குகை, கடிதங்கள்

குகை வாங்க

ஜெ!

குகை (நெடுஞ்)சிறுகதை வாசித்தேன். பல்வேறு வாசிப்புச் சாத்தியங்களைக்கொண்டு சிறுகதை விளங்குகிறது. 1. மனோவியல் சார்ந்த வாசிப்பு, 2. தத்துவம் சார்ந்த வாசிப்பு, 3. வரலாறு மற்றும் பூகோளம் சார்ந்த வாசிப்பு என நான் அவற்றை வகைப்படுத்திப் பார்க்கிறேன்.

மனோவியல் வாசிப்பு: மனநலம் பிறழ்ந்த ஒருவனின் அடக்கப்பட்ட மனம் ஒரு திறப்பினைப் பற்றிக்கொண்டு அதை ஊடகமாகக்கொண்டு திறந்த மனத்துடன் ஒரு கட்டுபாடான ஆனால் கட்டற்ற குகை என்னும் வழியைப் பின்பற்றி உலாவுகிறது; தனக்கான வழியைத் தேடமுயல்கிறது. இறுதியில் அது தான் புறப்பட்ட இடத்திற்கே வந்தடைகிறது.

மனோவியல் தெரிந்தவர்கள் இதனை இன்னும் மிக விரிவாக விளக்கமுடியும் என்று நினைக்கிறேன். அவர்களுக்கு இது ஒரு நல்ல அனுபவமாக அமையும். அதாவது ஒரு மனோவியல் பிரச்சனை எப்படி ஜெயமோகனின் கைவண்ணத்தில் ஒரு இலக்கியமாகிறது என்பதையும் அவர்கள் அறிய முற்பட்டால் அவர்களின் வாசிப்பு இன்னும் கூர்மையடையும்.

அவனின் தாய் அவனைப் புரிந்துகொண்டவளாக வருகிறாள்; மருத்துவம் பார்க்கிறாள். எனினும் அவனோடான உடையாடலை; அவனுக்கான உரையாடலைத் தவிர்க்கிறாள். அவன் மனைவியும் அவனோடு எந்த உரையாடலையும் வைத்துக்கொள்வதில்லை. ஒரு தந்தையோ குழந்தையோ இருந்திருந்தால் அவனுக்கான உரையாடல்வெளி திறக்கப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். ஜெயமோகனின் பாத்திரப்படைப்பு நுட்பமாக இதனைக் கொள்ளலாம்.

எனவே பூட்டப்பட்ட மனம்; ஒவ்வாத பழைய வீட்டுச்சூழல் மற்றும் அவனை எப்போதுமே தூங்க வைக்கும் மருந்து மாத்திரை என எல்லா விசயங்களுமே அவனுக்கான வெளியைக் குறுகடித்துவிட்டிருக்கிறது.

புதிய வீட்டில் அவனுக்கான ஒரு தனியறை கிடைக்கிறது. அவனுடைய மனம் ஒரு திறப்புக்கான வெளியைத் தேடுகிறது; மனத்தைப் பிதுக்கிக்கொண்டு எண்ணம் வெளிப்படுகிறது. அதற்கான ஒரு குறியீடாக குகை அமைகிறது.

சிறுவயதில் நூலகம் மட்டுமே அவனுக்கான ஒரு வெளியாக இருந்திருக்கிறது. அவன் அப்போது ஊரையும் நன்கு சுற்றிவந்திருக்கிறான். ஒரு கட்டத்திற்குமேல்தான் மனநலம் இழந்திருக்கிறான். இந்தக் குகை அவன் சிறுவயதில் உல்லாசமாகச் சுற்றிய எண்ணங்கள் மற்றும் நூலகத்தில் படித்த வரலாறு மற்றும் பூகோளம் சார்ந்த அறிவு இரண்டையும் வெளிப்படுத்தும் கருவியாக அமைகிறது.

குகைக்குள் வாழும் வெளிநாட்டவர்கள்கூட வரலாற்று மனிதர்களாகவே – வரலாற்றின் படிவங்களாகவே அமைகின்றனர்.

ஆழ்மனத்திற்கும் காமத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எனவே ஆழ்மன வெளியெங்கும் – குகையெங்கும் காமமும் வஞ்சகமும் அறியவருகின்றன. அவனின் மனநலப்பிறழ்வு அவனின் காமத்தை வெளிப்படுத்தாமல் அடுத்தவர்களின் காமத்தை வெளிப்படுத்துகிறது. மற்றவர்களுக்கு இப்படி ஒரு குகை கிடைத்தால் அவர்களின் காமமே வெளிப்பட்டிருக்கும்.

காமத்தை எழுதுகிறவனின் கையில் இந்தக்கதைக்கரு கிடைத்தால் இந்தக்கதை ஒரு பாலியல் சார்ந்த கதையாக மாறியிருக்கும். ஆனால் ஜெயமோகனின் கைகளில் அது கலையாக வெளிப்படுவதைப்பார்க்கிறோம்.

வெளியெங்கும் அலைந்துவிட்டு அம்மனம் மீண்டும் தன் கூடடைகிறது; இந்தக் குகைவாழ்க்கையைக்கூட அந்த மென்மையான மனத்தால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை என்று தோன்றுகிறது. மனோவியல் தெரிந்தவர்கள் கொஞ்சம் ஜனரஞ்சகமாக விளக்கினால் நன்றாக இருக்கும்.

தத்துவவாசிப்பு: இங்கு பாரதியின் ஞானரதம் நினைவுக்கு வருகிறது. நித்திரையில் பாரதி ஒரு கனவு காண்கிறான். கற்பனைத் தேரில் ஏறி சொர்க்கலோகம் போன்ற ஒன்றைக்காண்கிறான். பாரதியின் கற்பனையின் எல்லையைத் தொட்ட ஒரு படைப்பு அது.

குகையில் ஜெயமோகன் ஒரு ஆழ்மனப்பயணத்தை ஆரம்பித்துவைக்கிறார்.பாரதியின் மனம் திரிவிக்கிரமனாய் விண்ணோக்கிப் பாய்ந்தது. ஜெயமோகன் கூர்மாவதாரமாய் பூமியைத்துழைத்து உள்வழிப்பயணம் மேற்கொள்கிறார்.

பாரதிக்கு அந்தப்பயணத்தில் லௌகீக விசயங்கள் தேவைப்படவில்லை. முழுக்க முழுக்க கற்பனைப்புனைவினாலேயே நடத்துகிறார். ஆனால் ஜெயமோகனுக்கு ஒரு வாழ்க்கை தேவைப்பட்டிருக்கிறது; ஒரு வரலாறு தேவைப்பட்டிருக்கிறது. ஒரு பயணத்தை மேற்கொள்ளப்போதுமான புறக்காரணிகளை அம்மா, மனைவி என்னும் வடிவங்களில் கட்டமைக்கிறார்.

பாரதியின் கற்பனை உலகம் பரவசமானது. ஜெயமோகனின் கற்பனை உலகம் படபடப்பானது. அடிவயிற்றை எக்கிக்கொண்டே வாசிக்கவைப்பது. பாரதின் பயணமும் திரும்பவந்து கூடடைவதில் முற்றுப்பெறுகிறது. குகைப்பயணமும் மீண்டும் கூடடைகிறது.

இக்கதையில் ஒரு ஞானத்தேடல் இருக்கிறதா? உள்மனத்தை அறிய முயற்சிப்பதுதான் ஞானத்தேடல். இந்தக்குகை உள்ளொளியைத்தேடும் பயணம்தான். ஆனால் குறைபட்டமனம்; குறைபட்ட மனத்தினால் ஆன்மீகத்தின் முழுமையை உட்கொள்ளமுடியாதல்லவா. அதனால் அது எந்த வெற்றியையும் பெறாமலேயே திரும்பிவருகிறது. ஆனாலும் உள்ளோளித் தேடல் என்பது ஒரு ஆன்மீகனுக்கு அவசியமானது. இந்தத் தேடல்கள் நிகழ்ந்துகொண்டுதானிருக்கும். ஒருநாள் அது வெற்றிபெறும்.

வரலாறு மற்றும் பூகோள வாசிப்பு: ஒரு கதையினைப்படைக்கும்போது நம்பகத்தன்மை மிகமுக்கியம் ஆகும். அதற்கான ஊடுபொருட்களாக- களனாக வரலாறு மற்றும் பூகோளம் சார்ந்த விசயங்களை ஜெயமோகன் அமைத்துள்ளார்.

இந்தக்கதை ஒரு வட இந்திய நகரத்தில் நடக்கிறது. இந்தி பேசும் நகரம் என்பதற்கான ஒரு சிறு குறிப்புவருகிறது.

இந்தக் குகையில் காட்டப்படும் நில அமைப்பு தமிழகத்திலோ அல்லது கேரளத்திலோ இல்லாதது. நம் நிலம் கடினப்பாறைகளால் ஆனது. அவைகளில் சமணர்கள் வாழ்ந்ததைப் போன்று இயற்கைக் குகைகள்தான் உண்டாகும். செயற்கையான ஒரு நகரம் முழுவதையும் இணைக்கும் குகைப்பாதைகளை இணைக்கவே முடியாது. எனவேதாம் ஜெ.மோ. வட இந்திய நகரத்தைத் தேர்ந்தெடுக்கிறார். அவருடைய இந்தியப்பயணம் என்னும் நூல் இதனை விளங்கிக்கொள்ள உதவும்.

நூலகம் வாயிலாக அவர் பிரிட்டிஷ் காலத்து வரலாற்றைப் பின்புலமாக ஆக்குகிறார். கதாநாயகன் நூலகம் செல்லும் வழக்கம் உடையவனாக இருக்கிறான். அதிலும் வரலாறு சார்ந்த நூல்களைப் படிப்பவனாக இருக்கிறான்.

எங்கள் கிராமம் கன்னியாகுமரி திருச்செந்தூர் சாலையில் உள்ளது. இங்கு ஊருக்கு ஒதுக்குப்புறமான கடற்கரைப்பகுதியில் மங்களா என்று எங்களால் அழைக்கப்படும் ஒரு வித்தியாசமான கட்டட அமைப்பு உள்ளது. முழுவதும் சுதை, செங்கலால் அமைக்கப்பட்டது. மேல்கூரையும் அதே சுதையால் அமைக்கப்பட்டது. கிட்டத்தட்ட பெட்ரோல் கொண்டுவரும் கண்டெயினர் உருளைபோன்ற அமைப்புடையது.

சன்னல் போன்ற திறப்பின் வழியாக சென்று ஆடு மாடு மேய்ப்பவர்கள் ஓய்வு எடுப்பர். அந்த மங்களா பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. ஆனால், அதன் மத்தியில் ஒரு ஆழ்துழைக் கிணற்றுக்குப் ‘போர்’ போட்டது போன்ற அமைப்பு இருந்தது. அது பற்றிய வாய்மொழிக்கதை உள்ளது. அது: உள்ளே பொக்கிசம் இருக்கு. ஆனா அதைப் பூதம் காக்கிறது. அதை யாரும் தோண்டிப்பார்க்கக்கூடாது. அவ்வளவுதான். அதையாரும் எந்த முயற்சிக்கும் உட்படுத்தவில்லை.

சில நேரம் சில ஆபீசர்கள் அயல்நாட்டாரோடு வந்து பார்த்துவிட்டுப் போவதைப்பார்த்திருக்கிறோம். அவர்கள் மக்களிடம் எதுவும் பேசியதில்லை. மக்களும் அது என்ன என்று கேட்டதில்லை. ஒரு கட்டத்தில் மங்களா உள்ளே யாரும் போகமுடியாதபடி சிமென்டால் சன்னல்களை அடைத்துவிட்டனர். இதே போன்ற மங்களா ஒன்று கன்னியாகுமரி அகஸ்தீசுவரம் கல்லூரிச்சாலையில் அழிந்துகிடப்பதைக் கல்லூரி செல்லும் நாட்களில் பார்த்திருக்கிறேன்.

கன்னியாகுமரி கோயில், வட்டக்கோட்டை, இந்த இரண்டு மங்களா இவற்றிற்கிடையில் குகை உறவு இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கிறது. போர்க்காலங்களில் கோட்டை தாக்கப்படும்போது தப்பிப்பதற்காக அரசர்கள் ஏற்படுத்திய குகை வழிகளாக இருக்கலாமோ?

இது போன்ற கடற்கரை நிலங்களில்மட்டுமே தமிழகத்தில் குகைகள் சாத்தியம். ஒரு நகரம் முழுமைக்கான குகைவழிப்பாதைகள் தமிழகத்தில் சாத்தியமே அல்ல. நமது கருங்கல் பாறைகளைக் குடைவது அத்தனை எளிதல்ல. அது மட்டுமல்ல அவை எளிதில் நொறுங்கக்கூடியவை. மயிலாடியில் சிற்பம் செய்யப் பயன்படுத்தும் பாறைகள் சாதாரணமானப் பாறைகள் அல்ல. அவை நொறுங்காதவை. சுசீந்திரம் சிற்பங்கள் செய்யப்பயன்பட்டுள்ள பாறைகளுக்கும் நமது சாதாரண பாறைகளுக்கும் உறவெதுவும் இல்லை. அவை நிறத்திலும் தரத்திலும் மிக வேறுபட்டவை.

மன அழுத்தங்கள் மிகைப்படும்போது பயணங்கள் மிக அவசியமானவை. மிக அழுத்தப்பட்ட மனம் ஒன்றின் பயணத்துக்கான புறவழிகள் அடைக்கப்படும்போது யாரும் அறியாதபடி அகவழியை அம்மனம் பயணத்துக்கான வெளியாகக்கொள்ளும். அந்தப் பயணம் பற்றிய கற்பனையை ஆங்கிலேய ஆட்சிப்பின்னணி மற்றும் இந்தியப் பயணத்தில் தான் பார்த்த நில அமைப்பு ஆகியவற்றைத் துணையன்களாகக்கொண்டு ஜெயமோகன் ஒரு அற்புதமான ‘குகை’யை வடிவமைத்துள்ளார். கதைக்கூறுகளின் கலவை மிக நேர்த்தியானது. கணவனுக்கும் மனைவிக்குமான உறவிடைவெளி மட்டும் போதுமான அளவிற்கு வெளிப்படுத்தப்படவில்லை என்று நினைக்கிறேன். கணவன் மீதான மனைவியின் அத்தனை ஒதுக்கத்திற்கான காரணம் யாது? அது வெளிப்படுத்தப்பட்டிருந்தால் இந்தக் குகைப்பயணத்திற்கான தேவை இன்னும் அழுத்தமடைந்திருக்கும் என்று தோன்றுகிறது.

இந்தப் பதிவு எனது முதல் வாசிப்பில் எழுதப்பட்டது. ஒரு வாசிப்போடு நிறுத்தப்படமுடியாத படைப்பு என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் வாசிக்கிறேன்; எழுதுகிறேன்.

நன்றி ஜெ.

முனைவர் தி.இராஜரெத்தினம்

***

அன்புள்ள ஜெ

கொஞ்சம் தாமதமாக வாசித்த கதை குகை. கிண்டிலில் இலவசம் என்பதனால் கையில் வந்தது. ஒருமணி நேரமாகியது வாசிக்க. இப்போதும் ஒரு பதற்றமாக, கலக்கமாக அந்தக்கதை நினைவிலிருக்கிறது. அது இந்தக்காலகட்டத்தின் வாழ்க்கையை ஒருவாறாக உருவகம் செய்து காட்டுகிறது. நமக்கெல்லாமே ஒரு வகையான உளவியல் அழுத்தம் உள்ளது. அந்த அழுத்தத்தால் நாம் ரகசிய உலகங்களை உருவாக்கிக்கொள்கிறோம். அந்த இருண்ட ரகசியப் பாதைகளைப்பற்றிய கதை.

அர்விந்த்

குகை முன்னுரை

முந்தைய கட்டுரை‘தீயின் எடை’ வாசிப்பு – முனைவர் ப. சரவணன்,
அடுத்த கட்டுரைவரலாற்றுக்கு முந்தைய காலம்-கடிதங்கள்