நேருவின் வாழ்க்கை வரலாறு- கடிதம்

நேரு-வாழ்க்கை வரலாற்றெழுத்திற்கு ஒரு சவால்-பி.கே.பாலகிருஷ்ணன்

அன்புள்ள ஜெ

நேருவின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதைப்பற்றிய கட்டுரையை வாசித்தேன். என்னுடைய முக்கியமான கேள்வி ஒன்று இருக்கிறது. நீங்களே எம்.ஓ.மத்தாய் எழுதிய கிசுகிசு வரலாறு பற்றி எழுதியிருந்தீர்கள். அதில் நேருவின் பெண் தொடர்புகள் பற்றி அவர் சொன்னவற்றை எடுத்து எழுதியிருந்தீர்கள். அப்படியிருக்க பி.கே.பாலகிருஷ்ணன் நேருவின் வரலாறு ஒளிவுமறைவுகளற்றது என்று எப்படிச் சொல்கிறார்? எம்.ஓ.மத்தாயின் நூல் வெளிவருவதற்கு முன்னரே எழுதப்பட்ட கட்டுரையா அது?

திவாகர்

***

அன்புள்ள திவாகர்,

எம்.ஓ.மத்தாயின் நூல் வெளிவந்த பின் எழுதப்பட்ட கட்டுரை அது. பாலகிருஷ்ணன் மத்தாயை தனிப்பட்ட முறையில் அறிந்தவர். அவரை ஒரு ஆளாக பாலகிருஷ்ணன் கருதவில்லை என்றே சொல்லவேண்டும்.

பாலகிருஷ்ணன் அக்கட்டுரையில் சொல்வது நேரு ‘ஒழுக்கமான’ பள்ளிவாத்தியார் என்றல்ல. ரகசியங்களற்ற மனிதர் என்றுதான். லேடி மௌண்ட்பேட்டன் முதல் பத்மஜா நாயிடு வரை நேருவின் தொடர்புகள் அனைவருக்கும் தெரியும். அவர் எதையும் ஒளிக்கவில்லை. பத்மஜா நேருவின் இல்லத்திலேயே தங்கியிருந்தார் என்பதையே எம்.ஓ.மத்தாயும் பதிவுசெய்கிறார்.

நேருவுக்கு பலவீனங்கள் உண்டு. அவர் தன் தங்கையின்பால் கொண்ட அன்பு அவரை அவரிடம் பணியச்செய்தது. தன் நண்பர்களான வி.கே.கிருஷ்ணமேனன் போன்றவர்களுக்கு அவர் மிகையாக இடம் கொடுத்தார். அவர்களின் குறைகளை காண மறுத்தார். பின்னாளில் இந்திரா காந்தியால் பிழைகளை நோக்கிச் செலுத்தப்பட்டார் – மிகப்பெரிய பிழை கேரளத்தின் முதல் கம்யூனிச அரசை கவிழ்த்தது.

ஆனால் இவையெல்லாமே வெளிப்படையானவை. இந்தப் போதாமைகளுக்குமேல் ஓங்கியிருப்பது அவருடைய இலட்சியவாதம், தன்னலமின்மை, இந்தியமக்கள்மேல் நிறைந்திருந்த பேரன்பு, இந்தியாவை ஆழ அகல புரிந்துகொண்ட மேதமை. அதுவே அவர்.

அரசியல்தலைவர்களின் வாழ்க்கை சூழ்ச்சிகளால், அரசியல் உள்ளோட்டங்களை தனக்கேற்ப கையாளும் சாதுரியங்களால் ஆனது. அது ஒரு சதுரங்க விளையாட்டைப் பார்க்கும் ஆர்வத்தை நமக்களிப்பது. நேருவிடம் அந்த வகையான ‘திரில்’ இல்லை. அவருடையது ஓர் அரசியல்வாதியின் வாழ்க்கை அல்ல. ஏனென்றால் அவர் அரசியலதிகாரத்திற்காக போராடும் நிலையில் என்றுமே இருந்ததில்லை.

நேரு அவரைச்சூழ்ந்திருந்தவர்களால் மதிக்கப்பட்டு பேணப்பட்டார். அவருடைய அரசியல் எதிரியாக இருந்த பட்டேலே காந்தியின் ஆணைக்குப்பின் அவருடைய காவலரும் மூத்தவருமாக ஆனார். நேருவின் வாழ்க்கை பரபரப்பற்ற ஒரு நிர்வாகி, ஓர் அறிஞனின் வாழ்க்கை. பாலகிருஷ்ணன் சொல்வது அதையே

ஜெ

முந்தைய கட்டுரைஉடலுக்கு அப்பால்…
அடுத்த கட்டுரைஆசிரியனுக்கு முன்னால் செல்லுதல், கடிதம்