தன்னைச் செலுத்திக்கொள்ளுதல்

அன்புள்ள ஜெயமோகன்

இரண்டு விதமான செயல்கள் உள்ளது.

ஒன்று: மீட்பளிக்கும் செயல் (கலை இலக்கியம் போன்றவற்றை படைத்தல், உள்வாங்குதல்).

இரண்டு: உலகியல் வாழ்வில் ஈடுபடுதல்(பொருளீட்டுதல், போட்டித் தேர்விற்கு படித்தல், அலுவலகப் பணி).

இவ்விரண்டும் சில புள்ளிகளால் இணையத்தான் செய்கிறது. ஒன்று மற்றொன்றை நிரப்புகிறது. பொருளீட்டுதல் மூலம் உலகியல் சிக்கலின்றி இலக்கியத்தில் ஈடுபடலாம்; போட்டித் தேர்விற்கு உழைப்பை முதலீடு செய்வதன் மூலம் அதில் வென்று சுமையின்றி கலைக்கான, இலக்கியத்திற்கான பொழுதை பெருக்கிக் கொள்ளலாம்.

ஆனால் முதலாவது வகை செயலுக்கு மனதளவில் கிடைக்கும் ஊக்கத்தைப் போன்று ஏன் இரண்டாவது வகைக்கு கிடைப்பதில்லை. போட்டித் தேர்வில் வென்றால் இலக்கியமும் செழிக்குமே, இருப்பினும் ஏன் என்னால் தீவிரமாய் ஈடுபட முடியவில்லை? இலக்கியம் என்றும் வேண்டுமெனில் உலகியலையும் வெல்ல வேண்டும். நிர்ப்பந்தம் புரிந்தும் ஏன் செயலூக்கமில்லை? உலகியல் ரீதியான செயலுக்கு ரஜோ குணம் வேண்டுமென குறிப்பிட்டிருந்தீர்கள். ரஜோ குணத்தை எப்படி வளர்த்து கொள்வது? போட்டி தேர்விற்கும், அலுவலக வேலைக்கும் தேவையான வென்றெடுக்கும் வேகத்தை எவ்வாறு உருவாக்குவது?

அன்புடன்

பாலமுருகன்

திருநெல்வேலி

***

அன்புள்ள பாலமுருகன்,

ஏறத்தாழ இதேபோன்ற கடிதங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. திரும்பத் திரும்ப அவற்றுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன். மீண்டும் சொல்கிறேன். உலகியல் செயல்பாடுகள் கண்கூடானவை. அவற்றால் நமக்கு கிடைக்கும் வாழ்க்கை வசதிகளும் சமூகக் கௌரவமும் திட்டவட்டமானவை. ஆகவே அவை அனைவராலும் விரும்பப்படுகின்றன, ஊக்குவிக்கப்படுகின்றன. நம் அகவுலகச் செயல்பாடுகளான கலையிலக்கிய ஈடுபாடுகள் நம்மால் மட்டுமே அறியப்படுபவை. அவற்றுக்கு வெளியே இருந்து ஊக்கமென ஏதும் கிடைக்காது.

ஆனால் அகவயச்செயல்பாடுகளை நாம் ஊக்கவேண்டியதில்லை, நம் இயல்பே அவற்றை நாடுவதென்பதனால் அவை இயல்பாகவே நிகழும். புறவயச்செயல்பாடு என்பது நம்மை ஊக்குவித்து நாமே ஈடுபடுத்திக் கொள்ளவேண்டியது. அவ்வாறு ஊக்கப்படுத்தவில்லை என்றால் ஆர்வம் இயல்பாக அணையவும்கூடும்.

சில தருணங்களில் புறவயமான கல்வி, தொழில் போன்றவற்றை நாம் முழுமூச்சாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும். கவனம் சிதறாமல் சிலகாலம் ஈடுபடவேண்டியிருக்கும். குறிப்பாக போட்டித் தேர்வுகளின்போது. குறுகியகாலம் நம் அத்தனை விசைகளையும் ஒன்றில் குவித்துச் செயல்படுவது அது. அப்போது தற்காலிகமாக நம் அகவய ஈடுபாடுகளை ஒத்திவைத்தே ஆகவேண்டும்.

நம் ஆற்றலும் கவனமும் இயல்பாகக் குவியாத இடங்களில், அதாவது தொழில், உலகியல்கல்வி போன்றவற்றில், தீவிரமாக ஈடுபடுவதற்கு நாம் நம்மை தயாரித்துக் கொள்ளவேண்டும். கவனத்தை குவிப்பதற்கான பயிற்சிகளை நாமே கண்டடைய வேண்டும். அது ஒவ்வொருவருக்கும் ஒருவகை. உதாரணமாக, எனக்கு எதையும் எழுதினால்தான் நினைவில் நிற்கும். சிலருக்கு செவிகளில் கேட்டாகவேண்டும். சிலருக்கு விவாதிக்கவேண்டும்.

ரஜோகுணம் என்பது வெல்வதற்கான ஆற்றலை அளிக்கும் உளநிலை. அதற்கு மூன்றுபடிகள். ஒன்று, தன் ஆற்றலை நம்புவது. தன்னை நிலைநிறுத்த வேண்டுமென விரும்புவது. இரண்டு, தன்னுடைய குறைநிறைகளை கண்டடைந்து தனக்கான வழிகளை கண்டடைவது. மூன்று, ஊக்கம் தளரும்போதெல்லாம் தன்னை புத்துயிர்ப்புடன் எழுப்பிக்கொள்வது. எவருமே தளராத ஊக்கம் கொண்டவர்கள் அல்ல. தன்னைத்தானே தூண்டி ஆற்றல்கொண்டு மேலெழுபவர்களே வெல்கிறார்கள்.

ஜெ

***

முந்தைய கட்டுரைமனமென்னும் மாய அன்னம்
அடுத்த கட்டுரைவெண்முரசு, சிகாகோ- கடிதம்