தலித் அறிவுஜீவிகளை இழிவுசெய்பவர்கள் – கடிதம்

இலக்கியம், இடதுசாரிகள், தலித்தியர்

அன்புள்ள ஜெ

தலித்துக்கள் மீதான இடைநிலைச் சாதியினரின் மனநிலை பற்றிய உங்கள் குறிப்பை வாசித்தேன். என் எண்ணத்தில் எழுந்தவற்றையே எழுதியிருக்கிறீர்கள். நான் அடிக்கடி யோசிப்பதுண்டு. பேரா.ஸ்டாலின் ராஜாங்கம், பேரா.தர்மராஜ் போன்றவர்களின் கல்வித்தகுதியும் அவர்கள் எழுதிய நூல்களின் தரமும் தமிழில் தலைசிறந்த அறிஞர்களில் அவர்களைச் சேர்க்கின்றன. ராஜ்கௌதமன் போன்றவர்கள் பி.டி.சீனிவாச ஐயங்கார், ந.மு.வெங்கடசாமி நாட்டார் போன்றவர்களின் வரிசையில் வைக்கப்படவேண்டியவர்கள்.

ஆனால் அவர்களை இன்று இடைநிலைச் சாதியைச் சேர்ந்த குஞ்சுகுளுவான்களெல்லாம் அலட்சியமாக விமர்சனம் செய்கிறார்கள். அவர்களின் தகுதியை மட்டம் தட்டுகிறார்கள். அவர்களுக்கு ஆலோசனை சொல்கிறார்கள். தாங்கள் அவர்களுக்கு வழிகாட்டி அழைத்துச்செல்லவேண்டுமென நினைக்கிறார்கள். அது வேண்டுமென்றே செய்வது இல்லை. உண்மையிலேயே அவர்களுக்கு அந்த தெனாவெட்டு இருக்கிறது. நம்பித்தான் செய்கிறார்கள்.

அந்த தோரணையுடன் பேசுபவர்கள் யாரெல்லாம் என்று பார்த்தால் நீங்கள் குறிப்பிட்ட  புலியூர் முருகேசன், யமுனா ராஜேந்திரன், யுவகிருஷ்ணா, தமிழ் ஸ்டுடியோ அருண் போன்றவர்கள் அவர்களெல்லாம் என்ன எழுதியிருக்கிறார்கள்? என்ன ஆய்வுசெய்திருக்கிறார்கள்? என்ன வாசித்திருக்கிறார்கள்? வெறும் முகநூல்வம்பாளர்கள். பழங்காலத்தில் ஐம்பது வயதான தலித் முதியவரை பத்துவயதான ஊர்க்காரப் பையன் அடா புடா என அழைப்பான். அதே மனநிலைதான் இது.

இந்த கூட்டம் மறந்தும் இந்த தலித் ஆய்வாளர்களின் நூல்களை குறிப்பிடுவதில்லை. அவற்றைப்பற்றி ஒருவரி எழுதுவதில்லை. அவர்கள் ஆய்வுசெய்கிறார்கள் என்பதையே மறைத்துவிடுவார்கள். தங்கள் பட்டியல்களில் அந்தப்பெயர்களை மறைத்து தொ.பரமசிவம் போன்ற தங்களுக்கு வேண்டியவர்களையே முன்வைப்பார்கள்.

யோசித்துப்பாருங்கள். தொ.பரமசிவம் நூல்களையும் ராஜ் கௌதமன் நூல்களையும் ஒப்பிட்டுப்பாருங்கள். தொ.பரமசிவம் எந்த ஆய்வுமின்றி நினைவில் இருந்தவற்றை கற்பனை கலந்து அடித்துவிட்டவர். ஆய்வுலகில் அவரை அம்பலப்படுத்திக்கொண்டே இருந்தனர். ஆனால் அவர் இவர்களுக்கு ஹீரோ. ஏனென்றால் அவர் இடைநிலைச்சாதி ஆய்வாளர். ராஜ் கௌதமன் ஆய்வு முறைமையில் நின்று முழுமையான வாசிப்புடன் பெரும் ஆய்வுநூல்களை எழுதியவர். ஆனால் அவரை கண்டுகொள்ளவே மாட்டார்கள். அவர் அப்படியே மறக்கப்படவேண்டும் என எதிர்பார்ப்பார்கள்.

அவரை உங்களைப்போன்ற எவரேனும் கண்டுகொண்டு கௌரவித்தால் உடனே அவரை பார்ப்பன அடிவருடி என முத்திரைகுத்தி வசைபாடுவார்கள். ராஜ் கௌதமன் தன் தொடக்கம் முதலே சுந்தர ராமசாமிக்கு நெருக்கமானவர். சுந்தர ராமசாமி அவரை தொடர்ந்து முன்வைத்திருக்கிறார். ஆனால் அவர்கள் எதிரெதிர் கோணங்கள் கொண்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

இவர்களின் நோக்கம் ஒன்றுதான். தலித் அறிவியக்கம் தனக்கான சிந்தனையாளர்களுடன் முன்னெழக்கூடாது. இவர்களின் பிற்படுத்தப்பட்டோர் அரசியல் மட்டுமே இங்கிருக்கவேண்டும். தலித் அறிவுஜீவிகளை இவர்கள் புறக்கணிப்பார்கள். வேறெவரும் அவர்களை கண்டடையவும்கூடாது. இவர்கள் நினைப்பது இதுதான். காலச்சுவடு நூலாக போடாவிட்டால் ஸ்டாலின் ராஜாங்கம் எங்கே இருந்திருப்பார். ஸ்டாலின் ராஜாங்கம் இன்று ஆய்வாளராக கருதப்படுவது காலச்சுவடு அவர் நூல்களை வெளியிட்டு கல்வித்துறை முழுக்க கொண்டுசென்று சேர்த்ததனால்தான். அந்த வயிற்றெரிச்சல்தான் இப்படி எழுதவைக்கிறது.

இதிலுள்ள கசப்பூட்டும் அம்சம் புலியூர் முருகேசன், யமுனா ராஜேந்திரன், யுவகிருஷ்ணா, அருண் போன்ற மொக்கைகளுக்கு இருக்கும் அந்த தன்னம்பிக்கைதான். அது எங்கிருந்து வருகிறது? கேவலமான சாதிமேட்டிமைப்புத்தி. அதன்மேல் துளிகூட தன்விமர்சனம் இல்லாமல் திரிகிறார்கள். அறிவுலகத்தின் பூஞ்சைக்காளான்கள் இவர்கள். இவர்களால் தொடர்ந்து தலித் சிந்தனையாளர்கள் இழிவுசெய்யப்படுகிறார்கள்.

ஆ.பாரி

***

முந்தைய கட்டுரைபுதிய எழுத்தாளர்களுக்கு– கடிதங்கள்
அடுத்த கட்டுரைபேசாதவர்கள், கடிதங்கள்-3