புகழ், கடிதங்கள்

புகழ்- ஒரு கேள்வி

அன்புள்ள ஜெ

சமீபத்தில் தளத்தில் வெளிவந்த சிறு கட்டுரை ஒரு புதிய புரிதலை உருவாக்குவதாக இருந்தது. புகழை விரும்பாதவர் என்பது இன்றைக்கு நமக்கு ஒரு பெரிய விழுமியமாகத் தெரிகிறது. ஆனால் நம் முன்னோர் தங்கள் முன்னோரின் புகழை நிலைநிறுத்த முயன்றுகொண்டே இருந்தவர்கள். அதைப்பற்றி எப்போதுமே பேசியவர்கள். எங்கள் வீட்டில்கூட குடும்பப்புகழ், முன்னோர் புகழ் இரண்டையும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். புகழை ஏன் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்றுதான் நான் நினைப்பேன். சலிப்புடன் அதைச் சொல்லியிருக்கிறேன்

ஆனால் இந்தக்குறிப்பு புகழ் என்பது வேறு பாப்புலரிட்டி என்பது வேறு என்று சொல்கிறது. வடமொழியிலும் கீர்த்தி யஸஸ் என்னும் சொற்கள் உள்ளன. அவை வேறுவேறானவை. அதைப்போலத்தான். நற்பெயர் என்பது வேறு நாலுபேருக்கு தெரிந்திருப்பது வேறு. நற்பெயர் புண்ணியம்போல ஈட்டப்படவேண்டிய ஒரு செல்வம் என்று தெரிகிறது. நன்றி

ஆ.சிவஞானம்

***

அன்புள்ள ஜெ

தோன்றிற் புகழொடு தோன்றுக என்றால் உயர்குடியில் தோன்றுக என்ற அர்த்தம் பல நூல்களில் உள்ளது. ஆனால் அது புகழுடைய குடும்பத்தில் பிறப்பதன் பேறு பற்றித்தான் சொல்கிறது. நம் முன்னோர் நமக்கு சேர்த்துவைக்கும் பெருஞ்செல்வம் புகழே என்று சொல்கிறது. அது செல்வம் என்பதனால் அதை சரியாக செலவழிப்பதும், அதை இழக்காமலிருப்பதும் நம் பொறுப்பும் ஆகிறது. நாம் நம் வழித்தோன்றல்களுக்குச் சேர்த்துவைக்கவேண்டியதும் புகழ்தான்.

ஆர்.மாணிக்கவாசகம்

முந்தைய கட்டுரைஇரு சொற்கள்
அடுத்த கட்டுரையெஸ்.பாலபாரதி