அறிந்து முன்செல்பவர் வழிபடலாமா?
ஆலயம் ஆகமம் சிற்பம்
அன்புள்ள ஜெ,
உங்கள் தளத்தில் வெளிவரும் ஆன்மிகம், மதம் சம்பந்தமான கேள்விபதில்கள் எனக்கு மிகப்பெரிய வழிகாட்டியாக உள்ளன. நான் பொதுவாக ஆன்மிக ஈடுபாடுள்ளவன். எனக்கு ஐயங்களும் குழப்பங்களும் உண்டு. அவற்றுக்கான விடைகள் தேடிப்பார்க்கையில் எனக்குக் கிடைப்பவை சம்பிரதாயமான விளக்கங்கள். அவற்றுக்கு இன்றைய வாழ்க்கை சார்ந்த பெரிய பொருத்தப்பாடு இருப்பதில்லை. சமயங்களில் தர்க்கபுத்திக்கும் ஒத்துப்போவதில்லை. எனக்குத்தேவையானது இன்றைய காலகட்டம் சார்ந்த, தர்க்கபூர்வமான பதில். அந்தப்பதில்கள் உங்கள் குறிப்புகளில் உள்ளன.
உங்கள் கட்டுரைகளில் அறிந்துமுன்சென்றவர் வழிபடலாமா எனக்கு முக்கியமான கட்டுரை. நான் யோகப்பயிற்சிகள் செய்பவன். நான் இறைவழிபாடு செய்யலாமா என்ற சந்தேகம் எனக்கு நீண்டநாட்களாக இருந்தது. அவையிரண்டும் முரண்படுபவை அல்ல என்ற பதில் எனக்கு நிறைவை அளித்தது. அதேபோல நாட்டார்த்தெய்வ வழிபாடு, பழங்குடித்தெய்வ வழிபாடு ஆகியவற்றைப் பற்றியும் இந்து மதத்தின் அமைப்பைப்பற்றியும் இந்து மதம், இந்து ஆன்மிகம் ஆகியவற்றுக்கிடையே உள்ள உறவு பற்றியும் தெளிவுகளை அடைந்தேன். மனமார்ந்த நன்றி
குறிப்பாக நன்றி சொல்லவேண்டியது எதற்காக என்றால் எந்த ஆசிரியபாவனையும் இல்லாமல் இயல்பாக நண்பராக நின்று சொல்கிறீர்கள் என்பதுதான்.
என். மாணிக்கவாசகம்
***
அன்புள்ள ஜெ,
உங்கள் ஆன்மிகக் கட்டுரைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். வெண்முரசுக்குப் பின்னர் பல மாற்றங்களைக் காண்கிறேன். முன்பிருந்த கட்டுரைகள் நீளமானவை. ஏனென்றால் அவற்றில் நீங்கள் விவாதம் செய்கிறீர்கள். நிரூபணம் செய்ய முயல்கிறீர்கள். இப்போதுள்ள கட்டுரைகள் சுருக்கமானவை. ஏனென்றால் இப்போது தெளிவாக அறுதியிட்டுச் சொல்லிவிடுகிறீர்கள். குழப்பங்கள் இல்லை. நிரூபிக்க முயலவில்லை. சொல்லிவிட்டுச் செல்கிறீர்கள். ஏனென்றால் இன்றைக்கு உங்கள் குரலில் ஆமாம், எனக்கே தெரியும் என்ற ஒரு தன்னம்பிக்கை உள்ளது. நூல்களை ஆதாரம் காட்டாமல் சொல்கிறீர்கள். இந்த உறுதிப்பாடு வெண்முரசுக்குப் பின்னாடி வந்திருக்கிறது. இது இன்னும் கூர்மையாக அனைத்தையும் புரிந்துகொள்ள உதவுகிறது
கணேஷ்குமார்
***