இந்துமதத்தைக் காப்பது, கடிதங்கள்

இந்துமதத்தைக் காப்பது…

இந்துமதத்தைக் காப்பது – கடிதங்கள்

அன்புள்ள ஜெ

இந்துமதத்தைக் காப்பது பற்றிய ஒரு கட்டுரையை வாசித்தேன். இந்துமதத்தை காப்பதற்குரிய முக்கியமான வழி இந்துமதத்தை அறிந்துகொள்வது, இந்துமதத்தை கடைப்பிடிப்பது, இந்து மதத்தை காலத்திற்கேற்ப புதுப்பித்துக்கொள்வது ஆகிய மூன்றுதான். அதைப்பற்றி எவரும் பேசுவதில்லை. அறிஞர்களும் ஞானிகளும் காட்டிய வழி அது. ஆனால் அதை ஒரு கட்சிகட்டலாக, அரசியல் செயல்பாடாகவே பார்க்கிறார்கள். அங்கேதான் உண்மையில் இந்துமதம் வெறுமொரு அரசியல்தரப்பாக சுருங்கிவிடுகிறது

எம்.குணாளன்

***

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

இந்துமதத்தைக் காப்பது – திரு.  பழனிவேல் ராஜா அவர்களின் கேள்வியும், தங்கள் பதிலும்  தன் சமயத்தின்பால் நல்லெண்ணமும் நேர்மையும் உண்மையும் கொண்ட, தன்னை அறிஞன் முற்போக்குவாதி என்றோ அல்லது மதத்தை தான் தலையில் தங்குபவனாக  அதற்காகவே வாழும், தலை கொடுக்கும் தியாகியாக பாவனை செய்யவோ அல்லது தன்னை அவ்வாறானவனாக  நம்பிக்கொண்டிருக்கவோ செய்யாத சாதாரண இந்துவுக்கு முக்கியமானது.

இந்துத்துவம், அதன் சொற்பொருளில் “இந்துதன்மை” – அந்த  இந்துத்துவம் எப்போதும் இந்துக்களிடம் இருந்துகொண்டே தான் இருக்கிறது.  தன்வழி மட்டுமே சரி மற்றவர் தவறான வழிச்செல்வோர் என்று கருதாததன்மை, பிற சமயத்தவரை அவர்களது சமயத்தை மதிப்புடன், நட்புடன் நோக்குதல் என்ற அந்த இந்துத்தன்மை பெரிதளவில் சமயக் கடைப்பிடிப்பில் இல்லாத சமய அறிவும் பெரிதும் இல்லாத சாமானிய இந்துவிடமும் இருக்கத்தான் சேர்கிறது.  உண்மையில் இந்துத்துவத்தை அழிப்பவர்கள் இந்துத்வர்கள் என்று கூறிக்கொள்ளப்பவர்களே.   இந்துத்துவம் இயல்பாகவே இந்துவிடம் இருக்கிறது அது அவனிடம் இருந்தால் போதுமானது அதையே பிறசமயத்தவரிடம் எதிர்பார்ப்பது இந்துத்துவத்தை அழிப்பதாகும்.  நான் உன் கடவுளை வாங்குகிறேன் அல்லவா நீ என் கடவுளை வணங்கு என்கிறபோது, திணிக்க முற்படும்போது, அவ்வாறு செய்யாத பிற சமயத்தவரை தவறானவர் என்று காணத்தொடங்கும்போது  அவன்தன் இந்துதன்மையை இழக்கிறான்.

ஐரோப்பாவின் சமயம் சார்ந்த நோக்கு ஓரளவு அது மக்களைக் கட்டுப்படுத்தும் அரசு போன்ற ஓர் பக்கவாட்டு அமைப்பு  என்பதே என்று புரிந்துகொள்கிறேன்.  ஆனால் இங்கு சமயம் அவ்வாறல்ல.   எத்தனையோ கடும் நெருக்கடிகளை அரசின் ஆதரவின்மை, அமைப்புகளின் சிதைவை எல்லாம் கடந்து இந்துமதம் நிலைத்துள்ளது.  மதம் மெய்மைத் தேடலுக்கானது என்ற எண்ணம் கொண்ட ஒரு  சிலரேனும் இருக்கும்வரை இந்துமதம் அழியாது, அது மெய்மையாலேயே காக்கப்படுகிறது.  மெய்மையின் வழிகளை அடைக்க எந்த அரசோ அரசியலோ, செல்வமோ, மனித முயற்சிகளோ அப்படியொன்றும் திராணி உடையவை என்று கருதமுடியவில்லை.

அன்புடன்

விக்ரம்

கோவை

இந்து என உணர்தல்
இந்துமதமும் ஆசாரவாதமும்
ஜெயமோகன் நூல்கள் வாங்க
வடிவமைக்கு கீதா செந்தில்குமார்
முந்தைய கட்டுரைபயணம் இரு கேள்விகள்
அடுத்த கட்டுரைஅக்டோபர் 2 காந்தி ஜெயந்தி நிகழ்வு – குக்கூ காட்டுப்பள்ளி