தொழில், இலக்கியம்

வி.ஜீவானந்தம், ஈரோடு

வணக்கம் ஜெ,

நலம் தானே!

நான் இலங்கையை சேர்ந்தவன். தொழில்முறையில் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர். உங்களிடமிருந்து இதுவரை எனக்குள் எழுந்த அதிகமான கேள்விகளுக்கு பதில் கிட்டியிருக்கிறது.அதனாலேயே நீங்கள் என் ஆசானாகிப்போனீர்கள். சில மாதங்களாக என் மனதை நெருடும் இந்தக்கேள்விக்கு உங்களிடம் பதில் கேட்க விழைகிறேன்.

எதையாவது வாசித்தால் தான் தூக்கம் வருவது சிறுவயதிலிருந்து எனக்கு ஒரு பழக்கமாகிப்போனது. அப்பாவின் நூலகத்தில் இருந்தே என் வாசிப்பும் ஆரம்பமானது. ஆங்கில இலக்கியத்தில் பரீட்சயம் அதிகமாகவும் இருந்தது. இங்குள்ள கல்விமுறையில் வருடாந்தம் விவாதப்போட்டிகள் நடக்கும்.அதில் பங்குபற்றி பேசவே தமிழ் இலக்கியம் கற்கலானேன். பிறகு கல்லூரி நாட்களில் கூட நேரம் வகுத்து அதிகம் வாசிக்கப்பழகிப்போனேன். கல்லூரியிலிருந்து வெளியாகுகையில் தமிழின் செவ்வியல் வரிசையை ஓரளவு வாசித்து முடத்துவிட்டதாக மூளை சொல்லியும் மனம் ஏற்கவில்லை. இதுவரைக்கும் என் வாசிப்பு நீண்டுகொண்டே செல்கிறது.

நா.மகாலிங்கம்

(விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தைப்போல) ஆரோக்கியமான உரையாடல்களை நடாத்த இங்கு இலக்கிய வட்டம் ஒன்று இல்லை என்ற எண்ணம் மேலெழ நண்பர்கள் சிலர் சேர்ந்து வாசகர் குழுமம் ஒன்றை தொடங்கி பேசலானோம். அதன் கூடுகைகள் வழியாக இலக்கியப்புரிதலை ஒரு எல்லைவரை கண்டுகொள்ள முனைகிறோம். அதற்கு மேலாக புத்தகங்களாக வாங்கி குமிக்கலானேன். தினசரி வாசிக்கவேண்டும் என்ற வேட்கை உண்டாகிற்று. தினமும் வைத்தியனுக்கு ஏன் இலக்கியம்? இலக்கியம் பேச உனக்கு என்ன தகுதியிருக்கிறது? என்ற கேள்விகள் என் குடும்பமட்டத்திலேயே வலுப்பெறத்துவங்கிவிட்டன.

முதலில் அவற்றை கடந்து வந்த போதிலும் இப்போதெல்லாம் சற்று முடியாதுள்ளது. அப்படியாக இலக்கியம் பேச ஏதாவது தகுதி வேண்டுமா? இவர்கள் தான் பேசவேண்டும் என்ற வகையறா உள்ளதாக எனக்கு தெரியவில்லை. என் மனம் ஒரு சிறுகதையாவது எழுத வேண்டும் என்ற உணர்வு மேலெழும் போது மனதில் மேலும் இரண்டு கேள்விகள் உருவாகின்றன. ஒன்று இவ்வளவு காலமும் தமிழில் எழுதப்படாத ஒன்றையா நான் எழுதிவிடப்போகிறேன் என்பது மற்றையது நான் எழுதுவதை மருத்துவனுக்கு எழுத்து ஒரு கேடா என்று சமூகம் நச்சரிக்குமா என்பது? . உங்களிடமிருந்து இந்த குழப்பத்திற்கு அவசியம் பதில் கிட்டும் என நம்புகிறேன்.

நன்றி

அன்புடன்,

ஷாதீர்

கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிருஷ்ணன்

அன்புள்ள ஷாதீர்,

எவருக்கானாலும் இரண்டு வாழ்க்கை உண்டு. அகவாழ்க்கை, புறவாழ்க்கை. புறவாழ்க்கை எனும்போது தொழில், சமூகம் என பல தளங்கள் அதற்கு உண்டு. அகவாழ்க்கை என்னும்போது காதல்ம் காமம், குடும்பம் போன்றவற்றைச் சொல்கிறார்கள். ஆனால் அது பழைய வரையறை. ஏனென்றால் இன்று அவையும் புறவாழ்க்கையென ஆகியிருக்கின்றன. அதற்கப்பாலுள்ள அகவாழ்க்கை ஒன்று உண்டு. அது நமக்கு மட்டுமே உரியது. நம் புறவாழ்க்கையிலுள்ள இடைவெளிகளை நிறைவுசெய்வது.நம் புறவாழ்க்கையைச் சமன்செய்வது.

அந்த அகவாழ்க்கையை நீங்கள் மதத்தைக் கொண்டு நிறைவுசெய்தீர்கள் என்றால்  இங்கே எவரும் எதுவும் சொல்லமாட்டார்கள். மருத்துவனுக்கு இறைவழிபாடு எதற்கு என்று கேட்கமாட்டார்கள். ஏனென்றால் அதன் தேவையென்ன, முக்கியத்துவமென்ன என அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. இலக்கியத்தின் தேவை என்,ன முக்கியத்துவம் என்ன என்று தமிழ்ச்சமூகத்திற்குப் பொதுவாகத் தெரியாது. அதை பொழுதுபோக்குக்குக் கதைபடித்தல் என்றுதான் புரிந்துவைத்திருக்கிறார்கள். ஆகவேதான் இந்த குற்றச்சாட்டு எழுகிறது.

புறவாழ்க்கை மட்டுமே கொண்டவர்களைக் கூர்ந்து பாருங்கள். சட்டென்று அவர்கள் ஒரு பெரும் சலிப்பிற்குள் சென்று விழுவதைக் காண்பீர்கள். தொழில் வளர்ச்சியடைந்து பொறுப்பும் நெருக்கடியும் கொண்டதாக ஆகுந்தோறும் அச்சலிப்பு பெருகுகிறது. அச்சலிப்பை வெல்ல அவர்கள் பெரும்பாலும் குடிக்கிறார்கள். பலவகையான கேளிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். சிலர் சம்பந்தமில்லாத தொழில்களில் ஈடுபடுகிறார்கள். முதலீடுகளால் விளையாடுகிறார்கள். என்ன செய்தாலும் அந்தச் சலிப்பு நீங்குவதில்லை. டாக்டர்களில்தான் அப்படி முழுக்கச் சலிப்படைந்தவர்களை நிறையப் பார்த்திருக்கிறேன்.

இயகக்கோ சுப்ரமணியம்

நமக்கு உகந்த அகவாழ்க்கை நம்மை அப்படி சலிப்படையாமல் காக்கும். மேலைநாடுகளில் ஒவ்வொருவருக்கும் அப்படி ஒரு அகவாழ்க்கை இருக்கவேண்டுமென்னும் கருத்து உண்டு. நமக்கே உரிய உலகம் அது. ஒரு மருத்துவரைச் சந்தித்திருக்கிறேன், அவருடைய உலகம் வண்ணத்துப்பூச்சிகளை சேகரிப்பது. உலகம் முழுக்கச் சென்று சேகரிப்பார். அவருடைய தொழிலின் சலிப்பை வெல்ல, தொழிலில் ஆர்வம் குறையாமல் தொடர அது அவருக்கு உதவுகிறது.

இலக்கியம், கலை, இசை போன்றவை இன்றைய வாழ்க்கையின் நெருக்கடியும் போட்டியும் மிக்க சூழலில் மிகமிக இன்றியமையாதவை. அவை உண்மையில் போட்டிநிறைந்த புறவாழ்க்கைக்கு எதிரானவை அல்ல, உதவியானவை. அவை கவனத்தை திசைதிருப்பி தொழில்த்திறனை அழிக்கும் என்பது பழைய நம்பிக்கை. அவை தொழிலின் சலிப்பை வென்று ஊக்கம் கொள்ள உதவும். இளைப்பாறலாக ஆகும். ஒரு நல்ல குளியல்போல, நல்ல தியானம் போல. இன்று அத்தகைய அகவாழ்க்கையின் பயன்களை உளவியலாளர்களே சொல்ல ஆரம்பித்துவிட்டனர்

கொரோனா காலகட்டத்தில் கடும் உள அழுத்தத்திற்கு ஆளான மருத்துவர்கள் பலரை எனக்கு தெரியும் சிலர் மிகையான வேலையால். சிலர் வேலையில்லாமல் சும்மா இருந்தமையால். உளவியலாளர்கள் அவர்களிடம் புத்தகம் படிக்கும்படிச் சொன்னார்கள். ஆனால் அவர்களுக்கு படிக்கும் வழக்கமே இல்லை. புதிதாக தொடங்க முடியவில்லை. எனக்கு நாலைந்து கடிதங்கள் வந்தன, எப்படி இலக்கியம் படிக்க ஆரம்பிப்பது என்று. புதியதாக தொடங்குவது கடினம் என எழுதினேன்.

இச்சூழலில் ஏற்கனவே படிக்கும் வழக்கம் இருப்பது, அந்த மனநிலை நீடிப்பது பெரிய வரம். அதை எவருக்காகவும் கைவிட வேண்டியதில்லை. அது வாழ்க்கையை எத்தனையோ சோர்வுகள், கசப்புகளில் இருந்து காப்பாற்றுவது. அதை வாழ்வின் இறுதிநாட்களில் உணர்வீர்கள்.

அத்தனைக்கும் அப்பால் ஒன்றுண்டு, முதுமை. இறுதிநாள் வரை எவரும் தொழில் செய்யப்போவதில்லை. முதுமையில் தொழிலை விட்ட பின்னரும் நீண்ட வாழ்க்கை மிஞ்சியிருக்கும். அப்போது இருக்கும் தனிமையில் அகவாழ்க்கை மட்டுமே எஞ்சியிருக்கும். அதுவரை எதுவும் பழகாதவர் அப்போது புதியதாக எதையும் தொடங்கிவிட முடியாது. ஆழமான , நேர்நிலையான எதையும் செய்யமுடியாத முதுமைச் சூழலில் ஆண்கள் அரசியல்சார்ந்த காழ்ப்புகளிலும், பெண்கள் குடும்பக்காழ்ப்புகள் அல்லது தொலைக்காட்சிச்தொடர்களின் காழ்ப்புகளிலும் மூழ்கி வாழ்க்கையை கசப்பால் நிறைத்துக்கொள்கிறார்கள்.

ஷண்முக சிவா

தொழிலுக்கு இலக்கியம் தடையென ஆகுமா? இலக்கியத்தை நம் அகவாழ்க்கை என வைத்துக்கொண்டால் ஆகாது. அதை தனியாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். அதற்கான நேரம் ஒதுக்கப்பட்டிருக்கவேண்டும். அது எந்தவகையிலும் தொழிலுடன் ஊடாடக் கூடாது. அதை நம் அகத்துடன் தொடர்பில்லாத எவரிடம் பகிரவும்கூடாது. அதை நம் அகத்தே வைத்துக்கொள்ளவேண்டும். நமக்கே உரிய உலகமாக. அவ்வாறெனில் அது நம் தொழிலுக்கு உதவியானதே.

நான் நன்கறிந்த பெருந்தொழிலதிபர்கள் ‘சக்தி நிறுவனங்கள்’ நா. மகாலிங்கம் முதல் இயகாக்கோ சுப்ரமணியம், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிருஷ்ணன் வரை தொடர்ந்த இலக்கிய வாசிப்பு கொண்டவர்கள்தான்.

மருத்துவர்களில் உதாரணம் அளிக்கவேண்டுமென்றால் மலேசியாவின் சண்முக சிவாவையும் ஈரோடு வி.ஜீவானந்தம் அவர்களையும் குறிப்பிடுவேன். அவர்கள் தலைசிறந்த மருத்துவர்கள். இலக்கிய வாசகர்கள்.  அதற்குமேல் மிகப்பெரிய அளவில் சமூகசேவையிலும் ஈடுபாடுள்ளவர்கள்.

சண்முக சிவா மலேசிய நவீன இலக்கியத்தை ஓர் இயக்கமாக முன்னெடுத்த முன்னோடி. கைவிடப்பட்ட குழந்தைகளுக்காக கல்வியகங்களை உருவாக்க முயல்பவர். ஜீவானந்தம் மயக்கவியல் மருத்துவர் மட்டுமல்ல, குறைந்தசெலவுள்ள மக்கள் மருத்துவமனைகளை உருவாக்கி நிலைநிறுத்திய ஒருங்கிணைப்பாளரும்கூட.

அனைத்தையும் அவர்களால் செய்ய முடிந்தது. ஏனென்றால் அவர்கள் ஒவ்வொன்றையும் அதனதன் தளத்தில் பிரித்து வைத்துக்கொண்டனர். ஒன்று இன்னொன்றை சிறப்புற ஆற்றும்படிச் செய்வதை அதன் வழியாகக் கண்டடைந்தனர்.

ஜெ

முந்தைய கட்டுரைஞானி நினைவுகள் – மீனாம்பிகை
அடுத்த கட்டுரைஇருட்கனி வரவு