அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,
வணக்கம், நான் உங்கள் இலக்கிய விமர்சனம் சார்ந்த புதிய காலம், நவீன தமிழ் இலக்கிய அறிமுகம் ஆகிய புத்தகங்களை படித்துள்ளேன். இப்போது இலக்கிய முன்னோடிகள் புத்தகம் வசித்து வருகிறேன், இந்த புத்தகத்தின் அட்டை படத்தில் உள்ள சிற்பம் பற்றி அறிய ஆவலாக உள்ளேன். அது குறித்து விளக்கினால் உதவியாக இருக்கும், இச்சிற்பம் தேர்ந்தெடுக்க காரணம் அறிய விரும்புகிறேன்.
இப்படிக்கு
குமார்
திண்டுக்கல்
அன்புள்ள குமார்,
இச்சிற்பம் பொதுவாக ஹொய்ச்சாளர்களின் எல்லா ஆலயங்களிலும் முகப்பில் காணப்படுகிறது. இது அவர்களின் குலச்சின்னம் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
இந்தியத் தொன்மத்தில் சகுந்தலைக்கு துஷ்யந்தனில் பிறந்த மைந்தன் பரதன். துஷ்யந்தன் சகுந்தலையை கைவிட்டமையால் அவள் மைந்தனுடன் காட்டில் வசித்து வந்தாள். வேட்டைக்குச் சென்ற துஷ்யந்தன் அங்கே சிங்கங்களுடன் விளையாடும் சிறுவனைக் கண்டான். அவன் எவர் என விசாரித்தபோது தன் மைந்தன் என உணர்ந்தான். அவன் மகனை திரும்ப அழைத்து வந்தான். பரதன் பேரரசன் ஆனான். அவன் ஆண்டமையால் இந்த நிலம் பாரதம் என பெயர் பெற்றது. ஹொய்ச்சாளர்கள் தங்களை பரதனின் வழிவந்தவர்கள் என முன்வைத்தனர்.
இன்னொரு தொன்மக்கதை உள்ளூர் சார்ந்தது. ஹொய்ச்சாளப் பேரரசு காவிரியின் தோற்றுமுகத்தில் உருவானது. சோழர்கள் தொடர்ச்சியாக மொத்தக் காவிரியையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயன்றவர்கள். ஆகவே காவிரி தோற்றுமுகத்திலுள்ள அரசர்களை தொடர்ச்சியாக வென்று வந்தவர்கள். சோழர்களை வென்று உருவானது ஹொய்சாளப்பேரரசு. சிற்பத்திலுள்ளது புலியின் ஒரு வடிவம். சாளன் என்னும் வீரன் சோழர்களின் புலியை வெல்வதுதான் இச்சிற்பம். வென்றசாளன் என்பதே ஹொய்சாளன் என்பதன் பொருள். இதை சில ஆசிரியர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். சிலர் அன்றிருந்த கலிங்கப்பேரரசின் சின்னம் சிங்கம், அதன் மீதான வெற்றியையே இச்சிற்பம் குறிக்கிறது என்கிறார்கள்.
இந்தப் படம் ஏன் இலக்கிய முன்னோடிகள் நூலுக்கான முன்னுரையாக அமைந்தது என எனக்குத் தெரியாது. அது நற்றிணை பதிப்பகத்தின் முடிவு
ஜெ