இனிய ஜெயம்
சமீபத்திய பயணத்தில் நுண்கலை உயர்கல்வி பயிலும் மாணவர் ஒருவர் வசமிருந்து பெற்று, ‘பார்த்துப்’ பரவசம் அடைந்து, மனமே இன்றி திருப்பி அளித்த நூல் ஓவியர் ஷான் டான் வரைந்த, the arrival எனும் ஓவியப் புனைவு நாவல்.
https://en.m.wikipedia.org/wiki/The_Arrival_(graphic_novel)
ஒரு அடிக்கு ஒரு அடி அளவிலான கெட்டி அட்டை கொண்ட, முரட்டுத் தாள்களில் பழுப்பு வண்ண ஓவியங்கள் அடங்கிய புத்தகம். இந்திய விலையில் ஒப்பு நோக்க பிரதமரின் புதிய விமானம் விலை குறைவே. ஆனால் இப்புனைவுக்கு செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாயும் அதற்கு இணையாக விலை மதிப்பே அற்ற காட்சி இன்பத்தை கொண்டு வரும் என்பது உத்திரவாதம்.
மனைவி குழந்தையை விட்டு புலம் பெயர்ந்து (அநேகமாக முதல் உலக போர் காலம்) வேறொரு சர்ரியல் நிலத்தில் அகதியாக தஞ்சம் புகும் நாயகன். அந்த அமானுஷ்ய மிகு கற்பனை சர்ரியல் உலகில் பழகி, இடம் கண்டு, வேலை கண்டு, நண்பர்களை வென்றமைந்து, தனது குடும்பத்தை இங்கே இவ்வுலகில் தன்னுடன் சேர்த்துக்கொள்ள, அந்த சர்ரியல் உலகம் உடோபியாவாகி நிறைவுறும் கதை.
ஒரே ஒரு வரி கூட உரையாடல் இன்றி, முற்றிலும் காட்சி மூலம் மட்டுமே நகரும் நாவல். நாயகன் கொள்ளும் பிரிவுத் துயர் துவங்கி மீண்டும் அவன் தனது குடும்பத்தை சேரும்போது அடையும் உவகை வரை அத்தனை உணர்வுகளையும் துல்லியமாக கடத்தும் ஓவியங்கள்.
ஜப்பானிய ஓவியர் மியசாகி படைப்புகளில் வருவதை போல வேறொரு உலகம் வேறொரு உயிர்கள். எல்லாமே ‘இதோ காட்டப்பட்டது எதுவோ அது மட்டுமே’ என்றவகையில் இன்றி ஒவ்வொரு ஓவிய சட்டகமும் மனதுக்குள் கற்பனையை சிறகுகள் விரித்து பறக்க விடுகின்றன. முற்றிலும் உயிரோட்டமான fantasy உலகு. அதன் ஒவ்வொரு பொருளையும் ஒவ்வொரு உயிரையும் இக்கணம் தொட்டுவிடலாம் என்பதை போல அத்தனை உயிர்ப்பு. காலம் இடம், மாறும் பருவ கால சுழற்சி என ஒவ்வொன்றிலும் அவ்வுலகு என்னவாக தோற்றம் தருகிறது என்பது போல பல அலகுகளுடன் பிணைந்த முழுமையான அனுபவத்தை அளிக்கும் ஓவியங்கள்.
வெவ்வேறு உலகிலிருந்து அங்கே வாழவே வகையின்றி அங்கிருந்து இங்கு வந்தோர் சிலரின் வாழ்க்கை பின்னோக்கி பார்க்கும் வகைமையில், பழுப்பு வண்ண ஓவிய வரிசையில் கருப்பு வெள்ளையாக தனித்து காட்டப்படுகிறது. பழுப்பு வண்ண வரிசை இனிய ஒளி பொருந்திய கனவு எனில், கருப்பு வெள்ளை வரிசை கொடும் துர் கனவு. குறிப்பாக போர் சூழல் ஒன்றை சித்தரித்துக் காட்டும் அத்தியாயம்.
இறுதியாக நாயகனின் குடும்பம் அவனை வந்து அடைகிறது. இப்போது நாயகனின் செல்ல மகளின் பார்வையில் விரியும் இவ்வுலகம் அதன் ஒளி, மிகுந்த பொருளை அளிக்கிறது. இங்கே எவ்வுயிரும் சமம். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும். அன்பு ஒன்றே அனைவரையும் பிணைக்க, மகிழ்ச்சி ஒன்றே அனைவரையும் முன் செலுத்தும், எல்லாம் ஒன்றே என்றான ஓருலகம். அங்கே வந்திரங்கும் மற்றொரு அகதிப் பெண்ணுக்கு இந்த செல்ல மகள் இவ்வுலகுக்குள் வழி காட்டுகையில் நிறைவுறும் கதை. உண்மையில் நூல் நிறைகையில் உணர்வெழுச்சி மீறி கண்ணீர் துளிர்த்து. மானுடத் துயர் தீர்க்கும் அந்த ஒளி பொருந்திய உலகம் நோக்கி அப்படியே எழுந்து பறந்து விட மனம் தவித்தது.
ஓவியர் ஷான் டான் ஆஸ்திரேலியாகாரர். ஹாலிவுட்டிலும் தடம் பதித்து அகாடமி விருது வென்றவர். ஒரு ஓவிய நாவல் கலா பூர்வமாக எந்த ஆழம் வரை பார்வையாளரை தீண்ட முடியும் என்பதற்கு உதாரண ஓவியங்கள் அடங்கிய நாவல் இது. கதை நகர்வுக்காக இட்டு நிரப்பிய ஓவியம் என்ற வகையில் ஒரே ஒரு ஓவியம் கூட நாவலில் இல்லை. ஒவ்வொரு ஓவிய சட்டகமும் தனித்த முழு ஓவிய அனுபவத்தை அளித்து, ஒட்டு மொத்தமாக கூடி ஒரு பெரிய உத்வேகமான உணர்ச்சிகரமான கலா அனுபவத்தை நல்குகிறது.
இந்த நூலை ‘பார்க்காமல்’ போயிருந்தால் நிச்சயம் தேவதை கதை போலும் ஒரு தனித்துவமான உலகில் வைத்து நிகழும் உணர்ச்சிகரமான, (இந்த ஓவிய நாவல் எனும் வடிவம் மட்டுமே நல்க இயன்ற) பிரிதொன்றில்லா அனுபவம் ஒன்றை இழந்திருப்பேன்.
இந்த நூலின் ஓவியங்கள் சில கொண்டு, பின்னணி ஒலி சேர்த்து இந்த நாவலை அணிமேஷன் படம் போல எவரோ உருவாக்கி இருக்கிறார். நூலின் அறிமுகமாக கொள்ள ஏற்றது
கடலூர் சீனு