புனைவு, தன்னுரையாடல்- கடிதம்

வெண்ணிற இரவுகள்- பிரவீன்

வணக்கம் ஜெ,

சமீபத்தில் தளத்தில் வெளியாகியிருந்த “வெண்ணிற இரவுகள்” பற்றிய கடிதம் ஒன்றை கண்டேன். இது வரை அக்கதையை படிக்காத வாசகர்களுக்கு உதவும். அறிமுக கட்டுரை என்று வகைப்படுத்தலாம்.

அக்கட்டுரையை படித்தப் போது நான் நிலவறைக் குறிப்புகள் படித்து பித்துப் பிடித்த நாட்கள் நினைவில் எழுந்தன. தஸ்தாயாவ்ஸ்கியின் எந்த ஆக்கத்தைப் படித்தாலும் அதில் மூழ்கி எழுவது ஒரு வகையான பழக்கம்போல் ஆகி விட்டது. என் நெருங்கிய தோழன் ஒருவன் சிறந்த ஆங்கில இலக்கிய வாசகன். நான் சற்று வினோதமாக நடந்துக்கொண்டால் அல்லது மிகவும் சோகக் கலையுடன் காணப்பெற்றால், “Dostoevsky படிச்சியா? நீ முதல்ல அந்தாள படிக்கறத நிப்பாட்டு” என்று மிகுந்த அக்கறையுடன் கூறுவான்.

இரண்டு வருடங்களுக்கு முன் நிலவறைக் குறிப்புகள் படித்து விட்டு தீவிரமாக நாவலின் சில வரிகளை யோசித்துக் கொண்டே இருந்தேன். அதை விட்டு வெளியேற அதை பற்றி எழுதினால் மட்டுமே சாத்தியம் என்றெண்ணி ஒரு நீண்ட கட்டுரையை எழுதினேன். கட்டுரை என்பதை விட தன்னுரையாடல் எனலாம். [புதினத்தால் உருவான தன்னுரையாடல்]

இது போன்ற கட்டுரை சாயலில் இருக்கும் தன்னுரையாடலுக்கு வாசகர்கள் இருப்பார்களா என்றறியேன். வாசகர்களிடம் நான் கோரி நின்றது “நாவலை படித்து விட்டு இக்கட்டுரையை படி. எனக்கு தோன்றியவை அனைத்தையும் இங்கே கொட்டி வைத்திருக்கிறேன். நீ இதையெல்லாம் படித்து விட்டு நீ உன் மனதுக்குள் என்னுடன் உரையாடு”. இரண்டு வருடத்திற்கு முன் இருந்த மன நிலை அது. I was immersed in that novel.

நான் என் அக அமைதிக்காக, நாவலிலிருந்து விடுபடவே இந்த நீண்ட கட்டுரையை எழுதினேன். சில நாட்களுக்கு முன் கூட இதே போன்று Charli Kaufman இன் உரையை ஒட்டி ஒரு கட்டுரை போன்ற தன்னுரையாடலை எழுதினேன்.

என் கேள்வி என்னவென்றால், இது போன்ற கட்டுரைகளுக்கு objective value இருக்கிறதா? பல நாவல்களில், ஒவ்வொரு பக்கத்திலும் அடிக்கோடிட வேண்டிய வாக்கியங்கள் நிறைய இருக்கும். அவை ஒவ்வொன்றையும் எடுத்து அதையொட்டிய எண்ணங்களை பகிர்ந்து கட்டுரை போன்று எழுத முயன்றிருக்கிறேன். இன்னொரு வகையில் இக்கட்டுரையை நான் running commentary போலவும் பார்க்கிறேன்.

பிரசன்ன கிருஷ்ணன்

***

அன்புள்ள பிரசன்னா,

எந்த எழுத்தும் உதவிகரமானதே. ஆகவே எழுதியதில் பிழையில்லை. அது உங்களுக்கு ஒரு வெளிப்பாட்டுநிறைவை அளித்திருக்கும். குழப்பங்களும் கொந்தளிப்புகளும்கூட எழுதினால் அமைதிகொள்பவைதான். ஆகவே அந்த எழுத்து பிழையானது அல்ல.

ஆனால் எழுத்தின் நோக்கம் என்பது ஒழுங்கமைவுதான். உள்ளம் ஒழுங்கற்ற பெரும்பாய்ச்சல். சிந்தனை என்பது அதில் நிகழும் ஒழுங்கு. தர்க்கம், அழகியல்வடிவம் ஆகியவை அவ்வொழுங்கை உருவாக்குபவை. அவற்றிலொன்று நிகழ்ந்தாகவேண்டும். இல்லையேல் அது வெறும்சொற்பெருக்கு.

ஏனென்றால் ஒருவரின் உள்ளம் இன்னொருவரிடம் தொடர்பகொள்வது தர்க்கம், அழகியல்வடிவம் ஆகிய இரண்டின் வழியாகவே. அவற்றிலொன்று இல்லையேல் அச்சொற்கள் தொடர்புறுத்தாமலாகிவிடுகின்றன. ஆகவே எழுத்தை நம்மை ஒழுங்கமைக்க, அதனூடாக தொடர்புறுத்தவே நாம் ஆள்கிறோம். எழுதுவதன் வழியாக நாம் நம்மை தொகுத்து முறைப்படுத்தவேண்டும். கட்டற்று எழுதிச்செல்லலாம். ஆனால் மறுபடியும் எழுதி அதை ஒழுங்குக்குள் கொண்டுவந்தாகவேண்டும்.

கட்டற்ற அகவெளிப்பாட்டுக்கு இலக்கியத்தில் இடமில்லையா? இல்லவே இல்லை. கட்டற்ற அகவெளிப்பாடு என்னும் புனைவுப்பாவனை இலக்கியத்தில் உண்டு. ஆனாலும் அது ஒரு வடிவம்தான். தேர்ந்த எழுத்தாளனால் உருவாக்கப்படுவது அது.

ஜெ

முந்தைய கட்டுரைஅஞ்சலி : நெடுமுடி வேணு
அடுத்த கட்டுரைவைரம்- கடிதங்கள்