மகாஸ்வேதா தேவியின் ‘காட்டில் உரிமை’- கா.சிவா

காட்டில் உரிமை வாங்க

நாடோடியாக வாழ்ந்த மனிதர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு இடத்தில் நிலை கொள்ள ஆரம்பித்தபோதே இந்தப் பிரச்சனை தொடங்கியிருக்கும். தன் இடம் என ஒரு நிலத்தை  எண்ணும்போதே அதன்மீது பற்று  உருவாகி, பின் அதன் மீது தனக்கு மட்டுமே உரிமை உள்ளதென உறுதி ஏற்படுகிறது. பிறர் அவ்விடத்திற்குள் நுழைவது அத்துமீறலாக ஆகிறது.

ஒருவருக்கு உரிமையென ஆன நிலத்தில் நுழையக் கூடாதென்ற கட்டுப்பாட்டை பணமும், அதன் மூலம் பெற்ற அதிகாரமும் தன் செருக்குடன் உடைத்தெறிந்து உள் நுழைகிறது. அப்போது எளிய உயிர்களும் அவர்தம் உடைமைகளும் சிதைந்து அழிவதை வரலாறு முழுக்கக் கண்டு வருகிறோம்.

ஆங்கிலேயர்கள் தனி மனிதனுக்கான உரிமைகளை வழங்கும் பேரரசின் பிரதிநிதிகளாகவும், அப்பேரரசின் சட்ட திட்டங்களை கடைபிடிப்பவர்களாகவும் தங்களைக் காட்டிக் கொண்டு இந்தியா உள்பட உலகின் பெரும்பான்மையான நாடுகளை ஆக்கிரமித்தார்கள். அந்த ஆக்கிரமிப்பில் சிக்கி மீளாத் துயரில் அவதியுறுபவர்கள் அதிலிருந்து வெளிவர முயன்றால் என்ன நடக்கும் என்பதை “காட்டில் உரிமை” என்ற நாவல் காட்டுகிறது.

மகாசுவேதா தேவி வங்க மொழியில் எழுதி சு.கிருஷ்ணமூர்த்தியால் தமிழில் மொழியாக்கம் பெற்ற இந்நாவல், மத்திய   இந்தியாவின்   சோட்டா- நாக்பூர் பகுதியில் வசித்த பாண்டாக்களின் உரிமைப் போராட்டத்தை களமாகக் கொண்டுள்ளது. இழந்த தங்கள் பரம்பரை நிலங்களுக்காக பாண்டாக்கள் போராட்டம் தொடங்குவதையும் அதன் விளைவுகளையும் கண்முன் காட்டுவதுபோல விவரிக்கிறது.

இந்தப் பகுதிக்கு  சோட்டா- நாக்பூர் எனும் பெயர் உருவாக காரணமாக இருந்தவர்கள் முதன்முதலாக இங்கு முளையூன்றிய இரு பாண்டாக்களே. இந்தப் பூர்வகுடிகள் காட்டிலிருந்து பெறும் பொருட்களிலிருந்தே தங்கள் வாழ்வை நிறைவாக  வாழ்ந்தார்கள். இயற்கையோடு இயைந்த இவர்களின் சீரான வாழ்வை குலைக்க வருகிறார்கள் திக்குகள் என இவர்களால் அழைக்கப்படும் வேற்று நிலத்தவர்கள். திக்குகளுக்கு காடுகளுடன் உணர்வுப் பூர்வமான எந்த உறவும் கிடையாது. பாண்டாக்களுக்கும் காடுகளுக்குமான அன்னை பிள்ளைகள் உறவும் அவர்களுக்குப் புரியாது. அவர்கள் பாண்டாக்களின் வெள்ளந்தியான  அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு ஒட்டுண்ணியைப் போல அவர்களின் இரத்தத்தை உறிஞ்சிச் செழிக்கிறார்கள். திக்குகள், தங்களை சுரண்டிக் கொழிக்கிறார்கள் என்பதைக் கூட அறியாமல் வாழும் பாண்டாக்கள் தொடர்ந்து மழையில்லாமல் வறட்சி ஏற்படும்போது திக்குகளிடம் கையேந்தும் நிலைக்குச் செல்கிறார்கள். சிலர் அடிமை பத்திரம் எழுதிக் கொடுத்து கூலியில்லாமல் உணவுக்காக மட்டும் பணியாற்றுகிறார்கள். பலர் லேவா தேவிக்காரர்களிடம் கடன் வாங்கி வட்டிக்கு ஈடாக நிலத்தை இழக்கிறார்கள். மிகச் சிலபேர் கங்காணிகள் மூலம் தோட்ட வேலைக்குச் சென்று திரும்பி வராமலாகிறார்கள். இதன் காரணமாக இவர்கள், தங்களின் பூர்வீக நிலத்தைவிட்டு இடம்  பெயரவேண்டிய நிலை ஏற்படுகிறது.

அப்போது,  சட்டப்பூர்வமான ஆட்சியென்ற பிரகடனத்துடன் நாட்டை ஆண்டது ஆங்கிலேயர்கள்.  தன் நிலத்தை கைப்பற்றிக் கொண்டாரென திக்குகளின் மேல் வழக்குத் தொடர்ந்த ஒரு  பாண்டாவின் நிலத்தை திக்குவிற்கே அளித்ததுடன் அந்நிலத்தில் மாடு மேய்த்ததற்காக பாண்டாவிற்கு அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார் ஆங்கிலேய நீதிபதி. அதன் பிறகு நீதிமன்றத்திற்கு போவார்களாயென்ன?.

மூத்த பாண்டாவான கானி என்பவர்தான்  பாண்டாக்களிடம் அவர்களின் ஆதி தெய்வத்தைப் பற்றியும், பாண்டாக்களுக்கென ஒரு பகவான் தோன்றுவான் என்றும் தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் அதை பாண்டாக்கள் யாரும் நம்பாததுடன்,  அவர் பேச்சை கேட்கவேண்டாம் என்று இளைஞர்களையும் தடுக்கிறார்கள்.

தாய் தந்தையர்களின் கடினமான வாழ்வுச் சூழலின் போது       வானில் மூன்று நட்சத்திரங்கள் ஒளிர தேவதூதனென பிறக்கிறான் பீர்ஸா. இவன்,  சுரைக் குடுவையில் உருவாக்கிய டுயிலாவை மீட்டியும் குழல் ஊதியும் அனைவரையும் கவரும் கரு நிறத்தவனாக விளங்கினான்.

குறைந்த வருமானத்தில் உண்பதற்கான வாய்கள் அதிகமாக இருந்ததால் பீர்ஸாவின் தாய் இவனை தன் தந்தை வீட்டிற்கு அனுப்புகிறாள். அங்கிருந்து பள்ளிக்குச் சென்று படித்துக் கொண்டிருந்தவன், உடனிருந்த சித்திக்கு மணமானபோது அவளுடனேயே சென்று அந்த வீட்டு வேலைகளை செய்ததுடன் மாடுகளையும் மேய்த்து வருகிறான்.

குழலிசைப்பது, மாடுகள் மேய்ப்பது, அனைவரையும் ஈர்க்கும் குணத்தவனாய் இருப்பது என விளங்கும்  பீர்ஸாவின் பாத்திரப் படைப்பு பெரும்பாலும் கிருஷ்ணனின் பாத்திரத்தை ஒத்திருப்பது கவனிக்கத் தக்கது. இதன் மூலம், பிறகு இவனால் நடக்கப் போகும் அழிவுகளை ஆசிரியர் கோடிட்டுக் காட்டுவதாகக் கருதலாம்.

செய்த சிறிய தவறுக்கு சித்தியின் கணவரிடம் பெரிதாக அடி வாங்கிய மீர்ஸா இதையே சாக்காக வைத்து அவ்வீட்டிலிருந்து வெளியேறி மிஷன் பள்ளியில் சேர்ந்து படிக்கிறான். முண்டாக்களை மிஷன்காரர்கள் படிக்க வைப்பதும் பஞ்ச காலங்களில் உணவிடுவதும் மத மாற்றம் செய்வதற்காகத்தான்.

சில வருடங்களில் ஏற்படும் வறட்சியில் முண்டாக்கள் அடையும் பெரும் துயரை காண்கிறான் பீர்ஸா. கானி முண்டா கூறி, தான் உதாசீனம் செய்த சொற்களின் பொருள்கள் துலக்கம் பெற்றன. திக்குகள்,லேவாதேவிக்காரர்கள், மிஷன், அரசாங்கம் அனைவராலும் முண்டாக்கள் கசக்கிப் பிழியப்படுவதை உணர்கிறான். பெருந் துயருடன் காட்டிற்குள் செல்பவனுக்கு காடெனும் அன்னை தன்னை மீட்கக் கோரும் வேண்டுதல் கேட்கிறது. முண்டாக்களை, அவர்களைப் பயன்படுத்தி கொழிப்பவர்களிடமிருந்து விடுவிப்பதின் மூலமே காட்டை மீட்க முடியும் என தெளிவடைகிறான். என்ன செய்ய வேண்டுமென முடிவு செய்கிறான். கானி முண்டா கூறிய பகவான் தான்தான் என அவன் முண்டாக்களிடம் கூறியபோது எவருமே அதனை மறுக்காமல் ஐயப்படாமல் ஏற்கிறார்கள்.

முண்டாக்கள் அனைவருடனும் பேசி ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கிறான். இவர்களுடைய ஆயுதம் வில்லும், அம்பும் கூட கொஞ்சம் எட்டிக்காய் விஷம். ஆனால், உலகையே ஆளும் பேரரசிடம் துப்பாக்கியும் குண்டுகளும் உள்ளதே. மிக எளிதாக பெரும் குருதி சிந்த வைத்து போராட்டத்தை ஒடுக்குகிறார்கள். கைது செய்யப்படும் பீர்ஸா முண்டாவை விசாரனை முடியும் முன்னே மர்மமாக கொல்கிறார்கள். போராட்டம் முடிந்துவிட்டது. ஆனால் தனல் முண்டாக்களின் மனதில் கனன்று கொண்டிருக்கிறது, பீர்ஸாவுக்கு சாவு இல்லை என நாவல் முடிகிறது.

இந்நாவலில் சில பாத்திரங்கள் அமரத்துவம் வாய்ந்தவை. கானி முண்டா என்ற பெயருடன் முண்டாக்களின் பூர்வீகம் பற்றியும் அவர்களின் தொன்ம தெய்வங்களைப் பற்றியும்  இளையவர்களிடம் கூறிக்கொண்டே இருக்கிறார். மிகவும் வயதானவராக காட்டப்படும் இவர் நாவலில் சிரஞ்சீவியாக நீடிக்கிறார்.

பீர்ஸா முண்டாவின் தாயார் கர்மி. அவதார புருசர்களை பெற்றவர்கள் பட்டபாடுகளை இவரும் படுகிறார். மகனை நினைத்து உவகை அடைவதும், அவன் எதிர் நோக்கும் ஆபத்தை எண்ணி மருகுவதும் நாவலுக்கு ஒரு உயிரோட்டத்தை அளிக்கிறது.

இன்னொருவரை மணந்து கொண்ட போதிலும் பீர்ஸாவின் மேல் பெரும் ஈர்ப்பும் மரியாதையும் கொண்ட பெண்ணாக சாலி படைக்கப்பட்டுள்ளாள். மணம் செய்துகொள்ள வாய்ப்பில்லாத போதும், இவளின் மகனை தன் தத்துப்பிள்ளையாக அறிவிப்பதன் மூலம் சாலியின் நேசத்திற்கு அங்கீகாரம் அளிக்கிறான் பீர்ஸா.

பீர்ஸாவுடன் மிஷன் பள்ளியில் படித்த நண்பன் அமூல்யாபாபு. இவன் முண்டாவாக இல்லாவிட்டாலும் பீர்ஸாவின் மேல் ஏற்பட்ட அன்பின் காரணமாக பாண்டாக்களைப் பற்றி தெரிந்துகொண்டு அவர்கள் மேல் பரிவுடன் இருக்கிறான். பெரியதாக உதவ இயலாதபோதும் இயன்றவற்றை செய்கிறான். முண்டா கலகம் எனப்படும் இப்போராட்டத்தினை பற்றி எழுதி ஆவணப்படுத்துகிறான்.

பீர்ஸாவின் பாத்திரம் சிறந்த தலைவனுக்கு உதாரணமாகப் படைக்கப்பட்டுள்ளது. அவன் தான் எடுத்த முடிவு சரியானதா என்பதை ஐயப்படுவதுடன், உடன் வருபவர்களிடம் மீண்டும் மீண்டும் எச்சரிக்கிறான் அழிவு வரக்கூடும். முடிவை வேண்டுமானால் மாற்றிக் கொள்ளலாம் என. முடிவை மாற்ற எவரும் சம்மதிக்காத நிலையில் அவர்களுடனேயே சிறையில் துயருற்று மடிகிறான். இக்குணம் இப்போதைய தலைவர்களுக்கு இல்லாததாகும்.

சற்று பிசகினாலும் வரலாற்று நூலாக மாறிவிடக் கூடிய அபாயத்தை மேற்குறிப்பிடப்பட்ட பாத்திரங்களைப் படைத்ததன் மூலம் கடந்து, நல்ல நாவலாக ஆக்கியிருக்கிறார் மகாசுவேதா தேவி. நீதி முறைக்காக சிலரால் பாராட்டப்படும் ஆங்கில ஆட்சியின் நீதிமன்ற செயல்பாடுகளில் காணப்படும் போலித் தனத்தை அப்பட்டமாக விவரித்துள்ளார். நாவலில் பதினான்கு பக்கங்களில் விரியும், பெங்கால் பத்திரிக்கையில் வெளிவந்ததாக கூறப்படுகிற நீதிபதிக்கும் பாண்டாக்களின் வழக்குரைஞருக்கும் இடையேயான உரையாடல் இதை தெளிவாக்குகிறது. பல்லாயிரம் பேர் விசாரிக்கப் படாமல்  விசாரணை கைதிகளாக பல ஆண்டுகள் இப்போதும் நம் சிறைக்குள் அடைபட்டிருப்பதற்கான அடிப்படை நூற்றியிருபது ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது. ஆறு மாதங்களாக  இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு சிறையில் கிடப்பவர்கள் மீதான குற்றம் என்னவென்று நீதிமன்றத்தில் கேட்கும்போது காவல்துறை கூறுகிறது “இன்னும் ஒரு நாள் அவகாசம் கொடுத்தால் கூறிவிடுகிறோம்” என்று. கைது செய்தபின் ஆறுமாதங்களாக தேடியும் சாட்சியம் எதுவும் கிடைக்கவில்லை, என்ன குற்றம் சுமத்தலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். 482 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் இரும்புச் சங்கிலிகளோடு பிணைக்கப்பட்டு ஒரு வருடம் சிறையில் இருத்தவர்களில் குற்றம் சுமத்தப்பட்டு தண்டிக்கப் பட்டவர்கள் 98பேர் மட்டுமே. இருபது பேர் சிறைக்குள்ளேயே மரணித்துவிட்டார்கள், மற்றவர்கள் வெளிவந்தார்கள் என்ன குற்றம் புரிந்தோம் என்று தெரியாமலேயே.

இந்த நாவல் வாசித்தபோது பாலமுருகன் எழுதிய “சோளகர் தொட்டி” நாவலின் களம் நினைவில் எழுந்து முதுகெலும்பைச் சொடுக்கியது. சந்தன மரக் கடத்தல்காரனை தேடும் போது அவன் கிடைக்காத நிலையில்,   எந்தக் குற்றமும் புரியாத எளியவர்களை அதிகாரம் உள்ளதென்ற தினவில் மிருகங்களை விட கொடுமையாக வதைத்த அதிகாரி, எண்பது வயதிற்கும் மேலாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறான் சுகமாக. இவற்றைப் பார்க்கும் போது அறங்களை போதிப்பவர்கள் மீது சலிப்பும் சினமும் எழுவதை தடுக்கமுடிவதில்லை. இவ்வாறு, ஈவிரக்கமின்றி மிருகங்கள் கூட அஞ்சும் தீமைகளை செய்பவர்கள் அடையப்போகும் தண்டனை என்னவென்பது ஒருபுறமிருக்க, இத்தனை எளியவர்கள் பட்டபாட்டிற்கு என்னதான் பொருள் என்பதும் புரியாமல் மனம் துடிக்கிறது.

சாகித்ய அகாடமி விருது பெற்ற “காட்டின் உரிமை” எனும் இந்நூலை சு.கிருஷ்ணமூர்த்தி எப்போதும்போல சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார். இது ஒரு பழங்குடி இனத்தின் வரலாறு மட்டுமல்ல. உலகெங்கும் வாழ்ந்த பல்லாயிரம் பழங்குடிகள் அழிக்கப்பட்டதன் எளிய சித்திரம். எளிமையானதாக உள்ளதாலேயே இந்நூல் வாசகனின் கற்பனையைத் தூண்டி  மனதைக் கனக்கச் செய்கிறது.

 கா.சிவா 

மஹாஸ்வேதாதேவி என்னும் மகத்தான மனுஷி

முந்தைய கட்டுரைஇளையராஜாவின் பின்னணியிசை
அடுத்த கட்டுரைநடராஜ குரு விட்டுச்சென்ற குரங்குகள்- சங்கரராம சுப்ரமணியன்