அறிந்து முன்செல்பவர் வழிபடலாமா?
வணக்கத்திற்கும் பேரன்பிற்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
ஈரட்டி காட்டின் இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பகுதிகளின் இனிமையை துய்த்தபடி நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.
இன்று வெண்ணி அவர்களின் கேள்விக்கு நீங்கள் அளித்திருந்த பதில் மிகவும் அற்புதமானது. “அறிந்து முன் செல்பவர் வழிபடலாமா?” என்ற தலைப்பே வாசகர்களின் மீதான பேரன்பினால் மிகச்சரியாக அளிக்கப்பட்டுள்ளது. மரபான அத்வைத பரம்பரை குருகுலங்களில் முழுமைப் பேறு அடையும்வரை துணையாக பக்தியை கைக்கொள்ளுதல் எப்பொழுதும் வலியுறுத்தப்படுகிறது. யோக மரபிலும்கூட “ஈஸ்வர பிரணிதான” என்று முழுமை நிலை எய்தும் வரை அந்த முழுமுதற் பேராற்றலின் துணையை ஆதாரமாக பற்றி நின்றபடி யோக சாதனைகளை முறையாக செய்தல் வலியுறுத்தப்படுகிறது. முற்றும் உணர்ந்த முழுமை நிலையில் பக்தியும் ஞானமும், பக்தி செய்யப்படுவதும் பக்தி செய்பவனும் ஒன்றே என்ற புரிதல் கைவல்யமாகி அங்கு இருமை முற்றாக மறைந்து விடுகிறது என்கிறது யோக சூத்திரம். அதுவரையில் ஒரு முழுமுதற் பொருளைச் சரணடைந்து கடமைகளையும் சாதனைகளையும் சரியாக செய்து வருவதே அனைவருக்குமான பாதுகாப்பான பாதை என அறிந்த மகான்கள் அறிவுறுத்துகிறார்கள்.
தாயுமானவர், அருட்பிரகாச வள்ளலார், இரமணர், நாராயண குரு, வேதாத்திரி மகரிஷி என அனைத்து அத்வைத ஞானிகளும் முழுமை நிலை எய்தும் வரை.
அந்தப் பேராற்றலை, பேரறிவை, அதன் பேரறத்தைத் துணை கொள்வதையே வலியுறுத்துகிறார்கள். அப்படி கைக்கொள்ளாத பட்சத்தில் வழிதவறிப் போவதற்கான சாத்தியக்கூறுகள் இந்தப் பாதையில் மிக அதிகமாகவே உள்ளன. இறைமறுப்பு கொள்கை கொண்ட பௌத்தமும் கூட தம்மம் சரணம் என்று பேரறத்தை முற்றாக சரணடைந்து சாதனைகள் செய்வதையே மிக முக்கியமாக வலியுறுத்துகிறது.
கடந்த பல மாதங்களாக இந்த நோய்த்தொற்று காலகட்டத்தில் பெரும்பாலான நண்பர்களிடமிருந்து வந்த அழைப்புகள் மரண பயத்தை எதிர்கொள்வதை குறித்ததாகவே இருந்தது. எத்தனை வேதாந்தம் படித்திருந்தும், அதை புரிந்து ஏற்றுக் கொண்டிருந்த பொழுதும் ஏன் மரண பயத்திலிருந்து விடுபட முடியவில்லை என்பதே அவர்களின் கேள்வியாக இருந்தது. நான் அவர்களுக்கெல்லாம் பதிலாக எதைச்சொல்லிக் கொண்டிருந்தேனோ அதையே நீங்கள் கட்டுரையாக வடித்து இருந்தது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது.
மேலும் இதே பேசுபொருள் தொடர்பாக சிங்கப்பூர் கணேஷ் பாபு அவர்களின் “விடுதலை” என்ற கதையை வல்லினம் இதழில் இன்று வாசிக்கும் பேறும் கிடைத்தது.
விடுதலை– சிறுகதை
பலரின் இந்தக் கேள்வியையே கணேஷ் பாபு அவர்கள் மிகச்சிறந்த வகையில் சிறுகதையாக ஆக்கியுள்ளார். அனைவரும் நிச்சயம் வாசிக்க வேண்டிய ஒரு அருமையான கதை இது. இந்தக்கதையின் அழகே அது முடிந்த பிறகு நம்மை மேலும் மேலும் சிந்திக்க வைப்பதே. வேதாந்தம் முடிவாக எதைக் காட்டுகிறதோ அதுவாக ஆகாதவரை புரிதலும் ஏற்றுக் கொள்ளுதலும் முற்றாக பயன் தருவதில்லை. அதுவென்றே ஆவதற்கு எதைச் செய்யவேண்டும் என்பதை நீங்கள் முத்தாய்ப்பாக உங்கள் கட்டுரையில் கூறியுள்ளீர்கள். இன்றைய உங்கள் கட்டுரையும் இந்தச் சிறுகதையும் எனக்கு அளவில்லா மகிழ்ச்சியை அளித்ததை உங்களோடு பகிர்ந்து கொள்வதன் பொருட்டே இந்தக்கடிதம்.
அனுதினமும் குறைந்தபட்சம் ஒரு கட்டுரையாவது மெய்யியல் சார்ந்து உங்கள் தளத்தில் வெளிவருவது மட்டிலா மகிழ்ச்சிஅளிக்கிறது.
மிக்க அன்புடன்
ஆனந்த் சுவாமி
திருவண்ணாமலை
***