அனிதா அக்னிஹோத்ரி, கடிதம்

அன்புள்ள ஜெ,

உங்கள் தளத்தில் வெளிவந்த வங்க எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரி அவர்களின் சிறுகதைகளின் மொழியாக்கங்களை வாசித்தேன். மொழியாக்கத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் அனைத்திலும் அடிநாதமாக உள்ளது ஆசிரியரின் அறவுணர்வு. அதிகாரமற்ற எளிய மனிதர்களின் உணர்வுகளோடு ஆசிரியர் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். அதே நேரத்தில் அதிகாரத்தை செலுத்தும் நிலைனாட்டும் இடத்தில் இருக்கும் மனிதர்களின் நிலையை, அவர்களின் இயலாமைகளை தத்தளிப்புகளை போலித்தனக்களை எல்லாம் அதே நுண்ணுணர்வோடு காட்சிப்படுத்துகிறார். இதுவரை கண்டிராத கதைக்களம். ஆசிரியர் ஆட்சிப்பணியில் இருக்கும் தகவல் இக்கதைகளை புரிந்துகொள்வதில் இன்னொரு பரிணாமத்தை அளித்தது.

அதே நேரம் இந்தத்தகவலும் இக்கதைகளும் இணைந்து ஆசிரியரை பற்றிய ஸ்டீரியோடைப்பான குறுகிய சித்திரம் ஒன்றை அளித்துவிடலாகாது என்ற எண்ணம் இவரது ‘பதினேழு’ கதைத்தொகுப்பை வாசித்தபோது தோன்றியது. இந்தத்தொகுப்பிலும் பெரும்பாலான கதைகளுக்கு அடினாதமாக விளங்குவது ஆசிரியரின் அறவுணர்வு தான். ஆனால் மாறுபட்ட கதைகளங்கள், வெவ்வேறு கதைசொல்லல் முறைகள், வேரெங்கும் காணாத கலாபூர்வமான படைப்புத்திகள் என்று இத்தொகுப்பின் சில கதைகள் இதுவரை வந்த மொழியாக்கங்களை விடவும் என் வாசிப்பில் சிறந்தவையாக விளங்கின. அவற்றைபற்றி எழுதுவதினால் ஆசிரியரின் எழுத்தை பற்றிய இன்னும் முழுமையான சித்திரம் கிடைக்கும், மேலும் பயனுள்ள உரையாடல்களுக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறேன்.

என்னுடைய தற்போதைய தனிப்பட்ட ரசனையில் ஒரு சிறுகதையின் உச்சபட்ச சாத்தியம் என்பது,  மானுட வாழ்வின் அறியமுடியாமைகளை, மாயங்களை, மர்மங்களை குறிப்புணர்த்துவது ஆகும். வாழ்க்கைத் துண்டுகளை, நிகழ்வுகளை, போதாமைகளை, சீற்றங்களை, மனப்பதிவுகளை சொல்லவும் சிறுகதை வடிவம் பயன்படுத்தப்பட்டுள்ளது. என்றாலும் அடிப்படையில் ‘கதை’ (tale) என்ற வடிவத்தில் பாதாளம்திறக்கும் தெய்விகக்கணம் ஒன்று நிகழ்கிறது. இதுவே கதை வடிவின் பிரத்யேகமான அம்சம். இந்த அம்சம் நிகழும் சிறுகதைகளை சிறந்த கதைகளாக கொள்கிறேன். இந்த அளவுகோலின் படி, ‘பதினேழு’ தொகுப்பில் ‘எரிகல் ஏரி’ தவிர சிறந்தவை என்று சொல்லத்தக்க இரண்டு கதைகளின் சுருக்கத்தை அளித்திருக்கிறேன் (முழுதும் மொழிபெயர்க்க நேரமில்லாத காரணத்தால்).

‘மயில்’ என்ற கதையில் மிகக்கொடிய குற்றம் ஒன்றைப் புரிந்ததற்க்காக சிறையிடப்பட்ட ஓர் இளைஞன் சிறைவாசம் முடிந்து சீர்திருத்தத்திற்க்காக ஒரு பூஞ்சோலைக்கு கொண்டுவரப்படுகிறான். காதுகேளாதோர் வாய்பேசமுடியாதோர் நடத்தும் சீர்திருத்த நிறுவனம் அது. அவன் அங்கு வந்ததும் எங்கிருந்தோ மயில் ஒன்று குரோதத்துடன் அவன் முகத்தை கொத்த பறந்து வருகிறது. அதை விரட்டிவிடும் பணியாளர் அவன் அங்கு செய்யவிருக்கும் சீர்திருத்தப்பணியை சொல்கிறார்.

கால் இழந்து நடக்கமுடியாத ஒரு பெண்ணை தள்ளுநாற்காலியில் கொண்டுவருகிறார்கள். அவளுடைய முகத்தில் ஒரு பாகம் – ஒரு கண், நாசித்துளை, கன்னம், காது, வாய் – எல்லாம் வெந்துபோய் வடிவம் தெரியாதவகையில் மாமிசத்துண்டுகளாக பிசைந்து காணப்படுகின்றன. சீர்திருத்த காலம் முழுவதும் இவன் அந்த பெண்ணுக்கு எல்லா பணிவிடைகளும் செய்யவேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது.

அவன் உடைந்து போகிறான். அவன் மனமுருகி காதலித்து பின் தொடர்ந்த பெண் தான் அவள். காதலை ஏற்க மறுத்ததால் கோபத்தில் ரயிலில் அவளை பிடித்து முகத்தில் ஆசிட் ஊற்றிவிடுகிறான். வேதனையில் தள்ளாடி ஓடும்ரயிலிலிருந்து விழுந்ததில் அவளுக்கு ஒரு கால் பறிபோகிறது.

அவர்கள் இருவரும் அந்தச் சோலையில் தனிமையில் ஒரு வீட்டில் கிட்டத்தட்ட கணவன் மனைவியைப்போல வாழ்கின்றனர். அவன் அவளுக்கு எல்லா பணிவிடைகளும் செய்கிறான். சோறூற்றுகிறான், ஆடை மாற்றுகிறான், குளிப்பாட்டி விடுகிறான். வெந்து கரிந்து போன அவளது உடல் அவனுக்கு குமட்டலை அளிக்கிறது. இரவுகளில் அவள் அவன் உடலை நாடுகிறாள். அவள் அவனை வெறுக்கிறாள், பழிவாங்கத்தான் இப்படிச் செய்கிறாள் என்று நினைக்கிறான். அவள் இதெல்லாம் வேடிக்கை என்பது போல உருகுலைந்த வாய் ஓரமாக சிரிக்கிறாள். ஆனால் நாளடைவில் எல்லாம் இயல்பாக ஆகிறது. வெளியே போகும்போதெல்லாம் அந்த மயில் அவனை கொத்த ஆங்காரத்துடன் ஒவ்வொரு முறையும் பறந்து வருகிறது. அவன் அதை விரட்டுகிறான்.

அவளுடன் வாழும் நாட்களில் நான் ஏன் அப்படி செய்தேன் என்று அவன் நொந்துக்கொள்ளத் தொடங்குகிறான். அவ்வளவு மனமுருகி வழிபட்டு காதலித்த பெண்; அந்த காதல் உதித்த அதே உள்ளத்தில் அவள் வாழ்க்கையை அழிக்கும் வெறியும் உதித்தது எப்படி என்று எண்ணுகிறான். காதலித்து அடையமுடியாதவளின் முகத்தை குலைக்க எப்படி தனக்குத் தோன்றியது என்ற மர்மத்துக்கு அவனிடம் விடையில்லை.

இப்படியே ஒரு வருடம் போகிறது. குளிர்க்காலம் முடிந்து கோடைக்காலம் கடந்து மழைக்காலம் வருகிறது. அவர்கள் இருவருக்குள்ளும் ஓர் ஒத்திசைவு உருவாகிறது. பருவமழை மேகமாக திரண்டு மடை உடைய காத்திருக்கும் ஒரு நாள் சோலையில் அவர்களுக்கு முன்னால் அந்த மயில் வந்து இறங்குகிறது. கொத்த வருவதாக எண்ணி அவன் அதை விரட்டப்போக அவள் தடுக்கிறாள். மயில் மெல்ல அடியெடுத்துவைத்து, அவளை வணங்குவதுபோல் தலைதாழ்த்துகிறது. மிகுந்த அக்கரையுடன், தன் இதயத்தையே கோதிவளர்த்து வெளிநீட்டி வைப்பதுபோல் தோகை விரித்து சிலிர்க்கிறது.  அழகால் கவரப்பட்டு தன் கடைசி துளி வரை அதற்கு அளிக்க நினைத்த ஆண் மயில், மர்மக்கண் ஒளிரும் தோகையை விரித்து, தன்னை மறந்து தன்னந்தனியாக ஆடுகிறது. அக்காட்சி இருவருக்கும் கண்ணீரை வரவழைக்கிறது.

-இந்தக்கதையில் ஒரு விதத்தில் ஆண்மை என்றால் என்ன என்று கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. மயில் மழையில் ஆடும் காட்சி இந்தக்கதை எழுப்பும் வினாக்களுக்கு மிஸ்டிகலான பதிலளிக்கிறது. விவாதங்கள் மூலம் இக்கதை சார்ந்த புரிதல்கள் மேலும் வளரலாம்.

‘புகைப்படம்’ என்ற கதை வங்க பிண்ணணி கொண்ட எழுத்தாளர்கள் அதிகமும் எழுதும் வெளிநாட்டு வாழ் வளர்ந்த பிள்ளைகளின் முதிர்ந்த பெற்றோரின் கதை என்ற களத்தை கொண்டது. ஆனால் அந்தப்பாணிக்கதைகள் பெரும்பாலானவற்றில் இல்லாத படைப்பாற்றல் கொண்ட கதை இது.

வாழ்க்கை முழுவதும் போராடி கஷ்டப்பட்டு பிள்ளைகளை வளர்த்த தாய் வெளிநாட்டிலும் அவர்களுக்கும் பேரக்குழந்தைகளுக்கும் சகல பணிவிடைகளை செய்யும் ஆயாவைப்போல வாழ்கிறாள். அவளுக்கென்று நேரம், பொழுதுபோக்கு, நட்பு, அந்தரங்கம் என்று ஏதும் இல்லை. இதுவரை சம்பிரதாயமான கதையில் ஆசிரியர் எதிர்பாரா உத்தி ஒன்றை நுழைக்கிறார்: அவர்கள் அண்டை வீட்டில் வாழும் நீல் என்ற அமெரிக்கர் நிலவில் முதன்முதலாக கால்வைத்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங்.

எதேச்சையான சந்திப்புகளில் முதியவரான நீலுக்கும் அந்த பாட்டிக்கும் ஒரு விதமான வழிபோக்கு நட்பு உருவாகிறது. அவன் புன்னகையில் நிலவொளி குடிகொண்டிருப்பதாக அவளுக்குத் தோன்றுகிறது. தான் ஒரு நல்ல பாட்டியாக குடும்பத்துடன் இருக்கவேண்டும் என்ற குற்றவுணர்வு அவளுக்கு இருக்கிறது. பட்டும் படமலும் பதில் பேசுகிறாள். அதையும் மீறி அவர்களுக்குள் நட்பு முதிர்கிறது. வாழ்க்கைகதைகளை பரிமாறிக்கொள்கிறார்கள். நீல் அவளை ஞாயிற்றுக்கிழமையன்று பக்கத்து ஊரில் ஒரு நல்ல உணவகத்தில் மதிய உணவு சாப்பிட அழைக்கிறார். அவள் ஒப்புக்கொள்கிறாள். வீட்டில் கேலி, கிண்டல். இந்த வயசில் இப்படியா என்று. அவர்கள் வெளியே போக திட்டமிட்டிருந்த நாள் அன்று பேரக்குழந்தைக்கு உடம்பு சரியில்லாமல் போகிறது. இருந்து பார்த்துக்கொள், இப்போ நீ வெளிய போகலன்னா என்ன என்று பிள்ளைகள் சொல்கிறார்கள். தான் வரவில்லை என்று நீலுக்கு தொலைபேசியில் சொல்கிறாள்.

தன் நிலையை நினைத்துக்கொள்ளும் போது நீல் அவளுக்கு பரிசாகக் கொடுத்த புகைப்படம் நினைவுக்கு வருகிறது. பெட்டிக்குள் பட்டுப்புடவைகளுக்கு அடியில் பத்திரமாக வைத்திருந்த படத்தை எடுத்துப்பார்க்கிறாள். நிலவிலிருந்து எடுக்கப்பட்ட பூமியின் படம். வெட்டவெளியில் நீல நிற அறைவட்டம். நான் சோர்வடையும்போதெல்லாம் இந்தப்படத்தை பார்ப்பேன், இதுதான் நாம், இவ்வளவுதான் நம் துயரங்களும் தோல்விகளும் என்று தோன்றும், உனக்கும் இது உதவட்டும் என்று அதை கொடுக்கும்போது நீல் சொன்னது அவள் நினைவுக்கு வருகிறது. இன்னும் பல ஞாயிற்றுக்கிழமைகள் வரும், நான் காத்திருக்கிறேன் நீல் என்று நினைத்துக்கொள்கிறாள் அந்த மூதாட்டி.

-அமெரிக்காவுக்கு செல்லும் கீழை நாட்டு பெற்றொர்களின் நிலையை பற்றி ஜும்பா லகிரி முதல் யியுன் லீ வரை பலர் அங்கிலத்தில் எழுதியிருக்கிறார்கள். ஆனால் இந்தக்கதையில் வரும் ஆழமும் கனவும் இதே களத்தில் எழுதப்பட்ட, இதைவிட புகழ்பெற்ற கதைகளில் நிகழவில்லை என்று சொல்லவேண்டியிருக்கிறது. நீல் ஆர்ம்ஸ்ட்ராங் ஓர் அமெரிக்க நாயகன். வீரன். ஆனால் இந்தக்கதையில் அவன் ஒரு கந்தர்வனாக, நீலனாக வருகிறான். அமெரிக்கர்களுக்கு நீல் ஒரு சாதாரண பெயர். நமக்கு அவன் பெயர் நீலமாகவே ஒலிக்கும். அந்தப்பெயரும் அப்புகைபடமும் கதையில் கற்பனைத்திரனுடன் ஒத்திசைவுடன் இணைத்திருக்கிறார் ஆசிரியர். ஓர் இந்தியமொழிக்கதையில் தான் இதன் மேலதிகப் பொருள் துலங்கும்.

நன்றி,

சுசித்ரா

விஷ்ணுபுரம்விழா சிறப்பு விருந்தினர் அனிதா அக்னிஹோத்ரி

நிழல் யுத்தம்-அனிதா அக்னிஹோத்ரி

சிதைவு -அனிதா அக்னிஹோத்ரி

‘தகவல் அறியும் உரிமை அல்லது ஏப்ரல் 7’ – சிறுகதை – அனிதா அக்னிஹோத்ரி

‘நினைவுகள்’ சிறுகதை – அனிதா அக்னிஹோத்ரி

எரிகல் ஏரி – அனிதா அக்னிஹோத்ரி

நிலவொளியில் – அனிதா அக்னிஹோத்ரி

முந்தைய கட்டுரைசிந்தாமணி,கடிதம்
அடுத்த கட்டுரைஅறமென்ப – கடிதங்கள்