குகை

குகை வாங்க

2013 ஜனவரியில் நாங்கள் நண்பர்கள் ஆந்திரா, சட்டிஸ்கர், ஒரிசா பகுதிகளிலுள்ள குகைகளைப் பார்க்கும்பொருட்டு ஒரு பயணம் சென்றோம். ஆந்திரத்தில் உள்ள பெலம் போன்ற மாபெரும் நிலக்குகைகள், சட்டிஸ்கரின் மலைக்குகைகள். பல குகை ஓவியங்களையும் பார்த்தோம். அவை குகைகளின் வழியே என்னும் நூலாக வெளிவந்துள்ளன.

குகைகளுக்குள் செல்லும்போது நான் நிம்மதியிழந்து இருந்தேன். தலைக்குமேல் காடுகள், மலைகள், ஊர்கள். அடியில் ரகசியமாக நான் இருந்துகொண்டிருப்பதாக உணர்ந்தேன். புழுக்களின் வாழ்க்கை. பாதாள நாகங்களின் வாழ்க்கை. குகையை நம் மரபு சொல்லும் பாதாள உலகங்களுடன் இணைக்காமல் இருக்கவே முடியவில்லை.

குகை நம் மரபில் ஆழ்ந்த குறியீட்டு பொருளிலேயே தொடக்கம் முதல் இருந்து வந்துள்ளது. சம்ஸ்கிருதத்தில் குகா என்னும் சொல்லின் வேரில் இருந்தே குஹ்யம் [மறைந்திருப்பது] என்ற சொல்லும் வந்தது. உள்ளம் குகை எனச் சொல்லப்படுகிறது. சிவன் குகேஸ்வரனாக வழிபடப்படுகிறான்.

2019ல் ஒருநாள் முன்பு நான் வடகேரளத்தில் தொலைதொடர்புத் துறையில் வேலைசெய்தபோது நிகழ்ந்த ஓர் அனுபவத்தை நினைவுகூர்ந்தேன். கோழிக்கோட்டில் தொலைபேசி அமைக்க தோண்டியபோது ஊழியர்கள் ஒரு ரகசியக் குகைப்பாதையை கண்டடைந்தனர். சாமூதிரி ஆட்சியின்போதோ , போர்ச்சுக்கீசியர் ஆட்சியின்போதோ அமைக்கப்பட்டது. கைவிடப்பட்டு மறக்கப்பட்டது. அது நகரின் அடியில் பல கிளைகளுடன் நெடுந்தொலைவு செல்வதாகச் சொல்லப்பட்டது. அதை செய்தியாக்காமல் அப்படியே விட்டுவிட்டனர்

மன்னராட்சிக்காலத்தில் வெட்டப்பட்ட பலநூறு சுரங்கவழிகள் நம் கால்களுக்கு அடியில் இன்றும் புதைந்துள்ளன. அவை தூர்ந்துவிட்டிருக்கலாம். அல்லது ரகசிய அறைகளாக அங்கே இருந்துகொண்டும் இருக்கலாம். அங்கே நாமறியாத உயிர்கள் வாழ்ந்துகொண்டிருக்கலாம். அல்லது வெறுமையும் இருளும் நிறைந்திருக்கலாம்.அந்த எண்ணம் என்னை தூண்ட உடனே எழுத ஆரம்பித்த கதை இது.

இந்தக்கதை நம்முள் உள்ள, நாம் மட்டுமே அறிந்த குகைவழிகளைப் பற்றியது. இதை என் பிரியத்திற்குரிய கவிஞர் அபி அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்

ஜெ

அன்புடன்

கவிஞர் அபி அவர்களுக்கு

***

ஆயிரம் ஊற்றுக்கள் முன்னுரை வான்நெசவு முன்னுரை மலைபூத்தபோது முன்னுரை
ஐந்து நெருப்பு முன்னுரை தேவி – முன்னுரை பொலிவதும் கலைவதும் முன்னுரை
குமரித்துறைவி முன்னுரை எழுகதிர் முன்னுரை முதுநாவல் முன்னுரை
ஆனையில்லா! முன்னுரை தங்கப்புத்தகம் முன்னுரை அந்த முகில் இந்த முகில் முன்னுரை
பத்துலட்சம் காலடிகள் முன்னுரை இருகலைஞர்கள் முன்னுரை உடையாள் முன்னுரை
ஞானி முன்னுரை கதாநாயகி முன்னுரை வாசிப்பின் வழிகள் முன்னுரை
வணிக இலக்கியம் முன்னுரை இலக்கியத்தின் நுழைவாயிலில் முன்னுரை ஒருபாலுறவு முன்னுரை

 

முந்தைய கட்டுரைபேசாதவர்கள், கடிதங்கள்-3
அடுத்த கட்டுரைவெண்முரசு நடையும் அறிவியல்புனைவும்