குமரியின் பயணம் – கடிதங்கள்

குமரித்துறைவி வாங்க

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!  நீங்கள் மேலும் மேலும் சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள் என்று எழுதிக்கொண்டே இருக்கவும். நாங்களும் அதை வாசித்தவண்ணமே இருக்கிறோம்.

இரண்டு வாசிப்பு ஜாம்பவான்கள் (அரங்கசாமி, ஹூஸ்டன் சிவா) சொன்னபிறகு, ‘குமரித்துறைவி’ குறுநாவலை, நானும் ஒரே மூச்சில் வாசிப்பது என்று வாசித்துவிட்டேன். அலுவலகம் இருக்கும் நாட்களில் கூட, இரவு ஏழு அல்லது எட்டு மணிக்கு மேல் ஆரம்பித்து, 12 முதல் 15 வெண்முரசு அத்தியாயங்களை வாசித்துவிடுவேன். அந்த தைரியத்தில், மகன் ஜெய், ப்ளாக் பீன்ஸ், சீஸ், குவாக்காமொலி வைத்து மடித்துக்கொடுத்த கெஸடியாவை இரவுணவாக சாப்பிட்டுவிட்டு, எட்டு மணிக்கு, குமரித்துறைவி வாசிக்க ஆரம்பித்தேன்.

பதினொன்றரை மணிக்கு முடித்துவிட்டேன். முதல் பத்தியில் கொஞ்சம் மயங்கி நின்றேன். கதை சொல்லியின் நீண்ட பெயரை, தென்குளம் கட்டளைக்காரன் வீரமார்த்தாண்டன் உதயன் செண்பகராமன் என இரண்டு முறை வாய்விட்டு சொல்லிப் பார்த்தேன். பதினெட்டு படைநிலைகளில் முதல்நின்றனர், பட்டனர், வென்றனர் என்ற வரியில் ‘பட்டனர்’ வார்த்தையை ரசித்தேன். சரி, இந்த வேகத்தில் போனால், நாளைக்கு, ஹூஸ்டன் சிவா போன் செய்து, ‘என்ன ஒரே மூச்சில் வாசித்தீர்களா என்று கேட்டால், தலையைச் சொறிய வேண்டும் என்று பரபரவென்று வாசிக்க ஆரம்பித்துவிட்டேன்.

எங்கள் வீட்டுக் கல்யாணங்களில், எனது நிலைமை, தென்குளம் கட்டளைக்காரன் வீரமார்த்தாண்டன் உதயன் செண்பகராமனின் நிலைமைதான். நான்தான் பொறுப்பேற்று நடத்த வேண்டும். கடந்த இருபது அல்லது இருபத்தைந்து வருடங்களாக எந்தக் கல்யாணத்தையும் விருந்தினராக கலந்துகொண்டு ரசித்ததில்லை. ஆதலால், வீரமார்த்தாண்டன் செய்து வைத்த குமரித்துறைவியின் கல்யாணத்தை ஆற அமர உட்கார்ந்து கண்குளிர பார்த்தேன்.  எனது பெரிய சகோதரிகளின் கல்யாணத்தின்பொழுது நான் ஐந்தாம் வகுப்பில் இருந்தேன். இந்தக் கல்யாணத்தில் இருந்த பிள்ளையாருக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லை. அப்பொழுது நான் தொந்தியுள்ள குண்டுப்பையனாக மகிழ்வு நிறைந்தவனாக இருந்தேன். இப்பொழுது அந்த மஹாராஜாவைப் போல ஒரு தந்தையாக.

மங்கலநாண் இட்டபின் அவர் தன் மகளைத் தொடமுடியாது. ஆகவே அது அவர் கடைசியாக அவளைத் தொடுவது  – இந்த இடத்தில் என் மனம் இன்னொரு முறை நகர மறுத்தது. மகள் சிந்துவை கைபிடித்து கொடுத்த நாள் வந்து போனது. எங்கள் மாப்பிள்ளை கார்த்திக்  நல்லவர்தான். கொஞ்சம் அவர் மீது கோபம் வந்தது. திரும்பவும் மனதை ஒரு நிலைப் படுத்தி, குறும்புக்கார மீனாட்சியின் கல்யாணத்தில் பார்வையாளனாக மட்டும் இருந்து, மணமகன் வீடு, மணமகள் வீடு என்று வேறுபாடு பார்க்காமல், சுந்தரேஸ்வரர் கைகாட்ட,  ‘முளைத்தானை, எல்லார்க்கும் முன்னே தோன்றி’ என உரக்கப் பாடினேன். மகாராஜா ஆணையிட, “ராஜமாதங்கி சியாமளே! மகாசாகர ஹரிதவர்ணே!’ என்று மணமகளுக்குப் பாடிய பாணர்களுடன் இணைந்துகொண்டேன். ஊட்டுப்புரை நிரை ஒன்றில் நின்று காத்திருந்து எனக்கு வேண்டியதை கேட்டு வாங்கி சாப்பிட்டேன். நன்றாக சாப்பிட்டாலும் உறங்காமல் பார்த்துக்கொண்டேன். அப்பொழுதுதானே, மீனாட்சி, சுந்தரேஸ்வரருடன் கிளம்பிச் செல்லும்பொழுது வழி அனுப்பிவைக்கமுடியும்.

ஒரு சரித்திர நிகழ்வை, பின்னணியை எடுத்துக்கொண்டு, எல்லோரும் கண்ணீர் மல்கப் பார்க்கும் ஒரு அழகிய கல்யாணத்தை , எந்தச் செலவும் இல்லாமல், தங்கள் சீரிய எழுத்தால் மட்டும் அமோகமாக நடத்தியுள்ளீர்கள். கல்யாணம் ஆன பெண்கள், தங்கள் கல்யாண ஆல்பத்தையும், காணொளியையும் மீண்டும் மீண்டும் பார்ப்பார்கள். ஆண்கள், அதைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள். ஆனால், இந்தக் ‘குமரித்துறைவி’-யின் கல்யாணத்தை ஆனந்தக் கண்ணீருடன் பார்த்ததாக மூன்று ஆண்கள் இதுவரை சொல்லிவிட்டார்கள்.

அன்புடன்,

ஆஸ்டின் சௌந்தர்

***

அன்புள்ள ஜெ

வெண்முரசு உங்கள் மகள் சொல்லி நீங்கள் எழுதியது. உங்கள் அன்னையின் சொல்.

எழுத்தாளனாக எழுத்து வழிந்து வெளியே போவதும் ஒரு வைரவளையல் மட்டும் மீதியிருப்பதும், மீண்டும் அதிலிருந்து எல்லாம் முளைப்பதும் அருள் தான். ஒருவிதத்தில் விஷ்ணுபுரம் நீலியிலிருந்தும் இதையே எழுதுகிறீர்கள் எனத் தோன்றுகிறது. கற்பனை செய்யச் செய்ய அந்தப் ‘பிழை’ என்ற அம்சம் விரிந்து விரிந்து பிரபஞ்ச தரிசனமாகிறது.

(உண்மையில் வெண்முரசு வெளியான இறுதிநாட்களில் உங்களுக்கு ஏற்பட்ட சம்பவத்தை சற்று பெரிய சங்கிலியில் தொடுத்து ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும் இக்கதை உதவுகிறது)

எது எப்படியோ, உங்கள் கோட்டைக்கு கதவும் இல்லை, காவலும் இல்லை. எங்கள் நற்பேறு அது.

தந்தையாக அணுகியும், செயல்பாட்டாளனாக சற்று அகன்று நின்றும் இக்கதையை படிக்கலாம். வெவ்வேறு வாசிப்புக்கோணங்களை தானே உருவாக்கித்தருகிறது.

குமரிக்கன்னி பிறந்தவீட்டிலிருந்து மதுரைக்கு மணமாகி சென்றாள் என்பது பண்பாட்டு வரலாற்றில் மெகா கதையாடல். அதன் தத்துவ அர்த்தங்கள். அங்கிருந்து திரும்பி கண்ணகிக்கும் அவள் மலைநாட்டிற்கு வந்ததும் சொல்லமுடியலாம் என பலப்பல கற்பனைச் சாத்தியங்கள்

அன்புடன்

மதுசூதனன் சம்பத்

***

 

ஜெயமோகன் மின்நூல்கள் வாங்க

 

முந்தைய கட்டுரைதிருவண்ணாமலையில் பாராட்டுவிழா
அடுத்த கட்டுரைஇன்னும் ஒரு கேள்வி