நான் இயற்கையாகவே அறிவியல் சார்ந்து சிந்திக்கும் மனம் கொண்டவன். ஆயினும் கலை மனம் கொண்டவர்கள் இந்த உலகை எவ்வாறு பார்க்கிறார்கள், உணர்கிறார்கள் என்பதை அறியும் ஆவல் எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. குறிப்பாக ஓவியம், கவிதை.
கவிதைகளில் உள்ள மீமொழி, படிமம் போன்றவற்றை கண்டுகொண்டு அக்கவிதைகளை மேலும் விரித்தெடுக்கும் கலை இன்னும் கைகூடவில்லை. சிறுகதைகளிலும் எனக்கு இந்த பிரச்சினை உள்ளது. அதை நான் அவ்வப்போது உங்களிடம் கேட்ட எளிய கேள்விகளிலிருந்து தெரிந்து கொண்டிருப்பீர்கள். சிறுகதைகளை பற்றி நீங்கள் மற்றும் பல வாசகர்கள் எழுதுவதை படித்து மெல்ல மெல்ல அவற்றை அணுகும் முறையை அறிந்துகொள்ளலாம் என்று தோன்றுகிறது. கவிதையை அங்ஙனம் தெரிந்துகொள்ள முடியுமா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் மீமொழி, படிமம் போன்றவற்றை வழிகாட்டுதலின்றி எப்படி அடையாளம் காண்பது? சில நேரங்களில் அவ்வாறு கவிதையை பற்றி எழுதப்பட்டதை பல முறை படித்த பின்னரும் எனக்கு குழப்பம் தீருவதில்லை. எடுத்துக்காட்டாக, தேவதச்சனின் “காற்று ஒருபோதும் ஆடாத மரத்தை பார்த்ததில்லை” என்ற கவிதையை பற்றி எழுதும்போது, அதில் அலைக்கழிப்பை காட்டும் இரு படிமங்களும், அசைவின்மையை காட்டும் ஒரு படிமமும் உள்ளது என்று கூறிவிட்டு
மூன்றாவது படிமம் நிலைத்தகாட்சியை, அசைவின்மையை காட்டுகிறது. ஆட்டிடையன் ஒருவன் அசையும், விரையும் முகில்களையும் வண்டிகளையும் ஆடுகளையும் அசைவின்றி நின்று நோக்கிக் கொண்டிருக்கிறான். இக்கவிதையில் அசையாதது, அலையாதது ஒன்றே. அது என்ன என்று தொட்டுவிட்டால் நீங்கள் கவிஞர். கவிஞர்களே கவிதையை வாசிக்கமுடியும். [தேவதச்சன் கவிதை பற்றி]
என்று கூறியிருந்தீர்கள். அசையாத அந்த ஒன்று ஆட்டிடையனா, அவன் மனமா, வெட்டவெளியா என்று இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்!
உங்கள் தளத்தில் வந்த போகனின் கவிதைகளில் உள்ள குருவி ஒரு படிமமா? அது மூச்சை, உயிரை குறிக்கிறது என்று எனக்கு தோன்றியது. அது சரியென்றால்
ஞானி
மூச்சு
ஒரு குருவியைப் போல
மனிதர்களுள்ளே
போய்ப் போய் வருவதைப் பார்க்கிறார்.
கூட்டிற்கு
குருவி சொந்தமில்லை
என்பதை
அவர்கள் அறிந்திராதையும்
என்ற கவிதை நிலையாமையை பற்றி பேசுகிறது என்று பொருள்படுத்திக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது. அதற்கு அடுத்த கவிதையும் (“ஜென் ஒழுங்குற மறுப்பது”), தும்பியை பற்றிய கவிதையும் அதையே குறிக்கின்றன என்றும் தோன்றுகிறது. ஆனால் அதே நேரம் இவ்வளவு தெளிவாகவா கவிஞர் கூறுவார் என்ற ஐயமும் எழுகிறது. கவிஞனின் ஒருநாள்
கவிதைகள் படிக்கும்போது சில வரிகள் என்னை கவரும்.
- “வெட்டவெளியின் விரிவெலாம் நான்” (பாரதி)
- “காற்று ஒருபோதும் ஆடாத மரத்தை பார்த்ததில்லை” (தேவதச்சன்)
- “காற்றென வந்தது கவிதைதான்” (போகன்)
- “ஆயத்தங்களில் கழிகிறது என் காலம்” (சுந்தர ராமசாமி)
- “எனக்கு யாருமில்லை நான் கூட” (நகுலன்)
ஆனால் சுஜாதா இது ஒரு கண நேர பிரமிப்பு மட்டும்தானே ஒழிய ஒரு முழு புரிதல் இல்லை என்று எழுதியதாக நினைவு. முழு புரிதல் அல்லது புரிதல் போன்ற சொற்களை கவிதைக்கு பயன்படுத்தலாமா என்று தெரியவில்லை. “வெட்டவெளியின் விரிவெல்லாம் நான்” என்ற வரியை படிக்கும்போது ஏற்படும் உணர்வு அந்த கவிதையின் மற்ற வரிகளை படிக்கும்போது எனக்கு ஏற்படுவதில்லை. மற்ற எல்லா வரிகளையும் தன்னுள் இவ்வரி கொண்டிருப்பதாகவே எனக்குப் படுகிறது.
மின்னஞ்சல் நீண்டுவிட்டது. மன்னிக்கவும். நான் கேட்க வந்தவை :
அ). கவிதைகளை படித்து, அவற்றின் மீமொழி, படிமம் முதலியவற்றை புரிந்து கொண்டு கவிதையை மனதில் விரித்தெடுக்கும் முறையைக் கற்பதெப்படி? கவிதைகளை படித்துக்கொண்டே இருந்தால் இது கைகூடிவிடுமா?
ஆ). இந்த மாய உலகின் வாசலில் நிற்கும் என் போன்றோர்க்கு, ஒரு தொடக்க வழி காட்டுதல் இருந்தால் நன்றாக இருக்கும். கவிதைரசனை முகாம் ஒன்று உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன். பல வகைப்பட்ட கவிதைகளை எடுத்துக் கொண்டு அவற்றில்உள்ள நுட்பங்களை சுட்டிக்காட்டினால் நன்மையாக இருக்கும். சில பயிற்சிக் கவிதைகளும் இருக்கலாம்.
சிறுகதை ரசனை அரங்கு முடிந்த பிறகு, மதிய உணவு சாப்பிட்டுகை கழுவ வந்த கிருஷ்ணனை வழி மறித்து, அவர் காதிலும் போட்டுவைத்திருக்கிறேன். பார்ப்போம்!
சில ஆண்டுகளாகவே எழுதவேண்டும் என்று நினத்திருந்த மின்னஞ்சல் இது. போகனின் கவிதைகளைக் கண்ட பிறகே எழுத முடிந்தது.
நன்றி
டி.கார்த்திகேயன்
அன்புள்ள கார்த்திகேயன்,
கவிதை என்பது மீமொழியால் ஆனது. மொழிக்குள் ’செயல்படும்’ தனிமொழி. கவனியுங்கள், மொழிக்குள் ’அமைந்த’ தனிமொழி அல்ல. மொழிக்குள் அந்த தனிமொழி செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது. தன்னை கணந்தோறும் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது. ஆகவே அதற்கு இலக்கணமோ அகராதியோ போடமுடியாது. அதை அறிய ஒரே வழி அதை தொடர்ந்து பயில்வதுதான். அதில் இருந்துகொண்டே இருப்பதுதான்.
மீமொழி என நாம் சொல்வது வழக்கமான பொருளில் அல்லாமல் கூடுதல் பொருளில் சொற்கள் பயன்படுத்தப்படுவதைத்தான். ‘நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்’ எனும் பாரதியின் வரியை அதற்கு உதாரணமாகச் சுட்டிக்காட்டுவது வழக்கம். பூக்களுக்கு நெஞ்சு உண்டா? அந்நெஞ்சில் கனல் இருக்க முடியுமா? அந்தக்கனல் மணக்குமா? அப்படியென்றால் அந்த வரி இன்னொரு பொருளைச் சுட்டுகிறது. அந்த இன்னொரு பொருளைத்தான் மீமொழி என்கிறோம். தமிழை அகராதி வழியாக அறிந்தவர்களால் அந்த இன்னொரு பொருளை அறியமுடியாது. கவிச்சூழலை அறிய அறிய அந்த இன்னொரு மொழி தெளிவடையும்.
கவிதைகளை வாசித்தல், நெருக்கமான சூழலில் கவிதையைப் பற்றிப் பேசுதல், கவிதைக் கொள்கைகளை தெரிந்துகொள்ளுதல் ஆகியவற்றின் வழியாக நாம் கவிதை செயல்படும் ஒரு சிறு உள்வட்டத்திற்குள் நுழைகிறோம். அவ்வாறுதான் கவிதையை உணரமுடியும். அதற்கு வகுப்புகள் முழுக்க உதவாது. ஆனால் கவிதைப்பட்டறைகள் ஓரளவு உதவும். தொடக்ககட்ட ஐயங்களைத் தீர்க்கும். பொதுவான அடிப்படைகளை கற்பிக்கும். அதைவிட, அங்கே பல்வேறு கவிதைகளை பலர் தொடர்ச்சியாக வாசித்துப் பொருள் கொள்வதைக் காண்கையில் நம் அணுகுமுறை கூர்மையடையும். நாங்கள் பல கவிதைப் பட்டறைகள் நடத்தியிருக்கிறோம். இப்போது காவிய முகாமில் கவிதை அமர்வுகள் சில நிகழ்வதுண்டு. ஆனால் இனி இந்தச் சிக்கல்களெல்லாம் முடிந்தபிறகே யோசிக்கமுடியும்.
ஜெ
***