இந்திய இலக்கிய வரைபடம்
அன்புள்ள ஜெ
இந்திய இலக்கிய வரைபடம் ஓர் அருமையான கட்டுரை. நான் ஆட்சிப்பணிக்கு தயாரித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு உங்கள் தளம் மிகமிக உதவியானது. இலக்கியம், பண்பாடு பற்றிய விஷயங்கள் வெறும் தகவல்களாக இல்லாமல் விவாதமாகவே இதில் வெளிவருகின்றன. ஆகவே இவற்றில் படித்தவை மறப்பதே இல்லை.
இந்திய இலக்கியத்தைப் பற்றிய ஓர் ஒட்டுமொத்தச் சித்திரத்தை இந்த கட்டுரை சுருக்கமாக் அளித்துள்ளது. அதிலுள்ள படங்களுடன் அந்த கட்டுரையை அப்படியே எப்போதுவேண்டுமென்றாலும் நினைவில் இருந்து எடுத்துவிடலாம் என்று தோன்றுகிறது
சிவப்பிரியா
***
அன்புள்ள ஜெ,
இந்திய இலக்கிய வரைபடத்தில் தமிழிலிருந்து நீங்கள் அளித்துள்ள பெயர்கள் பாரதி புதுமைப்பித்தன் ஜெயகாந்தன். மற்ற எந்த எழுத்தாளர்களையும் வெளியே எவருக்குமே தெரியாது. அகிலன் ஞானபீடப்பரிசு பெற்றார். ஆனால் அவரை இந்திய அளவில் எவருமே வாசிப்பதில்லை. தேசிய அளவில் தகுதியானவர்களுக்கே பரிசுகள் செல்லவேண்டும் என்பதில் இலக்கியவிமர்கர்களும் வாசகர்களும் எந்தச் சமரசமும் செய்யக்கூடாதென்பதற்கு இந்த வரைபடமே சாட்சி
ராம்குமார் அருணாச்சலம்