இதழியலாளன் மொழியாக்கம் செய்தல்…

அந்த முகில் இந்த முகில் (குறுநாவல்)

அன்புள்ள சார்,

மிக்க நன்றி. ‘அந்த முகில் இந்த முகில்’ புத்தகத்தின் முன்னுரையில் என் பெயரைப் பார்த்து நானும், என் குடும்பமும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தோம். நான் செய்த அந்த ‘சரிபார்த்தல்’ (உதவி என்பது பெரிய வார்த்தை) உங்கள் முன்னுரையில் குறிப்பிடும் அளவிற்கு முக்கியமானது அல்ல என்றுதான் இப்பொழுதும் நினைக்கிறேன். முன்னரே சொன்ன மாதிரி இது ராமருக்கு அணிலின் உதவி (உடுத்த சாயம்!) போன்றதுதான்.  இது ஒன்றும் தன்னடக்கம் அல்ல, உண்மை அதுதான். என் பெயரைக் குறிப்பிட்டது உங்கள் அளி மட்டுமே. காலத்துக்கும் நிலைக்கக்கூடிய ஒரு ஜீவநதியில் ஒரு சருகுபோல் என் பெயரை இட்டுள்ளீர்கள். அதற்கு நானும், என் குடும்பமும் கடன் பட்டுள்ளோம்.

இந்த நாவல் தளத்தில் வெளியானபோது திரு அரங்கா அவர்கள் வாட்சப்பில் தொடர்புகொண்டார். ‘இதை தெலுங்கில் மொழிபெயர்க்கலாமே..!’ என்றார். எனக்கும் அந்த ஆசை உண்டுதான். இதற்குமுன், உங்களின் ‘விசும்பு’ கதையை மொழிபெயர்க்கும் முயற்சியை மேற்கொண்டு விட்டுவிட்டேன். அது மட்டுமல்ல, தெலுங்கின் குரஜாடா அப்பராவ், சலம், புச்சிபாபு முதல் இன்றைய வாடரேவு வீரபத்ருடு (Vadrevu Chinna Veerabadrudu) வரையிலான மாஸ்டர்களின் ஆக்கங்களையெல்லாம் தமிழில் கொண்டுவர விருப்பம் உண்டு.

தமிழில் ‘முதல் கட்ட’ (Raw) மொழிபெயர்ப்பு செய்வதின் மூலமாக. எழுத்துத் துறையில் (இதழியலும் எழுத்துத் துறைதான் என்று நீங்கள் எங்கோ குறிப்பிட்டு இருக்கிறீர்கள்) எனது அடுத்த கட்ட நகர்வு இப்படித்தான் இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனாலும், என் வேலையின் அன்றாடங்கள் அந்த நேரத்தை எனக்கு கொடுப்பது இல்லை. இங்கு என்னை முழுதளித்தே ஆகவேண்டும். பத்திரிகைக்காக சில வெற்றியாளர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் எழுதுவதில் அப்படி ஒரு திருப்தி ஏற்படுகிறது. ஆனால், அன்றாட செய்திகளைத் தாண்டி அதுபோல் எப்பொழுதும் அமைவதும் இல்லை. இந்தத் தடையை தாண்டினாலும், தெலுங்கில் சில மொழியாக்கங்கள் செய்ய எனக்கு சிறு தயக்கங்கள் உள்ளன. முக்கியமாக மொழியைச் சார்ந்து.

இப்பொழுது நான் எழுதிக்கொண்டு இருப்பது பத்திரிக்கை மொழி. அதாவது எதையும் எளிமைப்படுத்தும் நடை. ஒரு பெரிய சொற்றொடரோ, வாக்கியமோ, பத்தியோ எழுதவே கூடாது என்கிற நியமம். இது நான் சுமார் 20 ஆண்டுகளாக கற்ற நடை. இதைவைத்து மொழிபெயர்த்தால் மூல எழுத்துக்கு அநீதி இழைத்தது போல் ஆகிவிடாதா, என்கிற தயக்கம் வருகிறது. நான் என்ன நினைக்கிறேன் என்றால் ஒரு மொழிபெயர்ப்பின் நடையில் ஒரிஜினல் ஆக்கத்திற்கு சமானமான செறிவு இருக்கவேணும் என்று. அது தனி மொழியாகவே அமையவேண்டும் என்று. உங்களின் மொழியாக்கங்களை அப்படி நான் உங்களின் எழுத்துக்களாகவே பார்க்கிறேன்.

அதீதமான எளிமைப்படுத்தலும் (பத்திரிகைகள் செய்வது போல), ஒரு ஒழுங்கே இல்லாத அர்த்தமற்ற மொழியாக்கங்களும் (சாகித்ய அகாதெமியின் பெரும்பாலான நூல்கள் போல்) இருக்கக் கூடாது என்று எண்ணுகிறேன். அப்படி இருக்கையில் என் சொந்த நடையை உருவகிப்பது எப்படி? 20 ஆண்டுகள் பத்திரிகை நடையில் மட்டும் (இதிலும் எனக்கென்று தனித்துவம் உண்டுதான் ஆனால் அது மிகச்சிறியது) எழுதும் நான்… அதை அடைய முடியுமா?

ஒரு மொழிபெயர்ப்பு முயற்சிகூட எடுக்காத நான் இப்படி கேள்விகளெல்லாம் கேட்பது நியாயம் இல்லை தான். ஆனால், இந்த சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது.

அன்புடன்,
ராஜு

அன்புள்ள ராஜு,

1986ல் எனக்கு இதழியலில் ஒரு மிகப்பெரிய வாய்ப்பு வந்தது. அன்று நான் வாங்கிக் கொண்டிருந்த சம்பளத்தைவிட பன்னிரண்டு மடங்கு ஊதியத்துடன். ஆனால் ஆற்றூர் ரவிவர்மா இதழாளன் இழப்பது மொழிநடையை என்று என்னிடம் சொன்னார். ஆகவே தவிர்த்துவிட்டேன். இதழாளன் பொதுவான இதழ்நடைக்குள் செல்வதைத் தவிர்ப்பது மிகவும் கடினம்.

ஆனால் எதுவும் முயற்சியால் இயல்வதுதான். உங்கள் நடையை நீங்களே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தாலே போதுமானது. அதற்குச் சில பயிற்சிகள் உள்ளன.

அ. நம்முடைய தேய்வழக்குகள் சில இருக்கும். [க்ளீஷேக்கள்] என்னென்ன என்று பார்த்து அவற்றை தனியாக ஒரு ஒரு கோப்பில் எடுத்து வைக்கவேண்டும். உரைநடையில் அவற்றைத் தேடிக் களைந்துவிட வேண்டும். அந்த தேய்வழக்குகளைப் பற்றிய தர்க்கபூர்வமான புரிதலிருந்தாலே அவை அகன்றுவிடும்.

ஆ. நம்முடைய சொற்றொடர் அமைப்பை அனிச்சையாக நாம் கடைப்பிடிக்கக் கூடாது. நாம் எதை மொழியாக்கம் செய்கிறோமோ அந்த படைப்பின் சொற்றொடரமைப்பை நாம் பின்தொடர்ந்தால் போதும். நம் மொழி மாறிவிடும். சொல்லப்போனால் நம் மொழிநடையை மாற்றிக்கொள்ள சிறந்த வழி என்பது மொழியாக்கம் செய்வதுதான்.

இ. எந்த மொழியாக்கத்தையும் இன்னொரு முறை திருப்பி எழுதவேண்டும். அப்போது நம்முடைய மொழியில் நம்மை மீறி வந்துள்ள வழக்கமான வடிவத்தையும், சொற்களையும் நாம் அகற்றிக்கொள்ள முடியும். அதாவது மொழிநடைக்காகவே ஒரு மறுஎழுத்தைச் செய்தால் போதும்.

இதழியல் என்பது மொழியை ‘கொல்லும்’ ஒரு துறை. அதிலிருந்து தப்புவது ஓர் அறைகூவல். ஆனால் அதையே ஒரு ஆர்வமூட்டும் வாழ்க்கை நோக்கமாக எடுத்துக்கொள்ளலாம்.

ஜெ

***

முந்தைய கட்டுரைசுவாமி சகஜானந்தர்- ஸ்டாலின் ராஜாங்கம்
அடுத்த கட்டுரைவெண்முரசுக்குப் பின் ராமன் கதையா?