பொன்னியின் செல்வனின் முதல் விளம்பர அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. இந்தப்படம் எத்தனை கட்டங்களைக் கடந்து வந்துசேர்ந்திருக்கிறது என்னும் திகைப்பே இந்த தருணத்தில் ஏற்படுகிறது.
பொன்னியின் செல்வனை சினிமாவாக ஆக்கும் எண்ணம் பலருக்கு இருந்திருக்கிறது. எம்.ஜி.ஆர் அதன் உரிமையை வாங்கினார் என்றும், கமல் முயன்றார் என்றும் சொல்லப்படுகிறது. மணிரத்னம் இளமையிலேயே படமாக ஆக்க விரும்பிய கதைகளில் ஒன்று.
ஆனால் கல்கி இதை படமாக்க முடியுமென நினைக்கவில்லை. இதன் அமைப்பு பெரியது, எங்கும் மையம்கொள்ளாமல் ஓடிக்கொண்டிருப்பது கதை. ஆகவே அவர் சிவகாமியின் சபதம் நாவலைத்தான் சினிமாவாக ஆக்கவேண்டுமென நினைத்தார். எஸ்.எஸ்.வாசனிடம் அதற்காக கோரிக்கையும் வைத்தார் என்கிறார்கள். அது நிகழவில்லை.
மணிரத்னம் முதலில் என்னை அணுகியதே இதன் திரைக்கதைக்காகத்தான். 2011 மார்ச் மாதம் இதை எழுதுவதற்காக பிரம்மாவரம் அருகே உள்ள எலமஞ்சிலி லங்கா என்னும் சிற்றூரில், கோதாவரிக்கரையில் ஆற்றுப்பெருக்கை பார்க்கும்படி அமைந்த விருந்தினர் மாளிகையில் சென்று தங்கியிருந்தேன்.ஒருமாதம் தங்கி இதை எழுதினேன். அன்று மணிரத்னத்தின் உதவி இயக்குநராக இருந்த தனா எனக்கு உதவியாளராக வந்தார். அவர் பின்னாளில் படைவீரன், தேஹி,வானம் கொட்டட்டும் போன்ற படங்களை இயக்கினார்.
எலமஞ்சிலி லங்கா ஓர் அழகான சிற்றூர். ஆந்திரமாநிலத்தின் வளம் மிக்க பகுதி. எல்லையில்லாதவைபோல விரிந்த தென்னந்தோப்புக்கள். என் விருந்தினர் மாளிகையும் தென்னந்தோப்புகள் நடுவே பன்னிரண்டு அடி உயரமான தூண்கள்மேல் அமைந்திருந்தது. ஐந்து கிலோமீட்டர் அகலத்தில் நீர் பெருகிச்செல்லும் கோதாவரியைப் பார்த்தபடி திறந்திருக்கும் மிகப்பெரிய உப்பரிகை. அதில் அமர்ந்து எழுதுவேன்.
அங்கே எல்லா நண்பர்களும் வந்து கோதையில் நீந்திக் கொண்டாடியிருக்கிறார்கள். யுவன் சந்திரசேகர் வந்து ஒரு வாரகாலம் உடன் தங்கியிருந்தான். விஷ்ணுபுரம் நண்பர்கள் வந்தனர். ஒவ்வொரு நாளும் படகுச்சவாரி. மீன்சாப்பாடு.
பின்னர் அந்த திட்டம் கைவிடப்பட்டது. ஆலயங்களில் படப்பிடிப்பு நடத்தமுடியாத நிலைதான் காரணம். வரைகலை வளர்ச்சியடைந்தபின் மீண்டும் அந்த கனவை மணிரத்னம் கையிலெடுத்தார். நடுவே நோயச்சக் காலகட்டம். ஆனால் விடாப்பிடியாக உள உறுதியுடன் எண்பது சத படப்பிடிப்பை முடித்துவிட்டார். இரண்டு மூன்றுமணிநேரப் படங்கள். இன்னும் ஓராண்டில் படம் அரங்குகளுக்கு வரக்கூடும்.
ஏறத்தாழ பத்தாண்டுகள். ஒரு பெருங்கனவுடன் சேர்ந்தே வந்திருக்கிறேன் என்னும் உணர்வை அந்த விளம்பரம் அளிக்கிறது. கோதையின் மடியில் அமர்ந்து பொன்னியைப் பற்றி எழுதிய அந்நாள் நினைவில் எழுகிறது.