தத்துவத்தின் பயன்மதிப்பு

வணக்கம் ஜெ

மருத்துவம் இறுதி ஆண்டு தேர்வுகள் சமயத்தில் விஷ்ணுபுரம் விழாவிற்கு வர முடியாமல் ஆனது. பிறகு தேர்வுகள் முடிந்து இன்டெர்ன்ஷிப் தொடங்கிவிட்டது. தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை என்பதே பெரிய விஷயமாக உள்ளது, சனி ஞாயிறென்ற சலுகைகளும் இனி ஒரு வருடத்திற்கு இல்லை.

கிட்டத்தட்ட ஒராண்டு கழித்து இன்று வெண்முரசை மீண்டும் கையில் எடுக்கிறேன். கீழே வைத்த காண்டீபத்தை மீண்டும் எடுத்து நாணேற்றி விட்ட இடத்தில் துவங்கினால் கதைகளின் தெய்வமாகிய புராணிகையின் சிறு குறிப்புடன் படிக்கச் ஆரம்பித்து ஃபால்குனையுடன் மணிப்பூரகம் சென்று கொண்டிருக்கிறேன்.

சென்ற ஓர் ஆண்டில் வெண்முரசுக்கு அளிக்க வேண்டிய சிந்தனை தேர்வுகள் சமயத்தில் சாத்தியம் இல்லை என்பதால் படிக்காமல் வைத்திருந்தேன். எனினும் ஆங்கில நூல்கள் படித்து கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் ஆங்கில மொழியை தமிழை விடவும் சுலபமாக எழுதவும் வாசிக்கவும் துவங்கி விட்டேன். பேசுவதிலும் அவ்வாறே. மேலை தத்துவம் அனைத்தையும் தொட்டு அறிந்து கேள்விகள் கேட்டு பகுத்து முன்னால் சென்று கொண்டே இருக்கிறது. இறுதியில் அது நிற்கும் இடம் சந்தேகம் எனும் கருஞ்சுவர் முன் தான். மாறாக நம் தத்துவம் அனைத்தையும் தொட்டு அறிந்து தொகுத்து தன்னுள் ஆக்கிக்கொள்கிறது. வெண்முரசின் ஒவ்வொரு வரியினூடும் கவித்துவமும் தத்துவமும் இலைகளின் நரம்பென விரிந்து செல்கின்றன. ஒரு வரியிலிருந்து நாம் மேற்கொண்டு பயணிக்கும் வழி பல தூரம் என்றாலும் அது திரும்ப வந்து சேரும் இடம் தொடக்கமே, அனைத்தையும் தன்னுள் கொண்ட ஒரு வட்டம்.

இந்த ஓர் ஆண்டில் சந்தேகத்தின் வழியில் அனைத்தையும் விலக்கி எங்கென்று ஏனென்று எதற்கென்று தெரியாமல் சென்றுகொண்டிருந்தேன். கலைகள் எதற்காக, அருங்காட்சியத்தில் குறிப்பிட்ட ஒளியில் தட்பவெட்ப நிலையில் சிறு மணி நேரங்களுக்கு மட்டுமே பார்க்க முடியும் என்றால் ஓவியங்கள் எதற்கு, தீயினால் எரிந்துவிடும் என்றால் தேவாலயங்கள் எதற்கு, தன் வாழ்நாளில் அறியப்படாமல் வரும்காலத்தை நோக்கி வேலை செய்பவன் தத்துவ அறிஞன் கலைஞன் என்றால் வரும் காலம் அவனை கண்டுகொள்ளும் என்ற நிச்சயம் ஏது, இவ்வாறான கேள்விகள் மூலம் அனைத்தையும் விலக்கி ஏதுமில்லா வெளியில் இருந்துகொண்டிருந்தேன்.

பின்பு ஓரிடத்தில் ரமண மஹரிஷியின் ஒரு மேற்கோள் படித்தேன்- “How do you treat others?” “There are no others” அனைத்துமாதல் என்பது எவ்வளவு மகத்தானது. முன்பு நீங்கள் சொன்ன ஒரு கதை நினைவுக்கு வந்தது. தன் வயலின் மேல் ஒரு கொக்கு அமர்ந்த போது உடல் விதிர்த்த விவசாயி அந்த வயலாகவும் கொக்காகவும் கூட இருக்கிறான்.

அனைத்தையும் தானாக்கி தன்னை அனைத்துமாக்கி என்றுமிருத்தலே விடை. வெண்முரசு என்றும் இருக்கும். அதை இயற்றியதால் நீங்களும்வாசிப்பதால் நானும் கூட.நன்றி.

ஸ்ரீராம்

அன்புள்ள ஸ்ரீராம்,

நவீன மேலைத்தத்துவம் உடைத்து ஆராய்கிறது, உடைசல்களை விட்டுச்செல்கிறது. அறிதலின் பொருட்டு மேலைத்தத்துவத்தை வாசிக்கும் எவருக்கும் இது ஒரு சிக்கல்தான். அதன் விரிவான தர்க்கமும், உள்ளுணர்வு ஒளிரும் வரிகளும் நமக்கு பெரும் ஈடுபாட்டை அளிக்கின்றன, நம்மை நிறைவடையவும் செய்கின்றன. ஆனால் எஞ்சுவதென்ன என்னும் வினா எப்போதும் சோர்வளிப்பது. மேலைத்தத்துவம் ஒருவனை சலிப்புற்ற தனியனாகவே ஆக்கும், பெரும்பாலும்.

தத்துவத்தின் நோக்கம் என்ன என்பது ஒரு முக்கியமான கேள்வி. அது இங்கே வாழ்வாங்கு வாழ வழியமைக்கவில்லை என்றால் அதனால் பயன் என்ன? இந்திய தத்துவத்தின் ஒவ்வொரு மரபும் தன் ‘பயன்’ என்ன என்பதையே முதன்மையாகச் சொல்கிறது. அறிவின்மூலம் தெளிந்து அகத்துயரை வெல்லுதல் என்று சாங்கியம் முதல் வேதாந்தம் வரை தன் பயனை வரையறைசெய்த பின்னரே பேச ஆரம்பிக்கின்றன.இந்த அம்சம் முக்கியமானது.

உண்மை அல்லவா முக்கியம், பயனுள்ளது என்றால் பொய்யும் ஏற்புடையதா என்று கேட்கலாம். ஆனால் இந்திய மரபின்படி ‘உண்மை’ என்பது இங்குள்ள அனைத்துக்கும் அப்பால் ஒரு சிறப்புத்தளத்தில் [விசேஷ தளத்தில்] உணரப்படும் ஒன்றுதான். இங்குள்ள அனைத்தும் மாறா உண்மைகள் அல்ல. சாராம்சங்கள் அல்ல. நாம் வகுத்துக்கொள்வனவும் எடுத்துக்கொள்வனவும்தான். மனிதனைப்பற்றி, இயற்கையைப்பற்றி நாம் அறிவன அனைத்துமே அவ்வாறு நமது ‘வியவகாரிக சத்யங்கள்’தான்.

அவை தர்க்கரீதியாக சரியானவையா என்பதல்ல முதன்மைக் கேள்வி. அவற்றால் பயனுள்ளதா என்பதுதான் கருத்தில்கொள்ளவேண்டியது. அவை மேலான அறவியலை உருவாக்குமா, மேலான வாழ்க்கையை உருவாக்குமா என்பதே கேட்டுக்கொள்ளவேண்டியது. பொய்யும் மெய்யுமென அங்கு ஏதுமில்லை. ‘அன்பு என்பது பொய்’ என ஒருவன் சொல்வான் என்றால் அதை நிறுவும்படி மேலைத்தத்துவம் கோரும். கீழைத்தத்துவம்  ‘அது பொய்யென உணர்பவனுக்குப் பொய், மெய்யென உணர்பவனுக்கு மெய். மெய்யென அன்பை உணர்பவன் மேலான வாழ்க்கையை வாழ்வான் என்றால் அது நடைமுறையில் ஓர் உண்மை’ என்று பதில் சொல்லும்.

மேலைத்தத்துவத்தின் அந்த நிரூபணத்தை எடுத்துக்கொண்டால் அது ஒரு குறிப்பிட்ட சொற்களத்தில், குறிப்பிட்ட தர்க்கச்சூழலில், ஒரு வட்டத்திற்குள் மட்டுமே நிரூபிக்கத்தக்கது அது. விளைவாக, ஏதோ ஒரு புள்ளியில் வெறும் தர்க்கவிளையாட்டாக ஆகிவிடுவது. ஆகவே மேலைத்தத்துவத்தை அது நிகழும் ஒட்டுமொத்தக் களத்தையும் கருத்தில்கொண்டே புரிந்துகொள்ளவேண்டும். ஒருவரை ஒருவர் முழுமையாக மறுக்கும் மேதைகளை இணைத்துத் தொகுத்து அறியவேண்டும்.

மேலைத்தத்துவத்தில் இருந்து மெய்யியல் அல்லது இறையியல் பிரிந்தது ஒரு பெரிய இழப்பு. அத்துடன் அதிலிருந்து அறவியலும் அகன்று சென்றது. மெய்காண்டல் என்னும் தர்க்கச் செயல்பாடு மட்டுமே இன்று அதில் எஞ்சியிருக்கிறது. எப்போது மெய்யியலும் அறவியலும் பிரிந்ததோ அப்போதே மேலைத்தத்துவத்தில் இருந்து அகவயப் பார்வையும் அகன்றது. எஞ்சியிருப்பது புறவயப்பார்வை. தர்க்கப்புறவயப் பார்வை, லாஜிக்கல் பாஸிட்டிவிஸம், வந்து அகவயப்பார்வைகள் அனைத்தையும் அடித்து நொறுக்கியபின் மேலைத்தத்துவம் அறிவியல் மற்றும் சமூக அறிவியலின் துணைத்தரப்பாக, அவற்றின் ஆய்வுக் கருவியாக நீடிக்கிறது. மேலைத்தத்துவத்தின் இறுதியான அகவயப்பார்வை என்பது இயற்கைமையவாதமும் [naturalism] ஆழ்நிலைவாதமும்தான் [Transcendentalism]. அவை அங்கே கிட்டத்தட்ட மறைந்துவிட்டன.

இந்திய சிந்தனையில் இன்றும் தத்துவம் மெய்யியலுடன் இணைந்தே உள்ளது. ஆகவே அது அகவயத்தன்மையுடன் நீடிக்கிறது. எனக்கு புறவயத் தத்துவம் என்பது மூளைப்பயிற்சி மட்டுமே என்னும் எண்ணமே இன்றுள்ளது. பல்லின் தினவால் கல்லைக்கடிக்கும் பூனைபோல அதைப் பயிலலாம், அவ்வளவுதான்.

ஜெ

தத்துவத்தைக் கண்காணித்தல்

தத்துவம் மேற்கும் கிழக்கும்

தத்துவம், தியானம்-கடிதம்

தத்துவம் பயில

கீழைத் தத்துவம்- எளிதாக

புறவயத்தர்க்கவாதமும் மெய்மையும்

முந்தைய கட்டுரைஅருண்மொழி பேட்டியும் கட்டுரையும்
அடுத்த கட்டுரைதவம் நிறைதல்- சக்திவேல்