இன்றைய சிற்பவெற்றிகள் எவை?

அன்பின் ஜெ,

இந்த கேள்விகளை எனக்கு கேட்கலாமா என்று தெரியவில்லை. எப்படி கேட்பதும் என்பதும் கூட. இவற்றை நான் பல சந்தர்பங்களில் எண்ணியதுண்டு. எவரிடமாவது கேட்க வேண்டும் என்று தோன்றியிருக்கிறது. உங்களிடம் அதை கேட்டுவிடுகிறேனே. அவற்றை இங்கு ஒருவாறு அடுக்க முயற்சிக்கிறேன்.

நிகழ்காலத்தின் அல்லது சமகாலத்தின் கலைச் செல்வங்கள் அல்லது கலை வெற்றிகள் என்று அறியப்படுபவை எவை? கடந்த எழுபது ஆண்டுகளில் ஒரு இந்திய மனதின் தமிழ் மனதின் உண்மையான அகவயமான கலை சாதனை என்று இன்னும் ஐநூறு ஆண்டுகளுக்குப் பின்னர் அறியப்படுவது எதாவது எஞ்சுமா? அதற்கான சாத்தியங்கள் இருக்கிறதா?  கலை வெற்றி என்பது இலக்கியத்திலும் ஏடுகளிலும் தான் மிஞ்சுமா?

இப்போது நாம் கான்கிரீட்களால் ஆன வீடுகளில் குடியிருக்கிறோம் எந்த ஒரு வளைவும் குழைவும் இல்லாத அறைகள். ஒரேமாதிரியானவை. ஒரு வித பெட்டித்தன்மையுடன் (inside of the box) இருக்கிறது.  இது நாம் வாழும் இடத்தின் நிலை. என் வீட்டின் தெரு எல்லையில் ஒரு ஆலயம் எழுப்பிக்கொண்டு வருகிறார்கள். வெறும் சிமெண்ட் சிலைகளாலும் காரைகளாலும் எழுப்பப்படும் கோபுரம், தூண்கள். அந்த சிலைகளுக்கு skeleton ஆக இரும்புக்கம்பிகள். அதன் மேல் மூக்கும் காதும் கைகளும் உருவாகி தெய்வமாகும். இன்னும் பத்து பதினைந்து ஆண்டுகள் கழித்து மூக்கோ முகரையோ பெயர்ந்து நம் கையயும் காலையும் கீறும் கிழிக்கும் அளவிற்கு. அதுவும் சரி செய்து பூசி மொழுகி வண்ண வண்ண பெயிண்ட்களால் அலங்கரிக்கப்பட்டுவிடும். ஒரு வித ப்ளாஸ்டிக் தன்மையாக படுகிறது. இது வழிபடும் இடத்தின் நிலை.

மரபான ஆலயங்களில் கருங்கல் சிலைகளின் நிகர் ஆகாது தான். என் கேள்வி இந்த மன நிலையை எப்படிப் புரிந்து கொள்வது பற்றி தான்.  நாஸ்டால்ஜியாவுடனோ பழங்காலம் என்ற உடனேயே வருவதனால் எழும் எழுச்சி போன்றவைகளால் தான் நாம் அதனை பெரும் வெற்றிகளாக கருதுகிறோமா? அன்றைய நாட்களில் இருந்த அம்மக்கள் அத்தகைய செல்வங்களை எழுப்பும் போது எந்த ஒரு சலிப்பும் கொள்ளவேயில்லையா?

மேலும் இன்று அத்தகைய பழங்கோயில்களின் சுவர்களையும் சிற்பங்களையும் ஒரு சுற்று சுற்றி, மறைத்தும் மறைக்காததுமாக மின்சாரத்திற்காக அமைக்கப்படும் வயரிங் பைப்கள் ஒரு வித ஆசூயை ஏற்படுத்துகிறது.  நடைமுறையில் இக்கால சூழ் நிலைக்கு ஏற்ப மின்சாரம் தேவைதான். தவிர்க்கவியலாது தான். இருந்தாலும் அந்த எண்ணத்தை மறுக்க முடியவில்லை. இன்றும் கூட கோபுரத்தின் உச்சியை ஒளியூட்டுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் கம்பியும் அதில் மாட்டியிருக்கும் குழல் விளக்கும் என்னை அணுகவிடாமல் செய்கின்றன.

இன்று இந்நிலையில் இந்த சிமெண்ட் காரை ஆலயங்களே இன்னும் ஐநூறு அறுநூறு வருடங்களுக்கு பின்னர் பெருங்கலைச் செல்வங்களாக அறியப்பட்டுவிடுமா? வெண்முரசில் எழும் futuristic vision (தீர்க்க தரிசனத்தின்) பார்வையாக, “சூதர்கள் இவற்றைப் பாடப்போகிறார்கள். சூதர்கள் இவற்றை பாடாமல் ஒதுக்கிவிடுவார்கள் என்று நீ அஞ்சுகிறாயா?” என்று எதிர்காலத்தின் விழிப்புணர்வுடன் இருக்கும் இடங்களை நான் இவற்றோடு தொடர்பு படுத்திப் பார்க்கிறேன். என் காலகட்டத்தின் குரல்களாக ஒலிக்கபோகும் கலை பொக்கிஷங்கள் எவை?

சர்வதேச அளவில் இன்றைய கட்டிடக் கலையின் செல்வங்களாக  பூர்ஜ் கலிஃபா’வோ மலேசியாவின் இரட்டைக் கோபுரமோ இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் கடந்த எழுபது ஆண்டுகளில் லட்சியவாதத்தில் இருந்து உலகமயமாக்கத்திற்கு நாம் நகர்ந்திருக்கிறோம். நாம் இருப்பது ஒருவகை transitional காலகட்டம் என்பதனால் இப்படியொரு செயலற்ற தன்மை மந்த நிலை இருக்கிறதா? நம் தமிழகத்தில் சென்னையின் கத்திப்பாராவின் க்ளோவர் லீஃப் வடிவிலான மேம்பாலமும் தெற்கே குமரிக்கடலில் எழுப்பட்ட வள்ளுவர் சிலையும் ஈஷா யோகாவினால் அமைக்கப்பட்ட ஆதி யோகி சிலையும் ISKCON முதலானவர்களின் செயற்கை வழிபாட்டுத்தலங்களும் தான் கட்டிடக்கலை சிறப்புகளாக எஞ்சுமா? இவையெல்லாம் குறியீட்டு அளவில் வெற்று பூச்சுகளோடு நின்றுவிடுமா?

உண்மையில் சமகாலத்தின் கலை வெற்றியாக ஆழ் அகத்தில் தமிழ் மனமோ இந்திய மனமோ உறையும் ஏதேனும் ஒன்று உள்ளதா? இல்லை வெறும் குறியீட்டுத் தளத்தில் தான் எஞ்ச வேண்டும் என்று இருக்கிறதா? அத்தகைய சாத்தியக்கூறுகள் தங்களுக்குத் தெரிந்து இருக்கிறதா? பின்வரும் காலங்களில் அவற்றை சரியாக இனங்கண்டு கொண்டு பேணிப் பாதுக்காக்கப்பட்டு வரலாற்றால் அவை இந்த காலகட்டத்தின் சாதனையாக எஞ்சலாம் என்று கருதுவதற்கு சிறிய இடமேனும் உண்டா? தெளிவுபெற விரும்புகிறேன். இது சம்பந்தமான விவாதங்களோ சுட்டிகளோ இத்தளத்தில் இருந்தால் பகிரவும்.

நன்றி,
லோகேஷ் ரகுராமன்.

அன்புள்ள லோகேஷ்,

ஒரு பொருள் எப்படி கலைப்படைப்பாகிறது? இரண்டு அடிப்படைகளில். ஒன்று அழகு. இரண்டு குறியீட்டுத்தன்மை.

அழகு என்பது அதன் வடிவத்தின் ஒத்திசைவு, அதன் வண்ணங்களின் இசைவு ஆகியவற்றிலிருந்து உருவாவது. அது பல்வேறு விஷயங்களை உணர்த்துவதாக ஆகும்போது ஒரு குறியீடாக மாறுகிறது. கலைப்பொருள் என்பது பார்ப்பவரிடம் விரிவது, மேலும் மேலும் பொருளேற்றம் கொள்வது. உணர்வுகளையும் எண்ணங்களையும் உருவாக்குவது.

கலைப்பொருள் அவ்வாறு ஓர் அர்த்தவெளியைச் சுட்டி நிற்பதனால் காலப்போக்கில் அது பொதுப்புழக்கத்தில் ஒரு படிமமாக நிலைகொள்கிறது. அதை வெவ்வேறு தருணங்கள் வெவ்வேறு வகையாக மக்கள் பயன்படுத்துகிறார்கள். அதன் மதிப்பு பெருகிக்கொண்டே செல்கிறது. நாளடைவில் அது ஒரு தொன்மமாக ஆகிவிடுகிறது.

“திருவாரூர் தேர் மாதிரி” என்ற சொல்லாட்சியே உதாரணம். அலங்காரம், அழகு என்பதற்கும் அது சொல்லப்படுகிறது. நிதானமாக வருவதற்கும் அது சொல்லப்படுகிறது. செல்லும்வழியில் அப்படியே நாட்கணக்கில் கிடப்பதற்கும் அது சொல்லப்படுகிறது.

கலைஞன் அக்குறியீட்டை தன் வெளிப்பாடுக்காக உருவாக்கலாம். அல்லது ஒரு பொருள் காலப்போக்கில் தன்னிச்சையாக அர்த்தமேற்றம் கொண்டு படிமமாக, குறியீடாக ஆகலாம். சில எளிய பொருட்கள் ஒரு நாகரீகத்தின் ஒட்டுமொத்த அர்த்தத்தையே குறிப்பிடுவனவாக ஆகிவிடுகின்றன. மொகஞ்சதாரோவின் பசுபதி முத்திரைபோல. அந்நிலையில் அவையும் கலைப்பொருட்களாக ஆகிவிடுகின்றன. அவை உருவாக்கப்படும்போது கலைப்பொருளாக உத்தேசிக்கப்படாவிட்டாலும்.

உதாரணமாக, இரண்டாயிரமாண்டுகளுக்கு பிறகு, இன்றைய மானுட நாகரீகமே என்னவென்று தெரியாமல் மறைந்துவிட்டபின்பு, ஒரு பிளாஸ்டிக் பக்கெட் மட்டும் கிடைக்கிறதென்று கொள்வோம். அது நம் நாகரீகத்தையே ஒட்டுமொத்தமாகச் சுட்டும் ஒரு பொருளாக இருக்கும். அதற்கு குறியீட்டுத் தகுதி வரும். கலைப்பொருளாகவும் கருதப்படும்.

இன்று கட்டப்படும் கட்டிடங்கள் இருவகை. கலைநோக்குடன் கட்டப்படுபவை. பயன்பாட்டுக்காக கட்டப்படுபவை. அதேபோலத்தான் சிலைகளும். அவற்றில் எவையெல்லாம் அர்த்தமேற்பு கொண்டு, ஆழ்ந்த பொருள்விரிவை அளிக்கும் குறியீடுகளாக நீடிக்கின்றனவோ அவை கலையாக நிலைகொள்கின்றன.

சென்னை உயர்நீதிமன்றக் கட்டிடம் பயன்பாட்டுக்காகக் கட்டப்பட்டதுதான். ஆனால் அது ஒரு கலைப்படைப்பு. அது பிரிட்டிஷ் ஆட்சியின் இருநூறாண்டு காலத்தின், பிரிட்டிஷார் இந்தியாவுக்கு அளித்த நீதியமைப்பின் குறியீடு. நாம் அதை பார்த்துப்பார்த்து, சினிமாவில் காட்டிக்காட்டி, எழுதி எழுதி அப்படி அதை ஆக்கிவிட்டோம். ஆனால் இன்று கலைநோக்குடன் கட்டப்படும் ஒரு கட்டிடம் எந்த உணர்வையும், சிந்தனையையும் எழுப்பாமல் ஓர் அலங்காரப்பொருளாக நீடித்து மெல்ல பொருளிழந்து மறையவும்கூடும்.

இது கட்டிடம், சிற்பம் ஆகியவற்றில் மட்டுமல்ல. இன்று பல்லாயிரம் கதைகள், கவிதைகள் எழுதப்படுகின்றன. அவற்றில் எவை கலை என நிலைகொள்ளும்? எவை அடுத்தடுத்த தலைமுறையில் நீடிக்கும்? இன்று நாம் அறுதியாகச் சொல்லிவிடமுடியாது. இன்று ஓர் அரசியல் சந்தர்ப்பத்தில் பயன்பாட்டுக்காக முன்வைக்கப்பட்ட ஓர் அறிக்கை காலப்போக்கில் பேரிலக்கியமாக கருதப்படவும் வாய்ப்புண்டு. உதாரணமாக, நேருவின் சுதந்திரநாள் பிரகடனம்.

ஒரு பொருள் கலைப்படைப்பாக நீடிப்பதற்கு ‘அழகு’ மட்டுமே காரணம் அல்ல. அழகியல் என்னும் சொல் அவ்வகையில் மிகவும் திசைதிருப்பக்கூடிய ஒன்று. அழகு என நாம் சொல்வது ஒத்திசைவை. கண்ணுக்கும் காதுக்கும் தெரியும் ஒத்திசைவு அது. வடிவம், வண்ணம், ஏற்ற இறக்கங்களில் அந்த ஒத்திசைவு இருந்தால் நாம் அழகு என்கிறோம்.

கலைக்கு அது இன்றியமையாதது அல்ல என நவீனக் கலைமரபு நம்புகிறது. ஒரு பொருள் தன்னிலிருந்து விரியும் பொருள்விரிவு கொண்டிருக்குமென்றால் அழகில்லையென்றாலும் அது கலைப்பொருளே. நவீனக் கலைப்படைப்புகள் பலவும் அழகற்றவை. ஒத்திசைவுக்கு பதிலாக மீறலையும் சிதைவையும் முன்வைப்பவை. நவீன ஓவியங்கள், சிற்பங்களை பாருங்கள்.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில்தான் கடைசியாக கட்டிடக்கலையில் நமக்குரிய ஒரு கலைவடிவம் உருவாகியது. ஆங்கிலோசாக்ஸன் பாணி கட்டிடக்கலையும் நமது கட்டிடக்கலையும் இணைந்து உருவானது அது. அதற்குப்பின் நம் கட்டிடக்கலை என்பதே நகலெடுப்பதுதான். நான் நல்ல புதிய கட்டிடங்களை இந்தியாவில் கண்டிருக்கிறேன், ஆனால் அவற்றைவிட மேலான அவற்றின் மூலவடிவங்களை மேலைநாடுகளிலும் சிங்கப்பூரிலும் கண்டிருப்பதனால் அவற்றைப் பொருட்படுத்தவில்லை.

நமக்குரிய நவீனக் கட்டிடக்கலை உருவாகவில்லை என்பது மட்டுமல்ல, ஏற்கனவே நமக்கிருக்கும் மரபான கட்டிடக்கலையும் அழிந்து கொண்டிருக்கிறது. கல்லால் ஆன நம் ஆலயக் கட்டிடக்கலை இன்று செலவேறியது. அதை சிமெண்டில் செய்யும்போது அந்த அமைப்பின் இயல்பு சிதைகிறது. நமக்குரிய எட்டுகட்டு பாணி வீடுகள் இன்று கட்டப்படுவதில்லை. அவற்றை கான்கிரீட்டில் நகல்செய்யும்போது இயல்பான அழகு வெளிப்படுவதில்லை.

மதம்சார்ந்த புதிய குறியீடுகள் கட்டிடங்களாகவும் சிலைகளாகவும் வடிக்கப்படுகின்றன. பிர்லா மந்திர் போன்றவை ஆடம்பரமானவை. அவற்றை கலை என கருத முடியவில்லை. ஆனால் சில அரிய சமண ஆலயங்கள் இந்தியாவெங்கும் புதிதாகக் கட்டப்பட்டுள்ளன. அத்தகைய சில கலைவெளிப்பாடுகள் இந்தியாவெங்கும் உள்ளன.

தமிழகத்தில் உள்ளவற்றில் பாண்டிச்சேரி அரவிந்த ஆசிரமத்திலுள்ள மைத்ரி மந்திர் என்னும் பொன்னுருளை வடிவக் கட்டிடமும் ஈஷா யோக மையத்தில் நிறுவப்பட்டுள்ள ஆதியோகி சிலையும் மிகமுக்கியமான கலைப்படைப்புக்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். தமிழ்நாட்டில் இவற்றின்மேல் ஈடுபாடு கொண்டவர்கள், பார்த்து நிறைவடைபவர்கள் சிலரே.

எளிய அரசியல் மற்றும் மதக்காழ்ப்புகளால் அவற்றை இழிவுசெய்பவர்கள் உண்டு. புதிய கலைப்பாணிகளை உணராமல் கண்ணுக்குப் பழகியவற்றையே தேடுபவர்களும் உண்டு. உலகின் பலநாடுகளுக்குச் சென்று மாபெரும் கலைப்படைப்புகளை கண்டவன், கலையை அறிந்தவன் என்னும் வகையில் இவையிரண்டும் கலைவெற்றிகள் என்று ஆணித்தரமாகச் சொல்ல தயங்க மாட்டேன்.

இவை இரண்டுமே இந்தியக் கலைமரபை ஒட்டியவை அல்ல. மேலைக் கலைமரபைச் சார்ந்தவை. அதை ஓர் இந்தியக்கலை ஆர்வலன் என்றவகையில் குறையாகச் சொல்லலாம். மைத்ரி மந்திர் ஒரு நவீன கட்டிடம், நவீனக் கட்டுமானப் பொருட்களால் மட்டுமே இயல்வது. அதிலுள்ளது ஐரோப்பிய நவீனத்துவம் உருவாக்கிய புதிய கலைப்பாணி. ஆதியோகி இந்தியச் சிற்பக்கலையின் சாயல் இன்றி, ஐரோப்பியச்  செவ்வியல் சிற்பங்களின் பாணியிலேயே அமைந்திருக்கிறது. கொஞ்சம் கவனிப்பவர்கள் அதில் அமெரிக்காவின் சுதந்திரதேவிச் சிலையின் சாயலைக்கூடக் காணமுடியும்.

ஒரு சிற்பம், அல்லது கட்டிடம் நம்முள் மேலும் விரிய வேண்டுமென்றால் அதை உருவாக்கியவரின் உளநிலையை, கொள்கையை, கனவை நாம் கூர்ந்தறிய வேண்டும். பெரும்பாலும் கட்டிடங்கள் மற்றும் பெருஞ்சிற்பங்களில் அவற்றுக்கான தத்துவமும் கனவும் ஒரு தத்துவவாதியால் உருவாக்கப்பட்டு சிற்பியால் அது பொருள்வயமாக எழுப்பப்பட்டிருக்கும். அவ்வாறு அந்த மெய்யியல் பின்னணியை அறியாமல் வெறும் விழிகளால் நாம் கலைப்படைப்பை அறியமுடியாது.

நம் மரபான ஆலயங்களை பொறுத்தவரை நாம் அதிகம் கற்காதவர் என்றாலும் நமக்கு அவற்றின் தத்துவ உள்ளடக்கம் செவிச்செல்வமாக ஓரளவு தெரிந்திருக்கிறது. நம் ஆழுள்ளம் அவற்றின் குறிப்பொருளை மரபுவழியாக அறிந்திருக்கிறது. ஆகவே நமக்கு அவை பொருள் விரிவை அளிக்கின்றன. புதிய கட்டிடங்கள் அவ்வாறல்ல, நாமே சற்று முயன்று தெரிந்துகொள்ள வேண்டும். செய்யுளை கவிதை என நினைப்பவர் நவீனக் கவிதையை கவிதையாக எண்ணாமல் போவதுபோல. சற்று பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக, பாண்டிச்சேரி ஸ்ரீஅன்னை மலர்களை ஞானத்தின் வெளிப்பாடுகளாகக் கண்டவர். மலர்களின் உட்பொருள் பற்றி நிறைய எழுதியிருக்கிறார். மலர்யோகம் என அவருடைய முறைமையைச் சொல்லமுடியும். இந்த பூமியை ஒரு மாபெரும் மலராக கண்டவர். மலரிதழ்களின் தொகுதிபோல் அமைந்த மைத்ரி மந்திர் [ஒற்றுமைக் கட்டிடம்] அத்தரிசனத்தின் வெளிப்பாடு. அதை அறிய அறிய அக்கட்டிடத்தின் ஒளியும் அழகும் நம்மில் பெருகுகின்றன. அவர்கள் அந்த கட்டிடத்தின் தூண்கள் உட்பட ஒவ்வொன்றுக்கும் குறியீட்டுப் பொருள் அளிக்கிறார்கள்.

ஜக்கி வாசுதேவ் அமைத்திருப்பது சிவன் சிலை. ஆனால் சிவனை மானுடரில் எழுந்த முதல்யோகி என்று அல்லது யோகமுதல்வன் என்று அவர் உருவகிக்கிறார். ஆகவே ஒரு ‘உலகளாவிய’ தன்மைகொண்ட முகமாக சிவனை வடித்திருக்கிறார். இந்தியத்தன்மை கொண்ட முகம் அல்ல அது. அணிகளில், அடையாளங்களில் இந்திய அழகியல் இருக்கிறது. முகம் ரோமன்முகம் போலிருக்கிறது. இந்தியச் சிற்பவியலின் முத்திரை இலக்கணப்படி அந்த முகம் அமையவில்லை, மேலைநாட்டு நேர்நோக்கு அழகியல்படி அமைந்துள்ளது. அதாவது ஒரு சர்வதேச சிவன். அந்த நோக்கின் வெளிப்பாடென கருதுகையில் அச்சிலையின் அழகு பெருகுகிறது.

இன்றிருக்கும் கலைவெளிப்பாடுகளில் எவை மக்களிடம் சென்று பெருகி மேலும் மேலும் பொருட்செறிவு கொண்டு கலைப்படைப்பாக தலைமுறைகளைக் கடந்து செல்லும் என இன்று சொல்லிவிடமுடியாது. இன்றிருக்கும் சர்வசாதாரணமான ஒரு பொருள் காலப்பெருக்கில் அர்த்தமேற்றப்பட்டு கலைப்படைப்பாக நிலைகொள்ளவும்கூடும். நாம் அதை கணக்கிட முடியாது. நாம் செய்யக்கூடுவது இன்று கலையென வருவனவற்றை உணர்வது மட்டுமே. அவற்றில் இவையிரண்டும் முதன்மையானவை.

ஜெ

நமது கட்டிடங்கள்

உருமாறும் சிவம்

கட்டிடங்கள்-கடிதங்கள்

முந்தைய கட்டுரைராவுத்தர் மாமாவின் கணக்கு
அடுத்த கட்டுரைவெண்முரசு விமர்சனம், ஒரு வாசிப்பு