ஆணவத்தின் தேவை

பெருஞ்செயல் ஆற்றுவது

பெருஞ்செயல் – தடைகள்

அன்புள்ள ஜெ,

மனிதனின் மனம் ஏன் இத்தனை ஆணவமாக இருக்கிறது என்று தெரியவில்லை. சிறிது காலமாக ஒவ்வொரு நிகழ்விலும் எனை நோக்கி கொண்டிருக்கிறேன். இயல்பாகவே தயக்கமும், தாழ்வுணர்ச்சியும் கொண்டவன் நான். ஆனால், அந்த தயக்கத்திலும், தாழ்வுணர்ச்சியுலும் கூட ஆணவமே மேலோங்கி உள்ளது என்று நினைக்கிறேன்.

உதாரணமாக, உங்களை சந்திக்க வேண்டும் என்று பல நாட்களாக நினைத்து கொண்டிருப்பேன். ஆனால், உங்கள் முன் எனது தயக்கத்தை தாண்டி வருவது இயலாத ஒன்றாகவே இருக்கும். அதற்கான காரணங்களாக மனம் பலவற்றை என் முன் கொட்டும். உங்களை சந்திக்கும் அளவிற்கு எனக்கு நுண்ணுணர்வு போதாது, வாசிப்பில் அந்த அளவிற்கு மேன்மை கிடையாது என்பது போன்ற பல வெளிப்படையான காரணங்கள். ஆனால், உள்ளார்ந்த காரணங்கள் நான் என்னுள் ஆத்மார்த்தமாக உடைபடுவதற்கு தயாராக இல்லை என்பதே. அது ஒரு அப்பட்டமான ஆணவச் செயல்பாடு என்று புரிகிறது. என்னை அல்லது நான் என்னுள் உறுதி படுத்தி வைத்திருக்கும் சில வெற்று சிந்தனைகளை கலைக்காமல் பார்த்து கொள்கிறேன் என்று தெரிகிறது.

இதன் தொடர்ச்சியாக நான் சாமானியனின் இயல்பான ஒரு எல்லைக்குள் (zone) சென்று விடுகிறேன். அதன் இருப்பிட பகுதி ஆணவம் மட்டுமே ஆட்சி செய்யும் ஒரு கோட்டை. அங்கிருந்து யாரை வேண்டுமானாலும் குறை சொல்லி திட்டிக்கொண்டே இருக்கலாம். அதற்கு ஒரு கூட்டமும் நமக்கு சேர்ந்து விடும். ஆனால் அங்கே ஒரு சிறிய அளவில் கூட இருக்க முடியவில்லை என்னால். மறுபடியும் முதலில் இருந்து ஒரு சுற்று. சேற்றிலும் கால் ஆற்றிலும் கால். ஒரு ஊசலாட்டம். இதற்கு முன்பு நான் உங்களுக்கு எழுதிய கடிதங்களும் அவ்வாறான ஒன்றே.

இங்கே என் கேள்வியை இவ்வாறாக தொகுத்து கொள்ள முயல்கிறேன். ஆணவம் சிறிது கூட நன்றே என்று பெருஞ்செயலுக்கான தடைகளை பற்றிய கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தீர்கள். ஒரு சாதாரண மனிதனிடம் எந்த அளவிலான ஆணவம் நம்மை பாதுகாத்து கொள்ளும், எது போன்ற ஆணவம் நம்மை படுகுழியில் சென்று விழவைக்கும்.

பேரன்புடன்,

நரேந்திரன்

***

அன்புள்ள நரேந்திரன்,

இத்தகைய விவாதங்களில் சொற்களை கலைச்சொற்களாக கருதவேண்டும். ஆணவம் என்பதை நான் தத்துவ விவாதங்களில் பயன்படுத்தப்படும் ஆணவமலம் என்னும் பொருளில் கையாள்கிறேன்.

அதை நான் என்னும் உணர்வு, தன்னை இங்கே நிலைநாட்டவேண்டும் என்னும் விழைவு, பெருகவேண்டும் என்னும் விசை என வரையறை செய்யலாம். உயிரின் முதல்விசை அது. அது ஆன்மிக தளத்தில் அது எதிர்விசை. உலகியலில் இயக்கவிசை. அந்த ஆற்றலே செயல்படத் தூண்டுகிறது. வெற்றியை விழையச்செய்கிறது.

அச்சொல்லால் நான் உத்தேசிப்பது பிறரை கீழிறக்கிநோக்கும் ‘திமிர்’ரை அல்ல. தன்னை மிகைப்படுத்திக் கொள்வதையும் அல்ல. தாழ்வுணர்ச்சியை மறுநிகர் செய்ய உருவாக்கிக்கொள்ளும் தன்வீக்கத்தையும் அல்ல.

எல்லாச் சூழலிலும் சிலரே செயலாற்றி வெல்வார்கள். பெரும்பாலானவர்கள் ஆற்றலின்மையும் சோம்பலும் கொண்டவர்கள். அதை தங்களுக்கே நியாயப்படுத்திக்கொள்ளும் சொற்களைச் சேர்த்து வைத்திருப்பவர்கள். அவர்களுக்கு செயலூக்கம் கொண்டவர்களே முதன்மை எதிரிகள். அவர்களை நிராகரிக்காமல் தேக்கநிலை கொண்டவர்களால் வாழமுடியாது.

ஒரு சிற்றூரில் நீங்கள் வசித்திருந்தால் தெரியும். அந்த ஊரில் எவர் செயலூக்கம் கொண்டவரோ, எவர் ஆற்றல்கொண்டவரோ, அவரையே அனைவரும் எதிர்ப்பார்கள், ஏளனமும் செய்வார்கள். அவர் அவர்களுக்கு நன்மையை மட்டுமே செய்திருந்தாலும்கூட. ஏனென்றால் அவ்வாறு எதிர்க்காவிட்டால் அவர்கள் தங்கள் தேக்கநிலையை தாங்களே ஒப்புக்கொள்ள, தங்களைத் தாங்களே வெறுக்க வேண்டியிருக்கும்.

இன்றைய சூழல் அந்தச் சிற்றூராக உலக இணையவெளியை ஆக்கிவிட்டிருக்கிறது. ஒருவன் எத்தனை அடக்கமாக இருந்தாலும் சரி, எத்தனை தூரம் பிறருடன் ஒத்துப்போனாலும் சரி, செயலூக்கம் கொண்டவன் என்றால் அவன் பரவலாக ஏளனம் செய்யப்படுவான். எதிர்க்கப்படுவான், பழிசுமத்தவும் படுவான்.

இச்சூழலில் செயலாற்றுபவர் தன்மேலும், தன் செயல்மேலும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருக்கவேண்டும். இல்லாவிட்டால் மிக எளிதில் அவர் உளச்சோர்வடைவார். தனிமையை உணர்வார். ஆகவேதான் ஆணவம் இன்றியமையாதது என்று சொல்கிறேன். தன்னைப் பற்றி நிமிர்வுடன் எண்ணிக்கொள்வது, தன்னை பழிக்கும் தேக்கநிலைக் கூட்டத்தின் முன் தன்னை முன்வைப்பது செயல்படுபவருக்குத் தேவையாகிறது. இல்லையேல் செயல் என ஏதும் எஞ்சாது.

ஒற்றை வரியில் சொல்வதென்றால் நான் என எண்ணிக்கொள்கையில் ஒருவனுக்கு வரும் நிறைவும் இனிமையுமே ஆணவம் என்பது. அதுவே உலகியலில் நம்மை நிலைநிறுத்தும் வேர். வேர்கள் அறுபட்டதென்றால் பறக்கவேண்டும். அதுவரை வேர் தேவை.

ஜெ

செய்தொழில் பழித்தல்

செயல், தடைகள்

செயல் எனும் விடுதலை

பெருஞ்செயல் – தடைகள்

நாம் ஏன் அழகை உருவாக்க முடிவதில்லை?

நேர்த்தியும் அழகும்-நேற்றும் இன்றும்

பெருஞ்செயல் ஆற்றுவது

பெருஞ்செயல் ஆற்றுவது

முந்தைய கட்டுரைஅறமென்ப – கடிதங்கள்
அடுத்த கட்டுரைபின்தொடர்வன… கடிதம்