கீதை, அம்பேத்கர்

பெருமதிப்புக்குரிய ஆசிரியர் திரு ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம் ,

தங்களுக்கு நான் சில கடிதங்கள் எழுதி உள்ளேன். சில கடிதங்கள் பதில் அளிக்க தக்கவையாகவும் சில பதில் கூற தகுதி இல்லாததாகவும் இருந்து இருக்கிறது என எண்ணுகிறேன். உண்மையில் தங்கள் தளத்தை படிக்க தொடங்கியதில் இருந்தே நான் தரமாகவும் சற்றே கூடுதலாகவும் வாசிக்கிறேன். கொஞ்சம் கட்டுரைகளும் எனது blog இல் எழுதி உள்ளேன்.

சமீப காலமாக Dr அம்பேத்கர் அவர்களின் நூல் தொகுப்புகளை படித்து கொண்டு இருக்கிறேன். நான் படித்தவற்றில் எனக்கு புதியதாகவும் சுவாரஸ்யம் மிகுந்தவையாகவும் உள்ளவற்றை கட்டுரை வடிவில் சுருக்கமாக தொகுத்து எழுத முயன்று கொண்டு இருக்கிறேன். பகவத் கீதை மற்றும் மஹாபாரதம் பற்றிய சில விமர்சனங்கள் அவரது நூல் தொகுதி  ஏழில் இடம் பெற்றுள்ளது. அதில் உள்ள விவரணைகளை படித்த பின்பு தங்கள் தளத்தில் உள்ள பகவத் கீதை பற்றிய கட்டுரைகள் சிலவற்றை படித்தேன்.

இரண்டிற்கும் சில முரண்கள் இருப்பது இயற்கையே என்றாலும் உங்கள் கட்டுரைகளில் நான் காணாத சில விஷயங்கள் (நான் படித்த வரையில் ) அம்பேட்கர் அவர்கள் சொல்கிறார். அதை பற்றி தங்கள் கருத்து என்னவாக இருக்கும் என அறிய ஆவலாக உள்ளேன்.

எதிர் புரட்சியாளரின் பைபிள் – பகவத் கீதை

பகவத் கீதை ஒரு புத்த மதத்திற்கு  எதிரான ஒரு எதிர் புரட்சி பைபிள் நூல்  என்பது  அம்பேட்கர் அவர்களுடைய கருத்தாக உள்ளது. ஜைமினியின் பூர்வ மீமாம்சையே மாற்று வடிவில் தத்துவமாக கீதையில் வடிக்க பட்டு உள்ளது. அதில் பல பகுதிகள் இடை செருகல் மட்டுமே. திருத்தப்பட்ட கீதையின் காலம் மிகவும் பிற்காலமாக இருக்க வேண்டும். தோராயமாக கி பி 400-464  வரை திருத்தங்கள் நடந்து இருக்கலாம். இடை செருகளில் சில பகுதிகள் அப்படியே புத்த மத புத்தகங்களில் இருந்து எழுதப் பட்டு உள்ளது. (இடை செருகளை மறுத்து நீங்கள் எழுதிய கட்டுரையையும்  படித்தேன்)  அவர் கீதையில் இருந்து சில பாடல்களை அதற்கு ஆதாரமாக காட்டுகிறார். அற்பமான கட்சி பிரசுரம் போல தான் கீதை இருக்கிறது என்றும் அவர் சொல்கிறார். இந்தியாவில் புத்த மதத்தின் தத்துவார்த்த பின்னடைவிற்கு கீதையே காரணம் என்றும் அவர் சொல்கிறார்.

கீதை பற்றி இந்து மத தத்துவ எதிர்ப்பாளராக அம்பேட்கர் சொல்லும் கருத்துகளில் ஆச்சரியம் ஏதும் இல்லை என்றாலும் புத்த மதத்தின் கருத்துகள் கீதையில் அப்படியே எடுத்தாள பட்டு உள்ளது என கூறுவது என்பது வியப்பாக உள்ளது. சரணாகதி தத்துவம், ப்ரம்ம நிர்வாணம் என்ற வார்த்தை பிரயோகம், ஆகியவை தவிர மொழி அமைப்பு, சில செய்யுள்கள் கூட அப்படியே தழுவல் ஆக இருப்பதாக அம்பேட்கர் கருதுவது எனக்கு முற்றிலும் வியப்பாக இருந்தது. இதை பற்றிய எனது தொகுப்பு கட்டுரை இணைப்பு :– https://manianviews.blogspot.com/2019/06/7-1.html .

தங்களுக்கு நேரம் இருக்கும் போது கருத்துகளை தெரிவிக்க வேண்டுகிறேன்.

நன்றியுடன்

எஸ் சுப்ரமணியம்

கும்பகோணம்

அன்புள்ள சுப்ரமணியம் அவர்களுக்கு,

அம்பேத்கர் அவர்களை நவீன இந்திய சிந்தனைத் தளத்தில் செயல்பட்ட முதன்மையான சிலருள் ஒருவராகவே கருதவேண்டும். அவருடைய பங்களிப்பென்பது முதன்மையாக சமூகஆய்வுத்தளத்திலும் சட்டத்துறையிலும். அதன்பின்னர் வரலாற்றாய்விலும் மதங்களிலும் அறவியலிலும். அவருடைய தரப்பைக் கருத்தில்கொண்டுதான் நாம் எந்த தத்துவவிவாதத்தையும் ஆற்றவேண்டும் என்று நினைக்கிறேன்.

ஆனால் எந்த அறிஞரையும் அவருடைய நான்கு அடிப்படைகளைக் கருத்தில்கொண்டே நாம் மதிப்பிடவேண்டும்.

அ. அவர் தனக்கென கொண்டிருக்கும் தரப்பு, அவருடைய நம்பிக்கை.

ஆ. அவருடைய காலகட்டம்.

இ. அவர் கருத்தில்கொண்ட நூல்கள்.

ஈ. அவர் தன் காலகட்டத்தில் பேசிய கருத்துச் சூழல்.

அம்பேத்கர் தொடக்கத்தில் மேலைநாட்டு தாராளவாத [லிபரல்] பார்வை கொண்டவராக இருந்தார். வரலாற்றாய்வில் அவர் அமெரிக்காவில் அன்று ஓங்கியிருந்த தர்க்கபூர்வப் புறவயப் பார்வை [ பாஸிட்டிவிஸம்] கொண்டிருந்தார். பின்னர் இறுதிக்காலத்தில் பௌத்த மதத்தை ஏற்றுக்கொண்டார். பௌத்த அறவியல் ஆன்மிகம் ஆகியவற்றை முன்வைத்தார்.

அம்பேத்கரின் அணுகுமுறையில் இந்த இரண்டு காலகட்டங்களுக்கு நடுவே வேறுபாடுகள் உள்ளன. அவருடைய பொதுவான வரலாற்றுப்பார்வை புறவயமானது. ஆகவே மதத்தை அவர் ஓர் அதிகார அமைப்பாகவே கருதினார். அது அரசாங்கங்களுக்கு உதவியாக இயங்கும் ஒரு நிறுவனம், கருத்தை தன் ஆயுதமாகக் கொண்டது, மக்களிடமிருந்த நம்பிக்கைகளையும் தத்துவத்தையும் தொகுத்துக்கொண்டு மெல்லமெல்ல உருவாகி வருவது. இந்துமதத்தை அவர் அவ்வாறுதான் பார்த்தார்.

ஆனால் இரண்டாம் காலகட்டத்தில் ஒரு பௌத்தராக அவர் மதத்தை, குறிப்பாக பௌத்த மதத்தை, வழக்கமான தர்க்கபூர்வப் புறவயப்பார்வையைக்கொண்டு அணுகவில்லை. மதத்தை வெறும் அதிகாரக் கட்டமைப்பாக காணவில்லை. பௌத்தத்தை அகக்குறியீடுகளின் தொகுதியாகவும் அறவியலின் தொகுதியாகவும்தான் அணுகுகிறார்.

அம்பேத்கரின் இந்த பரிணாம மாற்றத்தை கருத்தில்கொண்டுதான் அவருடைய கருத்துக்களை நாம் யோசிக்கவேண்டும். அவர் முதல்காலகட்டத்தில் இந்துமதத்தை தர்க்கப்புறவயவாத நோக்கில் அணுகினார். இரண்டாம் காலகட்டத்தில் பௌத்த நோக்கில் அணுகினார். இரண்டுமே இந்துமதத்தை எதிர்நிலையில் நின்று அணுகுவதுதான். இரண்டுமே இந்து மதத்தை நிராகரிப்பதுதான்.

ஆகவே இன்று பார்க்கையில் இந்துமதம் ஒட்டுமொத்தமாக எதிர்மறையாகவும் பௌத்தம் நேர்நிலையிலும் அவரால் அணுகப்பட்டுள்ளது என்று தோன்றுகிறது. அதற்கான அரசியல் சமூகக் காரணிகளை விட்டுவிட்டாலும் அவருக்கு வலுவான தத்துவக் காரணங்கள் உள்ளன. இவ்விவாதத்தில் அவற்றையே கருத்தில்கொள்ளவேண்டும்.

அம்பேத்கரின் மதம்சார்ந்த கொள்கைகளை புரிந்துகொள்ள தனியாகவே விவாதிக்கவேண்டும். ஒரு சில வரிகளில் இங்கே சொல்வதென்றால் இவ்வாறு சுருக்கலாம்.

அவர் அந்தக் காலகட்டத்தில் ஓங்கியிருந்த மையமும் ஒழுங்கும்கொண்ட அமைப்புகள்மீதான நம்பிக்கையை தானும் கொண்டிருந்தார். அவ்வகையில்தான் பௌத்தத்தை ஏற்றார். பின்னாளில் அவ்வண்ணம் ஒன்றை உருவாக்கவும் முயன்றார்.

அம்பேத்கர் மதம் என்பது மெய்யியலால் வழிநடத்தப்படுவதாக இருக்கவேண்டுமென நினைத்தார். ஆகவே அது மெய்யியலாளர்களால் மேலிருந்து ஆளப்படுவதாக இருக்கவேண்டுமென கருதினார்.அது அறிவொளிக்கால ஐரோப்பாவின் கனவு.

இவ்வண்ணம் மையமும் ஒழுங்கமைவும் மெய்யியல்சார்ந்த குவிதலும் கொண்ட மதங்களே உறுதியான அறவியலை முன்வைக்க முடியும் என்றும், அவையே காலமாறுதல்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள முடியும் என்றும் அவர் நினைத்தார்.

இந்து மதம் மையமற்றதாக, ஒழுங்கமைவும் நிறுவனத்தன்மையும் அற்றதாக, எந்நிலையிலும் விவாதத்தன்மையும் உள்முரண்பாடுகளும் கொண்டதாக இருந்தது. அதில் மெய்யியல் உயர்நிலையிலும் பழங்குடித்தன்மை அடியிலும் இருந்தது. ஆகவே அது வலுவற்ற அறவியல்கொண்டதாகவும், பெரும்பாலும் சடங்குகள் மற்றும் ஆசாரங்களால் நிகழ்வதாகவும் இருந்தது என அம்பேத்கர் நினைத்தார். ஆகவே அவர் இந்துமதத்தை நிராகரித்தார்.

அம்பேத்கர் பேசிய காலகட்டம் இருபதாம்நூற்றாண்டின் ஆரம்பம். அன்று இந்தியவியலில் பல நூல்கள் பதிப்பிக்கப்பட்டு படிக்கப்படவில்லை. பௌத்தநூல்களிலேயே பல நூல்கள் ஆய்வுக்கு வரவில்லை. பௌத்த மதம் திகழ்ந்த காலகட்டத்தின் வரலாற்றுத்தரவுகளும் பௌத்த அறவியல்நூல்களும் ஆய்வுச்சூழலில் பேசப்படவில்லை. ஒட்டுமொத்தமாகவே இந்திய வரலாற்றாய்வு அப்போதும் தொடக்கநிலையில்தான் இருந்தது. ஆகவே அன்று கிடைத்த செய்திகளின் அடிப்படையிலேயே அவருடைய ஆய்வுகள் நிகழ்ந்தன.

அக்காலத்தில் பௌத்தம் இந்துமதத்தின் சாதிசார்ந்த மேலாதிக்கத்துக்கு எதிரானது என்ற நம்பிக்கை இருந்தது. சண்டாலபிக்ஷுகி போன்ற இலக்கியச் சான்றுகளைக்கொண்டு உருவாக்கப்பட்டது இந்த கருத்து. ஆனால் பல தொல்நூல்கள் வெளிவந்தபின் நிகழ்ந்த பிற்கால ஆய்வுகள் பௌத்தம் இந்தியாவில் சாதிமேலாண்மையை ஏற்றுக்கொண்டது மட்டுமல்ல, அதை உயிர்க்கொலையின் அடிப்படையில் உறுதியாக வகுத்து நிலைநிறுத்துவதிலும் பெரும்பங்கு ஆற்றியிருப்பதையே காட்டுகின்றன.

அம்பேத்கர் சம்ஸ்கிருத மூலநூல்களை ஆராய்ந்திருந்தார். இந்தியவியலாளர்கள் இந்திய மூலநூல்களைப் பற்றி எழுதியிருந்தவற்றையும் வாசித்திருந்தார். ஆனால் இந்திய மூலநூல்கள் அடுத்த ஈராயிரமாண்டுகளில் எவ்வண்ணம் வாசிக்கப்பட்டன, மறுவாசிப்பு அளிக்கப்பட்டன, எவ்வண்ணம் விவாதிக்கப்பட்டன என்பதை அவர் வாசித்திருக்கவில்லை என அவர் நூல்கள் காட்டுகின்றன. ஆகவே இந்தியாவில் அந்நூல்கள் உருவாக்கிய விரிவான அறிவுத்தளமும் அதன் பல்வேறு காலகட்டங்களின் பரிணாமமும் அவருடைய பரிசீலனைக்கு வரவில்லை. அவர் அவருடைய  ஆரம்பகால தர்க்கப்புறவயவாத வரலாற்று நோக்கில் மட்டுமே அந்நூல்களை மதிப்பிட்டார்.

உதாரணமாக, கீதையை மூலச்சொற்களைக் கொண்டு மட்டும் வாசிப்பது வேறு, கீதை இரண்டாயிரமாண்டுக்காலத்தில் எவ்வண்ணமெல்லாம் வாசிக்கப்பட்டது, விவாதிக்கப்பட்டது, என்னென்ன அறிவியக்கங்களை உருவாக்கியது என்று வாசிப்பது வேறு. கீதை ஒரு தனிநூல் அல்ல. அது ஓர் அறிவுத்தரப்பு. அவ்வாறு அணுகினாலொழிய அதை முழுமையாக மதிப்பிட முடியாது. எந்த மூலநூலையும் அவ்வாறே மதிப்பிடவேண்டும்.

சொல்லப்போனால் எந்த தொல்நூலையும் அவ்வாறுதான் மதிப்பிடவேண்டும். குறள் என்பது அந்த 1330 ஈரடிகள் மட்டுமல்ல. அதன்மீதான ஆயிரத்தைநூறாண்டுக்கால வாசிப்பும் விளக்கமும் சேர்ந்ததுதான்.  இன்றைய ஏற்பியல் போன்ற மொழிக்கோட்பாடுகள் அதையே முன்வைக்கின்றன.

ஏனென்றால் மொழி நிலையானது அல்ல. அதன் சொற்பொருட்களம் காலந்தோறும் மாறிக்கொண்டே இருக்கிறது. மொழி மாற மாற நூல்களின் வாசிப்பு மாறுகிறது. நாம் இன்று நாம் புழங்கும் சொற்பொருட்களைக் கொண்டு கடந்தகால நூல் ஒன்றுக்கு அளிக்கும் பொருள் என்பது நமது வாசிப்பே ஒழிய அறுதியாக அந்நூலின் பொருள் அல்ல.

கீதை நாமறிந்த வரலாற்றுக் காலகட்டத்தில் எந்த வகை வாசிப்புகளை உருவாக்கியது? மிகச்சுருக்கமாக இப்படிச் சொல்லலாம்.

முதன்மையாக அது ஓர் தத்துவசமன்வய நூல். வேதாந்தத்தை மையச்சரடாக்கி வெவ்வேறு முரண்படும் தரப்புகளை அது ஒருங்கிணைக்கிறது. அவ்வாறு ஒரு புதிய சிந்தனைப் போக்கை தொடங்கிவைக்கிறது. அதன்பின் அது பிற்கால வேதாந்தங்களான அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம் ஆகியவற்றின் முதல்நூலாக தூய அறிவு வாதத்தை முன்வைக்கும் நூலாக வாசிக்கப்பட்டது. பின்னர் கிருஷ்ணபக்தியின் முகப்புநூல் என ஆகியது.

பதினெட்டாம் நூற்றாண்டின் இந்து மறுமலர்ச்சிக்காலத்தில் மீண்டும் வேதாந்தத்தின் மூலநூலாகவும், தூயஅறிவு வாதத்தை முன்வைப்பதாகவும் வாசிக்கப்பட்டது. அத்வைதத்தின் உயர்தத்துவத்தை அன்றாடச் செயல்சூழலுக்கு கொண்டுவரும் நூலாக வாசிக்கப்பட்டது. அனைத்துவகையான பார்வைகளுக்கும் இடமளிக்கும் முதல்நூல் என கொள்ளப்பட்டது.

அம்பேத்கர் தலித் மக்களுக்காகக் குரல்கொடுக்கும் தலைவராக எழுந்துவருவதற்கு முன்னரே இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடிய, தீண்டாமைக்கு எதிராக நிலைகொண்ட பல அமைப்புக்கள் இருந்தன. அவை பெரும்பாலும் அத்வைத சபைகள். சென்னையிலேயே பல நிறுவனங்கள் பணியாற்றின. அவர்களின் மூலநூல் கீதையே. ஒடுக்கப்பட்ட மக்களின் குரலான நாராயண குரு கையிலெடுத்ததும் கீதைதான்.

ஆகவே அம்பேத்கரின் வாசிப்பு என்பது அன்றிருந்த இயந்திரத்தனமான ஐரோப்பிய புறவயத்தர்க்கவாதம் சார்ந்தது மட்டுமே. அது இன்றையநோக்கில் முழுமையான ஆய்வுநோக்கு அல்ல. ஒரு கவிதையை அகராதிச் சொல் கொண்டு வாசித்து பொருள்கொள்வது போன்றது அது.

அத்துடன் அன்றிருந்த எளிமையான புறவய வரலாற்றுப்பார்வையை கீதைமேல் போடுவது அது. வரலாறென்பது ஒடுக்குமுறை – அதிகாரம் இரண்டால் மட்டுமே கட்டமைக்கப்பட்டது என்பது தர்க்கப்புறவயவாத அணுகுமுறையின் பார்வை. அன்றைய ஐரோப்பிய அறிஞர்கள் முழுநம்பிக்கையுடன் அதை மொத்த உலகுக்கும், அத்தனை செவ்வியல்நூல்களுக்கும் அளவுகோலாகக் கையாண்டிருப்பதைக் காணலாம். அது இன்று ஏற்புடையது அல்ல.

அம்பேத்கரே பின்னாளில் பௌத்தநூல்களை ஆராய்வதற்கு எந்த அளவுகோல்களைக் கையாண்டாரோ அதே அளவுகோல்களின்படி நேர்நிலையில் நின்று கீதையை ஆராய்ந்திருந்தால் அவருடைய முந்தைய பார்வையை அதுவே மறுதலித்திருக்கும். அவர் குறியீடுகளை, உருவகங்களைக் கொண்டு அகவயப்பார்வையை அடைய அந்த பௌத்தநூல்களின் வாசிப்பில் முயல்கிறார். ஆனால் அப்போது அவர் கீதைக்கு எதிரான பௌத்த நிலைபாட்டைக் கொண்டிருந்தார்.

அம்பேத்கர் தன் காலகட்டத்தின் அறிவுச்சூழலின் பொதுவான போக்குக்கு எதிராக நின்று வாதிட்டார். அது பதினெட்டாம் நூற்றாண்டின் இந்து மறுமலர்ச்சிக்காலகட்டம் முதிர்ந்து இந்திய தேசிய இயக்கமாக உருமாறிய தருணம். இந்தியாவின் மரபார்ந்த பெருமை, வரலாற்றுச் சிறப்புகள் கண்டடையப்பட்டன. மிகைப்படுத்தப்பட்டு மக்கள் முன் வைக்கப்பட்டன.இந்தியாவின் பண்பாட்டு ஒருமையை முன்வைக்கும் நூல்கள் எழுதப்பட்டன. சுதந்திரப்போருக்கு மக்களை திரட்டும் கருத்தியல்கருவிகளாக அன்று அவை தேவைப்பட்டன.

அந்தப்போக்கு அன்றும் தொடர்ந்த தலித் ஒடுக்குமுறையை பொருட்படுத்தாமல் முன்செல்வதாக இருந்தது. வரலாற்றிலிருந்து அந்த கறையை பார்க்கத்தவறுவதாகவும் இருந்தது. அதை அம்பேத்கர் முன்வைத்தார். ஆகவே ஒருவகையில் அன்றைய இந்துப்பெருமிதவாதங்கள் அனைத்துக்கும் எதிராக அவர் எதிர்வினையாற்றினார். அது கருத்தாடலாக மட்டுமல்லாமல் பலதருணங்களில் கருத்துப்பூசல் [polemics] என்ற அளவிலும் நிகழ்ந்தது.

திலகர் முதல் காந்தி வரை கீதையை மூலநூலாக முன்வைத்தனர். தங்கள் சமகாலச் சூழலுக்காக அதை விளக்கினர். அவர்களுக்கு அரசியல்ரீதியாக எதிர்நிலையில் நின்றிருந்த அம்பேத்கர் அதனாலேயே கீதையை நிராகரிக்க நேர்ந்தது. அவருடைய கருத்துக்கள் பெரும்பாலும் கருத்துப்பூசல் தன்மைகொண்டவையாக, சமநிலையற்றவையாக இருப்பதும் அதனாலேயே. இந்த அம்சத்தை ஷோப்பனோவர், ஹெகல் முதல் எந்த தத்துவவாதியின் கருத்துக்களை ஆராயும்போதும் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் கருத்துப்பூசல்சூழலில் சொன்ன வரிகளை ஆய்வுமுடிவுகளாக எடுத்துக்கொள்ளலாகாது.

1950கள் வரை கீதை கிபி நான்காம் நூற்றாண்டில் குப்தர் காலகட்டத்து இந்து மறுமலர்ச்சியின்போது எழுதப்பட்டதாக இருக்கலாம் என்னும் நம்பிக்கை இருந்தது. டி.டி.கோசாம்பியும் அவ்வாறு சொல்கிறார். சீன பயணியான பாஹியானின் ஒரு குறிப்பில் இருந்து அம்முடிவுக்கு வருகிறார்கள். அதை பலரும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அப்படியென்றால் கீதையிலுள்ள பல வரிகள் பௌத்தநூல்களில் இருந்து எடுக்கப்பட்டவையாக இருக்கலாம் என்பது அவர்களின் ஊகம்.

கீதை போன்ற நூல்கள் எவ்வண்ணம் எழுதப்பட்டன, வாசிக்கப்பட்டன என்னும் புரிதல் இல்லாத காலகட்டத்தின் முடிவுகள் அவை. கீதை போன்றவை பொதுவாசிப்புக்கான நூல்கள் அல்ல. உதாரணமாக கீதை இந்தியாவெங்கும் புழங்கியதற்கான இலக்கியச் சான்றுகள் குவிந்துள்ளன. ஆனால் இந்திய மொழிகள் எவற்றிலும் அது மொழியாக்கம் செய்யப்படவில்லை.கீதைக்கான தழுவல்மொழியாக்கம் என்றால்கூட 13 ஆம் நூற்றாண்டில் ஞானேஸ்வர் மராத்தி மொழியில் செய்ததுதான்.

கீதை குருமரபுகளுக்குள் மட்டும் பயிலப்பட்டது. ஞானநூலாகவும் ரகசியநூலாகவும். ஆகவே அது ஞானமரபை கடைப்பிடிக்கும் மாணவர்களிடம் மட்டுமே இருந்தது. அதை மக்கள்கூடி வாசிப்பதும், அது ஒரு பொதுநூலாக ஆனதும் எல்லாம் உண்மையில் பதினெட்டாம்நூற்றாண்டின் இந்து மறுமலர்ச்சிக் காலகட்டத்திற்குப் பின்னர்தான்.

இத்தகைய நூலின் காலகட்டத்தை கண்டடைவது மிகக்கடினமானது. அதிலுள்ள சிலகுறிப்புகள், அதன் மொழிநடை ஆகியவற்றைக் கொண்டே அதன் காலத்தைப் பற்றி முடிவுக்கு வரமுடியும்.

கீதை பிரம்மசூத்திரத்தைப் பற்றிச் சொல்வதனால் அது பிரம்மசூத்திரத்தின் சமகாலத்தையது, அல்லது பிந்தையது. அதன் முதலிரு யோகங்களை தவிர்த்தால் அதன் மொழிநடை அதை கிமு 3 அல்லது அதற்கும் முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்ததாகவே காட்டுகிறது.

கீதை எவ்வகையிலும் பௌத்த, சமண மதங்களின் கருத்துக்களை குறிப்பிடவில்லை. ஏற்றோ மறுத்தோ. கீதை ஒரு சமன்வய நூல். அதாவது சமரசம், ஒத்திசைவுதான் அதன் வழி. கீதையின் இயல்பின்படிப் பார்த்தால் அதன் காலகட்டத்தில் பௌத்த சமண மதங்கள் வலுவாக இருந்திருந்தால் அது அந்த மதக்கருத்துக்களை எடுத்தாண்டிருக்கும். கீதையின் காலகட்டத்தில் வேதமதத்தின் வலுவான எதிர்த்தரப்பு சாங்கியம்தான். கீதை இயல்பாக பெயர்சுட்டியே சாங்கியத்தின் பல தரப்புகளை தன்னுள் எடுத்தாள்கிறது.

கீதை நெடுங்காலமாக மகாபாரதத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. மகாபாரதத்தில் கீதை சேர்க்கப்பட்டிருக்கலாம். ஆனால் அது மகாபாரதத்துடன் சம்பந்தப்படாதது அல்ல. மகாபாரதம் முழுக்க கீதைதான் முழங்கிக்கொண்டிருக்கிறது.கீதை சொல்லும் வேதாந்தக் கருத்துக்கள் உபநிடதங்களிலும் பிரம்மசூத்திரத்திலும் திரண்டு வந்தவைதான்.

கீதையின் தத்துவக் காலகட்டத்தை இன்று ஒருவாறாக வரையறைசெய்ய முடியும். உபநிடத காலகட்டத்தின் இறுதியில், விரிவான உள்விவாதம் காரணமாக, வேதாந்தத்தின் தரப்பு பரந்து விரிந்து சென்றபோது அந்த தரப்பை ஒட்டுமொத்தமாக தொகுக்கும்பொருட்டு உருவான நூல் அது. அன்று பலநூறு உபநிடதங்கள் இருந்திருக்கலாம். அவை அனைத்துக்கும் சாரமாக ஒரு மையப்பார்வையை நிறுவுகிறது அது. அன்று சாங்கியமும் வைசேஷிகமும்தான் வேதாந்தத்தின் எதிர்த்தத்துவத் தரப்புகள். அவற்றிலிருந்து சாராம்சமானவற்றை கீதை உள்ளிழுத்துக்கொண்டு தன் தரிசனத்தை முன்வைக்கிறது.

அம்பேத்கரின் கருத்துக்களை இந்துமெய்யியல் ஆய்வுகளில் எப்போதும் ஓர் எதிர்தரப்பாக கருத்தில்கொள்ளவேண்டும். அதை தலித் தரப்பாக சுருக்கும் போக்கு சிலரிடம் உள்ளது. அது தத்துவக் களத்தில் பிழையான பார்வை. அவரை தொன்மையான சார்வாக- சாங்கிய மரபின் குரலெனவும், பிற்கால பௌத்தக் குரல் எனவும் கொள்வதே முறையானது. அந்த எதிர்க்குரல் என்றும் இங்கே இருந்துள்ளது. அதனுடனான விவாதமும் அவ்வாறு உருவாகும் முரணியக்கமும்தான் இந்து மெய்யியலை இயக்கவிசை கொள்ளச் செய்பவை.

அம்பேத்கரின் கீதை பற்றிய கருத்துக்களை மறுக்கிறேன். தேவையென்றால் நூலளவிலேயே எழுதமுடியும். மிகச்சுருக்கமாக எழுத முயன்றிருக்கிறேன். ஆயிரம் சொற்களுக்குள். என் தரப்பு கீதையை முதல்நூலாகக் கொண்ட நாராயண குருவின் மரபின்வழி வந்தது.

ஜெ

முந்தைய கட்டுரைராமப்பா கோயில்- ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைபேசாதவர்கள், கடிதங்கள் -4