கலையழிப்புக் களியாட்டு

சென்னையை அடுத்த மகாபலிபுரத்தை ஒட்டியுள்ளது புலிக்குகை. 8ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த தொல்பொருள் சின்னம் அளிக்கும் உள அனுபவம் சாதரணமானதல்ல. என்ன காரணம் என்று தெரியாமல் பாதியில் கைவிடப்பட்ட சிற்பகலை அற்புதம். மகாபலிபுரத்தை போல் கூட்டம் அதிகம் வருவதில்லை என்பதால் நிதானமாக பல மணிநேரம் இருந்து அனுபவிக்கலாம். கால மாற்றம் காணாத கடல் காற்றும், அலையோசையும் சென்னை வெயிலும் நந்தி வர்மனின் காலத்துக்கே கற்பனையை இட்டுசெல்லும். பத்து காசு கூட வாங்காமல் உள்ளே அனுமதிக்கிறார்கள்.

ஆனால் அவ்வப்பொழுது வரும் இளைஞர் கூட்டம் ஒரு தொல்பொருள் சின்னம் என்ற பிரக்ஞையே இல்லாமல் குரங்கு மனநிலைக்கு சென்றுவிடுகிறார்கள். கடந்த ஞாயிறு சென்றபொழுது எழேழெட்டு இளைஞர்கள் வந்தார்கள். ஒவ்வொரு சிற்பமாக ஏறி கூரை வரை சென்று பல கோணங்களில் செல்பி எடுத்துகொண்டார்கள். நீங்கள் ஏறி மிதித்து கொண்டிருக்கும் இந்த சிற்பத்தின் விலை நூறு கோடி ருபாய் இருக்கும் தெரியுமா என்று சொல்லியிருந்தால் விழுந்து கும்பிட்டு இருப்பார்களோ என்னவோ !!
பத்து நிமிடத்தில் இறங்கி ஆரவாரமாக வடக்கு பக்கம் இருந்த சுப்பிரமணியர்  கோவில் பக்கம் போனார்கள். சங்க காலத்து கட்டிடம். ஏற்கனவே கற்களை அடுக்கி ஒரு மாதிரி பாதுகாத்து கொண்டிருக்கிறார்கள். இந்த வானர கூட்டம் என்ன செய்ததென்று தெரியவில்லை.
கோகுல்
ஆலயம் எவருடையது?
ஆலயம் ஆகமம் சிற்பம்
நம் ஆலயங்களுக்கான ஐந்து நெறிகள்
அன்புள்ள கோகுல்,
இந்த நடத்தை தமிழகமெங்கும் அத்தனை பண்பாட்டு மையங்களிலும் காணக்கிடைப்பது. தமிழ் சினிமாவில் எங்கேனும் ஏதேனும் ஹீரோ தமிழகத்தின் பண்பாட்டுச் சின்னங்களின் முக்கியத்துவம் பற்றி எதையேனும் சொல்லியிருக்கிறாரா? மாறாக அங்கே டான்ஸ் ஆடுகிறார், சண்டைபோடுகிறார், சிலைகளின்மேல் ஏறி நின்று கூத்தாட்டம் போடுகிறார். அதைத்தான் இவர்களும் செய்கிறார்கள்.
ஆனால் இதை விட மோசமாக பக்தர்கள் சிற்பங்கள்மேல் கால்வைத்து ஏறிக்குதித்து சாமி கும்பிடுவதை மதுரை பேராலயத்திலும் சுசீந்திரம் கோயிலிலும் கண்டிருக்கிறேன். சீரியல் லைட் போடுவதற்காக சிற்பங்களை துளையிடுவதை, சிற்பங்களின்மேல் தடுப்பு மூங்கில்களைக் கட்டி வைப்பதை கண்டிருக்கிறேன்.
ஜெ
***
முந்தைய கட்டுரைஒரு குடும்பம் சிதைகிறது – சுரேஷ் பிரதீப்
அடுத்த கட்டுரைபாலியலின் ஆன்மிகம்