குறளுரை – கடிதங்கள்

ஜெ

தங்களின் குறளினிது உரையின் முதல் நாள் தவிர்த்து பின்ன இரு தினங்களும் பலவிதமான உணர்வெழுச்சியினை அளித்தது.முதல் நாள் உரையில் நான் குறை கூற எதுவும் இல்லையென்றாலும் அது எனக்கு உரையின் போது நீங்கள் சொன்ன நந்தியாக, என் மனத்தில்   ஆசானிடம் இருந்து மாணவனுக்குள்ள இயல்பான ஒரு தடையை உண்டாக்கியது.

ஆனால், அதன் பின் நான் கண்டது சிவதரிசனம். ஆம் . என் தமிழ் ஐயாவை மிகச்சுலபமாக நான் மீண்டும் கண்டடைந்தேன். அவர் பெயர் ஆதிலிங்கம் நாடார்.கிட்டத்தட்ட எங்கள் ஊருக்குள் இரண்டு தலைமுறைக்கு (தந்தை மகன்) தமிழ் உரைத்த ஆசான். இன்று எனக்குள் எஞ்சியிருக்கும் தமிழ் ஆர்வத்திற்கும், சிற்றறிவுக்கும் ஆதி ஊற்று.

இரண்டாம் மற்றும் மூன்றாம் நாட்களில்  நீங்கள் கையாண்டது அவரின் பணிபாணி. 1.குடும்ப நலன் விசாரிப்பு. 2.குறுங்கதை (பெரும்பாலும் வாழ்வில் இருந்து) 3.செய்யுள்/உரைநடை. வகுப்பறைக்குள் அவர் நுழைந்ததும் ஏதேனும் ஒரு மாணவனின் குடும்ப நலன் விசாரிப்பு. பெரும்பாலும் அவர்களின் தந்தையின் பெயரோடு மவன்/மவ, எனும் பின்னொட்டோடுதான் அழைப்பார்.

நான் அவருக்கு வெங்கட்டு தம்பி. வெங்கட கிருஷ்ணன் அவரின் முன்னாள் மாணவன். தந்தையில்லா மாணவர்களின் மீது எப்போதும் தனி கனிவு. அவர்கள் செய்யும் பிழைகளை பொறுத்துக் கொள்ளவே மாட்டார். உங்க அம்மாக்கு எவெம்ல பதில் சொல்றது? என்பார். அந்த தனிக்கனிவு, கவனக் குறைபாடு கொண்ட என் மீது என் அண்ணனின்  பின்னொட்டுடன் விழும். ஆனால், ஒருபோதும் அது ஒப்பீடாக இருந்தததே /உணர்ந்ததே இல்லை. வித்தைக்காரர். விசாரிப்பு, பின்னர் குறுங்கதை கூறிக்கொண்டே செய்யுளுக்குள் நுழைவார். மாபெரும் தாவலை அனாயசமாக செய்வார்.சொல்லின் செல்வர்.

உங்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் நாள் உரை அச்சு  அசலாக அப்படியே இருந்தது.அவரின்  நினைவு இதயத்தின் ஆழ் அடுக்குகளில் இருந்து விம்மலுடன் எழுந்தது. சென்ற ஆண்டு முழுமை கண்டவர். அவரின் நினைவுகளில் என்னை ஆழ வைத்ததற்கு நன்றிகள்

எனது கடிதத்தின் நோக்கம் உரைக்க விழைகிறேன். சுருக்கமாக, நீங்கள் கண்டிப்பாக உங்களின் உரை அமைத்த (அனுபவக்கதை , ஆப்த வாக்கியமாக குரல் ஒலித்த இடம்) பாணியில் ஒரு படைப்பை இயற்றி ஆக வேண்டும். இது அன்பான வேண்டுகோள்.அது நீங்கள் செய்யும் பெருங்கொடையாக இருக்கும். நீங்களே அதற்காக தேர்தெடுக்கப்பட்ட சிலருள் ஒருவர். பிழையிருப்பின் பொறுத்தருள்க ஆசானே.

அன்புடன், லெக்ஷ்மிநாராயணன்

திருநெல்வேலி

அன்புள்ள லெக்ஷ்மிநாராயணன்,

நான் பேசும் எல்லா பேச்சுக்களும் வெவ்வேறு வடிவங்களில் இருந்தாலும் இலக்கியத்தை நேரடியாக வாழ்க்கையுடன் இணைக்கும் தன்மை கொண்டவைதான். மேலும் எழுதவேண்டும். பார்ப்போம்

ஜெ

அன்புள்ள ஜெ

குறளுரையை கேட்டுக்கொண்டிருக்கிறேன். நீண்ட ஓர் உரையாடல் போலிருக்கிறது. எனக்கே எனக்காகச் சொல்வது போலவும் ஒலிக்கிறது. குறள் பேசிப்பேசித் தேய்ந்துபோன ஒன்று. அதற்கு இத்தனை அடுக்குகளும், இத்தனை பயிலும்முறைமையும் இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. நாம் குறளை படிக்கும் விதம் சரிதானா என்ற சந்தேகம் வந்துவிட்டது. நீதிநூலாக அதைப்படிக்கும்போது நமக்கு வாழ்க்கையனுபவமே இல்லை. வெறுமே வரிகளாக படிக்கிறோம். கேலியும் கிண்டலுமாக ஆக்கிக் கொள்கிறோம். மனப்பாடம் செய்து மறந்துவிடுகிறோம். வாழ்க்கையனுபவம் வந்தபிறகுதான் குறளைப் படிக்கவேண்டுமா என்ன?

ஆனந்தி ராஜ்

அன்புள்ள ஆனந்தி,

குறளை மனப்பாடம் செய்யவேண்டும். அதற்கு இளமைப்பருவமே உகந்தது. அதன் வரிகள் பின்னாளில் நமக்கு வாழ்க்கையனுபவங்கள் நிகழும்போது இயல்பாக வந்து நம்முடன் இணைந்து கொள்ளவேண்டும், அப்போதுதான் அவை திறக்கும்.

ஜெ

முந்தைய கட்டுரைMani Ratnam’s musical tribute to Jayamohan’s epic work ‘Venmurasu’
அடுத்த கட்டுரைவெண்முரசு இசைக்கோலம்