப்பை சமன் செய்ய நாவலில் வெவ்வேறு கிளைக்கதைகளோ, சம்பவங்களோ ஒன்றுமே இல்லை. ஆரோக்கிய நிகேதனம் நாவலில் சலிப்பூட்டும்தன்மை என்ற சாத்தியக்கூறு மலைபோல உயர்ந்து நிற்கிறது. இந்த சவாலை நாவலாசிரியர் தாராசங்கர் பானர்ஜி எப்படி எதிர்கொண்டார்? இந்த சலிப்பூட்டும் தன்மையை வெல்ல அவர் நாவலில் என்ன செய்தார்? இந்த கேள்விகளை நாம் ஆராய ஆரம்பித்தால் நாவல் என்ற இலக்கிய வடிவத்தின் சாத்தியங்களைப் பற்றிய பல்வேறு விஷயங்களை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

நாவலின்  கதைசொல்லும் முறை (narration), கதைத்தொழில்நுட்பம் (craft) சார்ந்த அம்சங்களில் சோதனை முயற்சிகள் என எதுவுமே இல்லாத  நாவல்தான் ஆரோக்கிய நிகேதனம். எந்த  கிராமத்து வைத்தியரின் வாழ்க்கையிலும் நடக்கக்கூடிய மிகச் சாதாரணமான சம்பவங்கள்,  கொஞ்சம்கூட மிகையுணர்ச்சி இல்லாத வாழ்க்கை சித்திரங்கள் இவை மட்டும்தான் நாவல் முழுக்க இருக்கின்றன. நாவலின் கதாப்பாத்திரங்களை, சம்பவங்களை ஆராய்ந்து பார்த்தால் நம் நடைமுறை வாழ்க்கை சார்ந்த சாதாரண அனுபவ மண்டலத்தை மீறிய ஒரு கதாப்பாத்திரத்தை அல்லது குறைந்தபட்சம் ஒரு சம்பவத்தைக்கூட இந்த நாவலில் காணமுடியாது. சலனங்கள் அற்ற, வாழ்க்கை அப்படியே உறைந்துவிட்டது போன்ற, கிராமத்தின் மாறாத ஒரே பின்னணியில், சாகசவுணர்வு, கோபம் போன்ற எதுவுமே அற்ற ஒரு கிழட்டு கதாநாயகனும், மிகச் சாதாரணமான சம்பவங்களும் காட்டப்படுகின்றன. உணர்வுகள் கொப்பளித்து உயர்ந்து, உடனே தாழ்ந்து, சட்டென உச்சத்தை அடைந்து அரற்றும் ஒரு கீர்த்தனையைக் கேட்டபின்பு, ஓய்ந்து நின்றுவிட்ட அந்த நாதப் பிரவாகத்தில், இனிய துக்கத்தில் தோய்ந்திருப்பது போன்ற அனுபவம் நம்மில் எஞ்சும். கிட்டத்தட்ட ஆரோக்கிய நிகேதனம் நாவலை வாசிக்கும்போது நம்மில் உண்டாகும் அனுபவம் என்பது  கீர்த்தனைக்குப் பின் உள்ள தோய்ந்திருக்கும் அனுபவத்தை போலத்தான்.

மாற்றமில்லாத ஒரே ஒரு வாழ்க்கைச்சூழலை, எந்த அலைக்கழிப்பும் அற்ற ஒரே ஒரு வாழ்க்கையை மட்டும் பின்தொடர்வது என்ற சாத்தியத்தை பற்றி யோசித்துப் பார்ப்பது சுவாரஸியமானது. காலத்தை அப்படியே ஸ்தம்பித்து நிற்கச் செய்திருக்கும் கிராமம். முப்பாட்டன்களின் வாழ்க்கையை அப்படியே திரும்ப வாழும் நிறமற்ற சந்ததிகள். எண்ணிப் பார்த்தால் அப்படிப்பட்ட வாழ்க்கையில் தனித்தன்மைகள் என்று ஏதாவது இருக்குமா என்ன? ஆரோக்கிய நிகேதனம் நாவலின் வாழ்க்கைக்களம் அறிமுகமானவுடன் நாம் இந்த கேள்வியை கேட்டுக்கொள்வோம். அந்த கேள்விக்கான பதில் இதுதான். நம் வாழ்க்கைப்பார்வை, நம்முடைய அணுகுமுறைதான் பிரச்சனை. அந்த கிராமத்தின் ஒவ்வொரு மனிதனுக்கும் நீண்ட வரலாறு இருக்கிறது, பாரம்பரியம் இருக்கிறது, கிட்டத்தட்ட நம் தறவாட்டு வீடு போல. அந்த வீட்டின் ஒவ்வொரு கூரையிலும் எஞ்சியிருக்கும் நீண்ட வரலாற்றை, தலைமுறை தலைமுறையாக தொடரும் ஒரே பாரம்பரியத்தை எப்படி நம்மால் சாதாரணமான ஒரு தனிமனிதனின் வாழ்க்கை, அவனது சின்ன உலகம் என சொல்லிவிட முடியும்? அவை வெறும் கூரைகளாக இருக்கலாம்,

ஆனால் தத்துவார்த்தமாக அவை அரண்மனைகள் போல. அங்கே நாம் பார்க்கக்கூடிய ஆட்கள் தனித்தன்மைகளோ, சுவாரஸியங்களோ அற்றவர்கள் என நாம் நினைப்பது ஒரு பிழையான புரிதல். அவர்கள் சுவாரஸிமற்ற, பொருட்படுத்த தேவையில்லாத ஆளுமைகளாக இருக்கலாம். ஆனால், அவர்கள் பெருமரங்களைப்போல. பாரம்பரியம் என்ற  ஆழத்தில் வேர் கொண்ட உண்மையான ஆளுமைகள். அங்கே தலைமுறை தலைமுறையாக தொடரும் மாற்றமில்லாத தன்மையை நாம் ஒரு பெரிய சமவெளி என கற்பனை செய்துகொள்ளலாம். மானுட உறவுகள், பற்றுகள், விழைவுகள், அகங்கார மோதல்கள், உணர்வு கொந்தளிப்புகள் போன்ற தீவிர மானுட உணர்வுகள் அந்த சமவெளிபோன்ற நீண்ட பரப்பில் புதிய பச்சை தளிர்கள் முளைப்பதுபோல. சலனங்களையே அறியாத அந்த வெளியில் நுட்பமான சின்ன நடுக்கம் கூட அந்த சலனத்தின் இயல்புகள் என்ன என்று உரக்கச் சொல்லும் பெரிய சம்பவமாக ஆகிவிடும். அப்படிப்பட்ட கிராமத்தில் தலைமுறை தலைமுறையாக சிகிச்சை நடத்தும் ஒரு மருத்துவ குடும்பத்தின் வாரிசை நாம் சாதாரணமாக கிராமத்திலிருக்கும் வெறும் வைத்தியராக மட்டும் சுருக்கிவிட முடியாது.

பி.கெ.பாலகிருஷ்ணன்

மரணத்தின் முன் மனிதன் கைவிடப்பட்டவன் அல்லவா. மரணத்தின் தொலைதூர நிழல்கூட மனிதனை நடுங்க வைக்கிறது. மரணம் நோயாளியில் மட்டும் ஒதுங்கிவிடக்கூடிய  கைவிடப்பட்ட தன்மையோ, நடுக்கமோ மட்டுமல்ல. சொல்லப்போனால், இந்த விஷயத்தில் நோயாளி அவ்வளவு முக்கியமான அம்சமே இல்லை. ஒரு குடும்பம் முழுக்க நிறைந்திருக்கும் மறக்கமுடியாத உணர்வெழுச்சிமிக்க அனுபவம்தான் மரணம். மனித வாழ்க்கையை செறிவாக்கும் விலைமதிப்பற்ற மதிப்பீடுகள் அங்கே ஸ்தம்பித்து நின்றுவிடுகின்றன. சாதாரணமாக மனிதன் புனைந்துகொண்ட பல்வேறுவிதமான பாவனைகளின் பட்டாடைகள் மரணம் சார்ந்த தருணங்களில் கையறுநிலையின் காரணமாக, பயத்தின் காரணமாக அவர்களிலிருந்து உதிர்ந்து விழுந்துவிடுகின்றன. அப்பட்டமான, செயற்கைத்தனம் துளியும் இல்லாத வெறும் அடிப்படை உணர்வுகளுடன் அந்த தருணங்களில் இதயம் தானாகவே திறந்துகொள்கிறது. அந்த சூழலில் தன்னிச்சையாக எதிர்வினைகளை ஆற்ற வேண்டிய  கட்டாயத்திலிருக்கும் மனிதர்கள் அதன் வழியாக தங்கள் சொந்த ஆளுமையின் உண்மையான அடித்தளம் என்ன என்பதை வெளிப்படுத்துகிறார்கள். அப்படி ஒரு தருணத்தை எதிர்கொள்ளும் அந்த ஊரின் நம்பிக்கைக்குரிய வைத்தியர், நோய்க்கு மருந்து தரும் வெறும் டாக்டர் மட்டுமே என எப்படி சொல்லமுடியும்?

ஒரு நோயாளி, அவன் நோய் இது மட்டுமல்ல இங்கு வைத்தியரின் பிரச்சனை. அவர் அங்கு படுத்த படுக்கையாய் இருக்கும் நோயாளியை முழுமையாக அறிந்தவர். அவனுக்கும் வைத்தியர் மிகமிக பரிச்சயமானவர். இதை பரஸ்பரம் இரு எல்லைகளிலும் தலைமுறை தலைமுறையாக இருக்கும் அறிவு என்றுதான் சொல்லவேண்டும். நோய்ப் படுக்கையை சுற்றி இருக்கும் ஒவ்வொருவரும் யார் என்று, அவர்கள் ஒவ்வொருவரும் என்ன நினைக்கிறார்கள் என்று, அந்த வைத்தியருக்குத் நன்றாகத் தெரியும். அவர் தகிக்கும் உணர்வுக்கொந்தளிப்புகளின் சுழியில் இருக்கிறார். உலகத்தில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் அம்மா இருக்கிறாள். ஒவ்வொரு மரணத்திலும் அன்னையர், மைந்தர்கள், மனைவிகள் இதயம் நொந்து அழுகிறார்கள். ஆனால், ஒரு தாய் தன் மகனின் நோய்படுக்கைக்கு முன் பெருமூச்சுடன் இயல்பாக நிற்பது விசித்திரமான அனுபவம். இதயம் முழுக்க கனிவும், அக்கறையும் நிறைந்த வைத்தியரின் மனதில் அன்பின், பரிவுணர்ச்சியின் ஊற்றுகள் பீறிடுகின்றன. ஆனால் அவருக்கு பெருமூச்சும், கண்ணீரும் விலக்கப்பட்டிருக்கிறது.

அவர் உணர்வுகளுக்கு இடமற்ற உறுதியான பொறுப்புணர்ச்சியால், அறிவின் வெம்மையால் அந்த ஊற்றை வற்ற வைத்துக்கொண்டவர். அந்த கிராமத்தில் வாழும் ஒருவனுக்கு மரணம் சார்ந்த உணர்வெழுச்சி கொண்ட அனுபவம் என்பது அவன் வாழ்க்கையின் ஒட்டுமொத்த அனுபவங்களில் சின்னபகுதி மட்டும்தான். ஆனால், அந்த பெரும்பாரம்பரியத்தின் பாதுகாவலனான வைத்தியரின் வாழ்க்கை என்பது முழுக்க முழுக்கவே இம்மாதிரி உச்ச அனுபவங்கள் மட்டும்தான். அதாவது, அந்த கிராமத்தின் உள்ள ஒவ்வொருவரின் மரணம் சார்ந்த, நோய் சார்ந்த உணர்வுகொந்தளிப்பு நிறைந்த நாட்களை ஒட்டுமொத்தமாக சேர்த்தால் அதுதான் வைத்தியரின் தினசரி வாழ்க்கை. எப்பொழுதுமே  கொந்தளிப்பான வாழ்க்கை அனுபவங்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உச்சமடைந்து, உடனேயே தணியும் இயல்பு கொண்டவை. வைத்தியரின் ஆளுமைக்கு இம்மாதிரியான அனுபவங்கள் விஷேஷமான பதத்தை ஏற்படுத்துகின்றன. இந்த நாவலின் மையம் என்ன என இன்னும் ஆழமாக ஊடுருவி பார்த்தால் அதை இப்படிச் சொல்லலாம்: அது அன்பின், பரிவுணர்வின் சிறகுகளை வீசி மனிதன் என்ற எல்லையை கடந்து புனிதமான வேறொன்றாக ஆகத்துடிக்கும் ஒரு மனிதனின் வரலாறு. கூடவே, இந்த நாவல் அதன் கதைக்களமான அந்த கிராமத்திலிருக்கும் அனைத்து மனிதர்களின் செறிவான, உணர்வுப்பூர்வமான தனி வாழ்க்கையின் ஒட்டுமொத்த சித்திரத்தையும் அளிக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதாவது, மாற்றமில்லாத ஒரே பின்னணியில், வைத்தியரின் வாழ்க்கையை மட்டும்(மிகப்பெரிய வாழ்க்கையை) உண்மையாக சித்தரிப்பது வழியாக, அந்த ஊரிலுள்ள ஒட்டுமொத்த மனிதர்களின் சிக்கலான ஊடுபாவுகள் நிறைந்த, சலனங்கள் கொண்ட பெரிய நாவலாக அதை ஆக்க நாவலாசிரியர் தாராசங்கர் பானர்ஜியால் முடிந்திருக்கிறது.

தாராசங்கர்

இந்த நாவலின் தனித்தன்மைகளை பற்றி யோசித்துப் பார்த்தால் அது நாம் இதுவரை விவாதித்த விஷயங்களோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை. தனிமனிதனுக்கும் சமூகத்திற்குமான உறவு (Individual and General), அதை இயக்கும் விதிகள் போன்றவற்றிலிருந்து தொடங்கி சமூகத்திற்கும் ஒட்டுமொத்தத்திற்கும் (General and Universal)இடையே உள்ள உறவை, அதன் விதிகளை நோக்கி இந்த நாவல் நகர்ந்திருக்கிறது. ’தனிமனிதன்’ என்பதை நாம் சமூகத்தின் மிக நுட்பமான அலகு என்று சொல்லலாம். அதேசமயம் ’தனிமனிதன்’ என்ற கருதுகோளின் பரப்பளவு என்பது சமூகத்தின் பொதுவான மனநிலைகளிலிருந்து முரண்படும் எல்லைவரைதான். ஒரு தனிமனித (individual) வாழ்க்கையின் நுட்பமான சித்தரிப்பு அந்த தனிமனிதன் புழங்கும்  சமூகத்தை (general) பிரதிபலித்து காட்டும். அதேபோல, ஒரு சமூகத்தை (general) பற்றிய துல்லியமான சித்திரம் அதற்கப்பால் உள்ள ஒட்டுமொத்தத்தை (Universal) பிரதிபலிக்கும். இந்த நாவலில் மேற்கு வங்கத்திலிருக்கும் ஒரு கிராமத்தின் (general) உண்மைத்தன்மை கொண்ட சித்திரம் மனிதனின் என்றென்றைக்குமான (Universal) குழப்பங்களை, நெருக்கடிகளை தெளிவாக பிரதிபலித்துக் காட்டியிருக்கிறது.  ஆரோக்கிய நிகேதனம் நாவலை நாம் வாசித்து முடித்தவுடன் நம் காதுக்கு மிக அருகிலேயே என ‘மரணம் என்றால் என்ன?’ என்ற கேள்வி ஒரு முழக்கம் போல எழுந்துவரும். அந்த முழக்கம் எஞ்சியிருக்கும்போதே, அதற்கான எதிரொலி என்பதுபோல ‘வாழ்க்கை என்பது என்ன? அதன் பொருள்தான் என்ன?‘ போன்ற கேள்விகள் நம் காதில் வந்து அறையும். ஆரோக்கிய நிகேதனம் நாவல் வாசிப்பில் இது மிக அசாதாரணமான ஒரு அனுபவம்.

வடிவ ரீதியாக, பேசுபொருள் சார்ந்து என எப்படி யோசித்தாலும் ”ஆரோக்கிய நிகேதனம் “ஒன்றுக்கும் மேற்பட்ட அடுக்குகள் கொண்ட நாவல். வாசகனின் கூர்ந்த வாசிப்பிற்கு ஏற்றபடி புதிய புதிய அர்த்தங்களை அவனுக்கு அளிக்க, ஒவ்வொரு வாசிப்பிலும் புத்தம்புதியதாய் தன்னை மாற்றிக்கொள்ள அந்த நாவலால் இயலும். மேலும், தங்கள் வாசிப்பின் வழியாக இந்த நாவலின் பல அர்த்த அடுக்குகளை அல்லது வாசிப்பு சாத்தியங்களை விரித்துக்கொள்ள இயலாத வாசகர்கள் இருக்கிறார்கள். அப்போதுகூட அவர்களுக்கு உணர்ச்சிகரமான ஒரு யதார்த்தவாத நாவலை வாசித்த திருப்தியை ”ஆரோக்கிய நிகேதனம்” அளிக்கும். சாதாரணமாக பார்த்தால்கூட, ஆரோக்கிய நிகேதனம் நாவலில் இருக்கும் அளவுக்கு நாடகீய தருணங்களை வேறு எந்த நாவலிலும் காண முடியாது. நேரடியாக மட்டுமே வாசிக்க, ரசிக்க இயலும் இந்த நாவலில் பல்வேறு வாசிப்பு சாத்தியங்கள், அர்த்த அடுக்குள் இவற்றையெல்லாம் தேடுவது பைத்தியக்காரத்தனம் அல்லது அகங்காரம் என்று சொல்லும் கள்ளமின்மை கொண்ட தூய வாசகர்கள் இருக்கலாம். நிறைய கதாப்பாத்திரங்கள் கொண்ட, வாழ்க்கைச் சித்திரங்கள் கொண்ட இவ்வளவு பெரிய நாவல் மறைந்துள்ள பல்வேறு அர்த்த சாத்தியங்கள் போன்ற விஷயங்களை மனதில் வைத்து எழுதியிருக்க சாத்தியமில்லை என விவேகமானவர்கள் என்று தங்களை நினைத்துக்கொள்ளும் வாசகர்கள் கேட்கலாம். ஆனால், இலக்கியத்தின் மறைபிரதி (Subtext) அல்லது பல அர்த்த அடுக்குகள் என்று சொல்லும்போது  ஒரு விஷயத்தை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

நவீன இலக்கியத்தில் நாம் சொல்லும் மறைபிரதி (subtext) என்பதை மரபுக் கவிதைகளில் பயன்படுத்தப்படும் இரட்டுற மொழிதல் என்றோ அல்லது கருத்துருவகம் (allegory) என்றோ நினைத்து குழப்பிக்கொள்ளக்கூடாது. ஒரு பொதுவான சரடில் இணையக்கூடிய இரண்டு வெவ்வேறு விஷயங்களை கிட்டத்தட்ட ஒரே விஷயம்தான் என்று வாசகனுக்கு தோன்றவைக்கும் வகையில் எழுத பலரால் இயலும். பகடியை மையமாகக் கொண்ட நாவல்கள் ஏறக்குறைய இவ்வாறுதான் எழுதப்படுகின்றன. பகடி என்ற இலக்கு இல்லாமலே கூட இப்படி இரண்டு அடுக்குகளைக்கொண்ட பல நாவல்களும், நாடகங்களும் இருக்கின்றன. ஆனால், ஆரோக்கிய நிகேதனம் நாவலில் அர்த்த அடுக்குகள் என்று சொல்லும்போது நான் உத்தேசிப்பது கருத்துருவகம் (Allegory) மாதிரியான விஷயங்களை அல்ல. நான் இங்கே குறிப்பிடும் பற்பல அர்த்த அடுக்குகள் என்பது எந்த விவாதத்திற்கும் சந்தேகத்திற்கும் இடமில்லாத விதத்தில் இறுதி விளக்கமளித்து தெள்ளத் தெளிவாக நிறுவப்பட்ட அர்த்தங்களை அல்ல. மிகச் சிறந்த இலக்கியங்கள் தங்கள் தனித்தன்மையால் உருவாக்கும் சூழலை உணர்ந்தவர்கள், அதை வாசித்து அறிந்தவர்கள் மட்டும் அடையும் ஒரு விஷேஷமான அனுபவம் உண்டு. அதை ’தத்தளிப்பை அளிக்கும் ஒரு விளங்கிக்கொள்ள முடியாமை’ என்று சொல்லலாம். அந்த அனுபவம் பௌர்ணமி இரவில் வானில் உள்ள மேகக்கூட்டங்களை பார்ப்பது போல அல்லது பனிமூட்டம் நிறைந்த அதிகாலையில் தூரத்திலிருக்கும் குன்றின்மேல் இருக்கும் ஒரு நகரத்தின் சேய்மைக்காட்சியை நோக்கி நிற்பதுபோல. மேகக்கூட்டத்திற்கு உருவம் இருக்கிறது, ஆனால் நம் மனதில் பதியும் உருவம் என்பது வரையறுக்கமுடியாத ஒன்று. நம்முடைய கற்பனைத்திறனைப்பொறுத்து மேகக்கூட்டங்களில் தெளிவான உருவங்களை நம்மால் காண முடியும். தூரத்தில், உயரத்தில், பனிமூட்டத்தில் மறைந்து இருக்கும் நகரத்தின் சேய்மைக்காட்சி ஒரே சமயம் தெளிவானதும், தெளிவற்றதும் ஆகும். எல்லைக்கோடு (Outline) தெளிவாக இல்லாத அந்த மயக்கநிலை காட்சிக்கு ஏதோ ஒரு ஆழத்தையும் கம்பீரத்தையும் அளிக்கிறது. மகத்தான இலக்கியப்படைப்பின் அர்த்த அடுக்குகள் என்று சொல்லும்போதும் நான் உத்தேசிப்பது இந்த விஷேஷமான நிலையைத்தான். நாவலாசிரியர் இந்த விஷயங்களையெல்லாம் நன்றாக சிந்தித்து மிக கஷ்டப்பட்டு அதை தன் நாவலில் வெளிப்படுத்தியிருக்கிறார் என்று நான் சொல்ல வரவில்லை. நுண்ணுணர்வுள்ள நாவலாசிரியர் தன் கலைத்தன்மையால் அவரது தனியாளுமையின் போதபூர்வமான எல்லைக்கு அப்பால் சிறகு விரித்து பறக்க இயலும். இம்மாதிரியான போத மண்டலத்தை மீறிய ’பறத்தலை’ உண்மையில் எழுதிய பிறகுதான் அதை எழுதியவராலேயே கண்டு கொள்ளமுடியும். அதனால், ஒரு நாவலை பொருள்கொள்வதில் வாசகனைவிட அந்த நாவலை எழுதியவனுக்கு அவ்வளவு அதிகாரம் கிடையாது என்பதால் நாவலாசிரியன் கைவிடப்பட்டவனின் நிலைக்கு சமானமானவன். ஜகத் மஷாயை பிரபஞ்சம் என்றும் ஜீவன் மஷாயை அதில் இருக்கும் உயிரோட்டம் நிறைந்த வாழ்க்கை என்றும் மனித வாழ்க்கையின் ஆன்மீகப்பயணம்தான் ஆரோக்கிய நிகேதனத்தின் கதை என்றும் சொன்னால் அது சரியோ, தவறோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், இது சரி இது தவறு என்று அதிகாரப்பூர்வமாக சொல்வதற்கு நாவலாசிரியனுக்கு எந்த அருகதையும் கிடையாது.

சரி, விஷயத்திற்கு வருவோம். சாதாரண வாசிப்பிலேயே நம்மால் இந்த நாவலின் அர்த்த செறிவை உணரமுடியும். அப்படி நமக்கு உணர்த்த ஒன்றுக்கும் மேற்பட்ட சரடுகள் அந்த நாவலில் உள்ளன. இந்த நாவலில் ஜீவன் மஷாயின் தனிவாழ்க்கை என்ற மையச்சரடில் அந்த கிராமத்தின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் நுட்பமாக இணைக்கப்பட்டிருக்கிறது. அவை ஒன்றையொன்று சார்ந்திருக்கும் நிலையில், மஷாயின் ஆளுமையின் சலனங்கள் மூலம் அந்த சமூகத்தை சலனப்படுத்தி அதன் வழியாக அந்த கிராத்தை  உயிரோட்டம் நிறைந்த ஒன்றாக ஆக்க நாவலாசிரியரால் இயன்றிருக்கிறது. சலனமற்று இருக்கும் அந்த கிராமம் ’மாற்றம்’ என்ற கண்ணுக்குப்புலப்படாத சுழியில் ஆட்படுகிறது. அதுவரை அந்த கிராமத்தை பிணைத்திருந்த எல்லா கூறுகளும் ‘மாற்ற’த்தின் விசையில் தள்ளாடி நம் முன்னே தெறித்து விழும் ஒரு சிறந்த யதார்த்தவாத(Realistic) சித்திரம் இந்த  நாவலில் உள்ளது.

இந்த நாவலில் ’மருத்துவம்’ என்பது ஒரு கச்சாப்பொருள்தான். பலர் பிழையாக புரிந்துகொண்டது போல, மருத்துவம் என்பது இந்த நாவலின் மையமான பேசுபொருளோ கதைக்கட்டோ (Plot) அல்ல.  மருத்துவம் இந்த நாவலின் கச்சாப்பொருட்கள் என்பதால் மருத்துவம் சார்ந்த  நுண்தகவல்களை, சிகிச்சைமுறைகளை நாவலில் விளக்கத்தான் வேண்டும். நாவலில் மருத்துவம் சார்ந்த அறிவார்ந்த விஷயங்கள் நுட்பமானதாக அல்லது நுட்பமானது என்று வாசகனை நம்பவைக்கும் அளவுக்கோ இருக்க வேண்டும். நம் மொழியில் எழுதும் நாவலாசிரியர்கள் மருத்துவம் என்ற அறிவுத்துறையைப்பற்றி, அதன் சிகிச்சைமுறைகள் பற்றி விஷேஷமாக எதுவும் அறியாமலேயே எத்தனை மருத்துவர்களை கதாப்பாத்திரங்களாக ஆக்க முடிந்திருக்கிறத். ஆனால், தன் கலையை அறிந்த, தன்னைப்பற்றி தனக்கே கொஞ்சம் மதிப்பிருக்கும் நாவலாசிரியனுக்கு அது எளிமையான விஷயமில்லை. நான் முன்பே சொன்னதுபோல, இந்த நாவலில் மருத்துவம் பற்றிய நுண்மையான, அறிவார்ந்த விஷயங்கள் இருப்பதால் அதன் மையம் மருத்துவம் என்ற அறிவுத்துறை என்று நினைத்துக்கொள்வது பிழையான புரிதல். ஆரோக்கிய நிகேதனம் காட்டும் உலகம் என்பது நோயாளிகள், நோய், மருத்துவர்கள் நிறைந்த ஒன்றுதான். பிரதான கதாப்பாத்திரங்கள் பெரும்பாலும் நோயாளிகள், வைத்தியர்கள், டாக்டர்கள் இவர்கள் தான். நோய்ப்படுக்கை, வைத்தியசாலை, ஆஸ்பத்திரி, மருந்துகடை போன்ற களங்களில்தான் நாவல் இயங்குகிறது. தன் கலையை நன்கு அறிந்த நாவலாசிரியருக்குத் தெரியும் அப்படித்தான் இயங்கமுடியும், வேறு வழிமுறை சாத்தியமில்லை என்று. ஆனால், மருத்துவம் என்ற கச்சாப்பொருளை தனித்தன்மை வாய்ந்தமுறையில் கையாண்டதால் அசாதாரணமான பலன் ஒன்றை நாவலாசிரியர் அடைந்திருக்கிறார். சமூக இயக்கம் என்ற கண்ணுக்குப்புலப்படாத ஒரு செயல்பாட்டை அவர் மருத்துவம் வழியாகத்தான் துலங்க வைத்திருக்கிறார். இந்த நாவலில் உள்ள பாரம்பரியமான வைத்தியமுறைக்கும் நவீனமருத்துவத்திற்குமான மோதல் முக்கியத்துவம் பெறுவது அது துலக்கிக்காட்டும் விஷயத்தை வைத்துதான்.

அழகியமணவாளன்

ஜீவன் மஷாய்க்கும் பிரத்யோத் டாக்டருக்கும் இடையில் உள்ள மோதல், இறுதியில் ஜீவன் மஷாய்க்கு கிடைக்கும் வெற்றி என்பதை ஆயுர்வேதத்திற்கும் அலோபதிக்குமான மோதலில் புனிதமான,  ரிஷிகளால் அளிக்கப்பட்ட ஆயுர்வேதத்திற்கு கிடைத்த வெற்றி என்று நினைத்துக்கொள்வது இந்த நாவலை எளிமைப்படுத்துவது. நாம் சாதாரண அர்த்தில் சொல்லும் ஒரு ஆயுர்வேத வைத்தியர் மட்டும் அல்ல ஜீவன் மஷாய். நாவலாசிரியர் அவரை எப்படி சித்தரிக்கிறார் என்று பாருங்கள்:

“ஜீவன் மஷாயின் நாடியை பிடித்துப் பார்த்து காலதூதனின் காலடியை உணரக்கூடிய சக்தி வாய்ந்தவர். இந்த சக்தி மூதாதையரே தொட்டு வழிவழியாக அக்குடும்பத்தவரிடையே இருந்துவருவதாகும். அவர்களெல்லாம் நாட்டு வைத்தியர்கள் (கவிராஜ்). இவர் முதன் முதலாக டாக்டரானார் (அதாவது ‘அலோபதி’ முறையில் தேர்ச்சி பெற்ற வைத்தியர்). சமயத்திற்கு ஏற்றாற்போல் இரு முறையிலும் சிகிச்சை செய்யும் ஆற்றல் பெற்றவர்.”

அலோபதி குறித்த ஜீவன் மஷாயின் பார்வை என்பது அதன் மேன்மையை போற்றும், வணங்கும் அளவில் தான் இருக்கிறது. அதை அந்த நாவலில் தெளிவாகவே காணமுடியும். அப்படி இருக்கும் ஒரு ஆளுமையை ஆயுர்வேத மருத்துவத்தின் குறியீடு என்று வாசிப்பது அபத்தம் அல்லது முட்டாள்தனம், மஷாய் பிரத்யோத்போஸிடம் பெறும் வெற்றி மஷாய்க்கு பிறப்பிலேயே உள்ள சாமர்த்தித்தால் இயல்பாகவே வந்துசேரும் வெற்றி அவ்வளவுதான். மஷாய்க்கு பிரத்யோத் போஸிற்கும் இடையிலுள்ள (ஒரு வசதிக்காக ஆயுர்வேதத்திற்கும் நவீன மருத்துவமுறைக்கும்) மோதல் என்பது ஸ்தம்பித்த பாரம்பரியத்திற்கும் அறிவியல் ரீதியான நவீன யுகத்திற்குமான மோதலாகத்தான் நாவல் காட்டுகிறது. மஷாய்க்கு எதிரான பிரத்யோத் போஸின் அறைகூவலை அந்த கிராமமே எதிர்க்கொள்ள வேண்டியிருந்தது. அந்த கிராமத்திலிருக்கும் மனிதர்கள் அவர்களின் பழக்கங்கள், நம்பிக்கைகள் மேல் ‘Shock’ போல அந்த அறைகூவல் விழுகிறது. அதை ஒவ்வொருவரும் ஒவ்வொருவகையில் உணர்கிறார்கள். இரண்டு மருத்துவர்கள் மத்தியில் நடக்கும் போட்டியில் (அதை அப்படி சொல்லமுடியுமென்றால்) ஏதோ ஒருவகையில் அந்த கிராமத்திலிருக்கும் ஒவ்வொருவரும் பங்கேற்கிறார்கள். இந்த பின்னணியில், மஷாயின் ’ஆரோக்கிய நிகேதனம்’ சிதிலமடைந்து கிட்டத்தட்ட மஷாயின் குடும்பத்துடன் சேர்ந்து  முழுமுற்றான அழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கும் சித்திரமும் புதிய புதிய திட்டங்களுடன் அரசு மருத்துவமனை வளர்ந்து கொண்டிருக்கும் சித்திரமும் இருக்கிறது. இந்த இரண்டு பின்னணிகளுக்கும் மேலே மஷாய்-பிரத்யோத் போஸ் இடையே உள்ள மோதலை அமைத்து, சமூக மாற்றத்தின்  ஒட்டுமொத்தமான பாதிப்பை தாராசங்கர் பானர்ஜி உண்டாக்கியிருக்கிறார். மாற்றம் என்பது ஒரே சமயம் காரணமும்(Cause) விளைவும்(Effect) ஆகும். மாற்றத்தின் மிகப் பிரதானமான ஃபாவம் என்பது ’சலனம்’தான். சலனத்தை நேரடியாக விளக்கிவிட முடியாது. மருத்துவம், சிகிச்சைமுறை பற்றிய விவரணைகள், விவாதங்கள் வழியாக அந்த சலனத்தை பிரதிபலித்து காட்ட நாவலாசிரியரால் முடிந்திருக்கிறது என்று சொல்லலாம். அப்படி சொல்வதுகூட அதிகம்தான். இந்த நாவல் வாழ்க்கைப்பாடுகளின் கடுமையான பிடியில் இருந்து தன்னை அறிதல் என்ற ஆன்மிகமான பாதையை நோக்கி விரியும் பெரிய ஆளுமையின் கதை. பற்று, வெறுப்புகள், ஆசை- நிராசைகள் போன்ற என்றென்றைக்குமான உணர்வுகளின் சுழியில் இருக்கும் சாமானியர்களின் மிகச்சாதாரணமான வாழ்க்கையை சாவதானமாக சித்தரிக்கும் பெரிய கதையும்கூட. கூடவே, நூற்றாண்டுகளாக காலத்தை உறைய வைத்திருக்கும் ஒரு இந்திய கிராமம் நவீனத்தின் அடியால் துடித்து இயங்க ஆரம்பிப்பதன் புரட்சிகரமான சித்திரம் என்றும் இந்த நாவலைச் சொல்லலாம். இந்த வாழ்க்கை, புரட்சிகரம் இதற்கெல்லாம் அப்பால், மகத்தான வேறொன்றை நோக்கி கவனத்தை திருப்பும் விசித்திரமான மறைபிரதிகள் கொண்ட கலைப்படைப்புதான் ஆரோக்கிய நிகேதனம்.

தமிழாக்கம் அழகிய மணவாளன்

முந்தைய கட்டுரைகல்வி இரு உரைகள், கடிதம்
அடுத்த கட்டுரைஇளம் வாசகிக்கு…