வணிக இலக்கியம்

வணிக இலக்கியம் நூல் வாங்க

தமிழில் இலக்கியம் வாசிக்கத் தொடங்கும் எவரும் சந்திக்கும் முதல் பிரச்சினை என்பது இலக்கியத்தையும் கேளிக்கை எழுத்தையும் பிரித்துப் பார்ப்பது. எல்லாமே எழுத்துதானே என்றுதான் இங்கே பொதுப்புத்தி சொல்லிக்கொண்டிருக்கிறது. உனக்கு எதைப் பிடித்திருக்கிறதோ அதைப் படி என்று சொல்கிறது. இலக்கியம், இலக்கியம் அல்லாதது என்று பிரிக்கும் அதிகாரம் எவருக்கு உள்ளது என்று கேட்கிறது. அப்படிப் பிரிப்பது ஓர் அதிகாரம் என்றும் சிலர் சொல்கிறார்கள்.

ஆனால் அப்படி ஒரு பிரிவினையை உருவாக்கிக் கொள்ளாமல் இலக்கியத்தை வாசிக்கவே முடியாதென்பதுதான் உண்மை. ஏனென்றால் வணிக இலக்கியம் வணிக நோக்கம் கொண்டது. அங்கே வாசகன் ஒரு நுகர்வோன் மட்டும்தான். நுகர்வோனுக்கு தன் நுகர்பொருள் எப்படி இருக்கவேண்டும் என்று சொல்லும் அதிகாரம் உண்டு. ஆனால் இலக்கிய ஆக்கம் நுகர்பொருள் அல்ல. அதன்மேல் வாசகனுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அது ஓர் ஆசிரியனின் அகவெளிப்பாடு. அதைநோக்கி செல்ல வாசகன் முயற்சி எடுத்துக்கொள்ளவேண்டும்.

இந்தச் சிறிய விஷயம் தெரியாத காரணத்தாலேயே வணிக எழுத்தினூடாக வரும் வாசகர்கள் பேரிலக்கியங்களைக்கூட எளிதாக தூக்கிவீசிவிட்டுச் செல்வதை காணலாம். ஒர் இலக்கியப்படைப்பை வாசிக்க தேவையான சில பயிற்சிகள், சில மனநிலைகளை அறிந்துகொண்டாலேகூட அவர்களின் வாசிப்பில் மிகப்பெரிய மாற்றம் வந்துவிடும். அதற்கு அவர்கள் முதலில் இலக்கியம் என்றால் என்ன என்று அறிந்துகொள்ளவேண்டும். வணிக இலக்கியம் எப்படி அதிலிருந்து வேறுபடுகிறது என்று அறிந்துகொள்ள வேண்டும்.

நம் பொதுச்சூழல் இந்த வேறுபாட்டை மழுப்புவதில் தீவிரமாக உள்ளது. ஏனென்றால் பொதுச்சூழல் சராசரிகளால் ஆனது. அது தீவிரங்களை அஞ்சி தவிர்க்க முயல்கிறது. சராசரிகளைக் கொண்டாடுகிறது. ஆகவே அது வணிக எழுத்தாளர்களையே ஏற்று முன்னிறுத்தும். இலக்கியத்தை முன்வைப்பதென்பது சமூகத்தால் ஏற்றுக் கொண்டாடப்பட்ட ஆளுமைகளையும் மதிப்பீடுகளையும் மறுத்து இன்னொன்றை முன்வைப்பது. ஆகவே அதை மறுக்கவும் மழுப்பவுமே பொதுச்சூழல் முயலும்.

இத்தகைய சூழலில் இருந்து எழும் கேள்விகளே இந்நூலில் உள்ளன. அவற்றுக்கு அளிக்கப்பட்ட பதில்கள் வழியாகவே இலக்கியம் என்றால் என்ன, வணிக இலக்கியத்தில் இருந்து அது எப்படி வேறுபடுகிறது, வணிக இலக்கியத்தின் இடம் என்ன என்னும் விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. தன் வாசிப்பைக் கூர்மையாக்கிக்கொள்ள விழையும் எந்த வாசகருக்கும் தேவையான புரிதல்கள் அவை.

இந்நூலை நண்பர் பழனிஜோதிக்கும் மகேஸ்வரிக்கும் சமர்ப்பிக்கிறேன்

ஜெ

***

ஆயிரம் ஊற்றுக்கள் முன்னுரை வான்நெசவு முன்னுரை மலைபூத்தபோது முன்னுரை
ஐந்து நெருப்பு முன்னுரை தேவி – முன்னுரை பொலிவதும் கலைவதும் முன்னுரை
குமரித்துறைவி முன்னுரை எழுகதிர் முன்னுரை முதுநாவல் முன்னுரை
ஆனையில்லா! முன்னுரை தங்கப்புத்தகம் முன்னுரை அந்த முகில் இந்த முகில் முன்னுரை
பத்துலட்சம் காலடிகள் முன்னுரை இருகலைஞர்கள் முன்னுரை உடையாள் முன்னுரை
ஞானி முன்னுரை கதாநாயகி முன்னுரை வாசிப்பின் வழிகள் முன்னுரை
முந்தைய கட்டுரைஜெயகாந்தன், கி.ரா,அ.முத்துலிங்கம் – சில முயற்சிகள்
அடுத்த கட்டுரைமனோகரன் சாரும் ஜோதி டீச்சரும்