கல்லின் காலத்தினூடாக ஒரு நாள்- கடலூர் சீனு

இனிய ஜெயம்

பேருந்துகளை அவிழ்த்து விட்டு, கோயில்களையும் தொல்லியல் களங்களையும் திறந்து விட்டு விட்டதால், வார இறுதிகளில் மீண்டும் பயணம் துவங்கி விட்டேன். சென்ற சனி ஞாயிறு போட்ட பயண திட்டம் அடுத்த வாரத்துக்கு மாறி விட்டதால், இந்த வாரத்தை அப்படியெல்லாம் விட்டு விடக்கூடாது என்று முடிவு செய்து, வழியில் சில இடங்களை பார்த்தபடி செஞ்சி சிங்கவரம் வரை செல்வது குறித்து நான் போட்டு வைத்திருந்த வரைபடத்தை புதுவை தாமரைக் கண்ணனுக்கு அனுப்பி போகலாமா என்று கேட்டேன். வழக்கம் போல புதுவை மணி, தாமரைக்கண்ணன், திருமாவளவன் வந்து சேர, மணியின் காரில் ஞாயிறு காலை 7.30 கு பயணம் துவங்கியது.

பொதுவாக இந்திய நிலத்தில் தமிழ்நாட்டில் கடலூர் பகுதி மட்டும் தனித்த பருவச் சூழல் கொண்டது. எங்களுக்கு மட்டும் கோடைப் பருவம் மார்ச் 15 இல் துவங்கி ஜூலை 15 இல் முடியும். ஒரே ஆறுதல் எங்களுக்கு அக்னி நட்சத்திரம் கிடையாது. காரணம் மொத்த கோடையும் எங்களுக்கு அதுதான். ஜூலை 15 கு பின்னர்  வானம் சற்றே கனியும். இது வானம் கனியத் துவங்கி விட்ட பருவம். காலை எட்டு மணிக்கு மொத்த புதுவையும் மெல்லிய சாரல் மழையில் கூலிங் க்ளாஸ் வழியாக  பார்ப்பது போல குளிர்ந்து துலங்கியது. தாமரையும் திருமாவும் விழுப்புரம் போகும் வழியில் வந்து இணைந்து கொள்ள, “முதல்ல சாப்ட்டு போய்டலாமா” என்று தாமரை உரையாடலை துவங்க, திருமா அவர் மனைவியின் அன்பு தொல்லையை தட்ட இயலாமல் ஐந்து இட்லி சாப்பிட்டுவிட்டே கிளம்பினேன் என்றார். சென்ற பயணம் அளித்த பீதி. மொத்த நாளுக்கும் அதிகாலை துவங்கி இரவு முடிய ஒரே ஒரு தேநீர் மட்டுமே சென்ற முறை திருமாவுக்கு வழங்கப்பட்டது. சதி ஏதும் இல்லை. சூழல் அவ்வாறு அமைந்து விட்டது.

விழுப்புரம் செஞ்சி நெடுஞ்சாலையில் ஏசாலம் அருகே, (இங்கிருந்தே ஊருக்குள் உள் வழியாக மண்டகப்பட்டு, எண்ணாயிரம் சமணர் குன்று, எல்லாம் போக முடியும்) குடும்பத்தினர் கூடி நடத்தும் உணவகம் ஒன்றில்  ருசியான காலை உணவு உண்டபடியே தளவானூர் கிராமத்துக்கு வழி கேட்டோம். அருகில்தான் இருந்தது. சாரல் பொழியும் சாம்பல் வண்ண வானின் கீழ், இருண்ட செம்பு வண்ண உருண்டைப் பாறைகள் குவிந்து மலைத்தொடர் என்றான எல்லை நோக்கி, பச்சை முளைத்த  வயல் சதுரங்களுக்குள் ஆட்கள் வேலை செய்யும்  கிராமங்கள் வழியே சென்று சேர்ந்தோம்.

  1. தளவானூர் சத்ரு மல்லேஸ்வரர் குடைவரை.

பெரும் பாறையை பிணைத்து நின்றதொரு பேராலமரம். கோடி நாவுகள் கொண்டு காற்றுடன் பேசிக்கொண்டிருந்தது நானறியா மொழியில். மரம் பிணைந்த பாறைக்குப் பின்னே நீளும் ஒற்றையடிப்பாதை. எக்ரா கணக்கில் உழுது புரட்டப்பட்ட நிலத்தின் உளை சேற்றில் நடந்து ஆலமரத்தை அடைந்தோம். மரத்தின் கீழ் நிலமெங்கும் மட்கிய இலை தழைகள் மெத்தை போல் படிந்திருக்க, பாம்பு பீதியுடன் அதில் நடந்து, பெரும் பாறையை சுற்றி வந்து ஒற்றையடிப் பாதையை கண்டு பிடித்தோம். அங்கே வைத்திருக்கும் தொல்லியல் துறை பதாகையையே ஒரு புதையல் வேட்டையின் க்ளு போலத்தான் கண்டுபிடிக்க வேண்டும். தடத்தில் நடந்து பெரும் பாறைகள் சரிந்த தொடரின் இறுதிப் பாறையில் குடையப்பட்டிருந்த சத்ரு மல்லேஸ்வரர் கோயிலைக் கண்டோம்.

முதலாம் மகேந்திர பல்லவன் எழுப்பிய கோயில். இரு பக்கமும் கேஷுவல் போஸ் இல் நிற்கும் துவார பாலகர்கள். இடதுபுற துவாரபாலகன் தலை அலங்காரம் முதல் பாதம் வரை அத்தனை நளினம். இடது கை சுட்டும் பாவத்தின் பெயர் விஸ்மையா. வியப்பு. முகப்புத் தூண்கள் சென்று இணையும் விதான விளிம்பு முழுக்க, வெவ்வேறு பாவங்களில் உறைந்த கீர்த்தி முகங்கள். செறிவாக நுட்பமாக செதுக்கப்பட்ட வாயிலின் மகர தோரணம். தூண்களில் பட்டுச் சேலை எம்பிராய்டரி போன்ற பூவேலைப்பாடுகள். அதன் மேலே இறுக்கி அமைக்கப்பட்ட இரும்பு வளையங்கள். பிறந்த குழந்தையின் சுண்டுவிரலை கட்டிங் பிளேயர் கொண்டு இறுக்கியது போன்றதொரு குரூர சித்திரம்.

முக மண்டபத்துக்கு உள்ளே இடது புறம் தனி குடைவரையில், இருபுறமும் எழிலார்ந்த துவாரபாலகர்கள் நிற்க சத்ரு மல்லேஸ்வரர் கருவறை. உள்ளே செல்ல முடியாது. ஊருக்குள் சிலர் தனியே நந்தி செய்து கோவிலுக்குள் கொண்டு வந்து வைத்து இதை ஊர் வழிபாட்டு கோவிலாக மாற்ற முயற்சிக்க, அரசு தலையிட்டு இரும்பு வளையங்கள் அறைந்து மரக்கதவு போட்டு குடைவரையை மூடி வைத்திருக்கிறது. சற்று நேரம் அங்கேயே இருந்து ஒவ்வொன்றையும் தடவிப் பார்த்துக் கொண்டிருந்தோம். தொல்லியல் துறை வைத்திருந்த வரலாற்று குறிப்புப் பலகை கிட்டத்தட்ட அழிந்த நிலையில் நிற்க, அதன் மேல் படுத்திருந்த ஆட்டை விரட்டிவிட்டு தாமரை அந்தப் பலகை எழுத்துக்களை கிட்டத்தட்ட ஆதித் தமிழ்க் கல்வெட்டு ஒன்றை படிப்பது போல விரலோட்டிப் படித்து வரலாற்றை இயம்பினார். சற்று நேரம் அங்கே அமர்ந்திருந்து விட்டு வேலிக்கு வெளியே அம்போவென குந்திக் கிடக்கும் நந்தி தேவரைக் கடந்து, குடைவரைப் பாறையை சுற்றிக்கொண்டு அடுத்த இலக்கினை நோக்கி பயணித்தோம்.

  1. தளவானூர் சமணர் குன்று.

அடுத்த இலக்கு சத்ர மல்லேஸ்வரம் கோவிலுக்கு பின்னால் குன்றேறி காண வேண்டிய சமணர் படுகை. பொதுவாக நாம் பள்ளிப் பாடம் வழியே  பல்லவர்கள் களப்பிரர்களை ‘விரட்டி அடித்த’  கதையை மட்டுமே அறிந்திருக்கிறோம். அவர்கள் உருவாக்க முனைந்த கலாச்சார சங்கிரஹ முயற்சிகள் கலை வரலாற்று ஓட்டத்தில் பெரிதாக பேசப்படுவது இல்லை. காஞ்சிபுரம் துவங்கி தென்னாற்காடு வரை சமணமும் பௌத்தமும் செழித்த இடத்தில் எல்லாம், வைணவ, சைவ, சாக்த மரபுகளுக்கான வழிபாட்டு இடங்களை அமைத்தவர் பல்லவர்கள்.  இங்கேயே செஞ்சிக்கு அருகே 15 கி மி குள் தொண்டூர் என்றொரு சமண மையம் உண்டு. அதன் அருகே 18 அடி நீள அனந்த சயணப் பெருமாள் புடைப்பு சிலை உண்டு.

பல்லவர் கலை. வெறுப்பு நிலை சார்பு நிலை (எல்லாமே உண்மையான தரவுகள்தான்) மைய வரலாற்று உருவாக்கத்துக்கு வெளியே விளிம்பில் கிடக்கிறது இத்தகு நேர் நிலை வரலாறு. ஸ்டாலின் ராஜாங்கம் அவர்களின் சொல்லை கடன் வாங்கினால் ‘உள் மெய்’ வரலாறு. ஒரு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை, சமுக உள் கட்டமைப்பு இரண்டிலும் முதன்மை பங்கு வகிக்கும் வணிக குலங்கள், அவற்றால் புறக்கப்பட்ட ஒரு மார்க்கம் அதை எந்த அரசனாலும் முந்தைய அரசுடன் சேர்த்து விரட்டி ஒடுக்கி இருக்க முடியவே முடியாது. பாரத நிலத்தின் பல நூறு ஆண்டுகால பண்பாட்டு அசைவின் மைய விசை என்பது சங்கிரஹம் எனும் அடிப்படையே. அதன் சான்றே இங்கே பல நூறு ஆண்டுகள் இயங்கிய சமண மையத்துக்கு அருகே மகேந்திரன் எடுப்பித்த இந்த சத்ரு மல்லேஸ்வரம் கோவில்.

எங்களுடன் கோவிலில் முன்பே வந்து நின்றிருந்த நால்வர் இணைந்து கொண்டனர். உண்மையாகவே முதல் அடுக்கில்  துல்லியமான உருண்டை வடிவப் பாறைகளை ஏறிக் கடக்க வேண்டும். மென் மழையில் மேலும் வழுக்க எல்லோரும் பல்லி டெக்னீக்கில் மேலே ஏறினோம். அடுத்த உயர்வில் உருண்டைப் பாறையின் மத்தியில் ஒரு பாதம் மட்டும் வைக்க இயன்ற படிக்கட்டுகள். அதில் உயர்ந்து,  முத்தமிட்டுக்கொள்ளும் இரண்டு பாறைகளின் இடுக்குக்குள் நுழைந்து வலது புறம் திரும்பினால், ஆறு ஏழு பேர் குந்தி அமரும் வண்ணம், ( மேலே கீழே என எங்கும் பெயின்ட் கொண்டு யார் யாருடைய இதயத்தில் அம்பாக துளைத்து துன்புறுத்திக் கொண்டிருக்கிறார்கள் எனும் வரலாற்றுத் குறிப்புகள்) பாறை மேல் அமர்ந்த மற்றொரு பாறையின் கீழ்ப்பகுதி இடைவெளி உருவாக்கும் பால்கனி. மொத்தமே ஐந்தடி அகலம் உயரம். தப்பினால் மண்டை சென்று மோதும் முதல் பாறையே 100 அடிக்கு கீழேதான்.

அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் அறிய நேர்ந்தது, எங்களுடன் வந்தவர் ஒரு வில்லிசைக் கலைஞர். ஊர் உத்ரமேரூர். பெயர் முருகன். அவரும் முருக உபாசகர். இன்னும் வீடுகளுக்கு கொண்டு சென்று ஜவுளி விற்கும் சிறுபான்மை வணிகர்களில் ஒருவர். எதையேனும் இசை மீட்டி வாசித்து பாடும்  தனது ஆர்வத்தால் அவரே சென்று கற்றுக் கொண்டது வில்லிசை. அவரை அவரது குரு பாரதி கண்டெடுத்து பாரதம் வில்லிசைக்க கற்றுத் தந்து இதில் ஆற்றுப்படுத்தி இருக்கிறார். பத்து வருடமாக பாரத வில்லிசை இசைத்துக் கொண்டிருக்கிறார்.

இங்கே வட ஆற்காடு பகுதிகளில் இந்த மாதம் துவங்கி மாதம் விட்டு மாதம் அடுத்தடுத்து திரௌபதி அம்மன் கோவில்களில் விழா நடக்கும். எல்லாவற்றிலும் 10 நாள் 18 நாள் வில்லிசைக் கச்சேரி உண்டு. அத்தகு கச்சேரி கலைஞர்கள் பலரில் இவரும் ஒருவர். தனது மகன்கள் மூவரில் கடைக்குட்டியை இதில் இறக்கிவிடப் போகிறார். அவர் மகன் அவருடனே அமர்ந்து அவரையே நெருங்கி கவனித்துக்கொண்டு இருந்தான். தாமரை  சும்மா ஒரு நேர்காணல் போல கேட்க அவர் சொன்னவை இவை. சந்தோஷமா இருக்கேன் சார் மொத்தத்துல என்றார். பொதுவாக பாரத கூத்துக்கள் அது சார்ந்த நாட்டார் கலைகள் எல்லாம் முதன் முதலாக அமைப்பு ரீதியாக ஊக்குவிக்கப்பட்டது பல்லவர் காலத்தில்தான்.

அங்கே துவங்கி இதோ இன்று 2021 வரை அறுபடாது ஓடிக்கொண்டிக்கிறது அந்த அந்தர்வாகினி.  சுதந்திரம் வாங்கியதில் துவங்கி இந்தியா முழுக்க நிகழ்ந்த நவீனமாதல் அதன் தமிழ்நாட்டுத் தாக்கம்,  தமிழ்நாட்டில் நவீனத்துவம் என  நிகழ்ந்த பெரியாரிய பகுத்தறிவு, எல்லாம் கூடி நிகழ்த்திய நேர்நிலை அம்சங்களுக்கு இணையாகவே அவை நிகழ்த்திய சிதைவுகளும் அதிகம். இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக நீடிக்கும் நமது பண்பாட்டு அசைவின் முக்கிய கண்ணிகளை அது சிதைத்தது. நமது வேருக்கு நாமே நஞ்சு பெய்யும் அந்த நிலையை தீவிர இலக்கியம் உள்ளிட்ட, கலை பண்பாட்டு ஆளுமைகளும் ஆதரிக்கவே செய்தனர். நவீன தத்துவங்களால், தீவிர இலக்கியத்தால்  மறுதலிக்கப்பட்டு,  அரசு அமைப்புகளால் முற்றிலும் கைவிடப்பட்டு, கொள்ளுவன கொண்டு தள்ளுவன தள்ளி எனும் ஆக்கப்பூர்வ விமர்சன உரையாடலே நிகழாமல், நமது பண்பாட்டு வெளியின் அடிப்படை அலகுகள் கைவிடப் பட்டது.

இதோ இந்த பாரதி குரு, முருகன் இவர்களை போல பெயர் வெளியே தெரியா எவர் எவரோதான் இன்று உண்மையில் நமது பண்பாட்டின் காவலர்கள். “வில்லுப் பாட்டா பாட க்ரிஷ்ணன் தூது எனக்கு ரொம்ப புடிக்கும். என்னா மனுஷன் பாருங்க இந்த க்ரிஷ்ணன். மொத்த மகாபாரதத்துலயும் யார் யார் எப்படினு அவனுக்கு நல்லா தெரியும்.  நான் கூப்பிட்டா போதுங்க முருகன் ஓடோடி வருவான். பாரதம் பாடி முடிச்சா நிறைய பேரு கால்ல விழுவாங்க. நான் என்னவோ வியாசன்னு நினைச்சிக்குவாங்க. நான் அப்படியே எல்லாத்தையும் முருகன் கிட்ட குடுத்துடுவேன்” மகிழ்ச்சியும் தற்பெருமையும் பணிவும் என மாறி கொந்தளிக்கும் வெள்ளந்தி மனிதர்.

பேசிக்கொண்டிருக்கையில் பாறை மூலையில் ஓரமாக ஒரு பாம்பு வந்து உறைந்து நின்றது. முடிந்த பின்னும் அங்கேயே இருந்தது. கண்ணாடிக் குழாய் போல பளபளக்கிறது ஆகவே அது கண்ணாடி வீரியன் என்றது ஒரு தரப்பு, இல்லை அது மழையில் நனைந்து நிற்கும் காளியாங் குட்டி, மழையில் நனைந்ததால் கண்ணாடி வீரியன் போல தோற்றம் அளிக்கிறது என்றது மற்ற தரப்பு. உள்ளதே ஐந்தடி அகலம். அவர் புஸ் என்றால் ரிஃப்ளெக்ஸ் இல் இயல்பாக துள்ளினால் கூட காக்கா போல பறக்கத் துவங்கி விடுவோம். எனவே பாம்பு ஆராய்ச்சியை அங்கேயே நிறுத்திக்கொண்டு கீழே இறங்கினோம்.

இறங்குகையில் எங்களுடன் வந்த நால்வரில் இருந்த ஒரு மஞ்ச சட்டை தாமரையை பிடித்து உலுக்கி நானும் கவிஞன் தான் நான் எழுதிய கவிதையை கொஞ்சம் கேளுங்க என்றார் . முருகன் உஷார் ஆகி, “அய்யா எல்லாம் வழுக்கு பாறை கொஞ்சம் பேசாம இருந்து கவனமா இறங்குவோம்” என்று சொல்லி காப்பாற்றினார். சமதளம் வந்ததும் மீண்டும் சிக்கல் தலை தூக்கியது. ஒரே ஒரு கவிதையை கேளுங்களேன் என்று ஆரம்பித்து கவிதையை பொழிந்தார் மஞ்ச சட்ட. எல்லாம் ஸ்டாலின் அவர்கள் மீதான புகழ்க் கவிகள். மணி திகைத்து விரைந்து ஓடி காருக்குள் அமர்ந்து கிளப்பி எங்களை வர சொல்லி ஹாரன் அடித்தார். காருக்குள் தப்பி ஏறிய தாமரையை ஜன்னல் வழியே குனிந்து சார் என் கவிதை தொகுப்பு என்று மஞ்சள் நீட்ட, ” ஞான் தெலுங்காணு தமிழ் அறியில்லா” என்று தாமரை ஈனக் குரல் எழுப்ப,மணி காரை உறுமிக் கிளப்ப, தப்பி ஓடி எங்கள் அடுத்த இலக்கு நோக்கி விரைந்தோம்.

  1. பஞ்சான் பாறை.

எங்கள் அடுத்த இலக்கானது வேங்கட ரமணர் அல்லது வெங்கட் ராமர் கோவில் என்றழைக்கப்படும் நாயக்கர் கலைக்கோயில். செல்லும் வழியில் ஒரு மஞ்சள் அறுகோண பலகை கண்டு தாமரை “நில்லுங்க அங்க ஏதோ இருக்கு” என்று கூவினார். சென்று பலகையை பார்த்தோம். சேரானூர் எனும் கிராமத்தில் பஞ்சான் பாறை எனும் பாறையில் அருக ஆசிரியர் ஒருவரின் பாதச் சுவடு உண்டு என்று கண்டிருந்தது. வாங்க பாத்திருவோம் என்று காரைத் திருப்பி, தேடிச் சென்றோம். வழி கேட்க யாரும் இல்லை. குத்து மதிப்பாக இது சமணர்கள் வாழ்ந்திருக்க சாத்தியமான இடம் என்று ஒன்றை நாங்களே ஊகித்து, ஒற்றையடிப் பாதையில் பாறை கோலிகுண்டுகளின் குவியலை நோக்கி நடந்தோம்.

பாதை சென்று முடிந்த இடத்தில் ஒரு சிறிய மண்டபம். அடடா இதேதான் கண்டுபிடித்தே விட்டோம் என்றபடி தாமரை ஓடிச்சென்று பார்த்தார். அங்கே ஒன்றும் இல்லை. வெறும் மண்டபம் மட்டுமே நின்றிருந்தது. இந்த இடத்துல எதுக்கு மண்டபம் மட்டும் நிக்குது பெரிய வரலாற்று புதிரா இருக்கே என்று திருமா தாடையை தடவி யோசித்துக் கொண்டிருக்கையில், இங்க ஏதோ இருக்கு என்று தூரத்திலிருந்து மணியின் அழைப்பு கேட்க, சென்று பார்த்தோம். ஒரு பாறை. அதன் மேல் ஏதோ எழுத்துக்கள். “வ, ய, ர, உ, தமிழ் மாதிரிதான் இருக்கு” என்று வாசித்து அபிப்ராயம் சொன்னார் மணி. கல்வெட்டில் வாமனர், பத்மம் எல்லாம் இருந்தது. நிச்சயம் ஏதோ புதையல் குறிப்புதான். மீண்டும் சாலைக்கு வந்து, வழிப்போக்கர் ஒருவர் வழிகாட்ட, சேராணூர் வந்தோம்.

கீழ் மேல் ஊர்களில், கீழ் மொத்தமும் ஏசுவே வழியும் ஜீவனும் உண்மையும் சர்ச்சுமாக இருக்க, மேல் மொத்தமும் மாம்பழத்தை கார்பைட் போட்டு பழுக்கவைக்கும் முயற்சியில் இருந்தது. கிராமம் லாட வடிவ மலைப் பிறையில் முட்டு சந்து போல முடிந்தது. ஒரே ஒரு ஆடு மேய்க்கும் சிறுவன் அந்த பாத தடத்தை பார்த்திருக்கிறான். அதற்கான பாதை கைவிடப்பட்டு இருக்க   அவனுக்கு வேறு வழி சொல்லத் தெரியவில்லை. சரி இந்த ஊர்ல அந்த ஆசிரியர் இருந்திருக்கார் அந்த ஊருக்கு நாம வந்திருக்கோம் அது போதும் என்று ஒட்டுமொத்தமாக ஏக மனதாக சமாதானம் கண்டு திரும்பினோம். வழியில் மீண்டும் நிறுத்துங்க என்று கூவினார் தாமரை. இடதுபுறம் ஒரு சிறிய பாறை மேல், புதிதாக கட்டப்பட்ட சிறிய கோயில். ஒருக்கால் அந்த கோவிலுக்குள் அந்தக் கால் இருந்தால்? தாமரை சென்று பார்த்துவிட்டு வந்தார். அங்கும் கால் இல்லை. சரி போலாம் என்று அரை மனதாக தாமரை டிக்ளேர் செய்ய, வெங்கட் ராமர் கோவில் நோக்கி நகர்ந்தோம்.

  1. கோணை ராமர் கோயில்.

வழியில் கோணை எனும் ஊரைக் கடக்கையில் இடதுபுறம் மலைத்தொடர் சரிவை நோக்கி திருமா சுட்டிக்காட்டினார். அதோ கோயில் வந்திருச்சு. வெங்கட் ராமர் கோயில் இங்கா? அது செஞ்சி கோட்டை செல்லும் சாலையில் அல்லவா வரும் இங்கே எப்படி? குழம்பினேன். ஆனால் கண் முன்னால்  எழடுக்கு கோபுரத்துடன் நாயக்கர் காலக் கோயில். சரி திருப்புங்க பார்த்துடுவோம் என நான் முழங்க, கார் கோயிலை நோக்கி திரும்பியது.

தமிழ் நிலத்தின் நாயக்கர் கலையின் தலையாய அற்புதங்களில் ஒன்றான மற்றொரு நெடிதுயர்ந்த முன் மண்டபம். அதன் தூண்களை பார்த்த முதல் கணமே தெரிந்து விட்டது. புதுவை கடற்கரை காந்தி சிலையை சுற்றி நிற்கும் அதே தூண்கள். மணி இணையம் இயக்கிப் பார்த்து “ஆமாங்க அந்த சிலையை சுத்தி உள்ள தூண் எல்லாம் செஞ்சியில் இருந்து கொண்டு வந்தது அப்படித்தான் போட்ருக்கு” என்று ஆமோதித்தார். கடந்தால் எழடுக்கு ராஜ கோபுரம். வாயில் உட்சுவர்களில் மிக அழகிய சிற்ப வரிசை. கஜேந்திர வரதர். வாலி சுக்ரீவர் யுத்தம். ஏழு மரங்களை அம்பால் துளைக்கும் கோதண்ட ராமர், இன்னும் பல. இரு பக்கமும் மோகினிகள்.

கடந்தால் இன்ப அதிர்ச்சி. முற்றிலும் திகைத்து விட்டேன். ஒரு கணம் ஹம்பி நிலத்தில் நிற்கிறேன் என்றொரு உள மயக்கு. இல்லை ஹம்பியே தான். உள்ளே இடது புறம் விதானம் அற்று, தூண்கள் மட்டுமே நிற்கும் மண்டபம். ஒரே கல்லால் குடைந்து ஒரு தூண் முன்னால் இரு சிறிய தூண்கள் நிற்கும் வண்ணம், நாயக்கர் பாணி கலை அழகு, சரிந்த தூண்கள், ப்ரகாரமோ, அர்த்த மண்டபமோ, கருவறையோ அற்ற வெறும் கோயில், ஆங்காங்கே சிறிய கோபுரங்கள் கொண்ட மூலவர் அற்ற சன்னிதிகள். கோவிலை சூழ்ந்து பாறைக் குவியல்கள். கலசங்கள் சிதைந்த ராஜகோபுரம் ஆங்காங்கே செடி முளைத்து நிற்க, கோவில் களம் எங்கெங்கும் கால் வைக்கும் இடமெங்கும் நெருஞ்சி.

என்ன கோயில் யார் கட்டியது? எந்த குறிப்பும் இல்லை. பாணியைக் கொண்டு நிச்சயம் இது நாயக்கர் கோயில், உள்ளே உள்ள புடைப்பு சிற்ப வரிசை கொண்டு இது ராமர் கோயில் அல்லது பெருமாள் கோயில், கோட்டை கீழே வேங்கட ராமர் கோவிலை கட்டிய அதே முத்தியாலு நாயக்கர் (1550) தான் இதையும் கட்டி இருக்கக் கூடும். முள் குத்தியும் பொருட்டின்றி சுற்றி வந்தோம். தமிழ்நாட்டில் இப்படி ஒரு ஹம்பிக்கு இணையான கலை வெளி உண்டு என்பதையும், அதைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்பதையும் நம்பவே இயல வில்லை. சற்று நேர ஓய்வுக்குப் பின் வெளியேறி, வேங்கட ராமர் கோவிலை தேடிச்சென்றோம்.

  1. வேங்கட ராமர் கோயில்.

அக் கோயில், செஞ்சிக் கோட்டை வாயிலை கடந்து ஒரு கிலோமீட்டர் போனதும் தென்பட்டது. இந்தக் கோயிலின் அருகேதான் சக்கரைக் குளம் எனும் இடத்தில் தேசிங்கு ராஜன் இறுதியாக எரியூட்டப்பட்டார் என்கிறது வரலாற்றுக் குறிப்பு. முந்தைய கோயிலின் அதே எழில். ஏழடுக்கு கோபுரம். ஒவ்வொரு நிலையிலும் குரங்குப் பட்டாளம். வாயிலின் உட்பக்கம் இருபுறமும் ராமாவதார காட்சிகள், பாற்கடல் கடையப்படும் புரானக் கதை என வெவ்வேறு அழகிய புடைப்புச் சிற்பங்கள்.  கடந்தால், தூண்களால் ஆன காடு.

இடதுபுறம் யானை குளிக்க ஒரு குளம். ஆம் யானை குளிக்கும் குளம் என்றுதான் இணையக் குறிப்புகள் சொல்கிறது. இருண்டு குளிர்ந்த பிரகாரம். சுற்றிலும் சிறிய சிறிய மண்டபங்கள். அனைத்திலும் நாயக்கர் பாணி மூன்று கொத்து தூண்கள். கருவறை அருகே உயர்ந்த துவாரபாலக சிற்பங்கள். உள்ளே அழகிய ராமர் சீதை. வணங்கி மீண்டு கோயிலை சுற்றினோம். தாமரை உவகையில் தத்தளித்தார். என் அம்சமய்யா நீர் என எண்ணிக்கொண்டேன். மீண்டும் மீண்டும் முற்றிலும் வேறு நினைவே இன்றி, இப்போது ஹம்பியில் நிற்கிறேன் எனும் உளமயக்கே என்னை நிறைத்தது.

கருவறை முன்பான மண்டபத்தின் குளிர்ந்த தரையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தோம். பேச்சு நாயக்கர் கலை ஹம்பி என சென்று திருமாவின் வினாக்கள் வழியே இயல்பாக அந்நியர் படையெடுப்பு நோக்கி சமீபத்தில் அடிப்படைவாதம் அழித்த ஆப்கன் புத்தர்  சிலைகள் குறித்து என நகர்ந்தது. நான் பல்லிரை வழிபாடு கொண்ட அரேபிய சூழலில் கெனான் என்பதை மையமாக்கி உருவான முகமதியத்தின் துவக்கம் சார்ந்த சிறிய வரைவை சொன்னேன். கேனானில் உள்ள செய் செய்யாதே வரையறைகள் காலத்துடன் பிணைந்து. ஆகவே அதை அவ்வாறே ‘என்றும்’ நடைமுறைப் படுத்துவது என்பது என்றென்றும் காலத்துக்கு ஒவ்வாத செயலே.

ஆனால் அந்த கெனான் பேசும் மெய்மை அது மானுடப் பொதுவானது. எல்லா காலங்களுக்கும் உரியது. காலாவதி ஆன செய் செய்யாதே என்பதன் வரலாற்றுத் தடம் ஹம்பி அழிவுகள் எனில் அதன் மானுடப் பொதுவான எல்லா காலங்களுக்கு உரிய மெய்மை அதன் வெளிப்பாடுதான் பஷீர். பஷீர் இல்லாத இந்தியப் பண்பாடு நிச்சயம் குறைபாடு கொண்ட ஒன்றே. இவை போக எல்லா செய் செய்யாதேக்களையும் சீரமைக்க ஒவ்வொரு சூழலிலும் ஏதோ ஒன்று நிகழும். அப்படி நிகழும் போது ஊஞ்சல் மறுமலர்ச்சி எனும் எல்லையிலும், சூழல் மாறி செய் செய்யாதே என்பதன் அதிகாரம் அதிகரிக்கையில் ஊஞ்சல் அடிப்படை வாதம் எனும் எல்லையிலும் வந்து நிற்கும். அந்த முனைக்கும் இந்த முனைக்கும் ஆடிக்கொண்டு இருக்கும் ஊஞ்சலை எதிர்நிலை முனையில் வைத்து மட்டுமே சித்தரித்துக் காட்டுவது வேறு வகை அடிப்படைவாதம். வேறு வகை அரசியல் அது.

அரசியல் என்று கொண்டாலுமே கூட, சத்ரபதி சிவாஜியின் குதிரைப்படைக்கும் கப்பல்படைக்கும் தளபதிகள் முஸ்லிம்கள். அக்பரின் வலது கை மான்சிங் ஒரு இந்து. கலாச்சாரம் என்றும் இப்படித்தான் சுழித்தோடுகிறது. இதில் துருவப்படுத்தி ஒன்றை புரிந்து கொள்ள முயல்வது குறுகல் பார்வையை மட்டுமே அளிக்கும். இறுதியில் என் மார்க்கம் அளிக்கும் மெய்மை மட்டுமே மெய். பிற மார்க்கம் பேசும் மெய்மை எல்லாம் பொய் என்று சொல்லுவதில் வந்து முடியும் அது.  ஆக ஒற்றைப் பரிசீலித்துப் புரிந்து கொள்ள பண்பாட்டின் விரிந்த நேர்நிலை அம்சங்களில் இருந்தே துவங்க வேண்டுமே அன்றி கலாச்சார அடிப்படைவாத குறுகிய நோக்கிலிருந்தல்ல.

எனில் இத்தகு அபிரகாமிய மதங்களில் கிறிஸ்துவம் பேசும் கனானிசம் எவ்வாறு கலைகளுக்கு எதிர்வினை செய்கிறது என்று தாமரை வினவினார். நான் பாலஸ்தீனிய யூதர்களின் பின்புலம் துவங்கி கான்ஸ்தான்திநோபல் நகரில் கிறிஸ்துவம் அரச மதம் ஆவது வரை பைபிள் வளர்ந்த கதையை சொன்னேன். சமீபத்தில் பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட யூதாஸ், மக்தலேனா சுவிஷேசம் வரை. ஒப்பு நோக்க பைபிளின் செய் சேயாதே அடுக்கும், மெய்மை அடுக்கும் பிற  அபிரகாமிய கெனான்களை விட இலகுவானது. நெகிழும் தன்மையும் கொண்டது.

பைபிளின் மெய்மையின் கலைச் சான்றுகள் கி பி 4 ஆம் நூற்றாண்டு முதலே கிடைக்கிறது. ஆராவாரமான கலை நியமிக்க சிலுவைகள். பின்னர் 8,9 நூற்றாண்டு வாக்கில் சிலுவைப்பாடு எனும் கருதுகோள் உயர்ந்து, சிலுவையில் தொங்கும் ஏசு கலையில் எழுந்து வருகிறார். 10,11 களில் கன்னி மேரி கருதுகோள் வளர்ந்து அதன் மீதான கலை செழிக்கிறது. 1220 வில் கட்டப்பட்ட பிரான்சின் ஸாட்ரஸ் பேராலயம் கிறிஸ்துவ கலையின் சிகர முனைகளில் ஒன்று. கலை நோக்கில் மெய்ஞானிகிறிஸ்துவே ஒரு கவிஞர்தான். கிறிஸ்துவில் துவங்கி தால்ஸ்தோய்  கசான்ஸ்கி வரை ஒரு அறுபடாத கோடு ஒன்றை போட்டுவிட முடியும்.

இங்கும் அதேதான் சர்ச் வழியே நிகழும் செய் செய்யாதே எனும் அடிப்படைவாதமோ அரசியல் வழியாகவோ அல்ல, பண்பாட்டின் பதாகை வெளிப்பாடு எதுவோ அதன் வழியாக மட்டுமே அறியப்பட வேண்டிய ஒன்றே கிறிஸ்துவம். சமூக நோக்கில் எந்த மார்க்கம் எனினும் எந்த  நிலம் எனினும்,  அந்த மார்க்கம் அந்த நிலத்தின்   பண்பாட்டின் பதாகையாக எதை அளித்திருக்கிறதோ அதை முதன்மையாகக் கொண்டு மட்டுமே அவை சார்ந்த  பிற விசாரணைகளில் இறங்க வேண்டும். அதுவே சரியான நோக்காக இருக்க முடியும்.  அப்போதுதான் கவனித்தேன் புதிதாக நால்வர் எவரோ எங்களை சுற்றி அமர்ந்து உரையாடலை கேட்டுக்கொண்டு இருந்தனர். கண்ட கணம் உரையாடல் அறுபட, இயல்பாக கலைந்து எழுந்து அடுத்த இலக்கு நோக்கிப் பயணமானோம்.

  1. திருநாதர் குன்று.

அடுத்த இலக்கான திருநாதர் குன்று, சிங்கவரம் குன்றுக்கு இரண்டு கிலோமீட்டர் முன்பாகவே பிரியும் மண் சாலை ஒன்றின் முனையில் மஞ்சள் அறுகோண பலகை வழிகாட்டியது. மண் தடத்தில் மேடேறி நடந்து, நாற்பது ஐம்பது  படிகள் உயர வேண்டும். பாதிப் படி ஏறும்போதே தாமரை இடதுபுறம் சுட்டிக் காட்டினார். முக்குடையின் கீழ் தவமியற்றும்  மகாவீரர் புடைப்பு சிற்பம் புனைந்த பாறை இரண்டாக பிளந்து கிடந்தது.  கடந்து மேலே சென்றால் பிரம்மாண்ட உருண்டைப் பாறையில் 24 தீர்த்தங்காரர்களின் புடைப்பு சிற்பம்.

சுற்றி வந்து தேட, மணிதான் கண்டுபிடித்தார். தமிழின் முதல் ‘ஐ’ எனும் எழுத்து உள்ள கல்வெட்டு. பிராமி மருவி தமிழி எனும் நிலைக்கு எழுத்துக்கள் பரிணமித்த கல்வெட்டு வரிசைகளில் ஒன்று. பஞ்ச பரமேஷ்டிகளில் மூன்றாம் பரமேஷ்டியான சந்திர நந்தி ஐம்பத்தி ஏழு நாள் சல்லேகன நோன்பு இயற்றி அருகன் அடி சேர்ந்ததை கூறும் கல்வெட்டு.  அடுத்த தமிழ்க் கல்வெட்டு 36 நாள் நோன்பிருந்து அருகன் அடி சேர்ந்த பட்டாரகர் குறித்து கூறும் கல்வெட்டு. இங்கே விளக்கெரிய சாவா மூவா பேராடுகளை தானம் அளித்தது குறித்த மூன்றாவதை கண்டுபிடிக்க இயலவில்லை.

எண்ணென்ப எனை எழுதென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. வெறும் உயிர் அதனை ‘வாழும்’ உயிராக்க கல்விக் கண் திறந்த ஆசிரியர்கள் நிறையில் ஒருவரான சந்திர நந்தி கணக்காசிரியர் என்று சொல்கிறது குறிப்புகள். ஐம்பத்து ஏழு நாள் என்று துவங்குகிறது கல்வெட்டு. ஐ எப்போதுமே எனக்கு பிடித்த ஒலி, ஐ என்று கூவும் தருணம் வாய்க்கும் போதெல்லாம் அப்படிக் கூவ நான் தவறியதே இல்லை. ஒரே ஒரு கணம் என்றாலும் உங்களுக்குள் உள்ள குழந்தையை மலரச் செய்துவிடும் ஒரு சொல். ஐ. மெல்ல அவ்வெழுத்தில் விரலோட்டிப் பார்த்தேன். கொஞ்சம் கொடூர வடிவிலான திரிசூலம் போல இருக்கும் இதுதான்  தொல்லியல் சான்றின் படி தமிழ் லிபியில் பதிவான முதல் ஐ. மெல்ல அந்தப் பாறை மீதே தளர்ந்து அமர்ந்தோம். எதிரே கீழே நீர் ததும்பும்  பெரிய ஏரி. ஆங்காங்கே வெவ்வேறு மரங்கள் செறிந்த பச்சை சதுர வயல்கள், வீடுகள், வகிர்ந்து செல்லும் சாலை, தூரத்தில் இடதுபுறம் செஞ்சிக் கோட்டை. வலதுபுறம் சிங்கவரம் குன்று. மெல்லிய சாரல் தெளிக்கும் காற்று.

இந்தியப் பண்பாடு எனும் முழுமையில், தென்னிந்தியப் பண்பாடு தனித்துவம் கொண்ட ஒன்று என்ற புரிதல் வாசிக்க வாசிக்க வலுப்பட்டபடியே செல்கிறது. குறிப்பாக சமணம் சார்ந்து. தமிழ் நிலம் வரை பரவிய   தென்னிந்திய சமணத்துக்கு இரண்டு ஊற்று முகங்கள். முதல் ஊற்று முகம் கர்நாடகம். கி மு மூன்றில் கர்நாடகம் துவங்கி, கொங்கு மண்டலம், பாண்டி மண்டலம் வழியே குமரி வரை பரவிய ஓடை ஒன்று.  மற்ற ஓடை கி பி இரண்டு வாக்கில்  ஆந்திராவில் துவங்கி, காஞ்சிபுரம் வட ஆற்காடு விழுப்புரம் தென்னாற்காடு என்று பரவிய ஒன்று. இந்த இரண்டு ஓடைகள்தான் தென்னிந்திய குறிப்பாக சங்க காலம் துவங்கி தமிழ் நிலத்தின் கல்வி அறிவு பரவலாக்கத்தின் உந்திச் சுழி. பல சான்றுகள் உண்டு. முக்கியமான சான்று, பிராமி தமிழ் என மாற்றம் பெற்ற வரிசையும் காலமும். கி பி 6 வாக்கில்தான் கன்னட தெலுங்கு லிபிகள் கல்வெட்டில் இடம் பிடிக்கும் நிலையில், அதற்கெல்லாம் பல காலம் முந்தியே இங்கே தமிழ் கிடைக்கிறது. சமண ஆசிரியர்களே அதன் காரணம். இந்தப் புள்ளியில் வைத்து பரிசீலித்தால் சமணத்தின் தென்னிந்திய பண்பாட்டுக் கொடை மேலும் துலக்கம் பெறுகிறது.

இந்த திருநாதர் குன்று கிபி மூன்றாம் நூற்றாண்டில் இருந்து செயல்பாட்டில் உள்ள சமண மையம் என வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கிறது. சந்திர நந்தி கல்வெட்டு கிபி ஐந்தாம் நூற்றாண்டை சேர்ந்தது. பட்டாரகர் கல்வெட்டு கிபி எட்டாம் நூற்றாண்டையும், பேராடுகள் கொடை கல்வெட்டு கி பி பத்தாம் நூற்றாண்டையும் சேர்ந்தது. 700 ஆண்டுகள். களப்பிரர் காலம் முடிந்து, பல்லவர் காலம் முடிந்து, சோழர் காலம் துவங்கி விட்டது. சோழ அரசியர் எடுப்பித்த குந்தவை ஜினாலயம் போன்ற வரலாறு பின்னர் தொடர்கிறது. எப்படிப் பார்த்தாலும் தென்னிந்திய சமணத்தின் வரலாறு இதுவரை ‘பொதுவில்’ வழங்கி வந்த அழித்தொழிப்பு  ‘வரலாற்று கதைகளுக்கு’  நேரெதிராகவே இருக்கிறது என்பதன் மற்றொரு சான்று இந்த திருநாதர் குன்று.

புடைப்பு சிற்பங்கள் கொண்ட உருண்டைப் பாறையை சுற்றி வந்தோம். உருண்டை பாறையின் சரிவின் கீழ் உருவாகும் இடமே சமண துறவிகள் புழங்கும் இடம். முழுக்க சாராய பாட்டில்களை நொறுக்கி குமித்து வைத்திருந்தார்கள். வழக்கம் போல பெயின்ட் கொண்டு எழுதப்பட்ட காதல் குறிப்புகள். சற்று நேரம் சுற்றி வந்துவிட்டு இறங்கினோம். இறங்கும்போது மேலிருந்து கண்டேன். மகாவீரர் அமைந்த பாறை பிளந்து கிடந்த காரணத்தை. பாறை மேல் வரிசையாக ஆப்புகள் அறைந்து இரண்டாக உடைக்கப்பட்டிருக்கிறது. தன்னிலிருந்து வந்த அமுதூட்டிய அருகனுக்கு, தன்னிலிருந்து வந்த நஞ்சினை எவரோ பரிசளித்திருக்கிறார். உடைந்து சரிந்த மறு பாதியில், குரங்கு ஒன்று போங்கடா நீங்களும் உங்க வரலாறும் என்ற மேனிக்கு எங்களை பார்த்தபடி அமர்ந்திருந்தது. இறங்கினோம் தூரத்து சிங்கவரம் குன்று மாலை ஒளி ஏந்தி எங்களை வரவேற்று நின்றிருந்தது.

  1. சிங்கவரம் குடைவரை.

ஆலமரத்துக்கு கீழே காரை நிறுத்தி விட்டு குன்றை நிமிர்ந்து பார்த்தோம். 150 படிகள் இருக்கலாம். சிகப்பு கலரு ஜிங்குச்சா வெள்ள கலரு ஜிக்குச்சா என்று வண்ண மயம். முன்னால் கோமாளித் தனமாக ஏதோ ஒன்று நின்றிருந்தது. மாலை ஐந்து மணி. பட்டர் மூச்சிரைக்க படி எற அவர் பின்னாலேயே சென்றோம். மேலே கோயில் வளாகத்தில் ஒரு ஐம்பது பேர் வரை இருக்க, வெளிப்புறமாக கோயிலை சுற்றி வந்தோம். சொர்க்க வாசல் பார்க்க மிகப் பரிதாபமாக பப்பரப்பே என திறந்து கிடந்தது. வாசல் மேல் ஜிக்குச்சா வண்ணம் கொண்ட சிமின்டால் செய்த வினோத  சிலைகள் இரண்டு. தூரத்தில் திருநாதர் குன்று.

தொண்டூர், தளவானூர், போல சமண மையத்துக்கு அருகே அமைந்த மற்றொரு பல்லவக் கலை மேன்மை இந்த சிங்கவரம். சிம்ம விஷ்ணு  அமைத்த நகரம் ஆகவே சிம்மபுரம் என்கின்றன குறிப்புகள். மேல் சித்தாமூர் பட்டாரகர் அவர்கள் சொன்ன குறிப்பின் படி அங்கே கோயிலில் சிம்மபுர சித்தாமூர் என்றே கல்வெட்டு துவங்குகிறது. காஞ்சி அளவே பல்லவர்களின் முக்கிய கேந்திரமாக இருந்திருக்கிறது சிம்மவரம். இந்தக் கோயிலை எழுப்பியவர் சிம்ம விஷ்ணுவா அல்லது  அவர் மகனா பேரனா என்பதில் இன்னும் ஆய்வாளர்கள் மத்தியில் தள்ளுமுள்ளு தீரவில்லை. தேசிங்கு ராஜா போருக்கு செல்லும்போதெல்லாம் இந்த கோயிலின் ரங்கநாதரை வணங்கி விட்டே செல்வார் என்பது இந்த கோயில் சார்ந்த பிரபல கதைகளில் ஒன்று. நானறிந்து தேஜ் சிங் ஒரே ஒரு சண்டைதான் போட்டிருக்கிறார் ஆற்காடு நவாப் சதகத்துல்லா கானுடன். ( தேசிங்கு ராஜா வீரம், அவரது நீல வேணி குதிரை இவர்களை பேசிய அளவு, அவருக்கு துணை நின்ற முகமதுகானை பேசாமல் ஹிஸ்டரி மௌனித்து விட்டது ஏனோ) முடிவில் வீர மரணம் எய்துகிறார். இங்கே ரங்கநாதர் அருள் எங்கே வந்ததோ தெரியவில்லை.

சிந்தனைகளை துண்டித்தது படார் என கோவில் வாசல் உள்ளிருந்து திறந்து கொள்ளும் ஓசை. எல்லோரும் உள்ளே சென்றோம். நுழைந்ததும் கோவிந்தராஜப் பெருமாள் சன்னதி.  கடந்து வலதுபுறம் திரும்பி, இடது புறம் திரும்பினால் ரங்கநாயகித் தாயார் சன்னதி. பட்டர் தீபாராதனை காட்டினார். உள்ளே ரங்கநாயகிக்கு மிக பின்னால், பாறையில் குடையப்பட்ட பல்லவப் பேரெழில் துர்க்கை. நான்கு கரம். மேல் கரத்தில் சங்கு சக்கரம். மகிஷன் தலை மேல் மிதித்து ஒயிலாக நின்றிருந்தாள் முகத்தில் குருநகை துலங்க. சேலை கட்டி, இடை வரை துவளும் ஆரங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தாள் அன்னை. சிறிய இடம். கூட்டம். வெகு நேரம் நிற்க வகை இல்லை. மனம் இன்றி துர்க்கையை பிரிந்து, அரங்கன் சன்னதி நோக்கி சென்றோம்.

சந்நிதி திறக்க வரும் பட்டர் பின்னால் ஓடிப்போய் இணைந்து கொண்டேன். சந்நிதி திறந்ததும் உள்ளே ஓடிய முதல் பக்தன் நான்தான். ஓடிப்போய் பெருமாள் தலை பக்கம் நின்ற பிறகே ஆசுவாசம் கொண்டேன். இனிமேல் என் பின்னால் என்ன நிகழ்ந்தால் எனக்கென்ன. ஆசுவாசம் கண்டு, ரங்கநாதர் முகம் கண்டேன். எப்போதும் போலவே உள்ளே கொதிக்கும் எண்ணங்களை அடக்கி, சொல்லழிக்கும் எழில் மேன்மை. கரியதன் பேரெழில். இது விளிம்புகள் நிலவொளி கொண்டு மின்னும் கருமை அல்ல, ஒளி அனைத்தையும் தன் குணம் இழக்கச் செய்யும் கருமை. எட்டு அடி உயர இருபத்தி நாலு அடி நீள குடைவரையில் பதினெட்டு அடி நீளத்தில் மல்லாந்த திரு மேனி. முன்னே இரண்டு குடைவரை தூண்கள். கரியவன் மேனியை, மணிமுடி, கெளஸ்த்துபம், ஸ்ரீ பாதம் என்று பகுக்கும் தூண்கள். ஐந்து தலை அரவத்தில் யோக நித்திரையில் கரியவன். கேசாதி பாதம் அவன் எழில் கண்டு நீண்ட நேரம் அங்கேயே கிறங்கி நின்றேன். போதும். எங்கேனும் நிறுத்தி வெளியேறித்தானே ஆக வேண்டும். வெளியேறினேன்.

வெளியே மண்டபத்தில் நண்பர்கள் கூட, தாமரை பல்லவக் கலை மேன்மைகள் குறித்து ஒரு சிற்றுரை நிகழ்த்தினார். குறிப்பாக இக் கோயிலின் மூர்த்தி சார்ந்து. பெருமாள் நித்திரையில் இருக்கிறார். அவர் உள்ளது யோக நித்திரையில் என்று அவரது இடக்கை யோக முத்திரை சொல்கிறது. தேவ ரிஷி பெருமாள் காதோரம் எதையோ சொல்கிறார். எதை? மது கைடப்பர் யோக நித்திரையில் உள்ள பெருமாளை  தாக்க வருவதை. பெருமாளின் எல்லா ஆயுதங்களும் மது கைடபரை துரத்துகிறது. அலறி ஓடுகிறார்கள் மது கைடபர். பெருமாளை சுற்றிலும் ஏகப்பட்ட அசைவுகள் ஒரே அல்லோல கல்லோலம். பெருமாளோ அசைவின்றி மோனத்தில். அவர் சொல்லச் சொல்ல கண்டவை யாவும் உள்ளே பெருகின. இத்தகு அரங்கநாதர் படிமைகளில் உச்ச அழகு கொண்டது திரு மெய்யம் அரங்க நாதர் என்றார் தாமரை.

அடுத்த பெருங்கூட்டம் உள்ளே வர நாங்கள் வெளியேறினோம். மீண்டு ஊர் திரும்பும் வழி. எல்லோருமே மௌனமாகி இருந்தோம். ஓராண்டு வாழ்வை ஒரு நாளில் வாழ்ந்து தீர்த்து விட்டதைப் போல உவகையும் ஆயாசமும். வழியில்  அப்பம்பட்டு எனும் இடத்தில் தேநீர் அருந்த நிறுத்தினோம். அங்கே மாலை மலர் புகழ் நூர் சுவீட் ஸ்ட்டாலில், தமிழகம் புகழ் அப்பம்பட்டு முட்டை மிட்டாய் எனும் ஐட்டத்தை கண்டோம். போடு ஒரு கால்கிலோ என உத்தரவிட்டார் தாமரை. அதன் சுவை அடா அடா. ஒரு வேளை காலைக்குப் பிறகு எதையுமே சாப்பிடாமல் இருந்தால் இப்படித்தான் ருசிக்குமோ? விரல்களை நக்கிக்கொண்டே தாமரை “நாளைக்கு…” என்று எதையோ சொல்லத் தொடங்க, “வேண்டாம்… இன்னும் கொஞ்ச நேரம் இன்னிக்கி லேயே இருப்போம்” என்றார் மணி.

இன்று. எத்தனை இனிமையான இன்று. உள்ளங்காலெல்லாம் நெருஞ்சியின் குறுகுறுப்பு. நாவெல்லாம் முட்டை மிட்டாயின் தேன் சுவை. மனமெல்லாம் நில விரிவும், குன்றுச் சரிவுகளும் ஏரிகளும், யாருமற்ற ப்ரகாரங்களும், கடவுளும் நீங்கிய கோயில்களும், கரியவனின் எழிலும், அருகர்களின் கருணையின் தொடுகையும், இனி என்றும் எண்ண எண்ணப் பெருகப் போகும் இனிய நினைவுகளின் துவக்கமும். ஆம் மணி சொன்னது சரிதான். இன்னும் கொஞ்சநேரம் இன்றிலேயே இருக்கத்தான் தோன்றுகிறது.

கடலூர் சீனு

ஜெயமோகன் நூல்கள் வாங்க

வடிவமைப்பு கீதா செந்தில்குமார்
முந்தைய கட்டுரைஒரு பேரிலக்கியம், கடிதம்
அடுத்த கட்டுரைசுக்கிரி வாரச்சந்திப்பு குழுமம்,நூறாவது அமர்வு