அன்புள்ள ஜெ
பொன்னியின்செல்வன் படப்பிடிப்பு முடியப்போகும் செய்தி அறிந்து நிறைவடைந்தேன். பலகாலமாக பலரும் எடுக்க நினைத்த சினிமா அது. இப்போது பெரும்பாலும் நிறைவேறியிருக்கும் கனவு.
இன்று சிலருக்கு அந்தக்கதையை அப்படியே எடுக்கமுடியுமா என்ற சந்தேகமெல்லாம் வந்தது. அப்படியே எடுக்கமுடியாது. அதற்குச் சீரியல்தான் எடுக்கவேண்டும். ஆறுமணிநேர சினிமா என்றாலும்கூட சுருக்கியாகவேண்டும்.
பொன்னியின்செல்வன் கதை ஒரு கதாபாத்திரம் வழியாகச் சென்று கொஞ்சதூரம் போனபின் இன்னொரு கதாபாத்திரம் வழியாகச் செல்லும். அதில் பல சரடுகள். பல இடங்களில் அது மூலக்கதையை விட்டுவிட்டுச் செல்லும். அதை அப்படியே சீரியலாகக்கூட எடுக்கமுடியாது. அது நாவலின் இயல்பு. சினிமாவும் சீரியலும் கதையோட்டம் திசைதிரும்பாமல் அமையவேண்டியவை. ஆகவே சினிமா வேறு நாவல் வேறுதான்.
நாவலில் பெரும்பாலான நிகழ்ச்சிகள் எவரோ எவரிடமோ சொல்வதுபோலத்தான் வரும். போர்கள் கூட சுருக்கமாகச் சொல்வதாகவே இருக்கும். நேரடி வர்ணனையாக, காட்சியாக போரே வராது. பேச்சுதான்.ஆனால் சினிமாவில் அப்படி வசனமாக காட்டமுடியாது.
நாவலில் குணச்சித்திரங்கள் கொஞ்சம்கொஞ்சமாக மாறிக்கொண்டே இருக்கும். நந்தினி, பழுவேட்டரையர் கதாபாத்திரங்கள் அப்படி மாறும். அதேபோல சின்னக்கதாபாத்திரங்களான மணிமேகலை, கந்தமாறன் எல்லாம் சட்டென்று பெரிசாகும். அதையும் அப்படியே எந்தச் சினிமாவும் காட்டாது.
ஆகவே சினிமாவேறு நாவல் வேறுதான். நாவலில் இருந்து எடுத்துக்கொண்டு சினிமாவாக ஆக்கப்படுகிறது. அதை ஏன் சினிமாவாக எடுக்கவேண்டும்? நாவல் என்னதான் வாசிக்கப்பட்டாலும் தமிழகத்தில் அதை வாசித்த ஐந்துலட்சம்பேர் இருந்தால் அதிகம். சினிமா அதை பலகோடிப்பேருக்கு கொண்டுசென்று சேர்க்கிறது. சின்னக்குழந்தைகளுக்கு கொண்டுசேர்க்கிறது. இந்தியா முழுக்க உலகம் முழுக்க கொண்டுசெல்கிறது.
நம் வரலாற்றை சினிமாவாக எடுப்பது ஏன் தேவையென்றால் அந்தக்காலகட்டத்தின் அரண்மனைகள், நகைகள், ஆடைகள் என எல்லாவற்றையும் காட்சியாக காட்டுவதற்காக. நம்முடைய இறந்த காலம் எப்படி இருந்தது என்று காட்டுவதுதான் நோக்கம். இறந்தகாலப்பெருமிதம் இல்லாத சமூகத்துக்கு தன்னம்பிக்கை இருக்காது.
சினிமா வழியாகத்த்தான் தமிழகத்தின் ஒரு பொற்காலம் இளைஞர்களின் மனதிலே நிலைகொள்ளும். அந்த வாழ்க்கை அப்படியே நிலைகொள்ளும். ஹாலிவுட் சினிமாக்களெல்லாம் அப்படித்தான் பழைய ஐரோப்பாவை உருவாக்கி கண்முன் காட்டின.அதேபோல ஜப்பானியப்படங்கள். அகிரா குரசோவா எடுத்தவை. இப்போது சீனப்படங்கள் வந்துகொண்டிருக்கின்றன.
ஆனால் நிஜத்தை அப்படியே காட்டமுடியுமா? உண்மையை காட்டமுடியுமா? உண்மை என்னவென்று நமக்கு தெரியாது. நம்மால் ஊகிக்கத்தான் முடியும். அந்த ஊகத்தைக்கொண்டு ஒரு குளோரியஸ் பிக்சரைத்தான் நாம் உருவாக்கவேண்டும். ஆய்வுகளில் அது தேவையில்லை, உண்மைதான் முக்கியம். ஆனால் இது இளையதலைமுறைக்கானது. இது ரொமான்ஸ். ஆகவே இதில் கனவுதான் முக்கியம்
இது எல்லாவகையிலும் புனைவுதான். நம் இறந்தகாலப்பெருமையை நாம் புனைகிறோம். ஹாலிவுட் ஜப்பான் சீனா எல்லாம் புனைந்ததும் அப்படி கற்பனையான குளோரியைத்தானே ஒழிய அப்பட்டமான யதார்த்தத்தை அல்ல.
சோழர்களின் காலம்தான் தமிழ்ப்பண்பாட்டின் உச்சக்கட்ட காலம். சங்ககாலமெல்லாம் தொடக்கம்தான். சோழர்காலத்தில் நாம் ஒரு பேரரசை உருவாக்கினோம். தமிழக எல்லையை விட்டு வெளியே சென்றோம். கோயில்கலை, காவியங்கள், இசைக்கலை ,சிற்பக்கலை எல்லாமே உச்சத்தை அடைந்தன. அது தமிழ் வீரக்குடிகளின் வெற்றியாகும்.
அந்தப் பேரரசின் தொடக்கமென்ன என்று காட்டும் ஒரு நாவல் பொன்னியின் செல்வன். ஆகவே அது புகழுடன் இருக்கிறது.ஆனால் அதை அது வெறும் சித்திரமாகக் காட்டவில்லை. சாகசநாவலாக காட்டுகிறது. விளையாட்டுத்தனமும் வீரமும் கொண்ட நாவல். குழந்தைகள் விரும்பிப்பார்க்கும் சினிமாவாக அதை ஆக்கமுடியும். தமிழர்களின் ஒளிமிகுந்த காலகட்டம் குழந்தைகளுக்கு தெரியவரும்.
அந்த குளோரியஸ் சித்திரத்தை சீரியலாக எடுக்கமுடியாது. அதற்கு சீரியலில் பட்ஜெட் இருக்காது. மணிரத்னம் நினைத்தால்தான் அந்த பட்ஜெட் கொண்டுவர முடியும். சாதாரணமான ஸ்டண்டுகளுக்கெல்லாம் பட்ஜெட்டை கோடிக்கணக்கில் போடுபவர்கள் நாம். இந்த மாதிரி நம் பாரம்பரியப்பெருமையை காட்டும் படங்களுக்கு எத்தனை பட்ஜெட் போட்டாலும் தகும்.
இந்த வகையில் நம் பெருமையை எடுத்து நாமே பார்க்கமட்டும் செய்தால் போதாது. இந்தியாவே பார்க்கவேண்டும். உலகமே பார்க்கவேண்டும். அப்போதுதான் நம் பெருமை நிலைநாட்டப்படும். நம் பிள்ளைகளிடம் நாம் இதைக் கொண்டு சேர்க்கவேண்டும். உலகம் முழுக்க உள்ள நம் வம்சாவளியினரிடம் கொண்டுசென்று சேர்க்கவேண்டும்.
நாவலாக இருந்தால் இதெல்லாம் சாத்தியமாகாது. சினிமா மக்களிடம் சேர்ந்தபின் நாவலை இன்னும் அதிகமாக மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும். இன்னும் விரிவான சித்திரம் கிடைக்கும். அதற்கு மாறாக நாம் வாசித்த நாவல் நாவலாகவே இருக்கவேண்டும், சினிமா எடுத்தால் நாவல்போலவே எடுக்கவேண்டும், நாவலையே சினிமாவில் காணவேண்டும் என்று சொல்வதெல்லாம் அசட்டுத்தனமாகும்.
பொன்னியின் செல்வன் ஐரோப்பிய சினிமா போல இருக்க முடியாது. வீரபாண்டியக் கட்டப்பொம்மன் போல அடுக்குமொழி வசனமாகவும் இருக்கமுடியாது. நவீனத் தொழில்நுட்பத்துடன் இன்றைய ரசிகர்களின் பார்வைக்காக எடுக்கப்பட்ட பொழுதுபோக்குச் சினிமாவாகவே இருக்கமுடியும். அப்போதுதான் அந்த நோக்கம் நிறைவேறும்.
தமிழ்நாட்டில் சோழப்பேரரசு என ஒன்று இருந்தது என்பதையே வட இந்தியர்களிடம் சொல்ல முடியாது. எவருக்குமே தெரியாது. அவர்கள் இந்தியாவிலிருந்த பேரரசுகள் எல்லாமே மௌரியர், குப்தர் என்று சொல்வார்கள். வட இந்தியாதான் தென்னிந்தியாவை எல்லா காலத்திலுமே ஆட்சி செய்தது என்று சொல்வார்கள். பெரிய அறிஞர்கள், ஐஏஎஸ் காரர்கள்கூட ஆத்மார்த்தமாக நம்பி அதைச் சொல்வதை கேட்டிருக்கிறேன்.நான் ராணுவத்தில் இருந்த காலத்தில் ராஜராஜனை தெரிந்த ஒரு வட இந்தியரைக் கண்டதே இல்லை.
நம்முடைய புலிக்கொடியை இந்தியா முழுக்க வாழும் இளைய தலைமுறை பார்க்கவேண்டும். சோழர்களின் வெற்றியை அவர்கள் அறியவேண்டும்.ஒரு நல்ல கமர்ஷியல் சினிமா அதைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதுபோல வேறெந்த ஊடகமும் செய்யமுடியாது.
அதற்கு நாம் நம் பாரம்பரியத்தை, தமிழ்ப்பெருமையை தூக்கிப்பிடிக்கவேண்டும். நாம் அதைக் கொண்டாடவேண்டும். அந்தச் சினிமாவின் நோக்கமென்ன, அந்த சினிமா எப்படி இருக்கமுடியும் என்பதெல்லாம் நமக்கு கொஞ்சமாவது தெரிந்திருக்கவேண்டும். அற்பமான காழ்ப்புகளால் இத்தகைய பெரிய முயற்சிகளை எதிர்ப்பதும் அறிவுஜீவி என்று காட்டுவதற்காக மட்டம் தட்டுவதும் நமக்கே நாம் புழுதிவாசி பூசிக்கொள்வதுபோல.
இதை ஏன் சொல்கிறேன் என்றால் சமூகவலைத்தளங்களில் பரவும் காழ்ப்பைக் கண்டுதான். யாரோ ஒருசிலர் ஒரு ஃபேன் மேட் டிரையிலர் செய்து வெளியிட்டிருந்தனர். வெறும் ஆர்வம். அதில் வேறுபடங்களிலுள்ள கிளிப்பிங் சிலவற்றை சேர்த்திருந்தனர். அதில் விக்ரம் முகத்தில் விபூதி இல்லை என்றும், மணிரத்தினம் இந்து மரபை அவமதிக்கிறார் என்றும் வசைபாடித்தள்ளியது ஒரு கும்பல். அது ஃபேன் மேட் டிரையிலர் என்று சொன்னபோதும் வசைதான்.
இன்னொருபக்கம் அறிவுஜீவிகள். ஒருவர் என் நண்பர். அவர் விளம்பரத்திலிருக்கும் வாளில் கைப்பிடி தப்பாக இருக்கிறது என்று முன்பு எழுதினார். நீங்கள் தொல்பொருள் ஆய்வாளரா என்று கேட்டேன். இல்லை. சாதாரண அரசு அதிகாரி. அது குத்துவாள், வீசி எறியும் வாள், அதற்கு பிடி அப்படித்தான் இருக்கும் என்று நான் விளக்கினேன். உடனே சீண்டப்பட்டு கண்டபடி பொன்னியின்செல்வனையே திட்ட ஆரம்பித்துவிட்டார். நாம் வெளிவந்தாகவேண்டியது இந்த மனநிலையில் இருந்துதான்.
அழகர் ஆறுமுகம்