‘வெண்முரசு’ நாவல்தொடரில் 20ஆவது நாவல் ‘கார்கடல்’. இங்குக் ‘கார்’ என்பதை ‘மழை’ என்ற பொருளில் கொள்ளாமல், ‘கருமை’ என்ற பொருளில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் தீரா வஞ்சங்களால் உருப்பெற்ற கருங்கடல் அலையாடாமல் உறைநிலையில் இருக்கத்தான் செய்கிறது.
மனிதர்களின் மன ஆழங்களில் குடியிருக்கும் இருள்சூழ்ந்த கீழ்மைகள் வஞ்சங்களாகிச் சுழித்துப் பொங்கி, அலையாடி அலையாடி அவரவர்களுக்குத் தேவையான தருணங்களில் சீற்றத்துடன் வெளிப்படும். அந்தத் தருணங்களைக் காட்சிப்படுத்தி அடுக்கிவைத்த களமாக இந்தக் ‘கார்கடல்’ நாவல் அமைந்துள்ளது. என்னைப் பொருத்தவரை ‘கார்கடல்’ என்பது, கீழ்மைகளின் கடல்தான்.
மனிதர்கள் தங்களுக்கான மாற்றறத்தைத் தாமே இயற்றி, அவற்றைப் பேரறத்துக்கு நிகராகவும் பதிலீடாகவும் நிறுவ முயற்சிசெய்யும் போதெல்லாம் அவர்கள் தங்களுக்குள் வீழ்ப்படிவாகத் தங்கியிருக்கும் கீழ்மைகளைச் சுரண்டி, வெளியே எடுக்கின்றனர். அவர்களின் மாற்றறங்கள் அனைத்தும் அந்தக் கீழ்மைகளின் பசையால் தற்காலிகமாக நிலைநிறுத்தப்படுகின்றன.
அறம் தவறியவர்களை அழித்து, அறத்தைக் காப்பதற்காக எழுந்த குருஷேத்திரப் போர் இருதரப்பினராலும் அறத்தைக் கொல்லும் போராக மாறிவிட்டது. இரண்டு தரப்பிலும் அறம் தவறியவர்கள் படைக்கலம் ஏந்த, இடையில் சிக்கித் சிதறுகிறது பேரறம்.
அறமும் மாற்று அறமும் அறமீறலும் இணைந்தே பேரறத்தைச் சிதைக்கின்றன. இனிவரும் யுகத்தில் எல்லாக் காலத்துக்குமான பேரறம் எழ வேண்டுமெனில், இத்தருணத்தில் இந்தப் பேரறத்தின் இத்தகைய சிதைவு தேவைதான் போலும்!
வெண்முரசு நாவல் தொடர்களில் அர்சுணனின் ‘காண்டீபம்’ என்ற வில் பற்றித்தான் விரிவான பேச்சு இடம்பெற்றிருந்தது. ஆனால், இந்த நாவலில் கர்ணனின் ‘விஜயம்’ என்ற வில் நுண்சொல்லிலிருந்து பருப்பொருளாகச் செய்யப்பட்ட வரலாறு கூறப்பட்டு, அந்த வில் ஒருவகையில் காண்டீபத்தை விடவும் மேலானது என்று சுட்டப்பட்டுள்ளது.
குருஷேத்திரப் போர் ஒவ்வொருநாளும் ஓர் உச்சத்தைத் தொட்டே தணிகிறது. போர் தொடங்குவதற்கு முந்தைய நிமிடங்கள் மிக முக்கியமானவை. இருதரப்பினரும் தம் வஞ்சங்களை மீண்டுமொருமுறை திரட்டித் தொகுத்துக்கொள்ளும் தருணமது. அந்தத் தருணத்தில் படைகளின் ஒட்டுமொத்த நிலையை எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள் சொல்லாக்கியுள்ளார்.
“காத்திருக்கும் படைகள் எனக்கு எப்போதுமே விந்தையானதோர் உளஎழுச்சியை உருவாக்குகின்றன. அவர்கள் உள்ளங்கள் முன்னரே எழுந்து போர்கலந்துவிட்டிருக்கின்றன. உடல்கள் அங்கே செல்லத் தவித்துத் ததும்பி நின்றிருக்கின்றன. எடையென்றும் இருப்பென்றும் ஆன பிறிதொன்று உடலென்று ஆகி அவர்களை அங்கே நிறுத்தியிருக்கின்றது. அணைகட்டி நிறுத்தப்பட்ட நீருக்குள் பாய்ச்சல் ஒளிந்திருப்பதுபோல. அவர்கள் ஒவ்வொருவரின் உடலிலும் அந்த நிறுத்தப்பட்ட விசையைக் காண்கிறேன். கதைகளைப் பற்றிய கைகளில் அது முறுகுகிறது. உடைவாள் உறைகளின் செதுக்குகளில் அலையும் விரல்களில் அது ததும்புகிறது. புரவிகளில் செருக்கடிப்பாகவும் குளம்புமாற்றலாகவும் யானைகளில் செவிநிலைப்பாகவும் துதிக்கைநுனித் தேடலாகவும் அது எழுகிறது.”
போர் தொடங்குவதற்கு முன்பாக இரண்டு தரப்பினருக்கும் இடையில் நீண்டிருக்கும் ‘வெற்றிடம்’ அன்றைய பொழுதில் களம்படவுள்ளவர்களின் பெயர்களால் முன்பே எழுதி நிரப்பப்பட்டுவிடுகிறது. ‘அதில் தம்பெயர் இருக்கிறதா?’ என்றறியும் முயற்சிதான் ‘போர்’ போலும். இருதரப்பும் பொருதும் அந்த வெற்றுநிலம் பற்றி எழுத்தாளர் சிறப்பாக வர்ணித்துள்ளார்.
“இரு படைகளுக்கும் நடுவே இருக்கும் அந்த நீண்ட வெற்றிடம் ஒரு நதி போலிருக்கிறது. அது உச்ச அழுத்தத்தில் அதிர்ந்துகொண்டிருக்கின்றது. அங்கு ஒரு விரல் வைத்தால் அறுந்து தெறித்துவிடும். பல்லாயிரம் உள்ளங்கள் எழுந்து அங்கே போரை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன. அத்தனை தெய்வங்களும் அங்கே ஏற்கெனவே செறிந்தமைந்துவிட்டன. அங்கே பறக்கப்போகும் அம்புகள் முன்னரே முனைகள் விழிகொள்ள எழுந்துவிட்டன. அங்கே நிகழும் போர் பிறிதொன்று. பல்லாயிரம் நுண்படைக்கலங்கள். பல்லாயிரம் சொல்லிலா வஞ்சங்கள். பல்லாயிரம் பருவிலா விசைகள். இங்கிருந்து பார்க்கையில் அந்த இடைவெளி தெய்வங்களின் கையில் சாட்டை போலிருக்கிறது. அல்லது பெருநாகமா? செங்குருதி ஒழுக்கா? ஒரு புண்வடுவா? அனலா?”
இந்த நாவல் முழுக்க நிகழும் போரை முற்றிலும் நிகழ்த்துவன நாகங்களே!. நாகங்களே படைக்கலமாகின்றன. அந்தப் படைக்கலத்தை ஏந்திய வீரர்களாக நாகங்களே அமைகின்றன. இருள்செறிந்த பாதாளத்தில் அலையாடும் இருட்கடலிலிருந்து அலையலையாக நாகங்கள் வெளிப்படுகின்றன.
நாகங்கள் மண்ணுக்கு மேல் தலைநீட்டும் பசும்புல்போல நிலம்முழுக்க நிறைகின்றன. குருஷேத்திரப் போர்க்களம் முழுவதுமே நாகங்களால் ஆளப்படும் நிலமாகிவிடுகிறது. வஞ்சத்தையே தம் நஞ்சாகக் கொண்ட எல்லா வகையான நாகங்களும் கௌரவர்களின் தரப்பில் அணிவகுத்து விடுகின்றன. அவற்றுக்குத் தலைமையேற்கிறார் கர்ணன்.
“கர்ணனின் அம்பறாத்தூணி பாதாளப் பேருலகம் நோக்கித் திறக்கும் ஆழி என்றிருந்தது. அதனூடாக எழுந்து வந்தன மண்நடுங்கச் செய்யும் நாகப்பேருடல்கள். புயல்பட்ட கடலின் அலைகளென நிவர்ந்தன அவற்றின் முடிவிலாச் சுழிப்புகள். கார்முகில் எனப் பெருகி அவை இருளைச் சமைத்தன. அர்ஜுனரின் ஆவநாழி விண்ணுக்குச் செல்லும் முகில்சுழியாக இருந்தது. அதனூடாகப் பறந்திறங்கி வந்தன விண்ணாளும் வெளியாளும் பறவைகள். வெண்ணிற யானைகள். விண்ணும் மண்ணும் அக்களத்தில் ஒன்றுடன் ஒன்று பொருதிக்கொண்டன. ஒன்றையொன்று கண்டுகொண்டன.”
நாகருலகம், கர்ணனுக்கும் நாகருக்குமான தொடர்பு, நாகநச்சு அம்பினைக் கர்ணன் பெறுதல், கர்ணனின் மனைவியை நாகினி அழைத்துச் செல்லுதல் என இந்த நாவலில் கர்ணனுக்கும் நாகருக்குமான பிணைப்பு விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகருக்கும் மனிதர்களுக்குமான தொடர்பு மண்ணுலகத்துக்கும் பாதாள உலகத்துக்குமான அறுக்க இயலாத தொடர்பாகக் காட்டப்பட்டுள்ளது. மரத்தின் வேரென மனிதர்களின் வஞ்சம் நாகங்களாக மண்ணுக்குள் புதையுண்டுள்ளன. விதையின் இளந்தளிரென மனிதர்களின் அகவிழைவுகள் நாகங்களாக மண்ணைக் கீறி வெளிப்படுகின்றன.
போரை முன்னின்று நிகழ்த்தும் நாகங்களை எதிர்க்க இருளுலகிலிருந்து பறந்து வருகின்றன பறவையினங்கள்!. பறவைகளுக்கும் நாகங்களுக்குமான போரில் அவற்றைத் தாங்கியிருக்கும் அடிமைகளாக மாறிவிட்டனர் மனிதர்கள். இந்தப் பறவையினங்களுக்குத் தலைமையேற்கிறார் அர்சுணன்.
“அர்ஜுனரின் ஆவநாழியின் இருண்ட ஆழத்திலிருந்து சீற்றம்கொண்டு எழுந்துவரும் பறவைகளைக் காண்கிறேன். வலுத்த அலகுகொண்ட நாரைகள். நாகக் கழுத்துகொண்ட அன்னங்கள். கன்னங்கரிய காகங்கள். கூர்வளைந்த அலகுடன் பருந்துகள். கவ்வும் கால்களுடன் கழுகுகள். கொலைத்தொழில் வல்லூறுகள், அறைகூவும் கூகைகள். தாவும் பனந்தத்தைகள். மிதந்து நிற்கும் சிட்டுகள். இத்தனை பறவைகளால் ஆனதாக இருந்ததா அந்த ஆவநாழி? இவற்றின் முட்டைகளே மணல்பருக்களாக அமைந்த பாலை ஒன்றை அதற்குள் அவர் சுருட்டி வைத்திருந்தாரா என்ன?”
அர்சுணனுக்கும் கர்ணனுக்குமான போர் என்பது நாகங்களுக்கும் பறவையினங்களுக்குமான போராக மாறிவிடுகிறது. ஒருவகையில், பாதாள உலகத்தை ஆளும் நாகங்களுக்கும் வானத்தை அளந்துதிரியும் பறவையினத்துக்குமான போர் என்று இதனைக் கூறலாம். அவை ஒன்றையொன்று எதிர்க்கும் களமாகக் குருஷேத்திர நிலம் அமைவுகொள்கிறது.
இந்த நாவல் முழுக்க நால்வரின் நோக்குநிலையில் கூறப்பெற்றுள்ளன. பார்பாரிகன் இடும்பர்களுக்கும் அரவான் நாகர்களுக்கும் ஏகாக்ஷர் பேரரசி காந்தாரிக்கும் சஞ்சயன் பேரரசர் திருதராஷ்டிரருக்கும் குருஷேத்திரக் களத்தின் நிகழ்ச்சியை எடுத்துரைக்கின்றனர். அவர்கள் அனைவருமே தெய்வமேறியவர்களைப் போல, போரையும் போரிடுவோரின் உளநிலையையும் சேர்த்தே பிறருக்கு உரைக்கின்றனர்.
பத்மவியூகத்தில் அகப்பட்டு உயிர்விடும் அபிமன்யூ, மாயத்தால் பொழுதணையச் செய்து ஜயத்ரதனைக் கொல்லுதல், அனுமதிபெற்று ஊழ்கத்தில் அமர்ந்த பூரிசிரவஸ் சாத்யகியால் படுகொலைசெய்யப்படுதல், கர்ணன் ஏவிய நாகநச்சு அம்பால் கடோத்கஜன் உயிர்விடுவது, பொய்ச்செய்தி அளிக்கப்பட்டுக் களத்தில் வீழ்த்தப்படும் துரோணர் என இந்த நாவலில் எண்ணற்ற அறமீறல்கள் பொங்கி எழுந்துள்ளன.
இந்த நாவலில் புதிய உத்தியை எழுத்தாளர் கையாண்டுள்ளார். நடந்து முடிந்தவற்றை மீண்டும் நிகழ்காலத்தில் நீட்டி உரைக்கும் உத்தி. களம்பட்டவர்கள் எவ்வாறு போரிட்டு மாண்டனர் என்பதை ஒருவகையிலான ‘பின்னோக்கு உத்தி’யால் வாசகருக்குக் காட்டிச் செல்கிறார் எழுத்தாளர்.
ஆனால், இது பிற எழுத்தாளர்கள் பயன்படுத்தும் ‘அச்சு அசலான பின்னோக்கு உத்தி’ அல்ல. அதனால்தான் நான் இந்த உத்தியை ‘ஒருவகையிலான பின்னோக்கு உத்தி’ என்றும் ‘புதிய உத்தி’ என்றும் சுட்டுகிறேன். இந்த உத்தியின் வழியாகப் போர்க்களத்தின் அன்றைய ஒட்டுமொத்த காட்சியையும் வாசகர் அறியும்படிச் செய்துவிடுகிறார் எழுத்தாளர்.
இதுநாள் வரையிலும் தங்களின் வஞ்சங்களைப் பெருக்கி பெருக்கித் தம் எதிரிகளைப் பகற்கனவுகளில் எதிர்கொண்டு பொருதிய பெருவீரர்கள், இன்று தம் வஞ்சங்களே தாமாக மாறி, தம் எதிரிகளை நேரெதிர்கொண்டு, பொருத உள்ளனர். இதனை எழுத்தாளர்,
“ஒவ்வொருவரும் தங்கள் ஆழுளத்து எதிரியை நேரிலும் கற்பனையிலும் சந்தித்து போரிட்டுப் போரிட்டுத் தங்கள் திறன்களைத் தீட்டிக்கொண்டிருக்கிறார்கள். தங்கள் முதன்மை எதிரி அளவுக்கே ஒவ்வொருவரும் எழுந்துவிட்டிருக்கிறார்கள். போர் ஒரு பயிற்சிக்களம் என மாறி அனைவரையுமே அவர்கள் கொண்டுள்ள தடைகளிலிருந்து எழச் செய்திருக்கிறது.”
என்று குறிப்பிட்டு, தடையற்ற மனநிலையோடு ஒவ்வொருவரும் தம் எதிரியை எதிர்கொள்வதாகக் கூறியுள்ளார். ‘தடையற்ற மனநிலை’ என்பதும்கூடப் போருக்கான உயரிய படைக்கலமே! அது படைக்கலத்தை உந்தும் விசை. அந்த விசையின்றிப் போருக்கு எழாதோர் வெற்றிபெறுவதில்லை.
பாண்டவர்கள் தொடங்கிவைக்கும் இரவுப்போர் இந்த நாவலில் மிகச் சிறப்பாக வர்ணிக்கப்பட்டுள்ளது. இதுநாள்வரை பகலில் நடைபெற்ற குருஷேத்ரப் போரை அணுவணுவாகச் சித்தரித்த எழுத்தாளர், அந்திக்குப் பின்னர் முடிவுறாது, இரவிலும் தொடரும் போரின் மீது தம் எழுத்தால் புதியஒளியைப் பாய்ச்சி வாசகருக்குத் துலங்க வைக்கிறார். இடும்பர் நிகழ்த்தும் இரவுப்போரை எதிர்கொள்ள வழிதெரியாமல் கௌரவப்படை சிதறி அழிகிறது.
“வளைகழை முனையில் எழுந்து வண்டெனத் தெறித்து இருளில் மிதந்து சென்று தூண்டில் முனைபோல் இறங்கி காந்தார தேர்ப்படைகளைத் தாக்கி உடைத்துச் சிதறடித்துவிட்டு துள்ளி இருளினூடாக எழுந்த இடத்திற்கே கடோத்கஜன் வந்திறங்கினான். தேர்மகுடங்களின்மேல் விண்ணிலிருந்து பெரும்பாறைகள் உதிர்வதுபோல் இறங்கி அவ்விசையிலேயே கதைகளால் அடித்து உடைத்து சிதர்களாகத் தெறிக்கச் செய்து, வில்லேந்திய வீரர்களையும் மழுவும் கதையும் பாசமும் ஏந்திய மல்லர்களையும் தலையுடைத்தும் உடல் சிதைத்தும் கொன்று, என்ன நிகழ்கிறது என்று அவர்கள் உணர்ந்து ஒருங்கிணைத்துக் கொள்வதற்குள் மீண்டும் கழை பற்றி ஏறித் தன்னைத் தெறிக்கச்செய்து மையநிலைக்கே மீண்டு, ஒருவரோடொருவர் ஒலியிலா ஒற்றைச்சொல்லில் மீண்டு வந்ததை அறிவித்து, மறுபடியும் நாற்புறமும் தங்களை எய்துகொண்டனர் இடும்பர்.
‘வெண்முரசு’ தொடர்நாவல்கள் சிலவற்றுள் ‘அமலையாடுதல்’ என்ற சொல்லாட்சி கையாளப்பட்டுள்ளது. அந்த அமலையாடுதலின் குரூரத்தை இந்த நாவலில்தான் காணமுடிகிறது.
‘அமலை’ என்றால், ‘மிகுதி’ என்று திவாகரநிகண்டு குறிப்பிட்டுள்ளது. போரில் களம்பட்ட பகைவேந்தனைச் சூழ்ந்துநின்று வீரர் திரண்டு ஆடும் ஆட்டம் ‘அமலை’ எனப்படும்.
“அட்ட வேந்தன் வாளோ ராடு மமலையும்”
(தொல்காப்பியம், பொருளதிகாரம், 72).
வீரர்கள் வெற்றிக் களிப்பால் ஆடும் பலவித ஆடல் இயல்புகளைப் போர்த் திணைகள் கூறுகின்றன. வெட்சிப் போரில் ஆநிரை கவர்வோரும் கரந்தைப் போரில் ஆநிரை மீட்போரும் உழிஞைப் போரில் மதிலைக் கைப்பற்றுவோரும் வெற்றி மகிழ்ச்சியில் ஆடியது குறித்து சங்க இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன.
தும்பைப் போரிலும் இதுபோன்ற வெற்றிக் களிப்புகள் கூறப்படுகின்றன. தும்பைப் போரிலே வென்ற மன்னனது படைவீரர்கள் போர்க் களத்திலேயே வெற்றியைக் கொண்டாடி மகிழ்வர். வெற்றி பெற்ற மன்னனது தேரின் முன்னேயும் பின்னேயும் ஆடுதல், அரசனுடன் சேர்ந்து ஆடுதல், களிற்றைக் கொன்று அதன் கீழ்ப்பட்டவனைப் பாராட்டுதல், வெற்றி பெற்ற அரசனை இருபக்க வீரர்களும் பாராட்டுதல் என வெற்றிக் கொண்டாடப்படுகிறது.
இதை முன்தேர்க் குரவை, பின்தேர்க் குரவை, பேய்க் குரவை, களிற்றுடன் நிலை, ஒள்வாள் அமலை, தானை நிலை முதலான துறைகள் சுட்டுகின்றன. வாள் வீரர்கள் ஆடுதலை ‘ஒள்வாள் அமலை’ எனப்படுகிறது. இந்த நாவலில் திருஷ்டத்யும்னன் ஆடும் அமலையாட்டத்தை ‘ஒள்வாள் அமலை’ என்று குறிப்பிடலாம்.
“வலிகெழுதோள் வாய்வயவர்
ஒலிகழலான் உடன்ஆடின்று”
(தும்பைத்திணை, கொளு-21)
குருஷேத்திரப் போர்க்களத்தில் துரோணரின் நெஞ்சில் ‘ஸ்வம்’ என்ற அம்பினைப் பாய்ச்சி அவரைக் களம்வீழ வைக்கிறான் அர்சுணன். அப்போது திருஷ்டத்யும்னன் அறமற்ற செயலைச் செய்கிறான். அதன் தொடர்ச்சியாக அமலையாடுகிறான்.
“அத்தருணத்தில் படைகளுக்குப் பின்னாலிருந்து புரவியில் விரைந்தோடிவந்த திருஷ்டத்யும்னன் அதே விசையில் குதித்து துரோணரின் தேர்த்தட்டில் ஏறினான். தோல்பட்டையால் கொண்டையாகக் கட்டப்பட்ட துரோணரின் தலைமுடியைத் தன் கையால் பற்றி வலக்கையிலிருந்த வாளால் ஓங்கி அவர் தலையை வெட்டி தூக்கி எடுத்தான். அதை மேலே காட்டியபடி “துருபதரின் வஞ்சம்! இதோ துருபதரின் வஞ்சம்! பாஞ்சாலத்தின் வஞ்சம் இதோ! பழி கொண்டது பாஞ்சாலக்குருதி! பழி கொண்டது பிருஷதனின் குருதிமரபு!” என்று கூவினான். பாண்டவப் படையிலிருந்து முதிய வீரன் ஒருவன் “கீழ்மகன்!” என்று கூவி திருஷ்டத்யும்னனை நோக்கி ஓங்கி துப்பினான். “இழிமகனே, உனக்கும் உன் குலத்திற்குமாக இது!” என்று கூவியபடி ஓடிவந்து தன் கழுத்தை வாளால் வெட்டிக்கொண்டு முகம் திரும்ப கால்கள் மடிந்து உடல் முன்படிந்து விழ துடித்தான். “கீழ்மகனே, கீழ்மகனே” என்று கூவியபடி இன்னொரு வீரன் அவ்வண்ணமே ஓடிவந்து தன் தலை கொய்து வீழ்ந்தான். “பழிகொள்க! உன் குடி அழியாப் பழிகொள்க!” என்று கூவியபடி மேலும் மேலும் பாண்டவ வீரர்கள் வந்து தலைகொடுத்து விழுந்தனர். திகைத்து நின்ற திருஷ்டத்யும்னன் “ஆம், நான் பழிகொள்கிறேன்! இப்பழியை நானே கொள்கிறேன்! நான் இதன்பொருட்டே பிறந்தேன். எந்தை என்னை ஈன்றதும் வளர்த்ததும் இதற்காகவே!” என்று கூவினான். திருஷ்டத்யும்னன் வெட்டுண்ட தலையைத் தூக்கி தன் முகத்திலும் மார்பிலும் குருதியை வீழ்த்தியபடி அமலையாடினான். “நான் காலன்! நான் ருத்ரன்! நான் காளன், சண்டன், பிரசண்டன்!” என்று ஆர்ப்பரித்தான். “என் குடி அழிக! என் கொடிவழி முற்றழிக! என் முன்னோர் பழிசூடுக! என் தெய்வங்கள் எரிந்தெழுந்து அகல்க! நான் நாணவில்லை. இது எந்தைக்காக என் கடன்!” என்று கூவினான். துரோணரின் தலையை தூக்கி வீசிவிட்டு தேரிலிருந்து இறங்கி தன் புரவிநோக்கி சென்றான்.”
வஞ்சினம்கொண்டு போரைத் தொடங்கியவர்கள் ஏதாவது ஒருவகையில் அந்தப் போரில் வெற்றிபெற்றவுடன் அவர்களின் அகவுடல் விடுதலையைப் பெறுகிறது. அந்த விடுதலைக்காக அவர்களின் புறவுடல் கொண்டாடும் கொண்டாட்டமே அமலையாக வெளிப்படுகிறது.
இந்த நாவலில் இடம்பெற்றுள்ள மிகவும் அகவயமான தருணம் என்று நான் சுட்டவிரும்புவது யாதவ அரசி குந்திதேவிக்கும் கர்ணனுக்கும் இடையே நிகழும் உரையாடலைத்தான். பேரரசி சத்தியவதியையும் திரௌபதியையும்விடச் சூழ்ச்சிகளிலும் சொல்வீச்சிலும் எண்ணியதை முடிக்கும் திறமையிலும் கைத்தேர்ந்தவர் யாதவ அரசி குந்திதேவிதான் என்பதை நாம் இந்த உரையாடல் வழியாக உறுதிப்படுத்திக்கொள்ள முடிகிறது. யாதவ அரசி குந்திதேவியால் எந்த நிலையிலும் தருக்கி நிற்கவும் முடிகிறது; எந்த நிலைக்கும் தாழ்ந்து செல்லவும் முடிகிறது. அந்த இருநிலையான மனநிலைதான் அவரைத் தன்னுடைய அனைத்துச் செயல்களிலும் வெற்றிகொள்ளச் செய்கிறது.
தந்தை – மகன் பற்றுறவு இந்த நாவலில் மிகச் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது. பிருஹத்காயர், அர்சுணன், பீமன், துச்சாதனன், துரோணர், சாத்யகி, பூரிசிரவஸ், திருஷ்டத்யும்னன் ஆகியோர் தம்முடைய இரத்தவுறவுடைய மைந்தர்களிடம், மூத்த அல்லது ஒரே மைந்தரிடம் கொள்ளும் பற்றுறவு வாசகரை நெகிழச் செய்கிறது.
ஆனால், இவர்களின் வரிசையில் துரியோதனனும் இருக்கிறார்தான். லட்சுமணன் களம்பட்ட பின்னர் அவர் கொள்ளும் மனத்துயர் எழுத்தாளரால் விரிவாகக் காட்டப்படவில்லை. துரியோதனன் இந்தப் பற்றுறவுகளைத் தாண்டித் தன் மனத்தை நிலைநிறுத்தியிருக்கிறார் போலும். அல்லது எல்லா மைந்தரும் தம் மைந்தர் என்று கருதும் உளவிரிவாக இருக்கலாம். அவருக்கு அபிமன்யுவும் லட்சுமணனும் ஒன்றுதான் போலும். காரணம், துரியோதனன் மாபெரும் உளவரிவுகொண்ட பெருந்தந்தை திருதராஷ்டிரரின் மைந்தர்.
தந்தையர் நிறைவுகொள்வது மைந்தரின் புகழில்தான்போலும். மைந்தரைக் காப்பதே தந்தையரின் வாழ்நாள்கடன் போலும் என்று கருதி, வியக்க முடிகிறது. தந்தையருக்கு ‘இந்த உலகம்’ என்பது, தம் மைந்தரின் நல்வாழ்விலிருந்தே பொருள்படுகிறது போலும். தந்தையர் தம் வாழ்நாளைத் தம் மைந்தரின் வாழ்வினுடாகவே நீட்டித்துக் கொள்கின்றனர் போலும். மைந்தரின் மரணம் தந்தையரின் வாழ்நாட்களுள் வாழமுடியா வெற்று நாட்களாகவே நீட்சிபெறும் போலும். மைந்தரை இழந்து தவிக்கும் தந்தையரின் உள்ள நிலையை எழுத்தின் வழியாக உணர்த்திவிட இயலாதுதான். ஆனாலும், அதைப் பல்வேறு கோணத்தில் எழுதி எழுதி வாசகரின் உள்ளத்தில் பதியச் செய்துவிடுகிறார் எழுத்தாளர்.
எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள் ‘வெண்முரசு’ நாவல் தொடரை எழுதி முடித்தபின்னர் அதிலிருந்து முற்றிலும் விடுபடுவதற்காகவே பல்வேறு இலக்கிய வகைமைகளை எழுதினார். தன்னை ‘வெண்முரசு’க்கு ஒரு வாசகனாகவே அமைத்துக்கொண்டார். இந்த நாவலில் இடம்பெற்றுள்ள நான்கு வரிகளைக் கொண்டு இந்த எழுத்தாளருக்கும் ‘வெண்முரசு’ நாவல் தொடருக்கும் இடையே உள்ள உறவினைச் சுட்ட முயற்சி செய்கிறேன்.
”இயற்றியவன் இயற்றப்பட்டவற்றிலிருந்து முற்றாக விலகி நிறைவுகொள்கிறான் எனில், இங்கிருக்கும் எதிலும் இவற்றை இயற்றியோன் இல்லை. இவை அவனுடைய ஒரு தருணம் மட்டுமே. இவை அவனை நோக்கிச் சுட்டும் அடையாளம் மட்டுமே.”
எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்களுக்கு ‘விஷ்ணுபுரம்’ நாவல் ஓர் அடையாளம். ‘வெண்முரசு’ நாவல் தொடரோ மாபெரும் அடையாளம்.
– முனைவர் ப. சரவணன், மதுரை
‘எழுதழல்’ வாசிப்பு – முனைவர் ப. சரவணன்
கிராதம் முனைவர் முனைவர் ப சரவணன் மதுரை
சொல்வளர்காடு – முனைவர் ப சரவணன் மதுரை
‘செந்நா வேங்கை’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன், மதுரை
‘இமைக்கணம்’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன்
‘பன்னிருபடைக்களம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்,
‘வெய்யோன்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்
காண்டீபம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன், மதுரை
‘இந்திர நீலம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன், மதுரை
‘வெண்முகில் நகரம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்
‘பிரயாகை’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன்