போரும் கண்ணனும்

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

“போர் எந்த மெய்ப்பொருளையும் உருவாக்குவதில்லை. உருவாக்கிய அனைத்தையும் அது உடைத்தழிக்கிறது. வெற்றிடம் எனும் மெய்ப்பொருள் மட்டுமே எஞ்சியிருக்கச் செய்கிறது.

“ஆகவேதான் காலந்தோறும் மெய்யறிவோர் போரை நாடி வருகிறார்கள். தங்கள் தலையை அறைந்து உடைத்துக்கொள்ள கரும்பாறைச் சுவரைத் தேடி வரும் வலசைப்பறவைகள்போல.”

ஞானாசிரியர்கள் போர்களை உவந்தவர்களே. இணைதலும் பின் பிரிந்து, பிரிவாற்றாமையால் உருகவும் ஏங்கவும் கண்ணீர் கொண்டு நின் கருணை என்று நோக்கியிருக்கவும் செய்யும் பக்தர் போலல்லாமல் அகத்தே அழிய வேண்டியவை அழிய நீ நான் என்றல்ல…. இரண்டல்ல என்னும் அத்வைதி போரை உடன்படுபவனே அல்லது போர் தவிர்த்தாக வேண்டியது என்று கொள்பவன் அல்ல. உடல் சார்ந்த புணர்ச்சி, உள்ளம் சார்ந்த உயர்நிலையில் பக்தியுடன் ஒப்பமைகிறது. உடல்கள் பொருதும் போர் உள்ளத்தளவில் தவத்துடன் ஒப்பமைகிறது.  அத்வைதி கருணை அற்றவன் என்று பக்தனும் பக்தன் கோழை என்று அத்வைதியும் காணும் வாய்ப்புள்ளது.  தம்வழி பயணிப்பதன் வழியாகவே மற்றதை, அத்வைதியின் கருணையை பக்தனும் பக்தனின் வீரத்தை அத்வைதியும் உணரக்கூடும் அல்லது ஒருவர் மற்றவரிடம் இருந்து பெறவும் ஆகும். என்று எண்ணுகிறேன்.

ஒருவகையில் கர்ணன் அத்வைதியின் அருகமைகிறான்.  அழியக்கூடிய யாவையும் அழிவிற்கு கொடுக்கப்பட்டுவிட்டது.  ஆத்மா அழிவற்றது என்கிறானே? கொடுப்பவன் தானே அத்வைதி.  பெறுபவன் தானே  பக்தன்.  சதா இறையே இறையே என்று பிச்சையெடுத்து மெய்மை பெறுபவன்தானே பக்தன்.  என்னை என்ன நினைத்தாய் இதுவெல்லமா நான்….இந்தா எடுத்துக்கொள் இவையெல்லாம் …நான் ஆன்மா ! அப்படி ஒரு ஆணவம்  கொண்டு அது முறிந்துஅழிய அழிந்து மெய்மை எட்டுபவன் தானே அத்வைதி.  அர்ஜுனன் கடவுளை தன் பக்கம் வைத்துக் கொண்டுள்ளான்.  கர்ணன் கடவுளை தன் எதிர்பக்கம் கொண்டுள்ளான்.

அர்ஜுனன்  கண்களுக்கு இவன் கொடியவன்.  இவன் கண்களுக்கு அவன் பேடி.  அந்தப்பக்கம் அழித்தும் இந்தப்பக்கம் அருளியும் இரண்டையும் மெய்மை சேர்க்க இடையில் அந்த இடையன் இருக்கிறான்.  மின்னலுக்கும் கதிருக்கும் மேலான மெய்மையல்லவா அவன்? அவன்தான் என்னையும் எவருடைய எழுத்துக்களை வழிபாட்டு உணர்வுடன் வாசித்து வருகிறேனோ எவருடன் மனதால் எப்போதும் ஒன்றுகிறேனோ, எவருடன் மனதால் பேசிக்கொண்டும் எண்ணிக்கொண்டும் இருக்கிறேனோ வெண்முரசு என்று இறையின் அருளியல் எவர் வழியே என்பால் பாய்கிறதோ அந்த என் ஆசான்பால் இணைக்கவேண்டும்.  என்னிடம் இருப்பவை என்ன கொஞ்சம் சிறுமை, தாழ்வுணர்ச்சி,  நிறைய மடத்தனம்.  கண்ணன் அறியாததா.

அன்புடன்

விக்ரம்

கோவை

***

முந்தைய கட்டுரைஇலக்கியமும் அமைப்புக்களும்
அடுத்த கட்டுரைபின்தொடரும் நிழலின் குரல் – கடிதங்கள்