குழந்தைகளின் விளையாட்டு-கடிதம்

அன்பின் ஜெ

நேற்று என் மகளுக்கு கோடை விடுமுறை தொடங்கியது. வழக்கம்போல விடுமுறையை பாதி அம்மா பக்க பாட்டி வீட்டிலும் மீதியை அப்பா பக்க பாட்டி வீட்டிலும் கழிக்க கிளம்பினாள். ஆனால் அங்கே அவளுடன் விளையாட ஒருவர் அல்லது இருவர் மட்டுமே உள்ளனர். எங்கள் ஊரில் பக்கத்துவீட்டு சிறுமி, என் மனைவி வீட்டில் என் மனைவியின் அண்ணன் குழந்தைகள் இரண்டுபேர். அங்கேயும் ஓடியாடி விளையாடும் தருணம் வாய்ப்பதில்லை. நினைத்த வீட்டில் சாப்பிட்டு, கிடைக்கும் இடத்தில் நண்பர்களுடன் தூங்கும் இன்பம் முற்றிலும் வேறானது. சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் சில குழந்தைகள் உள்ளன. ஆனால் ஓடியாடி, இருப்பதை பகிர்ந்து விளையாடும் விளையாட்டுக்கள் முற்றிலும் இல்லை. இதனால் சுயநலமும் அடுத்தவர்களுக்கு விட்டுக்கொடுக்காத தன்மையும் வளர்ந்து முற்றிலும் வேறு குழந்தைகளாக உருவாகிறார்கள்.

இவற்றிற்கு நகரத்தில் வாழும் பெரும்பாலான படித்த பெற்றோர்களின் குறுகிய மனஓட்டமே காரணம். குழந்தைகளை எந்த சமூக பொறுப்பும் இல்லாமல், எதைப்பற்றியும் சொல்லிக்கொடுக்காமல் வளர்க்கின்றனர். என் மகள் பள்ளிக்கூடத்தில் நண்பர்களிடம் பேசியதாக கூறும் விஷயங்களே இதற்கு சான்று. ஏதோ சிறிதளவில் வாசிக்கும் பெற்றோர்களால் பரந்த மனப்பான்மையை பெறும் குழந்தைகள் மற்ற குழந்தைகளால் ஏமாளி பட்டம் பெற்று வீட்டில் அழுவதை நான் பார்த்திருக்கிறேன். பள்ளிகளிலும் அறம் பற்றிய, தார்மீகம் பற்றிய வகுப்புகள் இல்லாததால் சரியான வழிகாட்டுதலின்றி குழந்தைகள் தவிக்கின்றன.

இவற்றிலிருந்து குழந்தைகளை, அந்த பிஞ்சு மனங்களை சரியான வாழ்க்கைமுறை நோக்கி செலுத்துவது பெற்றோராகிய நமக்கும், பள்ளிகளுக்கும், இந்த சமூகத்திற்கும் உள்ள முக்கியமான கடமையாகும். இல்லாவிட்டால் மிக மோசமான சுயநலமிக்க ஒரு சமூகத்தையே நம்முடைய குழந்தைகளுக்காக நாம் விட்டுச்செல்கிறோம்.

அன்புடன்,

கோ வீரராகவன்.

***

அன்புள்ள வீரராகவன்,

முதலில் நம் பதற்றங்களை நாம் கூர்ந்து கவனிக்கவேண்டும். நாம் குழந்தைகளை ‘வளர்க்க’வில்லை. அவர்கள் வளர்கிறார்கள். அதற்கு நாம் முடிந்த உதவிகளைச் செய்கிறோம். அவர்களை நாம் உற்பத்தி செய்ய முடியாது. வடிவமைக்க முடியாது. அவர்கள்மேல் நம்முடைய செல்வாக்கு எந்த அளவுக்கு உண்டோ அதேயளவுக்கு, அதைவிடக் கூடுதலாக சமூகத்தின் செல்வாக்கு உண்டு. பள்ளி, தோழர்கள், ஊடகங்கள் என அதை அவர்கள் அடைந்தபடியே இருக்கிறார்கள்.

அதையெல்லாம் நாம் நிறுத்திவிட முடியாது. நம் குழந்தைகளை நாம் விரும்பும் சூழலில் வளர்க்க, நாம் விரும்பியபடி வார்க்க முடியாது.

ஆகவே நாம் செய்யக்கூடுவது அவர்களுடன் உரையாடலில், உளத்தொடர்பில் இருப்பது மட்டும்தான். பெற்றோரின் செல்வாக்கு தன்னிலிருப்பதைப் பற்றி எழுதும் அத்தனை வளர்ந்த முன்னாள் குழந்தைகளும் பெற்றோர் தன்னிடம் உரையாடியதை, அவர்களின் செயல்களை கண்டு தாங்கள் அவர்களை முன்மாதிரியாகக் கொண்டதைப் பற்றி மட்டுமே எழுதுகிறார்கள். நாம் செய்யக்கூடுவது அது ஒன்றே.

ஜெ

முந்தைய கட்டுரைஅஞ்சலி: பிரான்ஸிஸ் கிருபா
அடுத்த கட்டுரைவிக்ரமாதித்யன், கடிதங்கள்-16