அன்பான ஜெ,
நேற்று வெண்முரசின் மீள் வாசிப்பின் போது வேழாம்பல் தவத்தில் விதுரன், பெரும்போரொன்று வரவிருக்கிறது என்று பீஷ்மரிடம் சொல்லிக்கொண்டிருப்பதை படித்துக் கொண்டிருக்கும்போது திடீரென, கரிபடிந்து கிடக்கும் கடைசிநாளின் குருஷேத்திரம் நினைவில் வந்தது. ஏனோ அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்பட்டது.
ஒரே ஒரு கேள்விதான். வெண்முரசு உங்களை மீறி நிகழ்ந்திருந்தாலும் கூட, அது அழைத்துச் சென்ற தூரத்தை பின்னர் கண்ட போது நீங்கள் அவ்விதம் ஏதேனும் உணர்ந்தீர்களா. நீங்கள் அடைந்தது நிறைவா, வெறுமையா அல்லது வேறேதேனுமா.
என்னை சமன் செய்து கொள்ளவும் தான் கேட்கிறேன்.
அன்புடன்
நாகராஜன்.
முடிச்சூர்.
***
அன்புள்ள நாகராஜன்
விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல் இரண்டுமே நிறைவடைந்ததும் வெறுமையை, தனிமையை அளித்தன. கொற்றவை எழுதி முடித்ததும் நிறைவை அளித்த நாவல். வெண்முரசு வழியாக நான் வேறொருவனாக ஆனேன். கண்டடைந்தேன், தெளிந்தேன், கடந்து வந்தேன். வெண்முரசு ஒரு தீவிரமான யோகச்செயல்பாடு.
ஜெ
***