கேரள கம்யூனிசமும் தலித்துக்களும்
அன்புள்ள ஜெ
கேரள கம்யூனிசமும் தலித்துக்களும் ஒரு முக்கியமான குறிப்பு. இங்கே தரப்புகளை எடுத்துக்கொண்டு காழ்ப்புகளைக் கொட்டும் அரசியல் விவாதங்களே நடைபெறுகின்றன. அக்கட்டுரைபோல நம்பகமான தரப்பாக, நடுநிலைப்பார்வையாக ஒலிக்கும் கட்டுரைகள் மிகமிகக் குறைவு. கேரள தலித்துக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்பதை ஆழமாக காட்டும் கட்டுரை
அழகுவேல் முருகேசன்
***
அன்புள்ள ஜெ
தமிழ்நாட்டிலும் தலித்துக்கள் சந்திக்கும் உண்மையான பிரச்சினை பிஸினஸில் அவர்களுக்கு இடமில்லை என்பதுதான். அவர்கள் அரசியலில் இனிமேல் பெரிதாக சாதிக்கமுடியாது. இட ஒதுக்கீடு அரசுவேலை எல்லாம் எல்லைக்குட்பட்டவை. சிறுதொழில்களில் அவர்கள் ஈடுபட்டு பணமீட்டியாகவேண்டும்.
அதற்கான வழிகள் தமிழ்நாட்டில் இல்லை. ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட சமூகமும் தலித் மக்களுக்கு எதிராகவே இருக்கிறது. சாதாரணமாகச் செய்யப்படும் உணவுத்தொழில், கடைத்தொழில் போன்றவற்றை தலித்துக்கள் செய்யமுடியாது. இங்கே எல்லா சந்தைகளும் பிற்படுத்தப்பட்டோர் கையிலேயே உள்ளன. செருப்பு, இரும்பு போன்றவை முஸ்லீம்களின் கையில் உள்ளன. கழிப்பறை காண்டிராக்ட் கூட தேவர்களே மிகுதி.
தலித் மக்கள் செய்யக்கூடிய தொழில்களே இல்லை. தலித்துக்கள் போராளிகள், அடாவடிக்காரர்கள் என்று சொல்லியே மக்கள் மனதில் நிறுத்திவிட்டார்கள். அதை உணர்ந்து அந்த தலித் அடையாளத்தையே துறக்க கிருஷ்ணசாமி முயல்கிறார். அது அவர்களுக்கு புதிய அடையாளத்தை அளிக்கிறது. அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தொழில்களில் காலூன்றிக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள்தான் இன்னமும் விவசாயக்கூலி, அடிமைத்தொழில் என வாழ்கிறோம். அதிகபட்சம் சர்க்கார்வேலைதான் எங்களுக்கு
குணா
***
அன்புள்ள ஜெ,
கேரள தலித்துக்கள் பற்றிய கட்டுரை சிறப்பான விளக்கம். நடுநிலை நின்று எழுதப்பட்டது. கேரளத்தின் காலனிதான் ஆதிவாசிகள் என நீங்கள் எழுதிய குறிப்பு நியாபகம் வந்தது.
கணேஷ்குமார்
***