பிறந்த இடம், கறந்த இடம்

காமாக்யா ஆலயம் மூலச்சிலை

அன்புள்ள ஜெ

பின்வரும் பட்டினத்தார் பாடலின் சரியான பொருள் என்ன?

சிற்றம் பலமும் சிவனும் அருகிருக்க
வெற்றம் பலம் தேடி விட்டோமே – நித்தம்
பிறந்த இடத்தைத் தேடுதே பேதை மட நெஞ்சம்
கறந்த இடத்தை நாடுதே கண்

இதில் ”பிறந்த இடம்” என்பது மனித உயிர் பிறக்கும் இடமான பெண்குறியையும்,  ”கறந்த இடம்” என்பது குழந்தை பால் அருந்தும் தாயின் மடியையும் குறிக்கிறது. ஆனால் இணையத்தில் உலவும் போது பல்வேறு விளக்கங்கள் பக்திமார்க்கமாக இருந்து இவைகளெல்லாம் தவறான பொருள் என்று கூறுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. எனக்கு அதில் உடன்பாடில்லை, இதில் மறைப்பதற்கென்று எதுவுமில்லை. இயற்கையான ஒன்றை மறைப்பதில் அவசியமென்னா?

பாடலின் பொருள் என்னவாக இருக்கும்? ஆனால் ஒரு விளக்கம் பார்த்தேன்.

நித்தம் பிறந்த இடத்தை தேடுகிறது. நாம் பிறந்த இடம் எது? நாம் ஜீவாத்மாக்கள் அல்லவா? நாம் பரமாத்மாவிலிருந்துதானே பிறந்தோம்! நமது பேதை மனம் தினமும் நாம் பிறந்த இடமாகிய பரமாத்மாவையே தேடுகிறது எனக்கூறுகிறார்! கீழான இடத்தை நினைக்காதீர்கள்.கறந்திடத்தை நாடுதே கண்- நமது சூரியனும் சந்திரனும் ஆகும் அல்லவே?  இந்த இரு ஒளிக்களைகளும் அகமுகமாக அக்னி கலையோடு கூடும் போது நாம் நம் ஜீவனை ஒளியாக நம் முன்னே காணாலாம்! நாதத்தொனி கேட்கலாம்! பின்னர் நமக்கு இறைவன் பிரசாதமாக சகஸ்ராரத்திலிருந்து அமுதம் சொட்டும். அந்த மங்காத பால் கறக்கும் இடத்தையே நம் கண் நாடுதே என பட்டினத்தார் கூறுகிறார். எவ்வளவு உயர்ந்த ஞானம்! தவறாக பொருள் கொண்டு மோசம் போகாதீர். எல்லா ஞானவான்களும் மிக உயர்ந்த பொருளையே – இறைவனையே – அடையும் வழியை கூறுகின்றனர”

இந்த விளக்கம் சரிதானா?

அருண்மொழிவர்மன்

அன்புள்ள அருண்,

சித்தர்பாடல்களில் காமத்தை, பெண்களை இழிவுசெய்து எழுதப்பட்ட வரிகள் உண்டு. நாராயணகுரு கூட அத்தகைய பாடல்களை இயற்றியிருக்கிறார். அவை இல்லறத்தாருக்கு உரியவை அல்ல. அவை துறவுவழி கொண்டவர்களுக்கு உரியவை. இல்லறத்தார் அவற்றை கருத்தில் கொள்ளலாகாது. அவற்றை இல்லறத்தோர் வாசிக்கும் வழக்கமே இருந்ததில்லை. அவை அச்சில் புழக்கத்திற்கு வந்தபோதுதான் அவற்றை அனைவரும் வாசிக்கநேர்கிறது

துறவு என்பது யோகத்தின் பொருட்டு. யோகம் குறியீட்டு ரீதியாக பல சக்திநிலைகளாக விளக்கப்படுகிறது. அதன் முதல் சக்திமையம் மூலாதாரம். அதுவே காமத்தின் உறைவிடம். படைப்பாற்றல், விழைவாற்றல், தன்முனைப்பு ஆகிய மூன்றும் அங்கே உறைகின்றன. அதை எழுப்பி, அதை கடந்து அடுத்தடுத்த ஆற்றல்நிலைகளுக்குச் செல்வதே யோகம். ஆகவே பறந்தெழும் பறவை கிளையை உதைத்துச் செல்வதுபோல மூலாதாரவிசையை, காமத்தை யோகிகள் நிராகரிக்கிறார்கள்.

காமம் ஆணுக்கு பெண்ணுடல் வடிவிலேயே வருகிறது. ஆகவே காமத்தை நிராகரிக்கும்பொருட்டு பெண்ணுடலை நிராகரிக்கிறார்கள். பெண் யோகிகள் எழுதினால் ஆணுடலை இதேபோல எழுதியிருப்பார்கள். உடல்மேல் விலக்கத்தை உருவாக்கும்பொருட்டு தன் நெஞ்சோடு கிளத்தலாக யோகியர் எழுதும் வரிகள் இவை. அவர்கள் நமக்குச் சொல்பவை அல்ல. அவர்களின் மெய்ஞான வெளிப்பாடுகளும் அல்ல. யோகப்பயிற்சியில் ஒரு கட்டத்தில் தேவையான ஒரு தன்னுறுதி மட்டுமே.

ஆணின் காமம் பெண்ணின் இரண்டு உறுப்புகளையே மையமாக கொண்டது. பிறப்புறுப்பு, முலைகள். அவையிரண்டும் தாய்மையின் இடங்களும்கூட. ஆகவே காமம் என்பது தாய்மையுடன் ஆழமாக பிணைந்தது. அது அத்தனை ஆற்றல்மிக்கதாக இருப்பது இதனால்தான்.

ஒருபக்கம் அது உடலின்பம் என்னும் எளிய செயல். மறுபக்கம் தாயை நாடுதல் என்னும் நுண்ணிய, உயரிய செயல். ஒருபக்கம் அது உடல், மறுபக்கம் அது ஆழுள்ளம். ஒருபக்கம் அது ஒரு தனிமனிதனின் விழைவு. மறுபக்கம் அது உயிர்க்குலங்கள் தங்களை தாங்களே உருவாக்கிக்கொள்ளும் அடிப்படை விசை. ஒருபக்கம் ஓர் ஆணுடல் ஒரு பெண்ணுடலை அறிவது. மறுபக்கம் அது அன்னையின் உடலில் இருந்த குழந்தையின் உடல் அன்னையுடலுடன் இணைவது.

மனிதனின் உள்ளம் காமத்திலாடுவது இவ்விரண்டின் நடுவில் ஒருவகை ஊசலாட்டமாகத்தான். இதை எந்த ஆணும் அந்தரங்கமாக அறிவான். இப்பாடல் தாய்மையை காமமெனவும் சித்தரிப்பதே முக்கியமாகக் கவனிக்கவேண்டியது.

யோகமுறை சார்ந்த பாடல் இது.ஆகவே இதற்கு யோகம்சார்ந்த பொருளே உள்ளது. இதிலுள்ள வைப்புமுறை முக்கியமானது. பிறந்த இடம் என்பதற்குச் சமானமாக சிற்றம்பலம் சொல்லப்படுகிறது. [நிராகரிக்கும்பொருட்டு அது வெற்றம்பலம் என்று சொல்லப்படுகிறது] கறந்த இடத்திற்கு நிகராக சிவம் சொல்லப்படுகிறது.

சிற்றம்பலம் என்பது இந்த பருவடிவப் பிரபஞ்சம். சிவம் அதிலாடும் கருத்துவடிவம் என்பது சைவமரபு. பருவடிவப் பிரபஞ்சம் பற்றிய ஓர் அழகான உருவகம் உண்டு. அது கருவறையாகவும் குழந்தையாகவும் ஒரே சமயம் இருந்துகொண்டிருக்கிறது. அதாவது அது தன்னைத்தானே பிறப்பித்துக் கொண்டிருக்கிறது. ஒன்று இன்னொன்றை உருவாக்குகிறது. பிறந்தபடி, பிறப்பித்தபடி இருக்கின்றன பருப்பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவும். ஆகவே அதை பிறந்த இடத்துக்கு நிகர்வைப்பது யோக மரபு.

ஆவுடை என்பது மாபெரும் யோனிதான். அதுவே சக்திவடிவம். அதில் எழுந்தது சிவம். சிவமென்பது பருவடிவப் பிரபஞ்சத்தை உயிர்கொள்ளச்செய்யும், வடிவுகொள்ளச்செய்யும், செயல்வடிவமாக்கும் முழுமுதற் கருத்து. இப்பாடலில் கறந்த இடம் என்னும் சொல் அதைச் சுட்டுகிறது. அது முலைப்பால். அருள், கனிவு, உயிரூட்டுவது.

நீங்கள் அளித்திருக்கும் விளக்கம் பக்திமரபில் நின்று சொல்லப்பட்டது. இந்நூற்றாண்டில் சித்தர்பாடல்கள் பரவலாக வாசிக்கப்பட்டபோது எளிய பக்தர்கள் அவற்றைக் கண்டு குழம்பினர், திகைத்தனர். அவற்றிலுள்ள காமவெறுப்பும் பெண்ணுடல் மறுப்பும் கண்டு ஒவ்வாமை கொண்டனர். அவர்களுக்காக இந்தவகையான சுற்றிவளைத்த பக்தி விளக்கங்கள் அளிப்பட்டன. இவற்றுக்கு எளிமையான பக்தர்களிடம் ஒரு தேவை இருக்கலாம்.

ஜெ

முந்தைய கட்டுரைசூடாமணி, கடிதங்கள்
அடுத்த கட்டுரைசிந்தாமணி,கடிதம்