இலக்கிய விவாதத்தில் எல்லை வகுத்தல்

இலக்கியத்தில் சண்டைகள்
இலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களும்

அன்புள்ள ஜெ,

நீண்ட நாட்களாகக் கேட்ட வேண்டும் இருந்த கேள்வி.

இலக்கிய விவாதங்கள் மற்றும் ஒரு பிரதி குறித்து விமர்சனம் வைக்கும் போது ஒருவர் பொதுவாக ஒரு கருத்தை முன் வைத்தால் அதற்குச் சம்மந்தப்பட்டவர்கள் எதிர்க் கருத்தைக் குறிப்பிட்ட நபர் வைத்த கருத்திலிருந்து தொடங்காமல் தனிமனித தாக்குதல்களில் இறங்குகின்றனர். மேலும், தான் சொன்ன கருத்தே சரி என்ற  நிலையில் உள்ளனர்.

தமிழ் இலக்கிய சூழல்களில் பிரமிள், வெங்கட் சாமிநாதன், ஜெயகாந்தன் காலத்திலும் இப்படிதான் இருந்ததா? இங்கே தனிமனித தாக்குதல் என்பது ஒருவரின் குடும்பம் தொழில் வாழ்வு வரை நீண்டு செல்கிறது. இப்படியாக இருக்கும்பட்சத்தில் இலக்கியத்தில் விவாதங்கள், ஆக்கபூர்வமான உரையாடல் நடைபெறும் என்ற கனவு கூட காணாத நிலையில் உள்ளோம்.

ஒருவர் முன் வைக்கப்பட்ட கருத்தை தம் எதிர்க்கருத்தை எப்படி வைக்கபடுமாயின் விவாதங்கள் மற்றும் உரையாடல்கள் உருவாகும். இன்றைய காலங்களில் சமூகவலை தளங்களில் இலக்கிய விவாதங்களே தனிமனித தாக்குதலாகவே மாறும் நிலை உள்ளது.

ஒரு ஆக்கபூர்வமான உரையாடல் நடைபெற வழி என்ன? இதனை எப்படி அணுகலாம்?

உங்கள் மீதும் இது போன்ற தாக்குதல்கள் நிகழும் போது அணுகும் நிலை குறித்து கூற இயலுமா?

ஆர். நவின் குமார்

***

அன்புள்ள நவீன்குமார்

இந்தக் கேள்வியை என்னிடம் உளம்வருந்திக் கேட்ட பலர் உண்டு. குறிப்பாக நான் ஒரு ரவுடியால் தாக்கப்பட்டபோது என்னிடம் மாற்றுக்கருத்து கொண்டவர்கள் அதை வெளிப்படையாக மகிழ்ந்து கொண்டாடியதைக் கண்டு இலக்கியமென்னும் இயக்கம் மீது நம்பிக்கை கொண்டிருந்தவர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். அவர்களில் மிகவும் கசப்படைந்தவர்கள் இடதுசாரி, திராவிட இயக்கச் சார்புள்ள என் வாசகர்கள். அவர்கள் மதிப்பு வைத்திருந்த இடதுசாரி, திராவிட இயக்க எழுத்தாளர்களும் முகநூலர்களும் அவ்வாறு கொண்டாடியதை அவர்களால் ஏற்கவே முடியவில்லை.

சிலநாட்களுக்கு முன்புகூட ஒருவர் அன்று அடைந்த ஏமாற்றத்தைப் பதிவுசெய்தார். அவர்களுக்கு இணையாகவே அரவிந்தன் நீலகண்டன், ஒத்திசைவு ராமசாமி வகையறாக்களும் மகிழ்ந்து கொண்டாடினார்களே என்று நான் பதில் சொன்னேன். “அவர்கள் என்றைக்குமே தனிநபர் காழ்ப்புக்கு அப்பால் சென்றவர்கள் அல்ல. இவர்களைப் பற்றி அப்படி நான் நினைக்கவே இல்லை” என்று அவர் பதில் சொன்னார். உறுதியான ஆதரவுடன் உடன்நின்றவர்கள் என்றால் எவ்வகையிலும் நான் நேரடியாகச் சார்ந்திராத தலித் இயக்க நண்பர்கள் மட்டுமே.

புலமைக்காய்ச்சலும் அதன் விளைவான போராட்டமும் என்றும் உள்ளது. அதை நான் இத்தளத்தில் தொடர்ச்சியாக எழுதிவந்திருக்கிறேன். சங்ககாலத்திலேயே புலவர்களிடையே மோதல் பற்றியசெய்திகள் உள்ளன. கம்பன் ஒட்டக்கூத்தன் பூசல் கம்பனின் சாவில் முடிந்தமையும் நாமறிந்ததே. பின்னாளில் பாரதி, புதுமைப்பித்தன் காலகட்டத்திலும்கூட இலக்கியப்பூசல்கள் நிகழ்ந்துகொண்டே தான் இருந்தன.

இலக்கியத்தில் பலவகையில் பூசல்கள் ஏற்படுகின்றன. இலக்கியச்சூழலில் சிலருக்கே உண்மையில் வாசகர்களும் மதிப்பும் உருவாகிறது. எஞ்சியோர் இறுதிவரை தனிமையில்தான் எழுதிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் மதிப்புபெறும் படைப்பாளிகள் மேல் காழ்ப்பு கொள்வது இயற்கை. வெறுமே தகவலறிவும் தர்க்கத்திறனும் கொண்டு படைப்புத்திறனோ கற்பனையோ இல்லாதவர்கள் உண்டு. அவர்கள் தங்களை அறிஞர் என எண்ணி ஆணவம் கொண்டிருப்பார்கள், ஆனால் தங்களால் எதுவுமே படைக்கப்படவில்லை, படைப்பை அறியும் நுண்ணுணர்வும் தங்களுக்கு இல்லை என உணர்ந்திருப்பார்கள். அவர்கள் படைப்பாளிகள்மேல் காழ்ப்பு கொண்டிருப்பார்கள்.

படைப்பாளிகள் தங்கள் படைப்புத்திறன் குறித்த நம்பிக்கையும் அதற்குரிய நிமிர்வும் கொண்டிருப்பார்கள். அவர்கள் படைப்பவற்றின் இடமென்ன என்று அறியாத பாமரர்கள் அதை வெற்றாணவம் என நினைப்பார்கள். ஒரு செல்வந்தனின், அதிகாரம் கொண்டவனின் நிமிர்வை அவர்கள் ஏற்பார்கள். அதன்முன் வணங்கவும் தயங்க மாட்டார்கள். படைப்பாளியின் நிமிர்வை அவர்களால் உள்வாங்கவே முடியாது. அவர்களும் படைப்பாளிகளின் மேல் காழ்ப்பு கொண்டிருப்பார்கள். பொதுவாகவே அறிவியக்கம் மீது பாமரர்களுக்கு அச்சம் இருக்கும். அதை ஏளனம் காழ்ப்பு என வெளிப்படுத்துவார்கள்.

இதற்கு அப்பால் இரண்டு தளங்கள் உண்டு. உலகமெங்கும் மதக்காழ்ப்பு மதங்கள் தோன்றிய நாள் முதல் இருந்து வருகிறது. மதங்கள் உறுதியான நம்பிக்கையை, அடையாளத்தை அளிக்கின்றன. அதைநாடி அங்கே செல்பவர்கள் மாற்றுத்தரப்பினரை காழ்ப்புடன் மட்டுமே அணுகுவார்கள். சென்ற இருநூற்றாண்டாக அரசியல் நவீன மதம்போலச் செயல்படுகிறது. கருத்தியல்சார்ந்து மக்களை ஒன்றுதிரட்டி அவர்களுக்கு உறுதியான நம்பிக்கை, அடையாளம் ஆகியவற்றை அளிப்பது அரசியல். அதை நம்பியவர்களும் காழ்ப்பையே ஆயுதமாகக் கொண்டிருப்பார்கள்.

இன்றைய இலக்கியம் இலக்கியம் மட்டுமல்ல. ஜனநாயக அரசியல்சூழலில் இலக்கியம் கருத்துச் செயல்பாடாகவும் திகழ்கிறது. ஆகவே மதவாதிகளும் அரசியல்வாதிகளும் அவர்களின் காழ்ப்பு ஆயுதங்களுடன் அதை எதிர்கொள்கிறார்கள். அவர்களுக்கு எதிராகச் செயல்படுவதாக அவர்களுக்கு தோன்றினால், அவர்களின் தரப்பில் நின்று கொடிபிடிக்காவிட்டால், அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்று கூவாவிட்டால் வசைபாடி இழிவு செய்கிறார்கள்:

நாம் சூழலில் பார்க்கும் காழ்ப்புகள் பெரும்பாலும் இந்த தளங்களைச் சார்ந்தவைதான். அதிலும் எந்த பாமரரும் எதையும் எழுதலாமென்னும் இடம் அளிக்கப்பட்டிருக்கும் சமூகவலைச் சூழலில் காழ்ப்பே மேலோங்கி ஒலிக்கும். வேறுவழியே இல்லை, இந்நூற்றாண்டின் தனித்தன்மை கொண்ட ஒரு பிரச்சினை இது.

எழுத்தாளர்களுக்குள் உள்ள கருத்துப்பூசல்கள் எளிமையானவை. ஏனென்றால் எழுத்தாளர்கள் தனிமனிதர்களாகவே செயல்படுகிறார்கள். அவர்களுக்கு தங்கள் படைப்புக்களைப் பற்றிய பெருமிதம் இருக்கிறது. ஆகவே அவற்றின்மேல் விமர்சனம் வரும்போது அவர்கள் நிலையழியலாம். ஒவ்வொரு எழுத்தாளர்களுக்கும் தங்களுக்கான அழகியல் நம்பிக்கைகள் உள்ளன. ஆகவே அவர்களிடையே பூசல்கள் நிகழலாம். அவர்கள் கொஞ்சம் உணர்ச்சிகரமானவர்கள் என்பதனால் அந்த விவாதம் சற்று எல்லைமீறலும் ஆகும். ஆனால் அதெல்லாமே வாசகனால் எளிதில் கடந்து செல்லத்தக்கவைதான்.

சுந்தர ராமசாமியை பிரமிள் எல்லைமீறி தனிப்பட்ட முறையில் தாக்கிக் கொண்டிருந்தார். பிரமிளின் உளச்சிக்கல்களை நான் நன்கறிந்திருந்தேன். ஆகவே சுந்தர ராமசாமிக்கும் பிரமிளுக்கும் ஒரேசமயம் நெருக்கமானவனாகவும் இருந்தேன். வெங்கட் சாமிநாதனுக்கும் சுந்தர ராமசாமிக்கும் ஒவ்வாமை இருந்தது. அசோகமித்திரனுக்கு இவர்கள் அனைவரிடமும் விலக்கம் இருந்தது. இவர்கள் அனைவர் மேலும் திகசிக்கு விமர்சனம் இருந்தது. இவர்கள் அனைவரிடமும் நான் நெருக்கம் கொண்டிருந்தேன். ஏனென்றால் இந்த பூசல்கள் ஒன்றும் பெரிய விஷயங்களல்ல என அறிந்திருந்தேன்.

அரசியலாளர்களை, மதவெறியர்களை, பாமரர்களை அதேபோல கருத முடியாது. அவர்களை இன்றைய சூழலில் முழுமையாக விலக்கிய பின்னரே இலக்கியவிவாதம் நிகழ்த்த முடியும். அவர்களை வாசகர்கள் என்றோ பொதுமக்கள் என்றோ கருதமுடியாது. அவர்கள் ஒட்டுமொத்தமாகவே இலக்கியத்தின் எதிர்த்தரப்புகள். எந்த களமென்றாலும் ஒருவரை இலக்கிய விவாதத்திற்குள் பொருட்படுத்தவேண்டும் என்றால் அவர் இலக்கியம் மீது அடிப்படை மதிப்பும் ஈடுபாடும் கொண்டிருப்பவரா என்பது முக்கியம். அந்த அளவுகோலில் தேறாத ஒருவரை முழுமையாகவே விலக்கிவிடுவது, அவருடைய ஒரு சொல்லைக்கூட பொருட்படுத்தாமலிருப்பதே எதையேனும் உண்மையாக பேச, கற்றுக்கொள்ள வழியமைப்பது.

ஜெ

இலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களும்

அன்றைய எழுத்தாளர்களும் இன்றைய விவாதங்களும்

எழுத்தாளரின் பிம்பங்கள்

வசைபட வாழ்தல்

மலேசியா- ஓர் இலக்கியப்பூசல்

இலக்கியமதிப்பீடுகளின் எல்லைகள்

சுராவும் சுஜாதாவும்

சிங்கைப்பூசல்கள் -ஒரு விளக்கம்

பெண்ணிய வசை

நகுலனும் சில்லறைப்பூசல்களும்

இணைய விவாதங்கள் பற்றி