மதுரை நாயக்கர் வரலாறு (அ.கி.பரந்தாமனார் எம்.ஏ)

krishna

 

மதுரை நாயக்கர்களைப்பற்றிய வரலாற்றுக்கு ஜெ.எச்.நெல்சனின் மதுரை ஆவணப்பதிவே முக்கியமான முதல் நூலாகும். அதன்பின்னர் பேராசிரியர் ஆர்.சத்தியநாத அய்யர் 1917-21ல் சென்னை பல்கலையில் ஆய்வுமானாவராக இருந்தபோது அதுவரை விரிவான ஆய்வுகள் செய்யப்படாத மதுரை நாயக்கர் வரலாற்றை விரிவான ஆய்வுக்குப்பின் ஆங்கிலத்தில் ‘மதுரைநாயக்கர் வரலாறு’ நூலாக எழுதினார். இது ஒரு முக்கியமான முதல்நூல் மட்டுமல்லாது தமிழகவரலாற்றியலின் ஒரு செவ்வியல் ஆக்கம் சென்றும் சொல்லப்படுகிறது. இந்நூல் 1924ல் சென்னைப்பல்கலை வரலாற்று பேராசிரியரான எஸ்கிருஷ்ணசாமி அய்யங்காரின் முன்னுரையுடன் வெளிவந்தது.[The history of Nayaks of Madura]]

இந்நூலை அடியொற்றி தமிழறிஞர் அ.கி.பரந்தமனார் தமிழில் எழுதிய ‘மதுரை நாயக்கர் வரலாறு’ தெளிவாகவும் சுருக்கமாகவும் நாயக்கர்களின் ஆட்சியையும் வீட்சியையும் சொல்லும் வரலாற்று நூலாகும். க.அ.நீலகண்ட சாஸ்திரியாரின் ‘தென்னிந்திய வரலாறு’ டாக்டர் அ.கிருஷ்ணசாமிப்பிள்ளை எழுதிய ‘விஜயநகரத்தின் கீழ் தமிழகம்’ [Tamil Country under Vijayanagara] முதலிய நூல்களை கணக்கில் கொண்டு இந்நூலை எழுதியதாக பரந்தாமனார் சொல்கிறார்.

நாயக்கர்களின் வரலாறு விந்தை மிக்க ஒன்று. வேறு ஒருநாட்டில் இத்தகைய ஒரு நிகழ்ச்சி நடந்திருந்தால் அதைப்பற்றி பெரும்தொகையான நூல்கள் எழுதிக்குவிக்கப்பட்டிருக்கும். நாயக்கர்கள் என்று பொதுவாகச் சொல்லப்படுபவர்கள் கம்பளத்தார்கள் என்றும் தொட்டியர் என்றும் சொல்லப்படுகிறார்கள். கொல்லவார்,சில்லவார் .தொக்லவார், கம்மவார், பலிஜா என பல்வேறு உட்பிரிவுகள் கொண்ட ஆந்திரப்பகுதி மக்கள் இவர்கள். அதிகமும் பாறைகள் நிறைந்த ராயலசீமா பகுதியில் ஆடுமாடு மேய்த்தும் பொட்டல்வேளாண்மை செய்தும் வாழ்ந்தவர்கள். பதிமூன்றாம் நூற்றாண்டில் நடந்த மாலிக் காபூரின் படையெடுப்பு தென்னகப்பேரரசுகளை எல்லாம் அழித்து தென்னிந்தியாவையே சீர்குலைத்து இடிபாடுகளும் சுடுகாடுகளும் மட்டும் எஞ்சச்செய்து மீண்டது. மாலிக் காபூர் விட்டுச்சென்ற தளபதிகள் சிற்றரசர்களாக மாறி கொள்ளையையே ஆட்சியாகச் செய்துவந்தனர். அவர்களை ஒருங்கிணைத்து துருக்கி சுல்தான்கள் டெல்லியில் இருந்துகொண்டு தென்னகத்தை வரிகொண்டனர்.

இந்நிலையில் சிருங்கேரி பீடத்தைச் சேர்ந்த மாதவர் என்ற துறவி [வித்யாரண்யர் என்று இவருக்கு பட்டபெயர் உண்டு. இருவரும் வேறுவேறு என்றும் வாதங்கள் உள்ளன] துங்கபத்ரா நதிக்கரையில் ஆனைக்குந்தி என்ற மலையடிவாரக் காடுகளில் தங்கியிருந்தார். அங்கே அவர் சந்தித்த ஹரிஹரர் புக்கர் என்ற இரு சகோதரர்களை அவர் கவர்ந்தார். அவர்கள் ஏற்கனவே காகதீய அரசு போன்ற பல அரசுகளில் போர்ப்பணியாற்றியவர்கள். ஆனைக்குந்தியில் இருந்த பழைய யாதவ அரசொன்றின் அரசகுலத்தவர். சுல்தான்களால் இளமையிலேயே சிறைப்பிடிக்கப்பட்டு டெல்லிக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அங்கே மதமாற்றம் செய்யப்பட்டனர். மீண்டும் இப்பகுதிக்கு ஆட்சியாளர்களாக அனுப்பட்டனர். அவர்கள் தங்களுக்கென சிறு படை கொண்டிருந்தனர். 1336ல் அவர்களைக் கொண்டு அந்த மலையடிவாரத்தில் விஜய நகரம் என்ற நகரத்தை நிறுவச்செய்தார் மாதவர். [அங்கே ஏற்கனவே இருந்த அரசுக்கும் விஜயநகரம் என்ற பெயர்தான் என ஒரு கூற்று உண்டு]

விஸ்வநாத நாயக்கர்

அக்காலத்து அரசியல் நிலையில்லமையைப் பயன்படுத்திக் கொண்டு நிலைபெற்று வளர்ந்து மூன்று நூற்றாண்டுக்காலம் நீண்ட விஜய நகரப் பேராரசு தென்னிந்தியாவில் இந்துப்பண்பாட்டை நிலைநாட்டிய மாபெரும் சக்தியாகும். இன்று இந்தியாவில் விஜயநகர ஆட்சி இருந்த பகுதிகளில்மட்டுமே மாபெரும் ஆலயங்கள் எஞ்சியுள்ளன. பிறபகுதிகளில் இஸ்லாமிய ஆட்சியின்போது காடுகளுக்குள் மறைந்து அழிந்துகிடந்து வெள்ளையர் ஆட்சியில் கண்டெடுக்கப்பட்ட கஜுராகோ, கொனார்க் , அஜந்தா போன்ற சில இடிபாடுகளைத்தவிர வேறெதுவும் இல்லை.

விஜயநகரம் மேய்ச்சல்நில வாழ்க்கையுடன் சிதறிப்பரந்து கிடந்த ஒரு பெரும் மக்கள்த் திரள் ஒரு ஞானியின் சொற்களால் ஆவேசம்கொண்டு திரண்டெழுந்து ஒரு பேரரசாக மாறியதன் ஆச்சரியமூட்டும் நிகழ்வாகும். கன்னடத்தில் ‘மாதவ கருணா விலாசா’என்ற பழைய நூல் மொத்த விஜயநகர சாம்ராஜ்யத்தையே மாதவரின் கருணை என்று குறிப்பிடுகிறது.

புக்கரின் மகனான குமார கம்பணன் அன்று துருக்கி சுல்தானின் தளபதியான அல்லாவுதீன் சிக்கந்தர் ஆட்சியில் மதுரை சிதைந்து பாழடைந்து கிடப்பதை அறிந்து 1371ல் மதுரைமீது படையெடுத்து வந்து கைப்பற்றினார். குமார கம்பணரின் மனைவியான கங்கம்மாதேவி எழுதிய ”மதுராவிஜயம்’ என்ற சம்ஸ்கிருத காவியம் இந்நிகழ்ச்சியை வர்ணிக்கிறது. அப்போது மதுரை மீனாட்சி ஆலயம் இடிக்கப்பட்டு மதுரை தேவி திருவாங்கூரில் [குமரிமாவட்டத்தில்] உள்ள சிறு மீனாட்சியம்மை கோயிலில் வைக்கப்பட்டிருந்தாள். குமார கம்பணன் மதுரை கோயிலை மீண்டும் கட்டவும் தேவியை மீண்டும் பிரதிஷ்டை செய்யவும் ஏற்பாடு செய்தார்.

மங்கம்மாள்

அதன்பின் மதுரை விஜயநகரத்துக்கு கப்பம் கட்டும் நாடாகவே இருந்துவந்தது. 1509ல் முடிசூடி தென்னகம் முழுவதையும் விஜயநகரம் ஆண்ட நாட்கள் அவை. விஜயநகரத்தின் மிகச்சிறந்த மன்னரான கிருஷ்ண தேவராயர் இன்று கர்நாடகத்தில் ராஜராஜசோழன் போல ஒரு தொன்மமாக கருதப்படுபவர். ஆண்டாளின் கதையை தெலுங்கில் அமுக்த மால்யதா [சூடாத மாலை] என்ற பேரில்காவியமாக எழுதியவர் [ நான் கிருஷ்ண தேவராயன் என்ற பேரில் ரா.கி.ரங்கராஜன் ஒரு நாவல் எழுதியிருக்கிறார்]

மதுரையை ஆண்ட பாண்டியமன்னன் விஜயநகருக்குக் கப்பம் கட்டிவந்தான். அவனைச் சோழ அரசன் தாக்கி மதுரையைக் கைப்பற்றவே அவனுக்கு உதவ தன் படைத்தலைவராகிய நாகமநாயக்கனை அனுப்பினார் கிருஷ்ணதேவராயர். நாகமன் மதுரையைக் கைப்பற்றி தன்னை மதுரை மன்னனாக பிரகடனம் செய்து கொண்டார். ஆகவே நாகமனை வென்றுவர நாகமனின் மகன் விஸ்வநாத நாயக்கனின் தலைமையில் ஒரு படையை அனுப்பினார் ராயர். விஸ்வநாத நாயக்கர் கிருஷ்ணதேவராயருக்கு மிக அணுக்கமானவராக இருந்தார்.  மகன் தந்தையை வென்று சிறைப்பிடித்து கொண்டுசென்று ராயர் முன் நிறுத்தினான்.

இந்த துரோகத்தை ஏன் செய்தாய் என்று ராயர் நாகமனிடம் கேட்டபோது என் மகனுக்கு ஒரு நாட்டைக் கொடுக்கவேண்டும் என்பதற்காகத்தான் என்று நாகமன் சொன்னதாகவும் விஸ்வநாத நாயக்கனிடம் உனக்கு என்ன பரிசு வேண்டும் என்று ராயர் கேட்டபோது அவன் தன் தந்தையின் உயிரை கேட்டதாகவும் ராயர் விஸ்வநாதனை மதுரையின் சுதந்திர மன்னனாக பிரகடனம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. அவ்வாறு மதுரை நாயக்க வம்சத்தின் முதல் மன்னனாக 1529ல் விஸ்வநாத நாயக்கன் முடிசூடினார் [இதை அகிலன் ‘வெற்றித்திருநகர்’ என்ற நாவலாக எழுதியிருக்கிறார்]

விஸ்வநாத நாயக்கனின் அமைச்சர் அரியநாத முதலியார் பல ஐதீகக்கதைகளில் புகழப்படும் வீரபுருஷன். அவர் தென்னகம் முழுக்க தன் படையால் வென்று நாயக்க சாம்ராஜ்ஜியத்தை அமைத்தார். ஜடாவர்மன் சுந்தர பாண்டியனுக்குப் பின் மதுரையில் ஒரு பேரரசு அமைவது அப்போதுதான். நெல்லை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கோயிலை அரியநாதர் அமைத்தார். அரியநாதர்தான் தென்னகத்தை 72 பாளையபப்ட்டுகளாக பிரித்து அவற்றுக்கு பாளையக்காரர்களை நியமித்தார்.

அதன் பின் நாயக்க வம்சம் மதுரையில் தொடர்ந்து அரசாண்டது. அதில் குறிப்பிடத்தக்க இருவர் திருமலை நாயக்கரும் , மங்கம்மாளும். கிட்டத்தட்ட தஞ்சை தவிர உள்ள தமிழகத்தை முழுக்க ஆண்ட மன்னர். மதுரையில் உள்ள நாயக்கர் மகால் அவரது பெயரை இன்றும் சொல்லும் ஒரு நினைவுச்சின்னம். நிலையான போரில்லாத ஒரு நீண்டகால அரசை மக்களுக்கு அளித்தார் திருமலை நாயக்கர்.

பொதுவாக அமைதி நிலவினாலே செல்வம் கொழிக்க ஆரம்பிக்கும் என்பதே பழைய இந்தியாவின் நிலைமையாகும். குவிந்த செல்வத்தை கோயில்களாகவும் ஏரிகளாகவும் மாற்றினார் திருமலை மன்னர். நூற்றுக்கணக்கான கோயில்களை புதுப்பித்துக் கட்டி பெரும் கோபுரங்களை எழுப்பியிருக்கிறார். அவை ராய கோபுரங்கள் எனப்படுகின்றன. அவற்றில் சரிந்த தொப்பையும் கூப்பிய கரங்களுமாக திருமலைநாயகக்ர் தன் இரு ராணிகளுடன் நிற்கக் காணலாம். [மிகச்சிறந்த சிலை ஸ்ரீவில்லிப்புத்தூர் மடவார் வளாகம் கோயிலில் உள்ளதுதான்]

நாயக்கரின் சிறப்பியல்பு சைவ வைணவ ஆலயங்களுக்கு சீராக திருப்பணி செய்ததாகும். ஒரு சைவக்கோயில் அருகே அதே அளவு வைணவக்கோயிலையும் மாற்றியும் கட்டுவது அவரது வழக்கம். கிறித்தவ மதபோதகர்களை ஆதரித்திருக்கிறார். அதை ஜெசூட் பாதிரிகள் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். இஸ்லாமிய தர்காக்களையும் ஆதரித்திருக்கிறார்.

இன்றைய மதுரை என்பது திருமலை மன்னரின் ஆக்கம் என்றால் மிகையல்ல. மதுரையின் தெருக்கள் ஆலயங்கள் மாபெரும் தெப்பக்குளங்கள் சுற்றியுள்ள மாபெரும் ஏரிகள் இன்றுள்ள பெரும் திருவிழாக்கள் எல்லாமே திருமலை மன்னாரால் உருவாக்கப்பட்டவை. தென்னாடெங்கும் இன்றுள்ள ஏரிகள் தேசத்தின் விலைமதிப்பில்லா பெரும் செல்வங்கள்– மதிப்பிட்டால் பல்லாயிரம் கோடி விலையுள்ளவை. அவை நாயக்கரின் சிருஷ்டிகளே. பல ஊர்கள் எரிகளை ஒட்டி உருவானவை. அவற்றில் பாதிப்பங்கு பேருந்து நிலையங்களாகவும் குடியிருப்புகளாகவும் ஆகியும், தூர்வாரப்படாமலும் அழிந்துவிட்டன இன்று.

ராணி மங்கம்மாள் இன்றும் தென்னாட்டில் சாதாரணமாக நினைவுகூரப்படும் பெயர். தன் மகன் அம்மை நோயில் இறக்க பேரன் ஒருவயதுகூட இல்லாமலிருக்க மங்கம்மாள் 1689ல் ஆட்சிக்கு வந்தாள். 1706 வரை பதினேழு வருடம் ஆட்சிசெய்த மங்கம்மாள் அதிகம் போர்கள் செய்ததில்லை. படையெடுப்புகளை திருமலை மன்னரின் பெரும் செல்வத்தை திறையாகக் கொடுத்தே சமாளித்தாள். ஆனால் தென்னாட்டை போரில்லாது காத்தாள். அதனால் செல்வம் பெருகியது.

மங்கம்மாள் அதிகமும் கோயில்கள் கட்டவில்லை. ஆனால் சாலைகள் அமைக்கவும் சந்தைகள் உருவாக்கவும் பெரும் செலவுசெய்தாள். இன்று தென் தமிழகத்தில் உள்ள முக்கியமான சாலைகள் மங்கம்மாள் போட்டவை. அவற்றை ஒட்டி உருவான புது ஊர்களே இன்றைய முக்கிய நகரங்களான சாத்தூர் சிவகாசி கோயில்பட்டி முதலியவை. இவற்றை இன்றும் கிராம மக்கள் மங்கம்மாள் சாலை என்றே சொல்கிறார்கள்– இப்போது போடப்படும் நாற்கரச் சாலையைக்கூட! மங்கம்மாள் கட்டிய பல வழிப்போக்கர் சத்திரங்கள் இன்றும் சாலையோரம் உள்ளன. [நா பார்த்தசாரதி ராணிமங்கம்மாள் என்ற நாவலை எழுதியிருக்கிறார்]

மங்கம்மாளின் பேரன் விஜயரங்க சொக்கநாதர் மறைந்தபின் அவரது மனைவி மீனாட்சி 1732ல் தன் உறவினரான விஜயகுமாரன் என்ற சிறுவனை தத்தெடுத்து அவனை ஆட்சிப்பொறுப்பில் இருத்தி தானே ஆட்சியை நடத்தினாள். விஜயகுமாரனின் தந்தை பங்காருதிருமலை மகனுக்கு எதிராக கலகம் செய்தான். தனக்கு ஆட்சியை வாங்கித்தரும்படி தன் எதிரியான ஆற்காடு நவாபிடம் கோரினான். ஆற்காடு நவாபின் மருமகனும் திவானுமாகிய சந்தா சாகிப்புக்கு பெரும் தொகை லஞ்சமாகவும் கொடுத்தான்.[பிரபஞ்சனின் மானுடம் வெல்லும் நாவலில் ரங்கப்பிள்ளை ”தனக்குத்தானே சூனியம் வைத்துக்கொள்வதில் நாம் நிபுணர்கள்” என்று இதைச் சொல்கிறார்]

சந்தாசாகிபிடமிருந்து தப்ப மீனாட்சி ராணி நம்பமுடியாத பெரும் தொகை [ஒரு கோடி பகோடா] லஞ்சமாக கொடுத்து தன்னை ஆதரிக்குமாறு கோரினாள். அவர் குர் ஆன் மேல் அடித்து சத்தியம் செய்து பணம் பெற்றுக் கொண்டார். ஆனால் அது குர் ஆன் அல்ல, ஒரு செங்கல். சந்தா சாகிப் ராணியை சிறைசெய்ய அவள் விஷம் குடித்து இறந்தாள். சந்தா சாகிப் பங்காரு திருமலையையும் கொன்று மதுரையை வென்றார். மதுரை நாயக்கர் ஆட்சி 1736ல் முடிவுக்கு வந்தது.

இந்த வரலாற்றை உணர்ச்சிகரமான நடையில் எழுதியிருக்கிறார் அ.கி.பரந்தாமனார். வரலாற்று நூல் என்று பார்த்தால் அவரது ‘அந்தோ!’ நடை சற்று உறுத்தலாகவே உள்ளது. ஆனாலும் 13 ஆம் நூற்றாண்டு தமிழக நிலைமையின் சித்திரத்தோடு தொடங்கி விஜயநகரின் வரலாற்றை சுருக்கமாகச் சொல்லி மதுரை நாயக்கர் வரலாற்றை விவரித்து நாயக்க ஆட்சியின் சாதனைகளை விவரித்து அவர்களின் தவறுகளையும் சுட்டிக்காட்டி அமையும் இந்நூல் பயனளிக்கும் ஒரு நூல்தான்.

நாயக்கர் வரலாற்றில் பல விஷயங்கள் விவாதத்துக்கு உரியவை. குறிப்பாக அவர்கள் உருவாக்கிய பாளையப்பட்டுமுறை பிற்காலத்தில் பொறுப்பில்லாத பாளையக்காரர்களை உருவாக்கி அராஜகத்துக்கு வழியமைத்தது. ஆனால் இதை கண்டிக்கும் நெல்சன் போன்றவர்கள் இதே பாளையப்பட்டுகக்ளை அப்படியே ஜமீந்தார்களாக தொடரவைத்து வெள்ளையர் ஆண்டதைப்பற்றி மௌனம் சாதிக்கிறார்கள்.

தெலுங்கு பேசும் மக்கள் திரண்டுவந்து மதுரையை வென்று ஒருபேரரசை நிறுவி இந்நிலப்பகுதியை ஆண்டதும் இங்கேயே அவர்கள் நிலைத்ததும் பெரும் வரலாற்று நிகழ்ச்சியாகும். தமிழ்நாட்டின் வரண்டநிலங்களில் வேளாண்மை செய்யும் முறை அவர்களால் உருவாக்கப்பட்டதே. இன்று தமிழகத்தின் முக்கியமான ஒரு சாதியாக விளங்கும் நாயக்கர்களைப்பற்றி பிறருக்குத் தெரிந்தது மிக சொற்பமே. அவர்கள் தங்கள் அடையாளங்களை தக்கவைத்து அதேசமயம் அதிகம் வெளிக்காட்டாமல் வாழ்கிறார்கள்.

இலக்கியத்தில் கி.ராஜநாராயணன் [அவர் கம்மவார் நாயக்கர்] நாயக்கர்களின் உலகை விரிவாக எழுதியிருக்கிறார். தமிழகத்தில் தமிழ்தேசிய உருவாக்கம் நிகழ்ந்த நாற்பது ஐம்பதுகளில் தமிழகத்தின் பண்டைவரலாறு மீட்டுருவாக்கம் செய்யப்பட்டபோது நிகழ்ந்த தயக்கங்களும் சமரசங்களும் ஆர்வமூட்டக்கூடியவை. சேரர் வரலாறு சேரநாடு கேரளம் ஆகிவிட்டது என்பதனால் சற்றே மழுப்பப்பட்டு செங்குட்டுவனுடன் நிறுத்திக் கொள்ளப்பட்டது. பாண்டிய சோழ வரலாறுகள் எடுத்துப்பேசப்பட்டன. சைவம் வளர்த்த பிற்காலச் சோழர் வரலாறு முக்கியப்படுத்தப்பட்டு ராஜராஜ சோழன் அதன் தலைமை உருவமாக ஆனார். நாயக்கர் வரலாறு அப்படியே மறக்கப்பட்டது. தமிழ் அடையாளமாக விளங்கும் அரசு முத்திரையில் உள்ள கோபுரம் [ஸ்ரீவில்லிப்புத்தூர் வடபத்ர சாயி கோயில் கோபுரம்] ஒரு நாயக்கர் கால ராய கோபுரம் என எத்தனை தமிழர்கள் அறிவார்கள்?

A.K.Paranthamanar
பரந்தாமனார்

 

பரந்தாமனார் இந்த வரலாற்று உருவாக்கம் நடந்த காலத்தைச் சேர்ந்தவர். அந்த இயக்கத்தில் ஒருவர். ஆயினும் அவர் எழுதிய நாயக்கர் வரலாறு இந்த தயக்கத்தை உதறி முன்வந்து பேசுகிறது.

நாயக்கர் வரலாற்றில் எழுதப்படாதவையே அதிகம். தெலுங்கு அறிவு அதற்கு இன்றியமையாதது. விஜயரங்க சொக்கநாத நாயக்கர் முதலிய மன்னர்கள்கூட தெலுங்கில் நிறைய எழுதியுள்ளனர். பல தெலுங்கு ஆவணங்கள் இன்னும் பரிசீலிக்கப்படவே இல்லை. ஏசுசபை கடிதங்களும் பல இன்னும் பரிசீலிக்கப்படவில்லை. தயக்கத்தை உதறி இனியேனும் தமிழ் பண்பாட்டின் தவிர்க்கமுடியாத ஒரு பெரும் அத்தியாயமான நாயக்கர் காலம் பற்றி மேலும் எழுதப்படுமென எதிர்பார்க்கலாம்.

மதுரை நாயக்கர் வரலாறு
அ.கி.பரந்தாமனார் எம்.ஏ
பாரிநிலையம். 90 பிரகாசம் சாலை சென்னை 600018

 

மறுபிரசுரம் /முதற்பிரசுரம் Aug 2, 2007

 

முந்தைய கட்டுரைவிஸ்வநாத நாயக்கர் அடைப்பக்காரரா?
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 91