ஞானி- கடிதம்

ஞானி நூல் வாங்க

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

கோவை ஞானி அவர்கள் பற்றிய நினைவுக் கட்டுரைகளை வாசித்தேன். அவை ஒரு புனைவை வாசிக்கும் அனுபவத்தை அளித்தன. அந்த கட்டுரைகளில் தாங்கள் அவரது ஆளுமை, மார்க்சிய மற்றும் தமிழ் இலக்கியத்தில் அவரது பங்களிப்பு, உங்கள் வாழ்வில் அவரது இடம் ஆகியவற்றை தெளிவாக வரையறுத்திருந்தீர்கள் அதேசமயம் அவரது மனமாற்றங்கள், முரண்பாடுகளை தொட்டுக்காட்டி அதனை வாசகர்களின் ஊகத்திற்கு விட்டுவிட்டீர்கள்.

கட்டுரையில் மேலும் சில ஆளுமைகளை சுட்டிக்காட்டியிருந்தது, வாசகர்கள் அவர்களை நோக்கி சிந்திக்கவும் தூண்டுகிறது. அதுவே இவற்றில் உள்ள புனைவிற்கான அம்சமாக நான் காண்கிறேன். இந்த கட்டுரைகளில் எனக்கு மிகவும் கிளர்ச்சியூட்டியது விஷ்ணுபுரம், கொற்றவை, பின் தொடரும் நிழலின் குரல் போன்ற நாவல்களை எழுதுவதற்கான காரணங்கள், தூண்டுதல்கள், அலைக்கழிப்புகளை குறிப்பிட்டிருந்தது. அவை அந்த நாவல்களை இன்னும் ஆழமாக புரிந்துகொள்ள உதவும்.

எனக்கு எந்தக் கொள்கை அரசியல் சார்பும் கிடையாது. முதலில் மார்க்ஸியம், கம்யூனிஸம் போன்ற அரசியல் கொள்கைகளின் பெயர்களின் மேல் ஒரு மோகம். அவை என்ன என்று தெரிந்துகொள்வதில் மட்டுமே ஆர்வம். அந்த பெயர்களை மக்கள் திரும்பத், திரும்ப சொல்லி அதற்கு ஒரு கனத்தை, உணர்வை ஏற்றி அதை படிமமாக மாற்றிவிட்டதனால் தான் அவ்வாறு தோன்றுகிறது என்று நினைக்கிறேன். தற்போது அவை கிட்டதட்ட வெறும் படிமம் மட்டுமாக ஆகிக்கொண்டிருப்பதையே இந்த கட்டுரைகளின் வழியே காண்கிறேன்.

கட்டுரையைப் படித்து கொண்டிருக்கும் தோறும் மனதில் ஒவ்வாமையே மேலெழுந்து கொண்டிருந்தது. அது கொள்கை பிடிப்பால் நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கும் அழிவுகளை நினைத்தே. அவை தனிமனிதர்களை ஒரு இரும்புச்சட்டகம் போல ஆக்கிவிடுகிறது. அதை ஞானி போன்ற ஆளுமைகள் பிரக்ஞை பூர்வமாக பயன்படுத்தினாலும் இரும்பு சட்டகத்திலிருந்து வெளிவரமுடியாமையே இந்த கட்டுரைகள் காட்டுகின்றன.

ஆனாலும் எஸ்.என்.நாகராஜன், ஞானி போன்ற ஆளுமைகள் மார்க்ஸியத்தை அப்படியே நகல் எடுக்கும் பலநூறு போலிகள் அல்லாத அசல் சிந்தனையாளர்களே. வாழ்க்கை என்பது இப்படி பல்லாயிரம் விசைகளின் முரணியக்கத்தினால் இயங்குவது, அதை யாராலும் மாற்ற முடியாது ஆனால் அறிந்துகொள்ளலாம். அதற்கான வழியே இந்த கட்டுரைகளும். எனினும் ஞானி, எஸ்.என்.நாகராஜன் போன்ற நேர்மறை விசை சில என்றால், எதிர்மறை விசைகள் பலநூறாக இருக்கும் முரண்பாடே ஒவ்வாமையை அளிக்கிறது. ஆனால் எந்த காலகட்டத்திலும் நேர்மறை விசை வென்றே தீரும் என்பதே நமக்கு நம் மரபால் அளிக்கப்பட்டிருக்கும் செய்தி. கிருஷ்ணர், ராமர், காந்தி ஆகியவர்கள் அதற்கான சான்றுகள். அதை நினைக்கும்போதே அந்த ஒவ்வாமை அகன்றுவிடுகிறது.

இந்த கட்டுரைகளில் வாசகர்களுக்கு திறப்பாக அமைவதென்று நான் கருதுவது, மார்க்ஸியம், கம்யூனிஸம் போன்ற கொள்கைகளின் வரையறை, அவை எழுந்து வந்ததற்கான தேவை, அது உலகம் முழுக்க ஏற்படுத்திய விளைவுகள், பண்பாட்டிலும் தனிமனிதர்களிலும் அதன் தாக்கம், அவைகளின் தற்போதைய நிலை. இவற்றையெல்லாம் ஒரு வாசகன் ‘Das capital’ லிருந்து ஆரம்பித்து வாசித்து தெரிந்துகொள்ள குறைந்தது ஐந்து வருடங்களாவது ஆகும் என்று நினைக்கிறேன்.

ஆனால் நீங்கள் ஞானி அவர்களுடன் நிகழ்த்திய விவாதங்களின் ஊடாக அவை வாசகனுக்கு சிலமணி நேரங்களில் கடத்தப்பட்டுவிடுகிறது. இதுவே நீங்கள் இன்றைய வாசகர்களுக்கு ஆற்றும் ஆகச்சிறந்த பணியாகும். இன்று நேரமின்மையே மிகப்பெரிய சிக்கல். உங்கள் தத்துவ, இலக்கிய வரையறைகள் மற்றும் விமர்சனங்களைக் கூர்ந்து வாசித்தாலே தேவையல்லாதவற்றை நிராகரித்துவிட்டு, தேவையானவற்றைப் பயின்று நேரத்தைப் பேணிக்கொள்ளலாம். இது தங்களால் வாசகர்களுக்கு அளிக்கப்படும் மிகப்பெரிய அன்பளிப்பே.

கடைசியாக, இந்த கட்டுரைகளின் வழியே மார்க்ஸிசம், கம்யூனிஸம் பற்றிய விளக்கங்கள், அறிவுத்தள உரையாடல்கள் அனைத்தையும் தாண்டி நான் எடுத்துக்கொள்ள விழைவது ஞானி தங்கள் கரங்களை குழந்தையை போல பற்றிக்கொண்டு உதிர்க்கும் புன்னகையின் தருணங்களையே ஏனெனில் அவர் ஒருமைநிலையை உணர்ந்திருக்கிறார் எனினும், அவரது அகங்காரத்தாலோ, கூரிய தர்க்கபுத்தியாலோ அதனை ஏற்க மறுத்து மார்க்ஸியத்தின் எல்லைக்குள்ளேயே நின்று செயல்பட்டவர்.

கருத்துக்களை கருத்துக்களால் மட்டுமே எதிர்கொண்டு, சக மனிதர்களின் கரங்களை அன்பாய் பற்றி சிரித்த ஞானி. அனைத்து மனிதர்களின் கரங்களையும் அன்போடு பற்றுவதற்காகவே மார்க்ஸியத்தை ஆராய்ந்த லட்சிய மார்க்ஸிஸ்ட் ஞானியையே என்னோடு எடுத்துச்செல்ல விழைகிறேன்.

வேலாயுதம் பெரியசாமி

ஞானி முன்னுரை
ஞானி நினைவுகள்- மீனாம்பிகை
முந்தைய கட்டுரைதனிக்குரல்கள், கடிதங்கள்
அடுத்த கட்டுரைடேவிட் அட்டன்பரோவின் ‘Dynasties’ தொடர் – ஒரு ரசனைக்குறிப்பு- சுசித்ரா