‘திண்டுக்கல்லில் நள்ளிரவில் ரௌடி வெட்டிக் கொலை’ — 2008 ஜனவரி 2, புதன்கிழமை தினமணி நாளிதழில் [நெல்லைப் பதிப்பு] ஒன்பதாம் பக்கத்தில் வந்த செய்தியைப் படித்தேன். ஒருகணம் ஒன்றும் புரியவில்லை. செய்தியே தானா?
“திண்டுக்கல் சவரியார் பாளையத்தைச் சேர்ந்தவர் தில்லையப்பன். இவரது மகன்கள் சாக்ரடீஸ், காரல் மார்க்ஸ், பெர்னாட் ஷா, முட்டைக்கண் ரவி. இவர்கள் நான்குபேர் மீதும் பல்வேறு கொலை, கொள்ளை, கள்ளச் சாராயம் மற்றும் ஆள்கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் சில ஆண்டுகளுக்கு முன் இவர்களுக்கும் இவர்களின் எதிர்கோஷ்டியினருக்கும் நடந்த மோதலில் சாக்ரடீஸ், காரல் மார்க்ஸ் இருவரும் வெட்டிக் கொல்லப்பட்டார்கள்.
அண்ணன்கள் செய்துவந்த தொழிலையே பெர்னாட் ஷாவும் முட்டைக்கண் ரவியும் செய்துவந்தார்கள். இதில் பெர்னாட் ஷா திண்டுக்கல்லில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு வட்டிக்குப் பணம் கொடுத்துவந்தார்.
இந்நிலையில் பெர்னாட் ஷா திங்கள்கிழமை நள்ளிரவு மது அருந்திவிட்டு பணம் வசூலிப்பதற்காக திண்டுக்கல் மேற்கு ரத வீதி அருகே இருந்த அரசமரத்தடி கருவாட்டுச் சந்தை பகுதியில் நடந்துசென்றபோது அவரைப் பின்தொடர்ந்து வந்த மர்மக் கும்பல் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது.
வெட்டுக்காயங்களுடன் விழுந்த அவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் வழியில் பெர்னாட் ஷா உயிரிழந்தார்……”
சாக்ரடீஸ், காரல் மார்க்ஸ் ஆகியோரின் இளமைப் பருவம் எபப்டி இருந்தது என்ற ஆர்வம் ஏற்பட்டது. என்ன இருந்தாலும் சாக்ரடீஸ் மூத்தவர். மேலும் ‘உன்னையே நீ அறிவாய்’ என்ற அமர தத்துவத்தை உலகுக்கு அளித்தவர். ஆனால் கோப்பையில் எது கொடுத்தாலும் அதை கவனமாக பரிசோதனை செய்தபின்புதான் குடித்திருப்பார். பக்கத்துவீட்டு கிரீட்டோவுக்கு கோழி ஏதேனும் திருப்பிக் கொடுக்க வேண்டியிருந்திருக்குமோ? ஆளைப் போட்டுத்தள்ளி அதுதான் முதல் கொலைவழக்காக இருக்குமோ?
காரல் மார்க்ஸ் என்ன இருந்தாலும் வேறு மாதிரியானவர். பக்கத்து வீட்டில் எங்கல்ஸ் என்ற பணக்கார பையன் இருந்திருப்பான். இவன் சொல்வது அவனுக்கு மட்டுமே புரிந்திருக்கும். அதிலிருந்து பல சிக்கல்கள் வந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் கொலை? இருக்கலாம். அவர் சாத்வீகராக இருந்தாலும் ராப்பகலாக, கூட்டக்கொலை, ரத்த ஆறு பற்றியே பேசி மற்றவர்களுக்கு வெறியைத் தூண்டிவிட்டிருக்கலாம். அதே தெருவில் ஸ்டாலின் என்ற இளவல் யாராவது அவருக்கு இருந்தார்களா என்று போலீஸார் கண்காணிக்க வேண்டும்.
இதிலே எங்கே வந்தார் பெர்னாட் ஷா? நம்மூரில் பேரைப் போட்டு குழப்பி விடுவார்களே. ஷா என்றால் குஜராத்தி. பெர்னாட் என்றால் தூத்துக்குடி மீனவர். இனக்குழப்பமே அடையாளம் காணப்பட்டிருக்குமே. பரவாயில்லை, நகைச்சுவையை வைத்து சமாளித்திருப்பார்.
பரிதாபமாக இருப்பது கான்ஸ்டபிள்களை நினைத்துத்தான். ஒரு ஆசாமியை குடித்துவிட்டு துணியில்லாமல் முச்சந்தியில் கத்தியுடன் கலாட்டா செய்ததற்காகக் கைதுசெய்கிறார்கள். விசாரணை. லாத்தியைச் சுழட்டியபடி கான்ஸ்டபிள் கண்ணுச்சாமிக் கோனார் புஸ்திமீசையை ஒதுக்கி பிரியாணி ஏப்பத்துடன் கேள்விகள் தொடுக்கிறார்…
“ஏண்டா எடுபட்ட பயலே. என்னடா நெனைச்சிருக்கே? ஏ? ரோட்டுமேல குண்டிடான்ஸா ஆடுறே? உட்டேன்னா நாயே கழிஞ்சுட்டு கெடப்பே… என்னடா பேரு?”
“பெர்னாட் ஷா சாமி.”
கா.க.கோனார் வாயை அரைக்கணம் திறந்தபடி வைத்து அப்படியே விழித்துப் பார்க்கிறார். பிறகு எரிமலை பீரிடுகிறது. “தாளி , வெட்டி பொலி போட்டிருவேன். போலீஸ்னா புண்ணாக்குண்ணு நெனைக்கிறியா? பேரச் சொல்லுடாண்ணா கிண்டல் மயிரு கேக்குதா? டேய்…”
“சாமி சத்தியமா சாமி! அப்பன் மேலெ சத்தியமா பேரு அதுதான் சாமி….”
“என்ன பேரு?” கோனார் ஐயமாகக் கேட்டார்
“பெர்னாட் ஷா…”
“டேய்…”
“சத்தியமா அதுதான் சாமி பேரு… வேற பேரச் சொன்னா அதுக்கும் அடிப்பீங்க…”
“என்ன பேரு?”
“பெர்னாட் ஷா.”
“கொன்னிருவேன்.. கொன்னு போட்டிருவேன்…” கோனாரின் குரல் உடைந்தது.
“சாமீ !சாமீ! சத்தியமா பெர்னாட் ஷா சாமீ… பெர்னாட் ஷா சாமீ…”
“கட்டையிலே போக. இத எளுதிவச்சா மேலே தொப்பி போட்ட தாயளிக நாம மப்புல இருந்தோம்னு சொல்லுவாங்கல… டேய், வேற பேரு இருக்காடா?”
“இல்ல சாமி… இதாங்க பேரு…”
“இந்த மாதிரி வேலைக்கு ஒரு ஸ்பேர் பேரு வச்சுகிட்டா என்னடே?” என்றார் குட்டி கான்ஸ்டபிள் மாரிமுத்து.
கண்ணுச்சாமிக் கோனார் மீசையை உருவினார். “பெர்னாட் ஷா!… எங்கியோ கேட்டபேரு… ஏன் மாரிமுத்து பெர்னாட் ஷாண்ணாக்க நம்ம அறிஞர் அண்ணாவுக்கு தெரிஞ்ச யாரோ தானே?”
கான்ஸ்டபிள் மாரிமுத்து அதைவிடக் குழம்பி, “இவரு குமுதத்துல எல்லாம் காமடி பிட்டு எழுதப்பட்டவரு இல்ல?”
“சேச்சே… மேடையிலே பேசுவாருண்ணு நெனைக்கேன்… தூத்துக்குட்டி பார்ட்டி…” கோனார் சமனமடைய முயன்றார். “…செரி விடு, நமக்கென்ன? எளுதிவைப்போம்.”
“அக்கூஸ்டு மப்புலே இருக்கான் சார். அப்ப அவன் உளறியிருக்கலாம்ல?”
“அது பாயிண்டு… டேய் ரேசன் கார்டு இருக்கடா?” தொப்பியை எடுத்து, வழுக்கையைத் தடவி, கோனார் கேட்டார். நன்றாக வியர்த்துவிட்டது.
“இருக்கு சாமீ.. வீட்டுல இருக்கு…”
“டேய், இங்க உன்னைய தெரிஞ்ச யாராவது இருக்காங்களாடா? உம் பேரு இதுண்ணுட்டு சாச்சி சொல்லுறதுக்கு…”
“இருக்கான் சாமி… இது என் அண்ணா… இந்தா நிக்க்கான்.”
“அப்டி வா… டேய் இவன் பேரு பெர்னாட் ஷாவாடா? நாயே பொய்யச் சொன்னா பொளந்திருவேன்.”
“ஆமா சாமி. சத்தியமா அதுதான் பேரு…”
“ஆரு போட்ட பேரு?”
“எங்கப்பாரு நாங்க பொறந்தப்பவே தூக்கி தலைவர் கையிலே குடுத்து போட்ட பேரு…”
“அப்ப செரி… மாரிமுத்து எழுதிக்கோ… செரி, உம்பேரு என்ன?”
“காரல் மார்க்ஸ்…”
ஒருகணம் மயான அமைதி.
ஈனஸ்வரத்தில் கோனார் குரல், “என்னது?”
“காரல் மார்க்ஸ்…”
கோனார் தன்னை மறந்தார். “டேய், போலீஸ்காரண்ணாக்க என்னடா நெனைச்சீங்க? தாயளி, குச்சி ஐஸ¤ல்லா குடுக்கிறானுக? டேய்…”
“சாமி சாமீ அடிக்காதீங்க சாமீ.. சத்தியமா காரல் மார்க்ஸ் சாமி !சாமீ காரல் மார்க்ஸ் சாமி ”
லாக் அப்பில் நாடக மேதையும் புரட்சி ஞானியும் கோடுபோட்ட அண்டர்வேருடன் குந்தி இருக்கையில் உள்ளே ஒருவர் நுழைகிறார்.
கோனார் நாற்காலியில் அரை உயிராக சாய்ந்து கிடக்க, உள்ளே வந்த ஆள் கைகூப்பிப் பணிந்து தன் தம்பிகளை விடுவிக்குமாறும், ‘பார்த்துப் போட்டு எல்லாம் செய்துகொள்ளலாம்’ என்றும் சொல்கிறார்.
“அது செஞ்சுபோடலாம், ஆனா தாளி, பேரக்கேட்டா பொய்யச் சொல்லுறான்…” கோனார் கொதித்தார்.
“அவங்க பேரு அதுதான் சார்”
“அது சரி…” கோனார் வெடிகுண்டை நோக்குவதுபோல எச்சரிக்கையுடன் ஓரக்கண்ணால் பார்த்தபடி “உன் பேரு என்ன?”என்றார்.
“சாக்ரடீஸ்.”
சாந்தமே உருவான கான்ஸ்டபிள் கண்ணுச்சாமிக் கோனார் வெறி கொண்டெழுந்து, சவரியார் பாளையத்தைக் கலக்கி, தில்லையப்பனைக் கண்டுபிடித்து முட்டிக்கு முட்டி தட்டி தலைகீழாகத் தொங்கவிட்டு கண்ணில் மிளகாய் அரைத்து தேய்த்து, குதிகாலில் சூடு போட்டு, தாண்டவமாடியமைக்குக் காரணம் இதுதான்.
தில்லையப்பன் கதறினார், “…சாமீ விட்டிருங்க சாமீ, தெரியாம செய்துட்டேன் சாமீ… இதுக்கு அப்பவே இன்ஸ்பெக்டர் மாணிக்கம் என்னைய போட்டு மிதிச்சு எடுத்துட்டார் சாமி… கடசீ பிள்ளைக்கு சரியா பேரு வச்சிட்டேன் சாமீ..”
“என்ன பேருடா?” கோனாருக்கு நம்பிக்கை வரவில்லை.
“முட்டைக்கண் ரவி சாமீ.”
“அப்ப சரி.”
கான்ஸ்டபிள் கண்ணுச்சாமிக் கோனார் தண்ணீர் பட்ட அப்பளமாகத் தணிந்து, நாற்காலியில் அமர்ந்து, “டேய் அவனை விட்டுருடா,” என்றார். “சூடா ஒரு வித்தவுட் டீ சொல்லும் ஓய்!” என்று இளம் கான்ஸ்டபிளுக்குச் சொல்லிவிட்டு, “எல்லாத்துக்கும் ஒரு மொறை இருக்கே… இல்லாம பின்னே?” என்று பெருமூச்சுவிட்டார்.
இப்படிக் கேள்விப்பட்டேன்.