பாலியலின் ஆன்மிகம்

ஆலயங்களில் காமம்

அன்புள்ள ஜெ.விற்கு வணக்கம்,

தமிழ் மொழி மற்றும் சங்க இலக்கியங்களைப் பற்றிய எனது சந்தேகங்களையும் புரிதலையும் நண்பர்களுடன் விவாதிப்பது வழக்கம். ஆனபோதும் தெளிவான விடையும் ஆக்கப்பூர்வமான புரிதலும் கிட்டியதில்லை, பெரும்பாலான நேரங்களில் ஏமாற்றமே மிச்சம். அவர்களின் கருத்துக்கள் ஒருதலைப்பட்சமாகவோ அல்லது தன்னியல்பைச் சார்ந்ததாகவோ உள்ளது, அதனால் மனம் அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதற்கு முன் தங்களுடன் இராஜராஜ சோழன் பற்றி மின்னஞ்சல் வழியாக கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம்.

சில காலமாக என்னுள் தொடர்ந்து எழுந்து நிற்கும் வினாக்களைப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளேன். அதற்குத் தகுந்த விளக்கங்களைத் தங்களால் நிச்சயம் தர முடியும் என்று நம்புகிறேன். தயைகூர்ந்து நேரம் கிடைக்கும்போது இதற்கான விளக்கத்தைத் தெளிவுபடுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கஜுராகோ என்றாலே காமத்தை சித்தரிக்கும் சிற்பங்கள் என்ற தவறுதலான கண்ணோட்டம் பலரிடம் உள்ளது. உண்மையில் அங்குள்ள 10% அளவான சிற்பங்கள்  மட்டுமே காமத்தை பற்றியது, மீதமுள்ளவை அக்கால மக்களின் வாழ்க்கை முறையைப் பிரதிபலிப்பது போல வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. அழகிய பாவங்களை வெளிப்படுத்தும் நடனமணிகள், பரவசம் பொங்கும் பாடகர்/பாடகிகள், ஒப்பனையில் ஈடுபட்டுள்ள கன்னிப்பெண்கள், குழந்தையைச் சீராட்டும் பெண்கள் என்று எல்லாவகைப் பெண்களும், ஆண்களும் இங்கு சிற்பங்களாக உறைந்திருக்கின்றனர். சில சிற்பங்கள் `நிஜத்தை’ விடவும் செக்சில் கிளர்ச்சிïட்டுவதாக இருப்பதும் உண்மை.நான் இதுவரை அறிந்திருந்தது – கோயில் சிற்பங்களும் கல்வெட்டுகளும் அன்றைய வாழ்வியலை ஒட்டியே அமைந்திருந்தன என்பது தான்.

அப்படிப் பார்க்கையில் எதற்காக ”ஆழ்ந்த” காமத்தை விளக்கும் இத்தகு சிற்பங்களை  வடிவமைத்தனர்? ஆண்-பெண் புணர்தல் என்பது இயல்பான ஒன்று. நமது சங்க இலக்கியப் பாடல்கள் காதல், களவு, காமம் ஆகியவற்றைப் பற்றி சிறப்பாகக் கூறுகின்றன. இதில் தவறேதும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது.. ஆனாலும் காமசூத்திராவில் வருவதுபோல பல்வேறு வகையான புணர்தல் முறைகளை கோபுரங்களிலும், கோயில் சுவர்களிலும் வடித்திருப்பதின் பயனும் பொருளும் என்னவாக இருந்திருக்கும் என்பது என் அறிவுக்கு எட்டவில்லை.

குறிப்பாக – threesome, sex in a group, sex with animal என்பனவற்றை உணர்த்துவதன் நோக்கம் என்னவாக இருக்கும்? நான் இவைகளை தீயவை அல்லது பாவம் என்று கூறவில்லை, அது போல இந்த சமசாரங்களை மறைக்க வேண்டும் என்றும் வாதிடவில்லை; ஆனாலும் இப்படி அனைவரும் வந்து போகும் (சிறுவர்கள்) இடத்தில் இவவளவு detailed சிற்பங்கள் அவசியம்தானா? சிறு குழந்தைகள் இவற்றில் இருப்பது என்னவென்று கேட்டால், அதற்கு எப்படி விளக்கமளிப்பது என்ற கோணத்தில் பார்க்கிறேன்.

அருள்மொழிவர்மன்

அன்புள்ள அருள்மொழிவர்மன்

இந்த வினாவுக்கு விரிவாக முன்னரும் பதில்சொல்லிவிட்டேன்.[ஆலயங்களில் காமம்] நீங்கள் தேடினாலே கண்டைந்திருக்கமுடியும். ஆனால் இங்கே சிலவற்றை மீண்டும் மீண்டும் சொல்லவேண்டியிருக்கிறது. ஆகவே மீண்டும்.

கஜுராகோ பற்றிய கேள்வி எங்கிருந்து எழுகிறது? கோயில் என்பது ஒரு தொடர்புறுத்தல், ஒரு செய்திவெளிப்பாடு என்னும் புரிதலில் இருந்து. அச்செய்தி ஏன் வெளிப்படுத்தப்படுகிறது என்று கேட்கிறீர்கள். எவரிடம் என்று யோசிக்கிறீர்கள்.

முதலில் கோயில் என்பது ஒரு display அல்ல என்ற தெளிவு நமக்கு வேண்டும். அது மனிதர்கள் மனிதர்களிடம் தொடர்புறுத்தும் பொருட்டு உருவாக்கப்படவில்லை. அது  தெய்வத்தின்முன் வைக்கப்பட்ட ஒன்று. அவ்வண்ணம்தான் அதை உருவகிக்கிறார்கள்.

ஒரு தெய்வத்தின் முன் பூசைப்பொருட்கள் படைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் அழகும் ஒத்திசைவும் உள்ளன. ஆனால் அவை பார்ப்பவருக்காகவா அவ்வாறு படைக்கப்பட்டிருக்கின்றன? அவை தெய்வத்தின் முன் படைக்கப்பட்டிருக்கின்றன, தெய்வத்தையே உத்தேசிக்கின்றன.

பூசைப்பொருட்களில் ஒருவகை முழுமையும் ஒத்திசைவும் உண்டு. ஒளி, மலர்கள், கனிகள், நறுமணப்பொருட்கள்… அவை ஒரு வகை அர்த்தத்தை நமக்கு அளிக்கின்றன. ஏனென்றால் அதில் ஒரு மெய்மை உள்ளடங்கியுள்ளது. அதை நாம் அவற்றைப் பார்க்கையிலேயே இயல்பாக உணர்கிறோம். நம் ஆழம் உணர்கிறது. ஆனால் பூசைப்பொருட்கள் வெறும் காட்சிப்பொருட்கள் அல்ல.

நவீனப்பார்வையில் வேண்டுமென்றால் அவற்றை குறியீடுகள் என்று சொல்லலாம். அச்செயல் வழியாக அவை தெய்வத்துடன் உரையாட முயல்கின்றன. ஆலயமும் அவ்வாறே. அது பக்தர்களோ பிறரோ பார்ப்பதற்காக அமைக்கப்பட்டதல்ல. மூதாதையர் நோக்கில் அது ஒரு முழுமையான அமைப்பு.

ஓர் உயருளம் அடைந்த இறைத்தரிசனம் மந்திரமாக ஆகிறது. மந்திரம் கோயிலாக ஆகிறது. மந்திரம் முழுமையானது. அதன் எல்லா உச்சரிப்புகளும் இன்றியமையாதவை. ஆகவே அதன் எல்லா அம்சங்களும் சிற்பமாகவும் ஆகவேண்டும். அதில் ஒரு பகுதியை விட்டுவிடமுடியாது. கோயில்களிலுள்ள சிற்பங்கள், கட்டிட அமைப்பு அவ்வாறுதான் இலக்கணப்படுத்தப்படுகிறது.

கஜுராகோவில் அல்ல, இந்தியாவெங்கும், தமிழகம் முழுக்க கோயில் சிற்பங்களில் கேளிசிற்பங்கள் எனப்படும் இந்த பாலுறவுச் சித்தரிப்புகள் உண்டு. அவை அந்த ஆலயத்தின் சிற்பவியல் முழுமைக்கு தேவைப்படுகின்றன. அந்த ஆலயம் ஒரு பிரபஞ்ச தரிசனத்தின், ஓர் இறைத்தரிசனத்தின் கல்வடிவம். அதில் அந்த தரிசனம் முழுமையாகவே இருக்கும்.

இப்படி விளக்குகிறேன். அந்த தரிசனம் ஒரு முழுமையான பிரபஞ்சத்தை குறியீடாக உருவாக்கி  ஆலயவடிவில் நிலைநிறுத்த முயல்கிறதென கொள்வோம். அதில் என்னென்ன இருக்கும்? பாதாளதெய்வங்கள், கொடிய தெய்வங்கள், நோய்கள், பீடைகள் இருக்கும். விலங்குகள் பாம்புகள் பறவைகள் இருக்கும். மனிதர்களின் வாழ்க்கை முழுமையாக இருக்கும். அதில் போர்கள், காதல், காமம் எல்லாமே இருக்கும். கந்தர்வர்கள், தேவர்கள் இருப்பார்கள். தெய்வங்கள் இருக்கும். இல்லையா? அதில் ஒரு பகுதி உங்களுக்கு இன்று சங்கடமாக இருக்கிறதென்பதனால் வெட்டிவிடப்பட வேண்டுமா என்ன?

காமம் ஏன் இருக்கிறது என்று கேட்கிறீர்கள். பெரும்பாலான கோயில்களில் நோய்கள் தெய்வங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. அழுக்குக்கும் இருட்டுக்கும் உரிய தெய்வங்கள்கூட உள்ளன. கொலைத் தெய்வங்கள் உள்ளன. எல்லா எதிர்மறை அம்சங்களும் ஆலயங்களில் எங்கேனும் இருக்கும். ஏனென்றால் இப்பிரபஞ்சம் அவற்றாலும் ஆனது.

பாலுறவுச்சிற்பங்கள் இருவகை. அ.மனித இயல்பின் இயல்புகளையும் விசித்திரங்களையும் காட்டுபவை. ஆ.தேவர்களின் லீலைகளைக் காட்டுபவை. அவற்றை கண்டாலே உணரமுடியும்.

மனித இயல்பைக் காட்டும் சிற்பங்கள் மானுடனின் அகத்தை முழுமையாக சித்தரித்துவிடும் நோக்கம் கொண்டவை. காமகுரோதமோகம் எல்லாமே மானுடத்தன்மைதான். நன்றும் தீதும். முனிவரும் கொலைகாரரும். அனைத்தையும் ஒரே அமைப்பின் பகுதியாக ஒட்டுமொத்தமாகக் காட்டுகின்றன ஆலயங்கள்.

தெய்வங்களின் பாலுறவுக்காட்சிகள் அவை பிரபஞ்சலீலையின் வெளிப்பாடுகள் என்பதனால் காட்டப்பட்டுள்ளன. காமம் என்பது உயிரின் ஆதிவிசை. இங்கே இயற்கையில் நிகழும் பெரும் களியாட்டு. புல்,புழு முதல் அனைத்திலும் திகழ்வது. இங்கே மலர்களை மலரச்செய்வதும் காய்கனிகளை உருவாக்குவதும் அதுவே. அந்த மாபெரும் ஆடலை பிரபஞ்ச ஒருமையின் ஒரு பகுதியாக ஆலயம் தன் வடிவத்தில் கொண்டிருக்கின்றனது.

மீண்டும் கவனியுங்கள், நீங்கள் ‘பார்ப்பதற்காக’ அல்ல. ஒட்டுமொத்தமாக ஒரு மெய்மையைச் சிற்பமாக்கும் பொருட்டு அவை அங்கே செதுக்கப்பட்டுள்ளன. எவருமே பார்க்கவில்லை என்றாலும் ஆலயம் குறைவுபடுவதில்லை. பாருங்கள், எவருமே பார்க்கமுடியாத இடங்களிலெல்லாம்கூட சிற்பங்கள் நிறைந்திருக்கும். சில ஆலயங்களில் மண்ணுக்கு அடியில்கூட சிற்பங்கள் புதைக்கப்பட்டிருக்கும். அவை அந்த ஆலயத்தின் இயல்பான நுண்கூறுகள், அவ்வளவுதான்.

அங்கே அவை இருப்பது மனிதனின் தேர்வு அல்ல. மனிதன் விலக்கக்கூடுவதும் அல்ல. அது படைப்பின் பகுதி. இயற்கையின் பகுதி. நன்று தீது என்பதற்கு அப்பாலுள்ளது அது. அந்த முழுமையையே ஆலயம் காட்டுகிறது. அத்தனை சிற்பங்களும் இணைந்த ஆலயமென்பது ஓர் ஒற்றைச் சிற்பம் என்று கொள்க. அது ஒரு மந்திரம். ஒரு மந்திரமென வெளிப்பட்ட ஒற்றைத் தத்துவம். ஒரு தெய்வத்தரிசனம்.

அதை தனித்தனியாக பார்ப்பதும், ஆராய்ந்து புரிந்துகொள்ள முயல்வதும், மதிப்பிடுவதும் ஆன்மிகவழி அல்ல. ஒற்றைப்பெருக்காக, ஒரே சிற்பமாக, கல்வடிவ மந்திரமாக,  பிரபஞ்சசாரத்தின் கண்கூடான வெளிப்பாடாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஆழுள்ளத்தில் அது சென்று அமையவேண்டும். அங்கே மெய்மையென நிறையவேண்டும். ஆலயவழிபாடு அதற்காகவே.

ஜெ

இந்தியப் பயணம் 15 – கஜுராஹோ

தேவியர் உடல்கள்
முந்தைய கட்டுரைகலையழிப்புக் களியாட்டு
அடுத்த கட்டுரைபெண்களின் பயணம்,கடிதம்