அன்புள்ள ஜெ..
ஜெயபிரகாஷ் நாராயணன் என ஒருவர் இருந்திராவிட்டால், இந்திய அரசியலின் இன்றைய ஜன நாயக சுதந்திரம் இருந்திருக்காது… ஆனால் அவர் குறித்துப் பேச இன்று ஆள் இல்லை… இந்திரா காந்தியை வீழ்த்த அவருடன் இணைந்து போராடிய பலரும் இன்று காங்கிரஸ் ஆதரவாளர்களாகி விட்டதால் இந்த கொடுமை… அவர்களே இன்று அவரைப்பேசாத நிலையில் காங்கிரசும் பிஜேபியும் அவரைப்பற்றி பேசும் என எதிர்பார்க்க முடியாது
இலக்கியம் என்று பார்த்தால் , கிழக்கு ஜெர்மனி சில ஆண்டுகள்தான் உலகில் தனி நாடாக இருந்தாலும் அந்த தேசத்துக்கு என தனி இலக்கிய அடையாளம் இருந்தது… அந்த கால கட்ட படைப்பாளிகளின் ஆக்கங்கள் தமிழிலும் கம்யூனிச இதழ்களில் வெளி வந்தன… இன்று சோவியத் யூனியன் இல்லாத நிலையில் கிழக்கு ஜெர்மனி இலக்கியம் முழுக்கவே மறக்கப்பட்டு விட்டது…
அதேபோல சோவியத் யுக படைப்பாளிகளும் மறக்கப்பட்டு வருகின்றனர்.
அமைப்பு என ஒன்று இல்லாவிட்டால் எப்பேற்பட்ட ஆளுமைக்கும் உலகின் நினைவுகளில் இடம் இல்லை என்பது வாழ்க்கையின் மீதே அவ நம்பிக்கை கொள்ளச்செய்கிறது
அன்புடன்
பிச்சைக்காரன்
http://www.pichaikaaran.com/2018/12/blog-post_25.html
***
அன்புள்ள பிச்சைக்காரன்,
நீங்கள் சொல்வது ஒருவகையில் உண்மைதான். உலக அளவில் இலக்கியத்தின் பரவலுக்கும் ஏற்புக்கும் அமைப்புக்களின் உதவி தவிர்க்கமுடியாமல் இருக்கிறது. மூன்றுவகையான அமைப்புக்கள்.
ஒன்று, அரசு. ஓரான் பாமுக்கை துருக்கிய அரசே உலகமெங்கும் கொண்டுசெல்கிறது. சீனாவின் படைப்புக்களை சீன அரசு பிரபலப்படுத்துகிறது
இரண்டாவதாக, கட்சிகள், அரசியலமைப்புக்கள். ருஷ்யப்படைப்புக்கள் உலகமெங்கும் செல்ல உலகம் எங்குமிருந்த இடதுசாரி அமைப்புக்கள் காரணமாயின. தகுதியே அற்ற படைப்பாளிகள் கூட உலகமெங்கும் பரவலாக விற்கப்பட்டனர்.உதாரணம் நிகலாய் ஒஸ்திராவ்ஸ்கியின் வீரம் விளைந்தது.
லத்தீனமேரிக்க இலக்கியம் உலகமெங்கும் செல்ல அவர்கள் அமெரிக்காவுக்கு எதிராகப் போராடிய அரசியல்சூழலும், அதை கொண்டாடிய இடதுசாரி அரசியல் இயக்கங்களும் முக்கியமான காரணம். மார்க்யூஸ் இடதுசாரிகளால் பரப்பப்பட்டவர்.
மூன்றாவதாக, சிறிய சேவைக்குழுக்கள். அரசு சாரா அமைப்புக்கள். என்.ஜி.ஓக்கள். இவை சில செயல்திட்டங்களை வைத்திருக்கின்றன. அவற்றை முன்னெடுக்கும் பொருட்டு சில எழுத்துக்களை பரவலாக்குகின்றன.
அவ்வாறன்றி இயல்பாக மொழியாக்கம் செய்யப்பட்டு இலக்கியவாசகர் கவனத்துக்கு நூல்கள் சென்றடைய இன்று வாய்ப்பே இல்லை என்பதே உண்மை. அதற்கு உலகமெங்கும் கேட்க பேசிக்கொண்டிருக்கும் இலக்கிய விமர்சகர்கள் தேவை. அழகியலை உணர்ந்து முன்வைப்பவர்கள். அத்தகையவர்கள் இன்று மறைந்துவிட்டனர்.
இலக்கியம் பேசுபவர்களாக இன்றிருப்பவர்கள் இருசாரார். கல்வியாளர்கள் அரசியலாளர்கள். அவர்களால் முன்வைக்கப்படும் நூல்களே உலகமெங்கும் இலக்கியமாகச் சென்றுசேர்கின்றன. பலநூல்கள் சில சிறு சலசலப்புகளுக்குப்பின் மறைந்துவிடுகின்றன.
அத்தகைய இலக்கிய ஆளுமையாக இறுதியாக எஞ்சியவர் ஹரால்ட் ப்ளூம். துரதிருஷ்டவசமாக அவர் ஐரோப்பிய மைய பார்வை கொண்டவர். கீழை நாட்டு இலக்கியங்களை உள்வாங்க அவரால் இயலவில்லை.
ஜெ